Skip to main content

புத்தகக் காட்சி 2009 ( Book Fair 2009 )

வீடு மாற்ற சரியான தருணம் எது?


1. வீட்டில் பாத்ரூம் சரியில்லை
2. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை
3. அடுத்த மாதம் புத்தகக் கண்காட்சிவிடை - 3.


போன வருட இறுதியில் கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் 100 அடி தள்ளி வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம்.


புது வீட்டுக்குப் போவது என்பது கிட்னிக்கு டயாலிசிஸ் மாதிரி. வீட்டில் இருக்கும் குப்பைகள் எல்லாம் ஒழிந்தன. என்றோ காணாமல் போன வஸ்துக்கள் புதையலாகக் கிடைத்தன. “அட நான் ஸ்கூல் படிக்கும் போது உபயோகித்த பேனா, ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்”. சில பொருட்கள் புதையலாக மறைந்து போகும். “என் காது தோடோட திருகை எங்கே போட்டீங்க, எங்க அம்மா கல்யாணத்துக்கு வாங்கித் தந்தது”.


”புது வீட்டுக்கும் எல்லா புத்தகங்களையும் அள்ளிக்கட்டிண்டு வந்தீங்கன்னா..” என்ற சின்ன எச்சரிக்கையே சப்வே ”எதை எடுத்தாலும் பத்து ரூபா” பிளாஸ்டிக் சாமான் விற்கும் வியாபாரி போல ஆக்கியது. எல்லாப் புத்தகங்களயும் பரப்பிப் பார்த்த போது எனக்கே மலைப்பாக இருந்தது. எவ்வளவு புத்தகங்கள் படிக்காமல் அப்படியே இருக்கின்றன என்று. பல புத்தகங்கள் நான் வாங்கியவை, சில புத்தகங்கள் எனக்கு அன்பளிப்பாக வந்தவை.


டிக்‌ஷனரி, பிரபந்தம், சமையல் குறிப்பு போன்று அடிக்கடி தேவைப்படும் புத்தகங்கள் என்று பார்த்தால் இருபதுக்கு மேல் இல்லை. மீதம் உள்ள புத்தகங்களை வேண்டும், வேண்டாம் என்று பிரிக்க எனக்கு ஒரு முழு நாள் தேவைப்பட்டது. பிரித்ததில் வேண்டாம் என்று நான் கடாசிய புத்தகங்கள் கிருஷ்ணர் பக்திக்கு ஈடாக ருக்மணி குவித்த நகை போல் காட்சியளித்தது.


சித்தர் பாடல்களையும், மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸையும் கட்ட நான்கு மூட்டை தேவைப்பட்டது. மூட்டைகளை வீட்டுக் காரிடரில் போய் வைத்துவிட்டு யார் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளாம் என்று திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன். (சென்னையில் இருந்திருந்தால் ஏதாவது நூலகத்துக்குக் கொடுத்திருக்கலாம். )


புத்தகங்களை விட அனுபவம் நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறது. இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது சட்டை பையில் நூறே ரூபாயுடன் சென்றேன்.
(மகளிர் சுய அமைப்பு விற்கும்) ஃபுரூட் பவுல், காப்பி, தண்ணீர் வாங்க)


போன முறை போலவே இந்த முறையும் நிறைய ஸ்டால்கள், நிறைய புத்தகங்கள். இவை எல்லாம் யாருக்காக எழுதப்படுகிறது? கூட்டம் ரொம்ப கம்மியாக இருந்ததால் ரிலாக்ஸ்டாகப் பார்க்க முடிந்தது.


”என்னை பார் யோகம் வரும்” படத்திற்கு பதில் இந்த முறை ஒபாமா. எல்லா ஸ்டால்களிலும் தவறாமல் புத்தக விலைப் பட்டியலைத் தருகிறார்கள். உயிர்மை அதைப் புத்தகமாகவே போட்டிருக்கிறார்கள்.


"பெண்களுக்கு ஏற்ற வசதியான உடை எது ?"
- சேலை,
-சுடிதார்,
-பேண்ட்


என்ற வாக்கெடுப்புக் கேள்வி பேக்ரவுண்டில் இருக்க (ஓ-பக்கங்கள்) ஞாநியை பார்த்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.


“சார் நான் உங்கள் Fan,” என்று கையெழுத்து வாங்கிய இளைஞரை பார்த்து, “Dont be my Fan, be my reader," என்றார்.


கிழக்கு ஸ்டாலில் பத்ரியிடம் பேசிய போது “பெண்களின் அந்தரங்கம், ஆண்களுக்கு” என்ற புத்தகம் நன்றாக விற்பனை ஆகிறது என்றார். எழுதியவர் யார் என்று பார்த்த போது ‘நப்பின்னை’ என்று இருந்தது. இவர் (ஆண்) பிள்ளை என்ற ரகசியத்தைச் சொன்னார் பத்ரி.


பிராடிஜி ஸ்டாலில் ராமானுஜருக்குப் பக்கதில் பெரியாரும் அவருக்கு பக்கதில் அப்துல் கலாமும்....என்று அங்கே வரும் மாணவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.


