Skip to main content

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சிவசமுத்திரம் பெங்களூரிலிருந்து 130 கீமீ தூரத்தில் மாண்டையா மாவட்டதில் இருக்கிறது. கூகிளில் தேடியபோது இரண்டு வழிகள் இருப்பது தெரிந்தது. ஒன்று கனகபுரா மார்கமாகச் செல்லும் வழி. இன்னொன்று மைசூர் நெடுஞ்சாலையில் செல்லும் வழி. சோமநாத்பூர் சென்ற போது கனகபுரா மார்க்கம் ஒரு மார்க்கமாக இருந்ததால், மைசூர் வழியையே தேர்ந்தெடுத்து, வழக்கம்போல காமத் லோகருச்சி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சென்றடைந்த போது மதியம் மணி பன்னிரண்டு.

சிவசமுத்திரம் பற்றி நிறைய தகவல்கள் கூகிளில் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அருவியைப் பார்க்கப் போனபோது கையில் தின்பண்டங்கள் இல்லாத டம்மியாக இருந்தது அங்கிருந்த குரங்குகளுக்கு ஏமாற்றம். அருவியில் தண்ணீர் கம்மியாக வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஏமாற்றம். திரும்பிப் போகும்போது மாடு ஒன்று மூச்சா போய்க்கொண்டு இருந்தது. "சிவசமுத்திரத்தைவிட மாடு மூச்சா அதிகமா இருக்கு," என்று குடும்பத்தினர் கமெண்ட்.



போகும் வழியில் நிறைய தாமரைக் குளங்களைப் பார்க்க முடிந்தது. ஏதாவது குளத்தினருகே வண்டியை நிறுத்தி பூவைப் படம்பிடிக்கலாம் என்று இறங்கியபோது அடுத்த ஏமாற்றம். அந்தக் குளத்தில் பார்த்து ஒரு தாமரை கூட இல்லை. அதிக நேரத் தேடலுக்குப்பின் ஒரே ஒரு தாமரை கண்ணில் பட்டது.

தாமரை பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தாவரம். தாமரை விதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூட முளைக்கும் தன்மை உடையவையாம். பெருமாளின் தொப்புளிலிருந்து மேலே வரும் தாமரையில் உலகையே படைக்கும் பிரம்மன் குடிகொண்டு இருப்பதால், தாமரைக்கு என்றும் ஏற்றம் தான். அவன் மனைவிக்கு வெண்தாமரையும், திருமகளுக்கு செந்தாமரையும் என்பதால் தாமரை கூடுதல் விசேஷம் பெறுகிறது.



ஆழ்வார்கள் பாடல்கள் தொடங்கி, முந்தாநாள் நாகேஷ் படத்தில் வரும் 'தாமரைக் கன்னங்கள்', நேற்றைய பாரதிராஜாவின் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே', இன்றைய கௌதம் மேனனின் 'நீருக்குள் மூழ்கிடும் தாமரை' வரை...தாமரை கவிஞர்களுக்குக் கைகொடுத்துவருகிறது. வெறும் தாமரை பெண்பால், அதனுடன் கனியோ கண்ணனையோ சேர்ந்தால் தான் அது ஆண்பால்.

ஆழ்வார் பாடல்கள் பலவற்றில் தாமரை மலர், தாமரைக் காடு, தாமரைக் குளம், தாமரைத் தடாகம், தாமரை இலை உவமைகளாக வருகின்றன. ஆண்டாள் அருளிய திருப்பாவை 22 ஆம் பாடலில் வரும் "கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே" என்ற ஒரு வரியில் சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ போல என்ற இரண்டு உவமைகளை பலமுறை படித்து வியந்திருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வாசலில் வாழை இலையில் தாமரை பூ, தண்டுடன் விற்பார்கள். கையில் கொடுக்கும் போது இதழ்களை விலக்கி மலர வைத்துக் கொடுப்பார்கள். ஒரு முறை சென்னை அன்னபூர்னா ஹோட்டலில் வித்தியாசமான தயிர்ப் பச்சடி சாப்பிட்டேன். பரிமாறியவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில் "தாமரைத் தண்டு பச்சடி". தாமரைத் தண்டிலிருந்து திரி எடுத்து விளக்கேற்றினால் நல்ல பலாபலன் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

"தாமரை இலைத் தண்ணீர் மாதிரி" என்று பற்றற்ற தன்மைக்கு இன்றும் உவமையாக சொல்லுகிறார்கள். ''தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்லை' என்று சினிமா கவிஞர்கள் இதையும் விட்டுவைக்கவில்லை. இதை இன்னும் எப்படியெப்படியோ உவமையாக்கியவர்கள் ஏன் ஒட்டாமல் இருக்கிறது என்று தாமரை இலைமேலிருக்கும் தண்ணீர் போலவே எழுதாமல் நழுவிவிட்டார்கள்.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் விடவில்லை. மழைகாலத்தில் கார்களின் கண்ணாடியில் தண்ணீர் ஒட்டாமல் இருக்க கண்ணாடியில் தடவ ஒருவிதமான ஸ்பிரிட் கிடைக்கிறது. அதைத் தடவுவதால் கண்ணாடி மீது எண்ணெய்மாதிரி ஒரு படலம் பரவி, தண்ணீர் நிற்காமல் உருண்டு ஓடிவிடும். தாமரை இலைகளிலும் இதே மாதிரி மெழுகுபடலம் தான் தண்ணீரை ஒட்டவிடாமல் உருட்டி விடுகிறது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் இலைகளின் மேல் இருக்கும் மெழுகு சீராக இல்லாமல் அக்குபஞ்சர் செருப்பில் இருப்பது மாதிரி குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.







