Skip to main content

எலுமிச்சைச் சாறு கசக்கும்!
'கோர்ட் பிள்ளையார்' என்று அழைக்கப்படும் திருச்சி கோர்ட் பஸ்டாப்பில் இருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது அங்கே ஒரு வித வாசனை வரும்.

சுற்றி முற்றும் பார்த்தால் சைடில் கழுத்தளவு காந்தித் தாத்தா நேற்று தான் சுதந்திரம் வாங்கியது போல சிரித்துக்கொண்டு இருப்பார். சரி அங்கிருந்து தான் வாசனை வருகிறது என்று பக்கம் போனால் அந்த வித்தியாசமான மரத்தைப் பார்க்கலாம்.

மரத்தைச் சுற்றி இருபது அடிக்கு வாசனையாக இருக்கும். என்ன மாதிரி வாசனை என்று விவரிக்க முடியாது. மரத்தின் அடிப்பாகம் முழுவதும் மத்தாப்பு கொள்ளுத்திய பின் வளைந்த கம்பிகள் போல இருக்கும் காம்புகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்திருக்கும். மேலே பார்த்தால் பச்சை இலைகளுக்கு இடையில் அதே மத்தாப்பு கம்பி - நாகலிங்கப்பூ.பூவைப் பாதி பிரித்து பார்த்தால் சின்ன லிங்கம் மாதிரியும் அதற்கு மேலே நாகம் மாதிரியும் இருப்பதே இந்தப் பூவின் பெயர்க் காரணம். ரொம்ப பிரித்தால் நாகம் கையோடு வந்துவிடும்.

ஆங்கிலத்தில் இந்த மரத்தின் பெயர் கேனன் பால் (Cannon Ball). மரத்தின் காய்கள் உருண்டையாக பீரங்கிக் குண்டுகள் போல இருப்பதால் இந்த பெயர்.

இந்த குண்டு பழம் ஆவதற்கு ஒரு வருடம் ஆகுமாம்! பூவோடு சேர்ந்த பழமும் மனக்கும் என்று நினைப்பவர்களுக்கு - பழம் நாற்றம் அடிக்கும்!.

மரத்தின் தாவர பெயர் Couroupita guianensis. இந்தியாவில் இரண்டாயிரம், மூவாயிரம் வருடத்துக்கு முன்பே இந்த மரம் இருந்திருக்கிறது என்கிறார்கள் சங்ககால இலக்கியத்தில் இந்தப் பூ பற்றி குறிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.சென்னை பனகல் பூங்கா, நடேசன் பூங்கா இரண்டு இடங்களிலும் இந்த மரம் இருக்கிறது. இந்த படங்கள் அங்கே தான் எடுத்தது. பூவில் வாசனை வரும் நேரம் மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை. அதனால் அந்த சமயத்தில் போய்ப் பாருங்கள். பெங்களூரில் லால்பாக் கிழக்கு கேட் பக்கம் கூட இந்த மரம் இருக்கிறதாம்.

—oooOOOooo—

ஹென்றி செல்சார் (Henry Slesar (1927 - 2002 )) பற்றி ’கற்றதும் பெற்றதுமி’ல் சுஜாதா எழுதியிருந்தார். பிறகு ரா.கி.ரங்கராஜன் ஹென்றி செல்சாரின் புத்தகம் பற்றி என்னிடம் கேட்டிருந்தார். அறிவியல், திகில், திரில்லர், மர்மக் கதைகள், நாடகங்கள் என்று பலவற்றை எழுதியுள்ளார் செல்சார்.செல்சாருடைய சில சிறுகதைகளை ஹிட்ச்காக் குறும்படங்களாக டிவிக்கு எடுத்துள்ளார். ஹிட்ச்காக் தன்னுடைய டிவி நிகழ்ச்சிக்குக் காட்சிகளை எழுத இவரை வேலைக்கு அமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய ”The Right Kind of House" என்ற சிறுகதையை சில மாதங்களுக்கு முன் படித்தேன். சிறுகதை படித்த பின் அதனுடைய குறும்படத்தையும் தேடி பார்த்தேன். சிறுகதையை திரைக்கு கொண்டு வரும் போது என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை கவனிக்க முடிந்தது.

ஊருக்குள் நுழையும் வாட்டர் பெரி என்பவர், அங்கே வீடு ஒன்று விற்பனைக்கு என்ற பலகையை பார்த்துவிட்டு அந்த ஊர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதை பற்றி விசாரிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஒரு வயதான பெண்; ஐந்து வருஷம் முன்பு பையனைப் பறிகொடுத்தவர்; கடந்த ஐந்து வருஷமாக அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அல்லது வந்தவர்கள் அதன் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்கள்; வெறும் 10,000 டாலர் பெறுமான வீட்டை அந்தப் பெண் ஐந்து மடங்கு அதிக விலை சொல்லுகிறார் போன்ற தகவல்களை அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருப்பவர் சொல்லுகிறார்.

