Skip to main content

எலக்டரானிக்ஸ் கனவுகள்


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்த புத்தர் எப்படி இருப்பாரோ அதுபோல் பாதியளவு புத்தர்சிலை திருச்சியில் எங்கள் வீட்டு எதிர்ப்புறம் உள்ள அருங்காட்சியக வாசலில் மழையிலும் வெயிலிலும் கூட சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்கும். காவிரி ஆற்று மணலில் கண்டெடுத்தது என்று தினத்தந்தி பேப்பரில் நான்காம் பக்கம் படத்துடன் செய்தி வந்தது நினைவிருக்கிறது. புத்தர் வந்த அதே சமயம் 'நானோ எலக்ட்ரானிக்ஸ்' என்ற சின்ன கடையும் எதிர்ப்புறத்தில் 'ரேடியோ, '2-In-One, டிவி ( Solidare, Dynora, JVC, Sony, Panasonic ) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் சிறந்த முறையில் ரிப்பேர் செய்து தரப்படும்' என்ற போர்டுடன் வந்தது.


ரிப்பேர் என்பது தவறான‌ பிரயோகம், 'சிறந்த முறையில் பழுது பார்த்துத் தரப்படும்' என்று இருக்க வேண்டும். புத்தருக்கும் எனக்கும் தமிழ் படிக்கத் தெரிந்திருந்தால் அன்றே சொல்லியிருப்போம்.

ஒரு முறை எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டர் பழுதான போது, அங்கே எடுத்துச் சென்றேன். கடையில் இருந்தவர் அதை திறந்து பார்த்து, "தம்பி பெல்ட் அறுந்துபோச்சு. இரண்டு ஹவர் கழித்து வாப்பா," என்றார்.

திரும்ப கடைக்குச் சென்றபோது, "இந்த செட்டை முடிச்சுட்டு தான் அதை பார்க்கணும், நேரமாகும்," என்றார்.

அவர் என்னென்ன செய்கிறார் என்று பார்க்கும் ஆர்வத்தில் "பரவாயில்லை வெயிட் பண்ணறேன்" என்றேன்.

இந்த மாதிரி ரேடியோ சமாசாரங்களில் எப்போதும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆறாவது படிக்கும் போது, ஸ்பீக்கர் பின்னால் இருக்கும் மேக்னட்டைக் கொண்டு மண்ணில் இருக்கும் இரும்புத் துகள்களை ஈர்ப்பதைப் பார்த்து வியந்து இரும்பை எப்படி காந்தம் ஆக்குவது என்று, இரண்டு வயது சீனியரான பக்கது வீட்டு செந்திலிடம் கேட்டதற்கு

"ஓ அதுவா, இரும்புத் துண்டை தண்டவாளத்துல வெச்சு, அதுமேல ரயில் ஓடினா காந்தம் ஆகிவிடும்," என்று சொல்லியதை நம்பி(அவனும்தான்)‌, நானும் செந்திலும் ஒரு நாள் சாயந்திரம் கல்லுக்குழிக்குச் சென்று ஒரு இரும்புத் துண்டை தண்டவாளத்தின் மேல் வைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்கையில், புதருக்குள் ஒரு ஆணும் பெண்ணும் திடீர் என்று பிரவேசித்ததால் பயந்துபோய் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த செந்தூரத்தை இட்டுக்கொண்டு வீடு வந்துசேர்ந்தோம். திரும்பி அந்த இடத்துக்குப் போக பயமாக இருந்ததால் நாங்கள் வைத்த இரும்பு துண்டு என்ன ஆனது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. 

காதில் வைத்துக்கொள்ளும் டெலிஃபோன் பாகத்தில் பெரிய வயரை இணைத்து மறுமுனையை மரத்தில் தொங்கவிட்டால் பேட்டரி இல்லாமல், "ஆயிரம் தாமரை மொட்டுகளே..," கேட்டது. அது எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துக்கொள்ள அப்பாவின் பாக்கெட் டிரான்சிஸ்டரைக் கழற்றி, எதையோ திருகிவிட்டு மாட்டிய போது அதில் விவித‌பாரதிக்கு பதில் விசில் சவுண்ட்தான் வந்தது.

