Skip to main content

தோசைQuestion: Light beam is incident on a glass surface with refractive index of 0.6 and angle of refraction of 30 degree. Find the angle of incidence ?

இந்த கதையை படிக்கும் முன் சில நிபந்தனைகள். முதல் நிபந்தனை நீங்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். இரண்டாவது நீங்கள் ப்ளஸ்-2வில் இயற்பியல் எடுத்திருக்கவேண்டும். மேலே இருக்கும் கேள்விக்கான விடையைக் கேட்கப்போவதில்லை. அப்படியே அதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களிடம் மடக்கைப்பட்டியல் என்ற லாகிரதமிக் (logarithm) புத்தகம் தேவைப்படும்.

லாகிரதமிக் புத்தகம் ஜான் நேப்பியர் என்பவர் 1614’ம் வருஷம் கண்டுபிடித்தார். ஆனால் அவருக்கு முன்பே ஜொஸ்ட் புர்கி என்பவர் அதை கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அதை பற்றி யாருடமும் சொல்லாததால், அவர் பெயர் பிரபலம் ஆகவில்லை. இப்படி இந்த புத்தகத்துக்கு பின் சுவாரசியமான கதை இருக்கிறது.

என்னுடைய லாகிரதமிக் புத்தகம் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. காந்தி ஜெயந்திக்கு மறு நாள் பள்ளி முதல்வரை அப்பா சந்தித்தார். பள்ளி முதல்வரை ஏன் சந்தித்தார் என்பது இன்னொரு கதை. இரண்டையும் சொல்றேன்.

நான் படித்த பள்ளியில் ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் தான் முதலிடம். அதற்கு பிறகு தான் படிப்பு. தலைமுடி கொஞ்சம் ஜாஸ்தியாக வளர்ந்தால் ஒரு நாள் டைம் கொடுப்பார்கள். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சலூன் லீவு என்றாலும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஷு பளப்பளக்க வேண்டும். டைடு விளம்பரத்தில் வருவது போல சட்டை பளிச்சென்று இருக்க வேண்டும். ஆங்கிலப்பேச்சு சரியாக வராவிட்டால் கூட பரவாயில்லை காலர் பட்டன் போட்டு டை கட்டியிருக்க வேண்டும். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றால் கொடி கம்பத்துக்கு பக்கத்தில் ஒரு மணி நேரம் முட்டி போட வேண்டும். இது கூட பரவாயில்லை, பால்பாயிண்ட் பேனாவில் எழுதக் கூடாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! தொடர்ந்து மூன்று நாள் லீவு போட்டால் அப்பா அல்லது அம்மாவை அழைத்துக்கொண்டு போகவேண்டும். பரீட்சையில் காப்பி அடித்தால் டி.சி. கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இது எல்லாம் தெரிந்தும் காப்பி அடித்து மாட்டிக்கொண்டேன்.

எப்போதும் போல அன்று பள்ளிக்கு சென்றேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். ஸ்கூல் மணி அடித்த போது தான் இயற்பியல் வகுப்பு தேர்வு என்று முந்திய வாரம் வாத்தியார் சொன்னது என் மண்டையில் ஒலித்தது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் முடியாது. மயக்கம் வந்தால் தான் அனுப்புவார்கள். மயக்கம் வருவதற்குள் தேர்வு ஆரம்பித்துவிடும்!

அப்போது தான் சிலர் லாகிரதமிக் புத்தகத்தில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார்கள். முந்தைய வாரம் இயற்பியலில் நடத்திய பாடங்கள். சில குறிப்புச் சொல், விதிமுறை; சூத்திரம் என்று புத்தகத்தின் சந்து பொந்துக்குள் எல்லாம் எழுதிக்கொண்டு இருந்தார்கள் அல்லது குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் இடம் இருந்தால் புறநானூறு கூட எழுதியிருப்பார்கள்.

அட நல்ல உத்தியாக இருக்கிறதே என்று நானும் சில கேள்விகளுக்கான குறிப்புக்களை எழுதி வைத்துக்கொண்டேன். இரண்டே இரண்டு கேள்விகளுக்கான விடைகள் தான். சொன்னால் நம்பமாட்டீர்கள், வகுப்பு தேர்வு ஆரம்பித்தவுடன் கேட்ட நான்கு கேள்விகளில் நான் விடை எழுதி வைத்த இரண்டு கேள்விகளும் கேட்டிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. நாற்பது மதிப்பெண் நிச்சயம் என்பதால் கை துறு துறு என்றது.

