Skip to main content

பொடிடப்பா – புஷ்பா ராகவன்

இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார்.  'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே.

இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்... 


 


( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்)பொடிடப்பா - புஷ்பா ராகவன்
நான் எப்போதாவது  தனிமையில் அமர்ந்திருக்கும் போது  என் இள வயது நினைவுகளில்; மூழ்கிவிடுவேன். இனிமையும்,குறும்பும் நிறைந்த பருவம் அது.


எனக்கு எட்டு வயது. எனக்கு கீழ் ஏழு ,ஆறு ,ஐந்து ,வயது நிரம்பிய தங்கை தம்பிகள்,
பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கெல்லாம் ஒரேகுஷிதான்.


அதற்குகாரணம் ஸ்ரீரங்கத்திலிருந்து எங்களின் அத்தை பையனும் ,மாமா பசங்களும்
வருவார்கள்,அவர்கள் வந்துவிட்டாலே வீட்டில் கலகலப்புக்கு குறைச்சலே இருக்காது, அத்தை பையன்வெங்கிட்டுவும்.,மாமாபையன் ரங்குவும்.,ஜோக்மன்னர்கள்,
அவர்கள் சொல்லும் ஜோக்குக்கு நாங்கள்தான் விழுந்து,விழுந்து சிரிப்போம்.ஆனால் அவர்கள், சிரிக்கவேமாட்டார்கள்.


எங்களின் அப்பா இருக்கும்போது மட்டும் எல்லோரும் கப்சிப் என்று இருப்போம்.
ஏனென்றால் எல்லோருக்கும் அவர் ஒரு சிம்மசொப்பனம், அவர் எப்போது ஆஃபீஸுக்கு
கிளம்புவார் என்று காத்துக்கொண்டிருப்போம், என் கடைக்குட்டி தங்கைதான்நொடிக்கொருதரம் வாசலுக்கு சென்று ஆஃபீஸ் ஜீப் வந்துவிட்டதா என்று பார்த்து விட்டு வருவாள்.


இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம், என் அப்பாவும் நாங்கள் பாடங்களைத்தான் சீரியசாகப்படித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்து மகிழ்ந்டுபோய்விடுவார், பாடப்புத்தகத்துள் கதைப்புத்தகம் ஒளிந்திருப்பது பாவம் அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.


''டேய்; வெங்கிட்டு நீதான் கணக்கு பாடம் நன்னா போடுவியே, இவாளுக்கும் கொஞ்சம் கணக்கு சொல்லிக்கொடு.ஏய் பசங்களா,அவன் ஊருக்கு போறதுக்குள்ளே கணக்கு போடக்கத்துக்கோங்க.'' என்று கண்டிப்போடு சொல்வார்.


அவ்வளவுதான் நரிக்கு நாட்டாமை கொடுத்ததுபோல் ஆகிவிடும் வெங்கிட்டுவுக்கு.''ஆகட்டும் மாமா, நிச்சயம் சொல்லிக்குடுக்கிறேன்''என்று பவ்யமாக சொல்லிவிட்டு ''எல்லோரும் போய் நோட்டு,பென்சில் கொண்டு வாங்க ,நான் போட்டு தர்ற கணக்கை ஒழுங்கா போடுங்க''என்று அதட்டுவான்.


'' இருடா,இரு மாமா கிளம்பிஆஃபீசுக்கு போகட்டும் வச்சுக்கிறோம் கச்சேரியை''என்று ரகசியமாய் ஆள்காட்டி விரலால் எச்சரிப்போம்.ஆனால் எமகாதப்பயல்,எங்களைப்பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பதுபோல்நடிப்பான்.


இந்த சமயம் கடைக்குட்டி ஓடி வந்து ''ஜீப் வந்துடுத்து,ஜீப்வந்துடுத்து'' என்று ரகசியமாய் மெதுவான குரலில் கட்டியம் கூறும்.அவ்வளவுதான் எங்களுக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.


