“என்னை கன்னத்தில் பளார்னு அறைஞ்சுட்டாண்டா!” “நீ என்ன செஞ்சே?” “பீச் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போனேன்.” “உன்னை யார்டா அங்கே எல்லாம் போகச் சொன்னா?” இந்த உரையாடல் என் பெரியப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் +2 படிக்கும் போது நடந்தது. அடி வாங்கியவர் என் பெரியப்பா. அதிகம் படிக்காதவர். நாடகங்கள், ரத்னா ஃகபே சாம்பார் இட்லி தான் அவர் உலகம். இ.பி என்ற மின்சார வாரியத்தில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். திருவல்லிக்கேணியில் வாடகை வீடு. இன்றும் சைக்கிள்தான் அவர் ஒரே சொத்து. காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. அவருக்கு தேவையான விஷயம் மட்டும் காதில் விழும்! எம்.ஜி.ஆர் இறந்த அன்று பீச் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது ஏதோ ஒரு தெருவில், ஒரு மேசை மீது எம்.ஜி.ஆர். படம் வைத்து, மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துள்ளார்கள். அந்தத் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போன அவரை நிறுத்தியிருக்கிறார்கள்… “தலைவரே போயிட்டார். நீ எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவ? சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிகிட்டு போடா” பெரியப்பா கீழே இறங்கி, “என்ன?” என்று கேட்டிருக்கிறார். “கஸ்மாலம், தலைவர் போயிட்டார். ...