இந்த மாதிரி எலக்டாரானிக்ஸ் புதிர்களுக்கு விடை தேடும் போது தான் எங்கள் வீட்டு டேப்ரிக்கார்டர் பெல்ட் அறுந்துவிட, அவர் பெல்ட் மாட்ட காத்திருக்கையில்..

"அண்ணே, இந்த மாதிரி ரிப்பேர் செய்ற‌தெல்லாம் எங்க‌ கத்துக்கிட்டீங்க?"

"நாமக்கல் பக்கத்துல‌ ஒரு கடையில‌ வேலைக்கு சேர்ந்து கத்துகிட்டேன்"

அவர் பெல்ட் மாற்றும் போது, கடையில் 'Electronics For You' புத்தகம் கண்ணில் பட்டது.

"இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தரட்டுமா?" என்று கேட்டு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். புத்தகத்தில் Burglar Alarm செய்வதற்கான வரைபட சர்க்யூட் இருந்தது. அதை உடனே செய்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் திரும்பவும் கடைக்குச் சென்றேன்.

"அண்ணே இதை செய்யறதுக்கு என்னென்ன வாங்கணும்?"

நம்பிக்கையில்லாமல், "முதலில் சால்டரிங் அயர்ன் வாங்கியா, பிறகு சொல்லித் தாரேன்."

சைக்கிள் எடுத்துக்கொண்டு சிங்காரத்தோப்பு புறப்பட்டேன்.

சிங்காரத்தோப்பு பற்றி திருச்சிகாரர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்னை ரிச்சி தெரு மாதிரி ஒரு பிரதேசம். டிவி ஆண்டனா முதல் மிக்ஸி காயில் தேடினால் பாவாடை நாடா கூட கிடைக்கும். அங்கே சென்று சால்டரிங் அயர்ன் மற்றும் ரெஸிஸ்டன்ஸ், கெபாசிட்டர்கள் என்ற சாமான்களை வாங்கிவந்து அந்தக் கடைகாரரிடம் காண்பித்தேன். அவர் கற்றுக்கொடுக்க நான் அந்தப் பிரசித்தி பெற்ற Burglar Alarm செய்து முடித்து, வேலை செய்கிறதா என்று பார்த்தேன். நீங்கள் எதிர்பார்க்கிற‌ மாதிரியே... வேலை செய்யவில்லை.

என்ன தவறு செய்தேனோ, சுவிட்ச் போட்டால் பெல் அடிக்காமல், வீட்டில் டியூப் லைட், ஃபேன் போன்றவற்றைப் போடும்போதெல்லாம் அலார்ம் அடிக்கத் தொடங்கியது.

என்ன தவறு என்று கண்டுபிடிப்பதற்குள்ளாகவே என்னை நண்பர்கள் ஐன்ஸ்டீன் மாதிரி பார்க்கத் தொடங்கினார்கள்.

அலார்ம் வந்த வேளை ஒரு நாள் ராத்திரி எங்க வீட்டு சோபா செட்டை இரவு யாரோ வந்து களவாடி போனார்கள். கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனின் எஸ்.ஐ ஆச்சரியப்பட்டு
"எப்படி சார் ? இவ்வளவு பெரிய சோபா செட்டை எடுத்துக்கொண்டு போனான், வீட்டில நீங்க என்ன சார் பண்ணிக்கிட்டு இருந்தீங்க"

என் அலார்ம் சரியா வேலை செஞ்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.