ஆனால் எங்கள் அப்பா உடனே கிளம்பமாட்டார். ஜீப் டிரைவரை உள்ளே வரச்சொல்லி  அம்மாவை கூப்பிட்டு அவனுக்கு காஃபி கொடுக்கச்சொல்லி உத்தரவுபோட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்து டிரைவர் காஃபி குடிக்கும் வரை காத்துக்கொண்டிருப்பார்.


டிரைவரோ மெதுவாக கப்பில் இருந்த காஃபியை ஒவ்வொரு சிப்பாக உறிவதைபார்த்து எரிச்சலாய் வரும்.''மாமி போட்டுக்குடுத்த இந்த தண்ணிகாப்பியையே இப்படி ரசிச்சு குடிக்கிறானே, அப்ப அவன்வீட்டுகாப்பி எப்படி இருக்கும்,பார்த்துக்குங்க''என்பான் வெங்கிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு. எங்களுக்கும் சிரிப்பு வந்தாலும்


''இரு,இரு எங்க அம்மா போட்ட காஃபியையா கொறை சொல்றே? இனிமே உனக்கு காஃபியே குடுக்கவேண்டான்னு அம்மாகிட்டே சொல்லி வைக்கிறேன் ''என்று சொல்லி அவனை பயமுறுத்துவேன்.


ஒரு வழியாக அப்பா ஜீப்பில் ஏறி தெருமுனை தாண்டியாச்சு என்று மறுபடியும் ஒரு அறைகூவல் விடுக்கும் சின்னது,''அப்பாடா'',என்று ஒரு பெருமூச்சுடன் புத்தகத்தை ஓரம் கட்டிவிட்டு எங்கள் கொட்டத்தை ஆரம்பித்துவிடுவோம்.


தலைப்பு விஷயத்துக்கு வருவோம். என் கடைசீ சித்தப்பா திருமணம் ஆகி சித்தியுடன் எங்கள் ஆத்தில்தான் இருந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் பையன் இருந்தான்.என் அப்பாவும்,சித்தப்பாவும் மூக்குப்பொடி போடுவதில் வல்லமை மிக்கவர்கள்.அப்பாவாவது ஓரளவுக்கு பரவாயில்லை.சித்தப்பா அரைமணிக்கு ஒரு தடவை உறிஞ்சுவார்.


சுண்டுவிரலுக்கும் கீழே இருக்கும் ஒரு குட்டியூண்டு டப்பியில் பொடியை அடைத்து வைத்து   அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நிதானமாய் ரசித்து போடுவார்.அதில் என்னதான் சுவாரஸ்யம் இருக்குமோ என்று நாங்கள் நினைத்து கொள்வோம்.அந்த பொடிடப்பா கவசகுண்டலம்போல் அவர் வேட்டியில் சுருட்டி வைத்திருப்பார்.


எங்களாத்தின்,வாசல்புறம் ஒரு சின்ன அறை இருக்கும்.சாதாரணநாளில் நாங்கள் படிக்கும் அறையாக இருக்கும் . விடுமுறை நாளில் எங்களின் ஆஸ்தான ஆலோசனைக்கூடமும் அதுதான்.


வெங்கிட்டு எங்கள் எல்லோரையும் அந்த அறைக்கு வரச்சொல்லி ரகசியமாய் கூப்பிட்டான்.அன்று ஞாயிற்று கிழமையாதலால் அப்பாவும்,சித்தப்பாவும் ஆத்தில்தான் இருந்தார்கள்.கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.


''என்னடா,விஷயம்? எதுக்கு அவசரமா கூப்பிட்டே?''என்று கேட்டதும்.''கீதா,ஜூனியர் காந்தி தம்பதி ராட்டையிலே நூல் நூற்க ஆரம்பிச்சாச்சா?''என்று மெதுவாககேட்டான்.


