Skip to main content

பெண்களூர்-0 9

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்"


"என்ன ஆயிற்று?"


"என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்"



[%image(20080729-bangalore_dna.jpg|225|158|null)%]

புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகம் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன்.


குமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது.


"என்ன ஆச்சு குமார்?"


"காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி," என்றார்.


அடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயசுக்கு மேல் இருக்கும். என்ன காயம் என்று பார்த்தேன். ஒருவருக்கு கைமுட்டியில் சின்னதாகச் சிராய்ப்பு. மற்றொருவருக்கு என்ன காயம் என்று நான் கேட்டதும்தான் தேட ஆரம்பித்தார்.


அப்போதுதான் கவனித்தேன், குமார் சட்டை கிழிந்திருந்தது.
 
"சட்டை ஏன் கிழிந்திருக்கிறது உனக்கு ஒன்றும் ஆகலையே?"


"பைக்கில் இடித்துவிட்டுக் கிழே விழுந்தவர்கள், என் கன்னத்தில் அடித்துவிட்டு, என் சட்டையைக் கிழித்துவிட்டார்கள். பக்கத்தில் இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் சொன்னார்கள்"


இப்படி கை நீட்டி அடித்தவர்களை நாலு கேள்வி கேட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்களுக்குக் கன்னடம் தெரியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு வந்து எங்கள் பாஸிடம் விஷயத்தைச் சொன்னோம்.


நாங்கள் மூவரும் மருத்துவமனை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்முன், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். (அவர்களுக்கு நாங்கள் மருத்துவமனை பில் குடுக்காமல் எஸ்கேப் ஆகிவிடுவோம் என்ற பயம்).


வந்தவர்களை எங்கள் பாஸ், "இரண்டு பேர் மீதும் தவறு. அப்படியிருக்க ஏன் குமார் மீது கைவைத்தீர்கள்? அது உங்கள் தவறு. நீங்கள் அவரை அறைந்த பின்பும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார், அப்படி இருக்க... "
 
உடனே அவர்களுக்குக் கோபம் மேட்டூர் அணையில் காவிரி நீர் போல் வந்தது.


"நாங்கள் அப்படித்தான் வேகமாக வருவோம். உங்கள் ஊழியர் சீட் பெல்ட் போட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. (அவர்கள் ஹெல்மெட் போடவில்லை) நீங்கள் ஒரு கன்னடர், இந்த ஊர் சாப்பட்டை சாப்பிட்டுவிட்டு ஏன் அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள்...," என்று ஆரம்பித்தவர்கள், "உங்களை எல்லாம் ஊரைவிட்டு விரட்டவேண்டும். எல்லா ஐ.டி. கம்பெனிகளையும் மூடவேண்டும்; அப்பா, அம்மா... ," என்று எல்லாவற்றையும் சந்திக்கு இழுத்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக மேலும் இரண்டு பேர் பைக்கில் வந்து  ஹிந்தியில் சில கெட்ட வார்த்தைகளைச் சொன்னார்கள். தசாவதாரத்தில் கேயாஸ் தியரி என்று பேசினார்கள். அப்போது புரியவில்லை, கூட்டதை பார்த்ததும் புரிந்தது.


உடனே நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவது என்ற முடிவுக்கு வந்தோம். 


"வாருங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு; அங்கே போய் இரண்டு பேரும் புகார் கொடுக்கலாம்"


"நாங்களே டிராபிக் போலீஸ்தான்" என்ற அதிர்ச்சி தரும் உண்மையை சொன்னார்கள். உடனே கூட்டம் கொஞ்சம் சலசலத்தது. ஸ்கூட்டரில் வந்தவர்கள் ரொம்ப நல்லவர்கள், எங்கள் மீது தான் தப்பு என்று சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்.


"அதனாலென்ன, ஸ்டேஷன் போகலாம்" 


ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு சென்றோம். அவர்களும் தயங்கித் தயங்கி வந்தார்கள்.


எங்கள் ஆபீஸுக்கு பக்கதில் இருக்கும் மடிவாளா போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றால், அவர் முழுக் கதையும் கேட்டுவிட்டு எங்கள் புகாரை அந்த கோடியில் இருக்கும் ஆடுகோடியில் கொடுக்கச் சொன்னார்.


ஆடுகோடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "இதோ பாருங்க, கோர்ட் கேஸ் என்றால் இருவருக்கும் பிரச்சனைதான்; அதனால் உங்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்," என்று ஒரு தீர்வு சொன்னார்.