மேற்பார்வையிட்ட இயற்பியல் வகுப்பு ஆசிரியர் ஏதோ அவசர வேலையாக வெளியே போக அவர் வரும் வரை தமிழ் ஆசிரியர் மேற்பார்வையிட வகுப்புக்கு வந்தார். வந்தவர் ஏதோ பெரிய புத்தகத்தை படிக்க, இது தான் நல்ல சமயம் என்று லாகிரதமிக் புத்தகத்தை எடுத்து அதில் ஏதோ பார்ப்பது மாதிரி எழுதி வைத்த விடைகளை பார்த்து மெய்மறந்து எழுத ஆரம்பித்தேன்.

காப்பி அடித்து பழக்கம் இல்லாததால், எழுத ஆரம்பித்த பத்து நிமிஷத்தில் மாட்டிக்கொண்டேன். ஒரே ஆறுதல் என்னுடன் சேர்ந்து இன்னும் ஐந்து பேர் மாட்டிக்கொண்டார்கள்.

தமிழ் வாத்தியாரிடம் இது வகுப்பு தேர்வு தான், முக்கியமான தேர்வு இல்லை, ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்று எவ்வளவு மன்றாடியும் அவர் கேட்கவில்லை. எல்லோரையும் கொடி கம்பத்துக்கு சென்று முட்டி போட வைத்தார். எங்களுடைய லாகிரதமிக் புத்தகத்தை கட்டாக ப்யூனிடம் கொடுத்து முதல்வரிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார்.

‘ஏண்டா காப்பி அடிக்க தெரியலைனா ஏண்டா நீ எல்லாம் காப்பி அடிக்கிற?. உன்னால நாங்க மாட்டிக்கிட்டோம்”

“பெல்டாலேயே சாகடிக்க போறார். எல்லாம் உன்னால தான்” என்றான் இன்ஸ்பெக்டர் பையன்

‘மச்சி, நிச்சயம் டிசி தான்”

“ஐயரே உனக்கு இ.ஆர்.ஹைஸ்கூல்ல சீட்டு கொடுத்துடுவாங்க. எங்களுக்கு ?”

“வருஷத்துக்கு நடுவில் கூப்பிட்டு கொடுப்பாங்க ” என்று ஏதோ சைகை காண்பித்தான் ஒருவன்

கூட இருந்தவர்கள் என்னை ஏதோ வில்லன் போல எண்ணி, மாறி மாறித் திட்ட ஆரம்பித்தார்கள். எங்களுடைய பிரகாசமான வருங்காலம் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது முதல்வர் அங்கே வந்து நலம் விசாரித்தார்.

“வாட் ஹாப்பெண்ட் ?”

“லாகிரதம் புத்தகம் … பார்த்து எழுதினோம்….” என்று ஏதோ சொல்ல முயன்றோம். அதற்குள் தமிழ் வாத்தியார் வந்து நடந்தவற்றை அழகாக ஆங்கிலத்தில் விளக்கினார்.

“உடனே வீட்டுக்கு சென்றுவிடுங்கள். திரும்பி வராதீர்கள்” என்று சொல்லிவிட்டு விறுட்டென்று சென்று விட்டார் முதல்வர். எங்களுக்கு வேற வழி தெரியாமல் அவர் ரூமுக்கு முன்பு காத்துக்கொண்டு இருந்தோம். வெளியே வந்தார் உள்ளே சென்றார், ஆனால் எங்களிடம் எதுவும் பேசவில்லை. பள்ளி விட்டு ஒரு மணி நேரம் ஆகியும் நாங்கள் அங்கேயே துவாரபாலகர்கள் போல இருந்தோம்.
கொஞ்சம் நேரம் கழித்து வந்த முதல்வர் “நீங்கள் செய்தது மிகப் பெரிய தப்பு. மன்னிக்க முடியாத தப்பு. நாளைக்கு உங்கள் அப்பாவுடன் வாங்க. டிசி கொடுக்க வேண்டும். இப்போது வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

வீட்டுக்கு சென்ற போது “என்னடா ஒரு மாதிரியா இருக்கே ?” என்று அம்மா கேட்டதற்கு ஏதோ பொய் சொல்ல வேண்டியிருந்தது.

மறுநாள் வழக்கம் போல ஒன்றுமே நடக்காதது போல் பள்ளிக்கு சென்றேன். பள்ளி ஆரம்பித்து பத்து நிமிஷத்தில் பியூன் வந்து ஒரு சீட்டை வாத்தியாரிடம் கொடுத்தார். என் பேரில் ஆரம்பித்து முன் தினம் காப்பி அடித்தவர்களின் பெயர்களை வரிசையாக படித்து உடனே முதலவர் அறைக்கு போகச் சொன்னார். ஆங்கில வாத்தியார் ஒன்றும் புரியாமல் முழித்தார்.

நாங்கள் மெதுவாக நடந்து சென்று முதல்வர் அறைக்கு முன் சோகமான மூஞ்சியை வைத்துக்கொண்டு நின்றோம்.

