Skip to main content

சூரியனை பார்த்தால் தும்மல் வரும்

இரண்டு வார விடுப்புக்கு வெளியூர் செல்லுமுன் சமையல் அறையை ஒழித்துக் கட்டும் போது ஒரே ஒரு சின்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிடைத்தது. தூக்கிப் போடலாம் என்று எடுத்த போது அதன் மேற்புறம் இளம் சிகப்பில் சின்ன சின்ன முளைகளைப் பார்க்க முடிந்தது. தூக்கி போட மனம் வராமல் பால்கனியில் இருக்கும் ஒரு மண் தொட்டியில் அதை ஊன்றி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கிளம்பினேன்.


இரண்டு வாரம் கழித்து திரும்ப வந்தபோது, பால்கனியில் இன்ப அதிர்ச்சி; சர்க்கரை வள்ளிக் கிழங்குச் செடி கொடிபோலப் படர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சிச் சின்னம் போல அதன் இலைகள்.மூன்று மாதங்களாக இன்றும் இலைகள் தொடர்ந்து படர்ந்துக்கொண்டே இருக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் முதல் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிட்டத்தட்ட 8000-10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். அந்தக் காலத்தில் அதை சாகுபடி செய்து, வேக வைத்து சாப்பிட்டார்களா என்று தெரியாது. ஆனால் கிமு 2000-த்தில் வள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ததற்கான அறிகுறிகள் ஆராய்ச்சியில் இருக்கிறது.

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், 1492-இல் அமெரிக்கா வந்தபோது வள்ளிக் கிழங்கு இருந்திருக்கிறது. பிறகு கிபி 1500-இல் அது ஐரோப்பாவிற்குப் பரவியது. அங்கே ஏற்கனவே இதே மாதிரி ஒரு கிழங்கு இருக்க, இதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்று பெயர் வந்தது. அதற்குப் பிறகு ஆப்ரிக்கா, இந்தியா என்றெல்லாம் பரவி, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி அன்று உத்திர வீதி, சித்திரை வீதி வரை வந்துவிட்டது. இந்தியாவிற்கு அடுத்து, சீனா, ஜப்பான், மலேசியா என்று படர்ந்ததில் இன்று உலகம் முழுக்க அரிசியைவிட இதுதான் அதிக நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்குச் செடி பூ பூக்கும் என்று சொல்லுகிறார்கள். காலையில் பூத்த பூ மதியம் முடிவிடுமாம். இன்னும் அந்த அதிசயத்தை எங்கள் வீட்டில் பார்க்கவில்லை. இந்தக் கிழங்கைப் பற்றிப் படிக்கும்போது, சர்க்கரை வியாதியை இது கட்டுப்படுத்தும் என்று படித்து ஆச்சரியப்பட்டேன். சர்க்கரை என்ற வார்த்தை அதில் இருந்தாலும், எல்லா சர்க்கரை நோய்க்கான சமையல் குறிப்புப் புத்தகங்களிலும் வள்ளிக் கிழங்கை வைத்து பிஸ்கெட், சிப்ஸ், குளிர் பாணம் என்று ஒரு குறிப்பாவது இருக்கிறது.

ஜார்ஜ் வாசிங்டன் கார்னர்முதல் உலகப் போரின் போது, கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வள்ளிக் கிழங்கு மாவை கோதுமையுடன் சேர்ந்து படைவீரர்களுக்கு அனுப்பினார்களாம். அமெரிக்கத் தாவரவியல் அறிவியலாளர் ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் தன் தோட்டத்தில் வள்ளிக் கிழங்கை வளர்த்து அதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்களைக் கண்டுபிடித்தார்; அதில் ஸ்டாம்புக்குப் பின்புறம் இருக்கும் கோந்தும் அடங்கும்.


ஜார்ஜ் வாசிங்டன் கார்னர் பற்றிய சிறு வீடியோ படம் இங்கே:
http://www.youtube.com/watch?v=emER1W_OIsA

நாம் தினமும் சாப்பிடும், உபயோகப்படுத்தும் பொருள்களின் செடிகள், மரங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளுவதும் ஒருவித சுவரசியமான படிப்புதான்.