“நான் வேண்டும் என்றால் அந்த பெண்மணியிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று வாட்டர் பெரி கிளம்புகிறார். அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறார். ”பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் போகலாம்” என்று அந்தப் பெண்மணி கராராகப் பேசுகிறார். வாட்டர் பெரி “சரி நீங்கள் சொல்லும் விலைக்கே அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்கிறார். ”நிஜமாகவா ?” என்று கேட்டுவிட்டு அவருக்கு லெமன் ஜூஸ் தருகிறார் அந்தப் பெண்மணி. பிறகு ”இந்த வீட்டைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும்” என்கிறாள்.

தன்னுடைய குடும்பம் பற்றிய தகவல்களைச் சொல்லுகிறார். தன் கடைசிப் பையன் சில வருடங்களுக்கு இறந்துவிட்டான் என்கிறார். “எப்படி?” என்று வாட்டர் பெரி கேட்க, ஒரு நாள் ராத்திரி தன் மகன் ஒரு கருப்புப் பையுடன் வந்தான். அந்த பையில் என்ன இருக்கிறது என்று சரியாகச் சொல்லவில்லை. சில வாரங்கள் இங்கே இருக்க போவதாகவும் சொன்னான்; பிறகு அவன் தன் வேலை போய்விட்டதாகவும் அந்தப் பெண்மணி சொல்லுகிறார்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் ராத்திரி அவன் அறையில் பேச்சுக் குரல், சண்டை, சாமான்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே தான் போன போது தன் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான் என்றும். சுட்டவன் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டான் என்றும் சொல்லுகிறார்.

இவள் மகனுக்கு ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சொல்லித் தெரியவருகிறது. பங்கு போடுவதில் ஏதோ பிரச்சனையில் இவன் சுடப்பட்டான் என்றும் தெரியவருகிறது. ”சுட்டுவிட்டு போனவனைக் கண்டுபிடித்தீர்களா?” என்று வாட்டர் பெரி கேட்க, அதற்கு அந்த பெண் ”இல்லை. அதனால் தான் இந்த வீட்டை ஏகப்பட்ட விலைக்கு விளம்பரம் செய்தேன். ”நிச்சயம் கொலை செய்தவன். என் மகன் இந்த வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போக வருவான் என்ற நம்பிக்கையில் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தேன்” என்கிறாள்.

வாட்டர் பெரி லெமன் ஜூஸை கீழே வைத்த போது கண்கள் இருண்டது. “லெமன் ஜூஸ் கொஞ்சம் கசக்கிறது” என்றார்.
* - *

மணிமேகலை பிரசுரம் ஹிட்ச்காக் கதைகள் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. வேறு யாராவது ஹிட்ச்காக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்களா என்று தெரியவில்லை.

—oooOOOooo—

பெண்ணுக்கு இந்த வாரம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறது. புத்தகங்கள், சீருடை, பேனா, பென்சில் என்று எல்லாம் புதுசு. இந்த வருடம் ஹானா மவுண்டானா தான் பள்ளிக்கு போகிறாள் - பென்சில் பாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ் என்று எல்லாம் அந்த படம் தான். டிவியில் டாம் & ஜெரி, பார்பி இப்ப இப்ப ஹானா மவுண்டானாவும், சுனேனாவும் பார்க்க ஆரம்பித்திருப்பது பெற்றோருக்கு பல விஷயங்களை உணர்த்துகிறது.

வருஷா வருஷம் நான் அவள் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தருகிறேன். “அப்பா அட்டை எல்லாம் வேண்டாம்” என்று சில வருஷங்களில் சொல்லிவிடுவாள் அது வரை இப்பணியைத் தொடர உத்தேசம். அட்டை போட்டுக்கொண்டு இருந்த போது சென்னையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் “என்ன அட்டை போடுகிறாரா? இங்கே பணம் கொடுத்தால் அட்டை வாங்கி அவர்களே போட்டு தந்துவிடுகிறார்கள். எதுக்கு நீங்க கஷ்டப்படுறீங்க” என்று அட்வைஸ் தந்தார்கள். அப்பாக்கள் அட்டை போடுவதால் உள்ள ஒரே நன்மை, பையனோ பெண்ணோ என்ன என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று அவர்களின் புத்தகங்களின் அட்டைப் படத்தையாவது பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

நிறையப் புத்தகங்கள், நிறையப் பாடங்கள். இவர்களுக்கு Environmental Science என்ற பாடம் கூட இருக்கிறது. நான் படித்த போது அது எல்லாம் இல்லை. நான் Environmental Science படிக்காத காலத்தில் அட்டை பழுப்பு நிற காகிதத்தில் இருக்கும். இன்று என் மகளுக்கு பழுப்பு நிற பிளாஸ்டிக் அட்டை!

Comments