இந்த அபூர்வ அலார்மைத் தொடர்ந்து, டிஸ்கோ லைட் என்று தற்போது பஸ்களில் வெங்கடாஜலபதி தலைமாட்டில் அணைந்து அணைந்து எரியும் எல்.ஈ.டி சமாச்சாரத்தையும், கைத்தட்டினால் பல்பு எரியுமாறு ஒரு சாதனத்தையும், பிறகு டிஜிட்டல் கடிகாரத்தையும் செய்தேன்.
(நம்பாதவர்கள் வீட்டுக்கு வந்தால் இந்த டிஜிட்டல் கடிகாரத்தை இன்றும் பார்க்கலாம் )

எலக்டரானிக்ஸ் கடைக்கு அடிக்கடி சென்று எடுபடி வேலை செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் அந்தக் கடையில் பப்பி லஹரியும், 'விளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்..' போன்ற இளையராஜா பாடல்களும், பஜகோவிந்தம் முதலிய பக்தி பாடல்களும் LP தட்டிலிருந்து கேசட்டுக்கு ரிக்கார்ட் செய்து தரத் தொடங்கினார்கள். க‌டைக்குக் கூட்டம் வரவே, அங்கே பலர் வேலைக்குச் சேர்ந்து, கொஞ்ச நாளில் எலக்டரானிக்ஸ் ரிப்பேர் செய்வதை நிறுத்திவிட்டு சினிமா பாடல் வியாபாரமே பிரதானமாக நடந்தது. நானும் அந்தக் கடைக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.

அந்தச் சமயம் எங்கள் அத்தையின் மாப்பிளை, எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார். பெரிய எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்; ஐ.ஐ.டியில் கோல்ட் மெடல் வாங்கியவர். "காபிக்கு இன்னொரு ஸ்பூன் சக்கரை," என்பதைக் கூட ஆங்கிலத்தில் தான் பேசுவார்.

என் அப்பா அவரிடம், "இவனுக்கு எலக்டாரினிக்ஸில ரொம்ப இண்டரஸ்ட், ஏதாவது சொல்லித் தாங்களேன்" என்று சமைஞ்ச பெண்ணுக்கு சங்கீதம் சொல்லித்தரச் சொல்வதுபோல் சிபாரிசு செய்தார்.

"இஸிட், யு ஹேவ் டு நோ அபவுட் வோல்டேஜ் அண்ட் இம்பிடன்ஸ்.. " என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார். எனக்கு அந்த புத்தர் சிலைக்கு எதிரில் உள்ள ரேடியோ கடைக்காரர் சொல்லித்தருவது தான் புரிந்தது.

என் அப்பாவிற்கு நான் பெரிய எலக்டரானிக்ஸ் என்ஜினியராக வருவேன் என்று கனவு இருந்தது. யாராவது எனக்கு எலக்டரானிக்ஸ் சொல்லித்தர இருக்கிறார்களா என்று விசாரித்துக்கொண்டேயிருந்தார்.

அம்மாவிற்கு தெரிந்தவர்கள், "ஆண்டார் தெருவில் ஒரு பைலட் மாமா இருக்கார், அவருக்கு நிறைய விஷயம் தெரியும் அங்கே டிரை பண்ணலாமே?" என்று காதில் போட்டுவைத்தார்கள்.

ஆண்டார் தெருவில் உள்ள ரமா கபே எதிரில் உள்ள ஆலமரம் பக்கத்தில் மாவடு விற்பார்கள்; அதற்குப் பின்புறம் திருவல்லிக்கேணி பிக் ஸ்டிரிட் டைப் வீட்டுக்கு உள்ளே சென்று கட்டைப்படி மேல் ஏறிப் பார்த்த போது, பைலட் மாமா மெதுவடை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

"ரகுபதி மாமா அனுப்பினார்"

"மெதுவடை சாப்பிட்ர‌யா?"

"வேண்டாம் மாமா, எனக்கு எலக்டரானிக்ஸ் கத்துக்கணும்...," சொல்லிக்கொண்டே நான் செய்த டிஸ்கோ லைட்டைக் காண்பித்தேன்.

"அய்ய்வ்" என்ற ஏப்பத்தால் சட்னி, சாம்பார் வாசனையை என் மூக்குக்கு அனுப்பிவிட்டு, பக்கத்தில் உள்ள பெரிய டப்பாவைக் காண்பித்து,

"இது என்ன சொல்லு பார்க்கலாம்?"

"கார் பேட்டரி.. ?"

