Skip to main content

ஒரு சொட்டு வைரம்

நடைப் பயிற்சி செய்யும் போது பார்க்கும் வைரங்களில் ஒன்று தான் நீங்கள் மேலே பார்ப்பது. ஆறரை மணிக்கு மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனி நீர் தான் இந்த வைரம். சொல்லிவைத்தது போல் எல்லா இலை நுனியிலும் ஒரு சொட்டு இருக்கும். ஏழு மணிக்கு சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது எல்லா சொட்டும் ஜொலிக்கும்.

இந்த காட்சியை பார்த்தால்
மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே

இந்த பழைய பாடல் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எல்லா காலத்திலும் ரசிக்கும் தன்மை இருந்திருக்கிறது. அந்த காலத்தில் கேமராவுக்கு பதில் கவிதை.மூங்கில் பற்றி வரும் பாடல்களில் பெரும்பாலும் புல்லாங்குழல் வந்துவிடும். புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் கூடவே வந்துவிடுவார். அதனால் மூங்கில் அழகை யாரும் அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. ஆழ்வார் பாடல்கள், வடக்கே சூர்தாஸ், மீரா போன்ற பக்த்தர்கள் எல்லோரும் கண்ணதாசன் மாதிரி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்று தான் பாடியிருக்கிறார்கள். எம்.எஸ். பாடிய "Kunjani Kunjani Bajati Murli" என்று தேஷ் ராகத்தில் அமைந்த சூர்தாஸ் பஜனை வாழ்கையில் ஒரு முறையாவது கேட்டுவிடுங்கள்.

விசு படத்தில் வரும்
"மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்"


என்ற பாடலை தவிர வேறு மூங்கில் பாடல் இருந்தால் யோசிக்கலாம்.

வண்டு துளைத்த மூங்கில் மரத்தின் வழியாக காற்றுச் செல்லும் போது எழுந்த ஓசையைக் கேட்டு, புல்லாங்குழல் போன்ற கருவிகள் வந்தது என்று சொல்லுகிறார்கள்.

மூங்கில் மரம் என்று நாம் சொன்னாலும் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். சில மூங்கில் மரங்கள் (நமக்கு அப்படியே சொல்லி பழக்கப்பட்டுவிட்டது ) ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் கூட வளருமாம்.

மூங்கில் இலை காடுகள் பார்ப்பதற்கு அழகு. சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்த மூங்கில் காடுகள் வளர்ந்து அதிலிரிந்து கஷ்டப்பட்டு சூரியன் உள்ளே நுழைவதை பார்ப்பது சுகம். இந்த காட்சியை பல தமிழ் சினிமாக்களில் பார்க்கலாம், என்ன ஒன்று அங்கே ஹீரோவும் ஹிரோயினும் பாடுவதால் நமக்கு மூங்கில் மீது கவனம் போகாது; சீன படங்களில் பார்க்கலாம் ஆனால் அங்கே காதலுக்கு பதில் சண்டை.

மூங்கிலின் அழகை பல சீன, ஜப்பான் நாட்டு ஓவியங்களில் பார்க்கலாம். வெறும் கருப்பு மையைக் கொண்டு அழகாக தீட்டியிருப்பார்கள். அவர்கள் தீட்டியதை பல தமிழ் ஹைக்கூ புத்தகங்களில் உபயோகித்துள்ளார்கள். நிச்சயம் இந்த புத்தகத்தில் ஓவியங்களை ரசிக்கலாம்.

மூங்கிலை சங்க காலத்திலிருந்து ரசித்திருக்கிறார்கள்.

"வேய் புரை பணைத்தோள்" (வேய்-மூங்கில்), மூங்கில் போன்ற தோள் என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் தோள் மூங்கில் மாதிரி இருப்பதாக வர்ணித்துள்ளார்கள். இந்த தோள்கள் ஒன்றோடு ஒன்று உரசினால் தீ பற்றிக்கொள்ளுமா என்று தெரியாது, ஆனால் மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டால் சில சமயம் தீ பிடிக்கும்.

கூரேச விஜயம் என்ற நூலில் பிரஹலாதனை அழைத்து வாருங்கள் என்று ஹிரண்யகசிபு கட்டளையிட்ட காட்சியை, மூங்கிலினிடத்து உண்டான நெருப்புப் போலவும், நண்டு தரித்த கர்ப்பம் போலவும், குலை ஈன்ற வாழை போலவும் இருந்ததாம். என்ன மாதிரி உவமை பாருங்கள் !

- 0 - 0 - 0 - 0 -

ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய "எ ட்விஸ்ட் இன் தி டேல்" என்ற புத்தகத்தில் "த ஃபர்பெக்ட் மர்டர்" என்ற கதையை பலர் படித்திருப்பீர்கள். ("முடிவில் ஒரு திருப்பம்" என்ற பெயரில் தமிழ் மொழிப்பெயர்ப்பாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் )

தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதால் அவளை கச்சிதமாக கொலை செய்ய திட்டமிடும் கதை. இந்த மாதிரி கதைகள் தினமும் ஏதாவது செய்திதாளில் படித்துக்கொண்டு இருக்கிறோம். எழுத்தாளர்களில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்று மேடையில் பேசினாலும். அதில் 100% உண்மை இல்லை. சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது.
இந்த மாதிரி கதைளை பெண் எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள், ஆண் எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று அடுத்த முறை படிக்கும் போது கவனித்து பாருங்கள்.

