Skip to main content

மகிழ்ச்சிக்கான கோட்பாடு!படம்: தேசிகன்

என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் ராமமூர்த்தி நகர் தாண்டிய பின், சாலைகளின் இருபுறமும் மயிற்கொன்றை மலர்களை மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் பார்க்கிறேன். இந்தச் செடி புதர் அல்லது குற்றுமரம் (Shrub) வகையைச் சார்ந்தது. ஆறு அடிக்கு மேல் வளராது. குல்முஹர் மலர் போலக் கட்சி அளித்தாலும் உற்று கவனித்தால் வித்தியாசங்களைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் Peacock Flower என்கிறார்கள். பூவைப் பார்ப்பதற்கு மயிலின் கொண்டை போல இருப்பதால் இந்தப் பெயர்க் காரணம் என்று நினைக்கிறேன்.

என் பையனை பள்ளிக்குக் கொண்டுவிடும் போது ஒரு வீட்டில் ஸ்டிராபெரி வண்ணத்தில் இந்த மலரைப் பார்த்தேன். ஒரே வகை மலர்களில் பல விதமான வண்ணங்களை நாம் பார்த்திருக்கலாம். ரோஜா, செம்பருத்தி, போகன்வில்லா போன்ற மலர்கள் உதாரணம். மிருகங்களுக்கும், பூக்களுக்கும் இயற்கை பலவித வண்ணங்கள் தந்திருக்கிறது. மிருகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள இயற்கையோடு ஒளிந்துக்கொள்ள இந்த வண்ணங்கள் உபயோகப்படுகிறது. ஆனால் பூக்கள் மற்றவர்களை கவர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு உபயோகப்படுத்துகின்றன.

மலர்களில் இந்த நிறத்துக்குக் காரணம் மூலக்கூறில் இருக்கும் ஆந்தோசயனின் (anthocyanin) என்ற செடிகளில் இருக்கும் நிறமிகள் (pigments). செடிகளில் இருக்கும் இந்த நிறமிகளை ஃப்ளேவனாய்ட்ஸ் (flavenoids) என்கிறார்கள். அடுத்த முறை கடையில் கலர் குடைமிளகாய், செங்கருநீல கோஸ், சிகப்புப் பச்சை மிளகாய்களைப் பார்க்கும் போது இவை எல்லாம் ஆந்தோசயன் அதிசயம் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இலையுதிர் காலத்தில் இலைகள் மஞ்சள் அல்லது சிகப்பு நிறமாக மாறுவதற்கு இதே ஆந்தோசயன்தான் காரணம்.

பல தேசங்களில் மயிற்கொன்றைப் பூ பரவியுள்ளது. ஐரோப்பாவில் இந்தப் பூவை முதல்முதலில் 1647ல் தளபதி பிலிப் கண்டுபிடித்துள்ளார் என்ற தகவல் இருக்கிறது. தன் படையில் சிலருக்கு ஜுரம் வந்த போது இந்தச் செடியின் இலைகளை உட்கொண்டதால் ஜுரம் சரியாகியதாம்!

- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -

"சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும். நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளுள் ஒன்றோ இரண்டோதாம் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளை சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி," என்று தி.ஜா. எழுதியுள்ளார்.

பல சிறுகதை ஆசிரியர்களின் கதைகளைப் படித்தால் சிறுகதை எழுத வருமா என்று தெரியாது. ஆனால் அவர்களின் கதைகளைப் படித்தால் சிறுகதைக்கான கருவை நாடுவதில் எத்தனை வகைகள் சாத்தியம் என்பது தெரியும்.

பள்ளியில் படிக்கும்போது பல கதைகள் என்னைக் கவர்ந்திருக்கிறது. அந்தப் பட்டியலில் சகி(Saki) எழுதிய 'ஓப்பன் விண்டோ' என்ற கதையும் உண்டு (இந்தக் கதை இணையத்தில் இருக்கிறது. தேடிப் படித்துப் பாருங்கள்). சகியின் இயற்பெயர் ஹெக்டர் ஹ்யு மன்றோ (December 18, 1870 - November 13, 1916). பிரிட்டிஷ் எழுத்தாளர்.