"இல்லை. இது வ‌யர்லெஸ் பாக்ஸ். இந்தியன் ஏர்லைன்ஸ்காரங்க என்கிட்ட ரிப்பேர் செய்யச் சொல்லியிருக்காங்க. நாளைக்கு இரண்டு பேரும் சேர்ந்து இதை ரிப்பேர் செய்யப் போறோம். ரிப்பேர் செய்துட்டா ஃபிளைட்டில பேசிக்கிறது வீட்டுல கேட்கும்"

எனக்கு வழக்கம் போல் ஆர்வம் அதிகமாயிற்று. இதைக் கற்றுக்கொண்டு எதிர்காலக் கனவில் ஒரு ரேடியோ ஸ்டேஷனே ஆரம்பித்துவிட்டேன். 

"நாளைக்கு சரியா காலம்பர ஒன்பது மணிக்கு வந்துடு. வரும்போது, ரமா கபேயிலிருந்து இரண்டு மெதுவடை வாங்கிண்டுவா. அப்படியே ஓஜனம் ரெண்டு ரூபாய்க்கு வாங்கிண்டு வா"

"ஓஜனம் எங்கே கிடைக்கும் மாமா?"

"தமிழ் மருந்து கடைகள்ல‌ கேட்டுப் பார்"

அடுத்த நாள் மெதுவடையுடன்  போன போது, மாமா அந்தப் பெட்டியைப் பிரித்து போட்டு சால்டரிங் அயர்னை வைத்துக்கொண்டு எதையோ பற்றவைத்துக் கொண்டிருந்தார். நான் வந்தவுடன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு மெதுவடையை சாப்பிட்டு முடித்தார். பிறகு நான் வாங்கி வந்த ஓஜனத்தை சால்டரிங் அயர்னால் தொட்ட போது, சாம்பராணி வானையுடன் புகைவந்தது. ஏதோ வ‌யரை எடுத்தார்... பற்ற வைத்தார்... ஏதோ வயரை பிடுங்கினார்... எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இன்னும் நிறைய வேலை பாக்கியிருக்கு, நளைக்கு வா!" என்றார். "வரும் போது மெதுவடை..." என்றும் ஞாபகப்படுத்தினார்.

இப்படி அடுத்த ஒருவாரம் மெதுவடையும் வேகநடையுமாக சென்றது. தினமும் மெதுவடை வாங்குவதைக் கண்ட ஹோட்டல் கல்லாகாரர்,

"தம்பி, வடை பைலட் மாமாவுக்கா?"

ஆச்சரியத்துடன் "ஆமாம்," என்றேன்.

"அவர் ஒரு மாதிரி ஆச்சே" என்று சைகை மூலம் காண்பித்தார்.

அடுத்த நாளிலிருந்து மாமாவீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.

காலேஜில் எலக்ட்ரானிக்ஸ் ஒரு பாடமாக வந்த போது சின்ன வயதில் செய்த சில சாதனங்கள் எப்படி வேலை செய்தது என்று புரிந்தது. தங்கம் வெள்ளி பற்ற வைக்க ஓஜனம் உபயோகிப்பார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். (மெல்டிங்க் பாயிண்ட் கம்மியாகுமாம்) இப்படிப் பல விஷயங்களுக்கு விடை கிடைத்து. ஆனால் நான் ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர் ஆவேன் என்ற என் அப்பாவின் கனவு மட்டும் ஏன் பலிக்கவில்லை என்பது ஒரு புதிராகவே இருந்துவந்தது.

சில வருடங்களுக்கு முன் கமலின் சதிலீலாவதி படம் பார்த்த‌ போது படத்தில் கமலின் பையன் காரை ஸ்பேனர் கொண்டு நோண்டிக் கொண்டிருப்பான். "இவன் பெரிய  என்ஜினியராக வருவான்" என்று கமல் சொல்ல அதற்கு கல்பணா , "கார் மெகானிக்காக் கூட வரலாம்" என்று சொல்லுவார்.

கனவு பலிக்காததற்கான காரணம் புரிந்தது.

Comments

  1. இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க...நான் திருப்பூரில் எலக்ட்ரானிக்ஸ் சர்வீ
    ஸ் பண்றேன்.....9443062117

    ReplyDelete

Post a Comment