பெண் எழுத்தாளர்கள் நிச்சயம் கதையில் வரும் ஆண்களை ஏதோ வில்லன் போல சித்தரிப்பார்கள். கள்ள தொடர்பில் இருக்கும் மற்றொரு பெண் ஏமாற்றப்படுவாள். அதாவது அவளும் நல்லவள். (எடுத்துக்காட்டு சிவசங்கரி எழுதிய 47 நாட்கள் ).

ஆண் எழுத்தாளர்களும் இதே மாதிரி தான் எழுதுவார்கள், சில வித்தியாசங்கள் இருக்கும். தனது மனைவியை ஏமாற்ற செய்யும் சூழ்ச்சிகள் புத்திசாலித்தனமாக இருக்கும். மனைவியை ஏன் ஏமாற்றுகிறான் என்ற அவனுடைய காரணங்கள் கொஞ்சம் வலுவானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

எந்த ஒரு சிறுகதையையும் படிக்கும் வாசகர் முதல் இரண்டு பத்தியை படித்தவுடன் அந்த கதையின் ஒரு பாத்திரமாக ஆகிவிடுகிறான்/ள். step into someone's shoes என்பார்கள். ஆண் என்றால் அந்த கதையில் வரும் ஆணாகவும் பெண் என்றால் அந்த கதையில் வரும் பெண் கதாப்பாத்திரமாகவும் நினைத்து கதையை படிக்கிறார்கள். அப்படி படிக்க வைப்பது தான் கதாசிரியரின் திறமை. இதனால் சில சமயம் கதைகள் பெண்களுக்கு பிடிக்காமலும், சில கதைகள் ஆண்களுக்கு பிடித்தும் போகிறது.

சுஜாதா எழுதிய "ஒரே ஒரு துரோகம்" இந்த வகை கதை தான். 'தப்பித்தால் தப்பில்லை” என்ற இன்னொரு கதையில் மனைவியை கணவன், காதலி சேர்ந்து ஏமாற்றுவார்கள். இந்த கதையை படித்த பிறகு உங்களை 'நார்கோ சோதனை'க்கு உட்படுத்த பட வேண்டும்!NEDRA TYRE (1912-1990) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய "Killed by Kindness" 1963ல் எழுதியது. இதே வகை என்றாலும் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இதில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு; மனைவியை கொல்ல திட்டம் போடுகிறார். மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு; கணவனை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் இருவரும் ஒருவரை ஒருவர் நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு.... கடைசியில் என்ன ஆகிறது என்பதை படித்து பாருங்கள். இந்த மாதிரி கதைகள் கடைசியில் என்ன நடக்கும் என்று முன்பே யூகித்தாலும், படிக்கும் போது சுவாரஸியம் குறைவதில்லை !

- 0 - 0 - 0 - 0 -

விடுப்புக்கு போன வாரம் சென்னை சென்றிருந்தேன். காலை எழு மணிக்கு பனகல் பார்க் சென்று நடை பயிற்சி செய்யும் போது அங்கே நடுவில் இருக்கும் மண்டபத்தில் எஃப் எம் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்தது. முன்பு ஒரு காலத்தில் இதே இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ ஒலிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன். ராத்திரி ஒன்பது மணி நியூஸுக்கு எல்லோரும் கூட்டமாக காத்துக்கொண்டு நியூஸ் முடிந்தவுடன் கிளம்புவார்களாம்.

நான் போன சமயம் ‘கப்பு’ நேரம். ”என் பாஸை வெறுப்பேத்த என்ன செய்யலாம் ?” என்று ஒரு அப்பாவி அட்வைஸ் கேட்க அதற்கு “குளிக்காம வேர்த்து கொட்டிக்கொண்டு.. செம கப்புடன் உங்க பாஸ் ரூமுக்கு போங்க” என்று புத்திசாலியாக அட்வைஸ் கொடுத்துவிட்டு ”நாளைக்கு இதே போல ஒரு கப்பு அட்வைஸுடன் சந்திக்கலாம்” என்றாள் அந்த பெண்மணி. அடுத்த ரவுண்ட் வரும் போது “வீட்டுக்கு முன்னால் புழுக்கை போட்ட நாய்யை கல்லால் அடி” என்று ஏதோ பாடல் வந்துக்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் மாணவர் கூட்டம் உட்காரும் மேடையில் ஒரு கேக்கை வைத்துவிட்டு ஜிகினா பட்டாசை வெடித்து பறக்கவிட்டு, ”பிஸ் பிஸ்” என்று ஸ்னோவை எல்லோர் மீதும் அடித்துவிட்டு ‘ஹாப்பி பர்த்டே’ பாடி கொண்டாடினார்கள். இதற்கு மேலே நடை பயிற்சி செய்தால் BP வரும் என்று வெளியே வந்த போது பேருந்துகள் எல்லாம் வள்ளுவரின் செம்மொழி மாநாடு பொறித்த சின்னத்தை தாங்கிக்கொண்டு சென்றுக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள் காலை பேப்பரில் ”At 39.3 Degree, Tuesday was the hottest day this year in city" என்று போட்டிருந்தார்கள். ஊருக்கு கிளம்பி வந்துவிட்டேன்.

Comments