“நேற்று உங்களிடம் என்ன சொன்னேன்?” என்றார் கறாராக

“அப்பாவை அழைத்துக்கொண்டு….” என்று எழுத்தோம்

“அப்பா இல்லாமல் ஸ்கூலுக்கு வராதீர்கள், அப்பா கையெழுத்து போட்டால் தான் டிசி கொடுக்க முடியும்”

‘வி ஆர் வெரி சாரி….இனிமே செய்ய மாட்டோம்…”

“நோ எக்ஸ்கியூஸ். நாளைக்கு அப்பாவுடன் வர வேண்டும் இல்லை என்றால் ஸ்கூலுக்கு வராதீர்கள். உடனே வீட்டுக்கு கிளம்புங்கள்” என்றார்.

வேற வழியில்லாமல் கொஞ்ச நேரம் நின்று கொண்டு இருந்தோம். பிறகு ஸ்கூலுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்றோம். அதன் பிறகு வீட்டுக்கு வந்துவிட்டோம்.

“என்னடா ஸ்கூல் இல்லையா இன்னிக்கு?” என்றாள் அம்மா

“இல்லமா… உடம்பு சரியில்லை…வீட்டுக்கு வந்துவிட்டேன்”

“இரண்டு நாளா மூஞ்சியே சரியில்லை…. என்னாச்சு?”

வேற வழி தெரியவில்லை. முழுவதும் ஒப்பித்துவிட்டேன். அப்பாவை அழைத்துகொண்டு வர வேண்டும் என்பதை தவிர.

‘என்னடா இப்படி பண்ணிவிட்டே … நேத்திக்கே இதை ஏன் சொல்லை… அப்பாவுக்கு தெரிஞ்சா ஐயோ”

“அப்பாவை அழைத்துக்கொண்டு வர வேண்டுமாம். இல்லை பள்ளிக்கு வரக் கூடாதாம்…”

“என்னவோ மானம் போக போகிறது…ஒழுங்கா படிச்சாத்தானே…நாள் பூரா கிரிகெட் கிரிகெட்டுனு ஊரை சுற்றினா இப்படி தான்… இது எங்கே போய் முடியப் போறதோ…சாயந்திரம் அப்பா வந்தா நீயே சொல்லிக்கோ” என்று அம்மா சமையல்கட்டுக்கு சென்றுவிட்டாள்.

“நீயே சொல்லிடேன்’ என்றேன் அப்பா வந்தவுடன்

“நான் மாட்டேன்… உங்க அப்பாகிட்ட யார் பேச்சு கேட்டுக்கிறது”

“பேச்சுக்கேட்டுக்கிறது” என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அதிக சத்தமாக வந்து அப்பா காதில் விழுந்தது. “என்னடா? ஸ்கூல்ல ஏதாவது டூர் போறாளா ?”

“நான் … வந்து… கிளாஸ் டெஸ்ட்… ” என்று ஏதோ ஆரம்பிக்க

“இந்தாங்க காப்ப்ப்பி, சூடு ஆற போறது” என்று அம்மா டைமிங்காக வந்து கொடுக்க

“என்னடா சட்டுனு சொல்லு”

“ஸ்கூல்ல காப்பி அடிச்சு மாண்டிண்டு இருக்கான்” என்று அம்மா எடுத்துக்கொடுக்க, முழுவதும் ஒப்பித்துவிட்டேன்.

முழு கதையும் கேட்டுவிட்டு “இப்ப என்ன நான் வந்து உங்க பிரின்சிபலை மீட் பண்ணனுமா ?”

“ஆமாம். டிசி கொடுக்க போறாளாம்” என்று அழுதுவிட்டேன்

“என்னடா பொம்மனாட்டி மாதிரி அழுதுண்டு.. நாளைக்கு என்னால வர முடியாது ஆபீஸில மீட்டிங் இருக்கு நாளனைக்கு வரேன்” என்றார்.

“இவன் மட்டும் இல்லை. இவனோட சேர்ந்து இன்னும் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று அம்மா கடைசியில் கொஞ்சம் ஆறுதல் சொன்னாள்.

அப்பா ஒன்றும் சொல்லாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், பயம் கலந்த வேதனையாகவும் இருந்தது.

இரண்டு நாள் கழித்து அப்பாவுடன் ஸ்கூலுக்கு சென்றேன். முதல்வரின் அறைக்கு வெளியே ப்யூனிடம் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லி அனுப்பினார். ஒரு மணி நேரம் கழித்து எங்களை உள்ளே வரச் சொன்னார்.

“யு நோ வாட் யுவர் சன் ஹாஸ் டன் ?’

“யெஸ் ஹி டோல்ட் மீ எவரித்திங்”

“எங்களுக்கு டிசிபிளின் ரொம்ப முக்கியம், டி.சி. கொடுப்பது தான் ஒரே வழி” என்றார்.