என் பெண் சில சமயம் என்னிடம் கதைவிடுவாள். "அப்பா ஸ்கூல என் ஃபிரண்டுகிட்ட 10 அடிக்கு ஒரு பென்சில் இருக்கிறது," என்பது போன்ற அம்புலிமாமாக் கதைகள். ஆர்வமாகக் கேட்டால் பத்தடி பென்சிலுக்கு 5 அடியில் ரப்பர் வேறு இருக்கும். அதை தினமும் பஸ்ஸின் கூறையின் மீது எடுத்து வருவான் என்று போகும்... அப்படிச் சொல்லும் போது எனக்கு சகி எழுதிய ஓப்பன் விண்டோ கதை தான் நியாபகத்துக்கு வரும்.ஃபார்ம்டன் நட்டில் (Framton Nuttel) நரம்பு தளர்ச்சி காரணமாக திருமதி சேப்லிடான் (Mrs.Sappleton) வீட்டிற்கு வருகிறார். வீட்டில் 15 வயதான அவள் அக்கா பெண் இருக்கிறாள். கொஞ்சம் சுட்டி. நட்டில் கொண்டு வந்த அறிமுக கடிதத்தைப் படித்துவிட்டு அவருக்கு வீட்டில் இருப்பவர்களைப் பற்றி அதிகம் தெரியாது என்று கண்டுபிடித்து, வீட்டில் இருக்கும் ஃபிரன்ச் விண்டோ கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும். ஏன் திறந்திருக்கிறது என்று ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். பல நாள்களுக்குமுன் வேட்டைக்குப் போன தன் மாமா மற்றும் இரண்டு பையன்கள் திரும்பவில்லை. அதனால் மனம் உடைந்த சேப்லிடான் இந்தக் கதவை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறாள் என்கிறாள். வேட்டைக்குப் போனவர்கள் எப்படிப் பாடிக்கொண்டே போனார்கள் என்றெல்லாம்கூட தொடர்கிறாள். அந்தச் சமயம் பார்த்து வேட்டையை முடித்துவிட்டு அவர்கள் வர, நட்டில் அவர்களைப் பார்த்து ஏதோ பிசாசு என்று நினைத்து ஓட்டமாக ஓடுகிறார். வந்தவர்கள் அவர் ஓடுவதைப் பார்த்து அந்தப் பெண்ணிடம், "ஏன் வீட்டுக்கு வந்தவர் இப்படி தலைதெறிக்க ஓடுகிறார்?" என்று கேட்க, அந்தப் பெண் அலட்சியமாக, "ஓ அதுவா அவருக்கு நாய்களைக் கண்டால் பயம்,” என்று வேறு ஒரு கதை சொல்லுகிறாள்.. "Romance at short notice was her specialty," என்று கதை முடிகிறது.

சிறுகதை எழுதுகிறவன் வாழ்நாளெல்லாம் மற்றவர்களுடைய சிறுகதைகளைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லும் கு.அழகிரிசாமியின் வாக்கு எவ்வளவு நிஜம்!

- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -- 0 - 0 - 0 -

O + (N x S) + Cpm/T + He.

இது மகிழ்ச்சிக்கான கோட்பாடு (formula).

சில நாள்களுக்குமுன் பிரிட்டிஷ் சைக்காலஜிஸ்ட் ஒருவர் கண்டுபிடித்தது. இதில் 0--(Outdoor) வெளியே செல்வது. N--(Nature) இயற்கை; S--(Social Interaction) நமக்கு தெரிந்தவர்களுடன் பேசுவது. இவைகளுடன் Cpm-- (Childhood memories) சிறுவயது நினைவுகளை வெப்பநிலையுடன் வகுத்து He--(Hoilday excitement) விடுமுறைக் கிளர்ச்சியுடன் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் ஜூன் மூன்றாம் வாரம் வருகிறதாம். அதாவது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்த வாரம். அடுத்த நாள் ஆபீஸ்; காலை ஐந்து மணிக்கு அலாரம் போன்ற காரணங்கள் எனக்கு அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் துன்பம் என்ற ஒன்று இல்லை என்றால் மகிழ்ச்சி என்ற ஒன்று இருந்திருக்காது.

எங்கள் வீட்டுப் பக்கத்தில் மிளகாய் பஜ்ஜிக் கடை ஒன்று இருக்கிறது. ஹிந்தி பேசும் ஒருவர், அவர் மனைவி, இரண்டு மகள் நடத்துவது. எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டு கடலை மாவைக் கரைத்து மிளகாய் பஜ்ஜி போட்டுக்கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். ஆறு வருடம் முன்பு பெங்களூர் வந்த போது அந்தக் கடையில் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. "இங்கே எல்லாம் சாப்பிட்டால் சுகாதாரம் இல்லை," என்ற வீட்டு உத்தரவினால் சாப்பிடாமல் கொஞ்ச நாள் இருந்தேன்.


படம்: தேசிகன்

"The best way to get rid of a temptation is to yield to it," என்ற ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) சொன்னது எவ்வளவு உண்மை. ஒரு நாள் "இதோ வந்துடறேன்!" என்று கிளம்பி அந்த பஜ்ஜிக் கடை முன்பு தயங்கி நின்றேன். அப்போது ஹோண்டா சிட்டியில் வந்த ஒருவர் சில பஜ்ஜிகளை நியூஸ் பேப்பரில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போனார். தைரியம் வந்து நானும் இரண்டு பஜ்ஜி என்று கேட்டு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

"சில்லறையாகக் கொடுங்க!"

கையில் சில்லறை எடுத்துக்கொண்டே "எவ்வளவு?" என்றேன்.

அவர்களே என் கையில் இருந்த 2 ரூபாய் சில்லறையை எடுத்துக் கொண்டு இரண்டு பஜ்ஜி தந்தார்கள். இந்தியா இன்சாட் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தியதை விட இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆறு வருடம் பெங்களூரு, பணவீக்கம், காய்கறி, எண்ணெய் விலை என்று பல மாற்றங்கள் இருந்த போதும் இவர்களிடம் ஒரு பஜ்ஜி ஒரு ரூபாய் தான்.

இங்கே

ஸ்டஃட் பஜ்ஜி - 3 ரூ.

மசால் வடை - 2 ரூ.

உருளைக்கிழங்கு போண்டா - 2ரூ.

ஜிலேபி, பாலக் பக்கோடா போன்றவையும் கிடைக்கும்.

விற்கும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; வாங்கிச் சாப்பிடும் நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. சந்தோஷத்துக்கு எனக்கு இரண்டு ரூபாய் போதும். இது என் கோட்பாடு!

Comments