Skip to main content

சாக்லெட் கடவுள் வந்திருந்தார்

சுஜாதா மறைவிற்குப் பிறகு முதன்முறையாக டிசம்பர் இறுதியில் சென்னை சென்றிருந்தேன்.


சென்னை பனகல் பார்க், கோடம்பாக்கத்தில் ஸ்கூல் சறுக்கு மரம் போல் மேம்பாலங்கள் முளைத்திருக்கின்றன. போத்தீஸ் பக்கம் பத்து நிமிடம் நின்று பார்த்தபோது, 2 பஸ், 5 ஆட்டோ சில பைக்குகள் போயின. மேம்பாலத்துக்குக் கீழே வழக்கம்போல் அதே கூட்டம்.


இரண்டு நாடகங்களுக்குப் போக முடிந்தது. கிரேஸி மோகனின்,-"சாக்லேட் கிருஷ்ணா", பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் (பூர்ணம் குருகுலம்)  பூர்ணம், சுஜாதா நினைவாக - "கடவுள் வந்திருந்தார்."



[%image(20090102-crazy_mohan.jpg|227|176|null)%]

சாக்லெட் கிருஷ்ணாவிற்கு என் மகளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவளுக்கு இது முதல் நாடகம் அனுபவம். போன சமயம் கிரேஸி மோகன் மேக்கப் இல்லாமல் "வாங்க தேசிகன்," என்று வரவேற்று கெஸ்ட் டிக்கேட் கொடுத்து உட்கார வைத்தார். ( கிரேஸி இதை 119 வது தடவை போடுகிறார் )


கதை ரொம்ப சிம்பிள். மாதுவிற்கு பல பிரச்சினைகள் (தங்கை கல்யாணம், பிரமோஷன், அப்பாவிற்கு கச்சேரி சான்ஸ்...). "கிருஷ்ணா ஒரு வழி சொல்லேன்" என்று வேண்ட, கிருஷ்ணா கிரேஸியாக மூக்கு கண்ணாடி மீசையுடன் வருகிறார்.


கிருஷ்ணருக்கு மீசை உண்டா என்று கேட்டால், பார்த்தசாரதிக்கு மீசை இருக்கே என்று பதில். இது மாதிரி நாடகம் முழுக்க இந்த கிருஷ்ணர் அடிக்கும் லூட்டிதான் சாக்லேட் கிருஷ்ணா. நடுநடுவில் சாக்லெட் கிருஷ்ணர் சர்கார் கிருஷ்ணராக மாறி மேஜிக் பண்ணுகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு கிளியை கர்ச்சீப் ஆக்கி அனுப்புகிறார். குச்சியை பொக்கே ஆக்குகிறார். கருப்பு துணியின் கலரை மாற்றுகிறார். இவைகளை என் மகள் விரும்பிப் பார்த்து ரசித்தாள். நாடகம் முழுக்க சிரிப்பு மழை, எதிர் சீட்டில் ஒரு கிழவர் விழுந்து விழுந்து சிரித்தார், அடிபடாமல்.


நாடகம் முடிந்து,  நாரதகான சபா கேண்டீனில் தோசை ஆர்டர் செய்தேன். ஒரு பெரிய கல்லில் எட்டு தோசையை வார்த்தார். பிறகு அதை எடுக்க முயன்றார் முடியவில்லை. பெயர்த்து எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டார். மீண்டும் தோசை - குப்பை தொட்டி.  தோசை க்யூ, ஃபாமிலி தோசை மாதிரி நீளத் தொடங்கியது. "அப்பா கிருஷ்ணா மாமா உனக்கு ஃபிரண்டு தானே, அவரைக் கூப்பிடு" என்றாள் மகள் பொறுமையில்லாமல். "கிருஷ்ணருக்கு தோசை வார்க்கத் தெரியாது, சாப்பிடத் தான் தெரியும்" என்று சொல்லி சமாளித்தேன்.


மேனேஜர் மாதிரி ஒருவர் வந்து அல்லது கிருஷ்ணர் மேனேஜராக வந்து, தோசைக்கல்லில் வெங்காயத்தைக் கொட்டி பிறகு அதில் எண்ணையை ஊற்றி, கல்லைச் சுத்தம் செய்தார். தோசை மாவில் கொஞ்சம் மைதாவைக் கலந்து தோசை வாத்தார். தோசை திருப்பிப் போடாமல் அதுவாகத் திரும்பிக்கொண்டது.