“டேய் எவ்வளவுடா வெச்சிருக்கே ? “


“கூல் டிரிங்க்ஸ், சமோசா வாங்கணும்”
 
“சார் இந்தப் புத்தகம் எவ்வளாவு?”


“25 ரூபாய், 20% டிஸ்கவுண்ட் - 20 ரூபாய்”


“இந்த புத்தகம் கொடுங்க” என்று அரை நிஜார் பையன் அப்துல் கலாமை வாங்கிகொண்டு போகிறான். அவன் முகத்தில் 20 ரூபாய்க்கு புத்தகம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி தென்பட்டது. கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு இது பெரிய வெற்றி என்பேன்.


[%image(20090119-GnaniDesikan.JPG|256|192|null)%]

அறிவியல் சம்பந்தமாக “விண்வெளி” என்ற புத்தகத்தை ஹரன் பிரசன்னா பில் போட, பெற்றுக்கொண்டேன். மற்றொரு பல்பு போட்ட அறிவியல் புத்தகத்தைத் தேடி பார்த்ததில் பல தீவிரவாதிகள் அதை மறைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு கிழக்கு ஸ்டாலில் சத்யஜித்ரே என்ற பெரிய எழுத்து கீழே சாவி என்ற சின்ன எழுத்து புத்தகம் கண்ணில் பட்டது. புத்தகத்தைப் பார்த்தவுடன் சத்தியஜித்ரே பற்றி சாவி எழுதியது என்று நினைத்தேன். அப்பறம் தான் தெரிந்தது சத்தியஜித்ரே எழுதிய சாவி என்ற துப்பறியும் கதை அது. (இந்த ஸ்டாலில் எல்லா புத்தகங்களும் 25% டிஸ்கவுட் என்று ஒருவர் வந்து என் காதில் கிசுகிசுத்தார்.)


திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என்ற வரிசையில் தலைவலி என்ற புத்தகமும் அடுக்கி வைத்திருந்தார்கள். மினிமேக்ஸ் புது வரவு. எவ்வளவு பேர் வாங்குவார்கள் என்று தெரியவில்லை.


“சார் எனக்கு தடை செய்யப்பட்ட எல்லா புத்தகங்களும் அனுப்புங்க,” என்று ஒருவர் பணம் கட்டிக்கொண்டிருந்தார்.
 
“இன்னிக்கே அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன்” என்று தன் மார்கெட்டிங் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் பிரசன்னா. கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரசன்னா பிஸியாகவே இருந்தார்.


விகடன் ஸ்டாலில் வழக்கம் போல் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் வாசன் மலரை இலவசம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கே வந்த மதன் ரசிகர், “ஹாய் மதன் 2, 3, 4, 5 தான் இருக்கு; முதல் வால்யூம் எங்கே?”


“அது கிழக்கு பதிப்பகத்தில் போட்டிருக்காங்க”


”கிழக்குல நாலு புத்தகம் இருக்கு”


“அப்படியா முதல் வால்யூம் ஸ்டாக் இல்லாமல் இருக்கலாம்”


வந்தவர் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு லிப்கோ பதிப்பகத்துக்கு சென்று 15 ரூபாய்க்கு ஏதோ ஒரு ஸ்லோகம் புத்தகத்தை வாங்கிகொண்டு போனார்.


உயிர்மை ஸ்டாலில் இந்த முறை சுஜாதா இல்லாதது ஒரு பெரிய இழப்பு. புதிதாக சுஜாதாவின் ’கண்ணீரில்லாமல்’ கட்டுரை தொகுப்பு புத்தகம் வந்திருப்பதாக நண்பர் ஹமீத் சொன்னார். (நான் போன சமயம் அது வந்திருக்கவில்லை.)


முன்பு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (ஸ்ரீரங்கம்)-க்கு ஒரு ஸ்டால் ஒதுக்கியிருப்பார்கள், சில வருஷங்களாக அது மிஸ்ஸிங். கண்காட்சியின் மற்றொரு பயன் நண்பர்களைப் பார்க்க முடிகிறது. ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயஸ்ரீயையும்(இங்கே இருக்கும் படம் அவர் எனக்கு எடுத்தனுப்பியது), ராஜாராமையும் சந்திக்க முடிந்தது. பாக்கியம் ராமசாமி ”நான் நினைத்ததைவிட நீங்க யெங்கா இருக்கீங்க,” என்றார்.  இயக்குனர் வசந்த் ”உங்க ராமாநுஜலு கதை படித்தேன்,” என்றார்.


காண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:
விண்வெளி - கிழக்கு
ஸ்ரீதர் ஜோக்ஸ் - விகடன்


கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகங்கள்.


நேரு முதல் நேற்றுவரை - கிழக்கு
கண்ணீரில்லாமல் - சுஜாதா
சுஜாதாவை கேளுங்கள் - குமுதம்
கோபுலு - கிழக்கு


2006 - புத்தகக் கண்காட்சி
2007 - புத்தகக் கண்காட்சி
2008 - புத்தகக் கண்காட்சி

Comments