இன்னும் கொஞ்ச நாளில் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை நாம் துடைக்க வேண்டாம். தாமரை இலைத் தத்துவத்தின் அடைப்படையில் தண்ணீர் ஒட்டாமல் அதுவே துடைத்துக்கொள்ளும். மழைநாளில் மூக்குக்கண்ணாடிக்கு இது முக்கியத்தேவையாக நான் கருதுகிறேன்.

- 0 - 0 - 0 -

சில சமயம் கட்டுரை தொகுதியை படிக்கும் போது "அட இது சிறுகதை மாதிரி இருக்கிறதே!" என்று எண்ணத்தோன்றும். சுஜாதா எழுதிய 'அப்பா அன்புள்ள அப்பா' என்ற கட்டுரையில் சிறுகதையின் வடிவம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏன் அவரே கூட இதை பற்றி எழுதியிருக்கார். சில மாதங்கள் முன் என் இசை அனுபவத்தை பற்றி கட்டுரை எழுத ஆரம்பித்து அதை கல்யாணி என்ற சிறுகதையாக மாற்றினேன். சில பேர் எழுதும் சிறுகதை கட்டுரையாக இருக்கும், அவர்களை விட்டுவிடலாம்.

சமீபத்தில் கிரேஸி மோகன் புத்தகத்தில் அப்படி ஒரு சிறுகதை எனக்கு கிடைத்தது.

கிரேஸி மோகன் எழுதியவற்றில் உங்களுக்கு பிடித்தது எது என்றுகேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. அவர் எழுதிய பல கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் ஆனால் எதுவும் நினைவில் இல்லை. அந்த சமயத்தில் சிரித்துவிட்டு மறந்துபோய்விடும். சில வருடங்களுக்கு முன் வாங்கிய, "ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை" என்ற நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதியைப் சில நாட்களுக்கும் முன் படிக்க ஆரம்பித்தேன். மூன்றாம் கட்டுரைக்குப் போகும்போது முதல் கட்டுரை மறந்துவிடும். வரிசையாகப் படித்துக்கொண்டு வரும்போது, "சௌக்கிய மன்னன் பட்டப்பா" என்ற கட்டுரையில் முதல் இரண்டு மூன்று பகுதிகளை நீக்கிவிட்டு, "சென்ற மாதம் சௌக்கிய மன்னன் பட்டப்பாவை ஒரு திருமண மண்டபத்தில் சந்தித்தேன்" என்ற வரியில் ஆரம்பித்து "பாகிஸ்தான் அம்ப்பயர்ஸ் ரொம்ப அழுகுணி ஆட்டம்ப்பா..." என்ற வரியில் முடித்தால் இது அற்புதமான சிறுகதை.







கடைசிக்கு முன் பகுதியைத் தருகிறேன், கதையை யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

"திருமண மண்டபத்தில் பட்டப்பா என்னை பார்த்து, "டேய் கராச்சி டெஸ்ட் மாட்ச் பார்த்தியா?" என்று கேட்டான். நான் ஆபீசுக்குச் செல்வதால் திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் டிவி பார்க்க முடியாது என்று அவனிடம் கூறினேன்".

"சொந்தமாக டிவி வச்சுண்டுருக்கே! என்ன பிரயோஜனம்? கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியலை. அஞ்சு நாளும் நான் கீழ் வீட்டு டிவியில் அமர்க்களமா பார்த்தேன். ஒரு தொந்தரவு கிடையாது. கீழ் வீட்டுப் பசங்கள்ளாம் ஸ்கூலுக்கு போயிட்டாங்க...மாமா ஆபீஸுக்குப் போயிடுவார்..." பட்டப்பா சொல்லச் சொல்ல எனக்கு நாபிக்கமலத்திலிருந்து உதித்த வயிற்றெரிச்சல் வாய் வழியாகப் புகையாக வந்தது".

அடுத்த முறை கிரேஸி மோகனை பார்த்தால் இதை பற்றி பேச வேண்டும்.

- 0 - 0 - 0 - 0

சென்ற மாதம் புத்தகக் கடைக்குச் சென்ற போது, ஆங்கிலப் புத்தகம் ஒன்றை மனைவிக்குத் தெரியாமல் வாங்கினேன். பில் போடும் போது அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, "உங்க கூட இனிமே கடைக்கே வர கூடாது" என்று நேற்று வரை கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். நான் அந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். பல வில்லங்கமான நான் வெஜ் கேள்விகளும் அவற்றின் பதில்களுக் இருக்கின்றன. அதில் இருக்கும் சில வெஜிடேரியன் கேள்விகளும் பதில்களும் சில வாரங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த வார வெஜிடேரியன் கேள்வி; நிஜமாகவே வெஜிடேரியன். கீரை பற்றி.

கீரை சாப்பிட்ட பின் நமக்கு நாக்கு பல்பம் சாப்பிட்ட மாதிரி இருக்கிறதே ஏன்?







கீரையில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) தான் இதற்குக் காரணம். நம்ப முடியவில்லை என்றால் அடுத்த முறை வீட்டில் தயிர் சாதம் சாப்பிடும் போது ஊறுகாய்க்கு பதில் கீரையுடன் சாப்பிடுங்கள். தட்டை நீங்கள் கழுவும்போது பிசுக்கைப் போக்க சபீனா தேவைப்படாது. எல்லாம் கால்சியம் செய்யும் வேலை!.

Comments