கிரேஸி மோகன் நாடகத்தில் கடவுள் தோன்றி அதனால் விளையும் குழப்பங்கள் கதை என்றால் கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் எதிர்கால மனிதன் தோன்றுவதால் விளையும் குழப்பங்கள் தான் கதை.


சென்னையில் இருந்த போது கடவுள் வந்திருந்தார் நாடகம் பல முறை பார்த்திருக்கிறேன். சுஜாதாவுடனே இரண்டு  மூன்று முறை பார்த்திருக்கிறேன். நாடகம் முழுக்க பூர்ணம் தான் இருப்பார், மற்றவர்கள் எல்லாம் தெரியவே மாட்டார்கள்.


கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் எதிர்கால மனிதன் வந்தால் எப்படி இருக்கும் என்று பூர்ணம் நினைக்க, திடுதிப் என்று எதிர்கால மனிதன் ’ஜோ’ வந்துவிடுவார்.


பூர்ணம் மறைவிற்கு பிறகு திரு.மூர்த்தி அந்த பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மிகவும் நன்றாகவே அதை செய்திருக்கிறார். நாடகத்துக்கு பூர்ணம் மனைவி, மகள் வந்திருந்தார்கள். பூர்ணம், சுஜாதா மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஒரு நாடகம் போட வேண்டும் என்று விரும்பினாராம். ஆனால் அந்த ஆசை நிறைவு பெறுவதற்கு முன்பே அவரும் உடல்நலம் குன்றி, காலமானார். அதனால் அவருடைய இறுதியாத்திரையில் தகனம் செய்ய எடுத்துச் செல்லும்போதும் அவருக்கு நாடக மேக்கப் போட்டே தகனத்துக்கு எடுத்துப் போனார்கள் என்று சொன்னார் அவர் மனைவி.


சென்னைக்கு இந்தமுறை காரில் சென்று வந்ததால், காஞ்சிபுரம் பக்கத்தில் திருப்புட்குழி திவ்விய தேசத்தைப் பார்க்க முடிந்தது. மூலவர் - விஜயராகவ பெருமாள், தாயார் மரகதவல்லி.


[%image(20090102-tputkuzhi.jpg|265|175|null)%]

ராமர் ஜடாயுவிற்கு (புள்-பறவை) ஈமக் கடன்களைச் செய்த ஸ்தலம் என்று இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஈமக் கடன்களைச் செய்திடும்போது செய்பவரின் மனைவியும் உடன் இருப்பது சிறப்பு. விஜயராகவப் பெருமாளின் வலப்புறம் இருந்திட வேண்டிய பெரிய பிராட்டி இடப்புறமாகவும், இடப்புறம் இருந்திட வேண்டிய பூமாதேவி வலப்புறமாகவும் இருப்பதை இங்கே பார்க்கலாம். ஜடாயுவிற்கு ஈமக் கடன்களை செய்யும் போது அக்னி ஜ்வாலையின் வெப்பத்தைத் தாளமுடியாமல் பூமா தேவி தலையை பெருமாள் பக்கம் சாய்த்தபடி காட்சியளிக்கிறார். (ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடந்தையில் மட்டும்தான்.)


இத்தலத்திற்குக் கூறப்படும் அதே வரலாறு புள்ளம் பூதங்குடி ஸ்தலத்துக்கும் கூறப்படுகிறது. எது உண்மை என்ற ஆராய்ச்சி இந்தப் பதிவுக்கு தேவை இல்லை.


திருமங்கையாழ்வாரால் "புலங்கெழு பொருநீர்ப் புட்குழி' என்று மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் ஸ்ரீராமானுஜர் பாடங்களை படித்த இடமும் இருக்கிறது. தேசிகரும் மணவாள மாமுனிகளும் அபிமானித்த தலம் இது. இக்கோயிலில் பாண்டிய, விஜயநகரப் பேரரசுடைய கல்வெட்டுகள் எந்த ஐ.டியும் படையெடுக்காததால் இன்றும் இருக்கிறது.

Comments