என் அப்பா அப்போது ஒரு காரியம் செய்தார் பிரின்சிபலுடன் ஏதோ தனியே பேச வேண்டும் என்று சொல்லி என்னை வெளியே அனுப்பிவிட்டார். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து பிரின்சிபல் என்னை உள்ளே அழைத்தார்.

“நாளையிலிருந்து ஸ்கூலுக்கு வரலாம், ஆனால் இன்னொரு தடவை இது மாதிரி செய்தால் … ” என்று எச்சரிக்கை கொடுத்தார். ஏதோ நூறு கிலோ பளுவை இறக்கி வைத்த மாதிரி இருந்தது.

அப்பாவுடன் வெளியே வந்தவுடன் “வாடா கிருஷ்ணா லாட்ஜ் போலாம்” என்று என்னை அழைத்துக்கொண்டு போனார்.

“உனக்கு என்னடா வேணும் ?”

“தோசை”

“இரண்டு இட்லி, ஒரு தோசை” என்று ஆடர் கொடுத்தார்.

சாப்பிட்டுக்கொண்டே “ஒரே கரண்டி மாவு, தோசை விலை ஆறு ரூபாய், இட்லி விலை இரண்டு ரூபாய் நான் வாங்கும் சம்பளத்தில் எனக்கு தோசை சாப்பிட மனசு வரலை. பிளஸ்-2’ல நல்லா படிச்சாதான் என்ஜினியர் ஆக முடியும்….நல்லா சம்பாதிக்க முடியும்..” என்றார்.

உடனே தமிழ் படம் மாதிரி அடுத்த நாள் படிக்க ஆரம்பித்து நுற்றுக்கு நூறு வாங்கி ஏதோ பெரிய கம்பெனியில் சேர்ந்து லட்ச லட்சமாக சம்பாதித்தேன் என்று பொய் சொல்லப்போவதில்லை.

பிளஸ்+2ல சுமாராக படித்து, ஈவினிங் காலேஜில் பிஎஸ்சி பிறகு எம்.எஸ்.சி படித்து கம்ப்யூட்டர் சையுன்ஸ் என்பதால் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் யாரோ தெரிந்தவர்களின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தேன்.

முதல் மாசம் சம்பளம் வாங்கிய கையோடு அப்பா அம்மாவை பார்க்க திருச்சிக்கு சென்றேன். அப்பா ரிடையர் ஆகி ஒரு வருஷம் ஆகியிருந்தது. என்ன சம்பளம், வேலை எப்படி, சென்னை பிடித்திருக்கிறதா ? என்று விசாரித்தவர்

“வா கிருஷ்ணா லாட்ஜ் போய்ட்டு டிபன் சாப்பிடலாம்”என்றார்.

வழக்கம் போல அப்பா தான் ஆடர் செய்தார்

“இரண்டு இட்லி, ஒரு தோசை”

“அப்பா அன்று நான் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட போது பிரின்சிபலிடம் என்ன பேசின?” என்றேன்

“ஓ அதுவா ஒரே ஒரு பொய் சொன்னேன். அதுவும் காந்தி ஜெய்ந்திக்கு அடுத்த நாள்.”

வெயிட்டர் மேஜையில் இரண்டு இட்லி, ஒரு தோசை வைத்தவுடன்

அப்பா “இன்னிக்கு நான் தோசை சாப்பிடறேன், நீ இட்லி சாப்பிடு.” என்றார்.

Comments

 1. even i had experience in copying from logarithm book. but naan matikala! enga professor told question no and formulas for each question. so got it cleared with 52%

  ReplyDelete
 2. Whats the lie??? Even i am not getting

  ReplyDelete
 3. Whats the Lie sir...i am suspecting related to Gandhi Jeyanthi.

  ReplyDelete
 4. /// “அப்பா அன்று நான் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட போது பிரின்சிபலிடம் என்ன பேசின?” என்றேன் ///

  நான்கூட 'உண்மையச் சொன்னேன்' என்று சொல்வாரோ என்று நினைத்தேன். அதாவது அவர் பூர்வாசிரமத்தில் மும்பையில் பெரிய தாதா என்று :-)))

  சரவணன்

  ReplyDelete
 5. காந்தி ஜெயந்திக்கு அடுத்த நாள் பிரின்சிபாலைப் பார்த்தார். முதல்நாள் மீட்டிங் என்கிறார். காந்தி ஜெயந்தி அன்றைக்கு எந்த அலுவலகம் திறந்திருக்கிறது? அப்பா வேலை பார்த்தது நிச்சயம் அரசு அலுவலகம் அல்லது வேறு இந்திய தனியார் நிறுவனமாகத்தான் இருக்க முடியும் - அமெரிக்க மல்டிநேஷனலாக இருக்க வாய்ப்பில்லையே.

  ReplyDelete

Post a Comment