- 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 -

சிறுகதைப் புத்தகம் எழுத எனக்கு 1000 மணி நேரம் தேவைப்படுகிறது என்கிறார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர். எனக்கு அவர் சிறுகதைகளைப் படிப்பதில் எப்போதும் ஆனந்தம். சமீபத்தில் அவருடைய "And Thereby Hangs A Tale" என்ற சிறுகதைத் தொகுப்பில் "A Good Eye" என்ற கதையைப் படித்தேன்.

படிக்கும்போது கதையின் முடிவை ஓர் அளவு எதிர்பார்க்கமுடிந்தாலும், படித்து முடித்தபின் ஆரம்பமும் கதையைக் கொண்டு போன விதமும் எனக்கு வியப்பாக இருந்தது. சுருக்கமாகத் தரப் பார்க்கிறேன்.

1641. ஜெர்மனியில் ஏதோ ஓர் ஊர். ஹான்ஸ் அந்த ஊர்ப் பள்ளியில் படித்து, மேற்படிப்புக்கு பல்கலைக்கழகம் சென்ற ஒரே நபர். வக்கீல். கொஞ்ச நாளில் அந்த ஊர் கவுன்சிலில் இடம்பெற்று சர்ச்சிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். கடைசி காலத்தில் அந்த ஊரில் ஓர் அருங்காட்சியகத்தை நிறுவுகிறார்.

நல்ல ஓவியங்களைக் கண்டுபிடிப்பதில் ஹான்ஸ் வல்லவர்.

படித்து முடித்தபின், பல ஊர்களுக்குச் சென்று, ஓவியங்களைத் தேடித் தேடி ரசிப்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு சமயம் கோர்ட்டில் குடித்துவிட்டு கலாட்டா செய்தவருக்கு தான் தண்டனை வாங்கித் தந்த நபர் ஓர் ஓவியர் என்று தெரிந்துக்கொண்டு அவரைப் பின்தொடந்து, அவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து, அதை விலை கொடுத்து வாங்குகிறார்.

சில மாதங்கள் கழித்து திரும்பவும் அதே ஓவியர் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்ள, அவருக்காக வாதாடி, தண்டனையைக் குறைத்துக் காப்பாற்றுகிறார். அப்போது அவரிடம் ஒரு டீல் போடுகிறார். தனக்கு ஏசுநாதருடைய சீடர்களின் படங்களை வரைந்து தர வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம். அவர் வரைந்து தரும் படங்களுக்கு தகுந்த சன்மானத்தைக் கொடுத்து வாங்குகிறார் ஹான்ஸ்.

இதற்குள் ஓவியருக்கு குடி மற்றும் வேறு கெட்ட பழக்கங்களால் உடல்நலம் கெட்டுபோக, ஹான்ஸ் திரும்பவும் அவரைக் காப்பாற்றி தனக்கு ஏசுநாதரின் கடைசி விருந்துக் காட்சியை வரைந்து தரச் சொல்லுகிறார். அவரும் வரைந்து தருகிறார். மிகப் பிரமாதமாக இருக்கிறது அந்தப் படம். இதுவே அவர் வரைந்த கடைசி படம். ஹான்ஸின் கடைசிக் காலமும் வந்தது; அவருக்கு ஓர் ஆசை; இந்தப் படங்கள் எல்லாம் அந்த அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. வரைந்த ஓவியர் பெயரும், அதைச் சேகரித்த இவர் பெயரும் வரலாற்றில் ஏதோ ஒரு மூலையில் இருக்க வேண்டும் என்ற ஆசை.முன்னூறு வருடங்களுக்குப் பிறகு அந்த சர்ச்சில் ஒரு நாள் பிராத்தனையின் போது மேலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் விழுகிறது. சர்ச் மேற்கூரை பழுதடைந்து இருக்க அதற்கு 70,000 டாலர் செலவு ஆகும் என்பதால் ஊர் மக்களிடம் திரட்டிய நிதி 500 டாலருக்கு மேல் தாண்டவில்லை. என்ன செய்வது என்று யோசிக்கும் போது 300 வருடங்கள் பழமையான ஏசுநாதர் கடைசி விருந்து சாப்பிடும் படம் முன் மான்சினோர் (Monsignor) மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். மான்சினோர் ஹான்ஸ் வம்சாவளியில் வந்தவர். அந்த சர்ச்சை நிர்வாகம் செய்யும் பாதிரியார்.

