இரண்டு நாளைக்கு முன்பு அலுவகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், எப்போதும் போல அமுதன் ஓடி வந்து என் மீது ஏறிக்கொண்டான். கையில் தந்தையர் தின வாழ்த்து அட்டை . நர்சரி ஸ்கூலில் அவன் கை அச்சை கொண்டு செய்தது. என் வாழ்நாள் பொக்கிஷம். - 0 - 0 - நான் வரைந்த படங்களைப் பார்ப்பவர்கள், எப்படி வரையக் கற்றுக்கொண்டேன் என்ற கேள்வியை தவறாமல் கேட்பார்கள். எங்கள் குடும்பமே கலைக்குடும்பம் என்றோ, சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய கலை ஆர்வம் என்றெல்லாம் படம் போடாமல் சிரித்து மழுப்புவேன். எல்லோரையும் போல், கிரிக்கெட், காமிக்ஸ், குச்சி ஐஸ், சினிமா போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. அம்மா மார்கழி மாதம் விடியற்காலையில் கோலம் போடும்போது, இழுத்த இழுப்புக்கு அப்பாவைப் போல கோலமும் வருவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். கோலம் போட்டு முடித்தபின் அதற்கு கலர்கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. என்ன வண்ணம் என்பதைத் தேர்ந்தெடுத்து கோலத்தில் கலர் கொடுப்பேன். “என்ன அழகா கலர் கொடுத்திருக்கான் பாருங்களேன்,” என்று அம்மா அப்பாவைக் கூப்பிட்டு காண்பிப்பாள். “பொம்மனாட்டி மாதிரி என்னடாது இது வேலை?” என்று அப்பா கண்டிக்காதது நான் செய்த அதிர...