இருவரிடமும், ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டார். நாங்கள் எழுதிய கடிதத்தை அவர்களிடமும், அவர்கள் எழுதிய கடிதத்தை எங்களிடமும் கொடுத்தார். முதலுதவி சிகிச்சைக்கு ஐநூறு ரூபாயை அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். நாங்களும் கொடுத்தோம்.


ஸ்கூட்டரில் வந்தவர்கள், போலீஸ்காரர்களே இல்லை, என்ற உண்மை போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தது.


நாங்கள் கிளம்பிய போது, ஸ்கூட்டரில் வந்த இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


- 0-0-


என் மகள் பாட புத்தகததில் ஒரு கேள்வி


"What important paper you should carry while you are driving?"
 
பதில் "டிரைவிங் லைசன்ஸ்"
 
நேற்று இந்த பதில் தப்புப்பா என்றாள்.
 
"'லைசன்ஸ்' சரியான பதில் தானே?"


"போலீஸ் அங்கிள் உன்னை ரோடில் நிறுத்தினால், நீ பைசா தானே கொடுப்பே? அதனால important paper is 100 rupees paper" என்றாள்.


குழ‌ந்தைகள் நம்மிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.


- 0-0-


வெள்ளிக்கிழமை டோட்டல் மாலில் டீம் லஞ்ச் முடித்துக்கொண்டு ஆபீஸ் வந்து சேர்ந்த போது, ஒரே பரபரப்பு. பரபரப்புக்குக் காரணம் தொடர் வெடிகுண்டு வெடிப்பு.  இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், எங்கள் ஆபீஸில் இண்டர்நெட் படுத்துவிட்டது. கிரிக்கெட் ஸ்கோர் போல் வெடிகுண்டு வெடிப்பு எண்ணிக்கை நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக்கொண்டே போனது. செல்பேசி நம்பர் அடிக்கும் முன் "Error in Connection" என்று வந்தது.


வீட்டிற்குச் செல்லும்போது, எங்கள் அலுவலகத்துக்கு பக்க்த்தில் நிறைய டிவி கேமரா டிராஃபிக் இருந்ததைப் பார்க்க முடிந்தது. என்ன என்று விசாரித்ததில் எங்கள் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இந்த மாசம் டாக்டரிடம் போய் காதை பரிசோதனை செய்யவேண்டும்.


எங்கள் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி பெயர் சரவணன் இருப்பார். சில சமயம் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு அந்தப் பக்கமாக நடப்போம். அந்த கடைக்குப் பக்கத்தில் பிளாட்ஃபாரத்தில் எல்லாத் தமிழ் பத்திரிகைகளையும் பரப்பி ஒருவர் விற்றுக்கொண்டிருப்பார். சனிக்கிழமை இங்கேதான் அந்த வெடிக்காத வெடிகுண்டு இருந்திருக்கிறது. 


[%image(20080729-cobblerSnap.jpg|230|175|Cobbler Near Office)%]

குண்டு வெடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு சரவணனின் மனைவி, 'அட நம்ம கடை பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி இருக்கிறதே அதில் ஏதாவது பூச்செடி வைத்து தங்கள் கடை முன்பு அழகு செய்யலாம்' என்று எண்ணி நகர்த்தும் போது சில வயர்கள் தென்படவே அதை அறுத்து எரிந்துவிட்டு தொட்டியை நகர்த்திவைத்துள்ளார். (இதனால் இவரே வெடிகுண்டை செயலிழக்க செய்திருப்பார் என்பது என் எண்ணம்)


வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்த போதும் சரவணனுக்கு இதை பற்றி தெரியவில்லை. பிறகு அடுத்த நாள் இது வெடிகுண்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் பக்கத்தில் உள்ள டீ கடையில் சொல்லியிருக்கிறார்; பிறகு தன் மனைவியிடம் அந்தத் தொட்டியை இருந்த இடத்திலேயே வைக்க சொல்லியிருகிறார். அவரும் அதை அதே இடத்தில் மீண்டும் நகர்த்தி வைத்துள்ளார்.


அதன் பிறகு போலீஸ் வந்து அதை செயலிழக்க செய்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள். அந்த வெடிகுண்டு பக்கத்தில்தான் அவருடைய இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தது என்பதை நினைக்கும்போது பதறாமல் இருக்க முடியவில்லை.


- 0-0-
முதல் படம் - இப்போது பெங்களூர் முழுக்க "I Believe in Banglalore, because bangalore is in my DNA" என்ற வாசங்களுடன் பெரிய விளம்பரப் பலகைகள் நகர் முழுவதும் காணப்படுகிறது.




பெண்களூர் 1, 2, 3, 4, 5, 6, 7, 8


 

Comments