அப்போது ஒருவர் பாதிரியாரிடம் வந்து, "உங்களுடைய பிரச்சினையை நான் தீர்க்கிறேன். எனக்கு இந்தப் படத்தை விலைக்குத் தாருங்கள்; நான் உங்களுக்கு 70,000 டாலர் தருகிறேன்," என்கிறார். பத்து தலைமுறைகளாக வந்த படத்தை எப்படித் தருவது என்று பாதிரியார் தயங்குகிறார். பிறகு அதை அவரிடம் விற்க முடிவு செய்கிறார். கடவுளாகப் பார்த்து இவரை அனுப்பியிருக்கிறார் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். சர்ச் கூரை மேலும் பழுதடைகிறது. விலை பேசியவருக்கு எப்படி 70,000 தேவை என்று சரியாகத் தெரிந்தது என்று எண்ணி நிச்சயம் கடவுளின் செயலாகத் தான் இருக்கும் என்று அவரிடம் விற்றுவிட்டு சர்ச் கூரையைப் பழுது பார்க்கிறார்.

கதை இன்னும் முடியவில்லை, தேடிப் படித்துப் பாருங்கள்.

- 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 - 0 0 -

சூரியனைப் பார்த்து நாய் குரைக்கும்; மனிதர்கள்? தும்முவார்கள்.

காலை ஆறு மணி நடைப்பயிற்சிக்குத் தாமதமாகி, ஏழு மணிக்கு சூரியன் முகத்தில் அடிக்கும்போது நடைப்பயிற்சி சென்றால், சில சமயம் தும்மல் வரும். அதே போல சில சமயம் காலையில் காரில் போகும்போது. நம்மையும் அறியாமல் சில சமயம் தும்மல் வந்தால், டிவியில் வரும் விளம்பரம் போல கண்டுகொள்ளாமல் இருந்திருப்போம். சூரியனை நேராகப் பார்த்தால் 10-25% பேருக்கு தும்மல் வரும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? அதாவது நான்கு பேரில் ஒருவர் சூரியனைப் பார்த்தால் தும்முவாராம். இதற்கு ஆங்கிலத்தில் 'அச்சோ' அறிகுறி (ACHOO Syndrome) என்கிறார்கள். (ACHOO - Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outburst). இதுகுறித்து பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன; ஆனால் சரியாக யாரும் இதுவரை சொல்லவில்லை.

மண்டையோட்டின் ஐந்தாவது நரம்பின் உட்கருவில் ஏற்படும் அதிர்வுகளினால் இது நிகழ்வதாகச் சொல்லுகிறார்கள். இது மரபணு சார்ந்த விஷயம். அதனால் நீங்கள் தும்மல் போட்டால் உங்கள் குழந்தைகளுக்கு 50% தும்மல் வாய்ப்பு இருக்கிறது. போர் விமானிகளுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் ஆபத்து என்று 'Military medicine' என்ற பத்திரிகைக் குறிப்பு சொல்லுகிறது. அடுத்த முறை தும்மல் வந்தால் சூரியன் அல்லது ஏதாவது வெளிச்சம் உங்கள் முகத்தின் மீது பட்டதா என்று பாருங்கள்; எதுவும் இல்லை என்றால் டிவியில் பழைய பட ராமராஜன் கலர் டிரஸாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் எதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

Comments

Post a Comment