 இந்த இடத்தில் என் சித்தப்பாவைப்பற்றி  ஒரு நல்ல விஷயம் சொல்லியே ஆக வேண்டும். காந்திஜியின் ராட்டையில் நூல் நூற்கும் கொள்கையை மட்டும் விடாமல் கைப்பற்றி வந்தார்.சித்திக்கும் சொல்லிகொடுத்து அவரையும் தேர்ச்சி பெறசெய்துவிட்டார்.


நூற்றதை கதர் கடையில் கொடுத்து வேட்டி,துண்டு தீபாவளிக்கு வாங்கி கொள்வார்.விடுமுறை நாளில் வாசல் தின்ணையில் ராட்டையும் கையுமாக அமர்ந்து விடுவார்கள். சித்தி ஆத்து வேலை செய்வதை விட நன்றாக நூல் நூற்பார். பையன் அழுதால் நாங்கள்தான் பார்த்துக்கணும்.  சித்தியிடம் இருப்பதைவிட எங்களிடம் சமர்த்தாக இருப்பான்.


''எல்லோரும் நன்னா கேட்டுக்கோங்க, இன்னிக்கு சின்ன மாமாவை ஒரு மணி நேரமாவது பொடி போட முடியாம பண்ணப்போறேன்.''என்ற அவன் வார்த்தையை கேட்டதும் வியப்புடன் அவனை பார்த்தோம்.


''என்னடா குழப்பறே?அவராலே பத்து நிமிஷம் கூட பொடி போடாம இருக்கமுடியாதே; அதுவும் இல்லாமெ,பொடிடப்பா அவர்கிட்டேதானே இருக்கு ;எப்படி முடியும்?''என்று ஆவலுடன் கேட்டான் ரங்கு.  ''அதுதான் இல்லே,இதோ பார்; அவரோட பொக்கிஷம் இப்போ என்கிட்டே ;டொட்ட;டொய்ங்;என்று மூடி இருந்த கையை விரித்து காண்பிக்க, அங்கே பொடிடப்பா சமர்த்தாக உட்கார்ந்திருந்தது.


''மாமா,மறந்து போய் மேஜைமேலே வச்சுட்டு போய்ட்டார் போலேருக்கு நான் எடுத்து வச்சுண்டேன்'' என்றான் குறும்புடன்.


''இப்போ இதை ஒரு இடத்துலே மறைச்சு வைக்கப்போறேன்,கொஞ்சநேரம் தேடுவார். அப்புறம் நானே தெரியாதமாதிரி எடுத்து குடுத்துடுவேன்.''என்றவன்''என்ன சொல்றீங்க ஒளிச்சு வைக்கட்டுமா?''என்று கேட்டான்.


இது தப்பு என்று தெரிந்தாலும் இதிலும் ஒரு''த்ரில்லிங்'' இருக்கே என்று நாங்கள் ''பூம்,பூம்''மாடுபோல் தலையை ஆட்டினோம்.


ஆனால் இதில் ஒரு ஆபத்து என் இரண்டாவது தங்கை சீதா ரூபத்தில் இருந்தது. அவள் ஒரு உண்மை விளம்பி. நான் வெங்கிட்டுவிடம் இதை ஜாடையாக கண் காட்டினேன்.உடனே  ரங்கு சீதா விடம்


''சீதா, உனக்கு மூலைக்கடை மாமா பண்ற பக்கோடா புடிக்கும்தானே?''என்றதும் ''ஆமா,ஆமா;''என்று நாக்கில் நீர் ஊறியது போலும்,தலையை அசைத்தது.''அப்புறமா வாங்கித்தறேன்''என்றான் ரங்கு.


என் சித்தப்பா எழுந்து வரும் சத்தம் கேட்டது.அவசர,அவசரமாக வெங்கிட்டு,பொடிடப்பாவை கட்டில் மேலிருந்த உபயோகத்தில் இல்லாத, சுருட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கையின்கீழ் ஒளித்து வைத்து விட்டான்


ஒன்றுமே அறியாதது மாதிரி கேரம் போர்டு விளையாட ஆரம்பித்தோம்.சித்தப்பா அறைக்குள் வந்தவர் மேஜைமேல் துழாவினார்.பிறகு மேஜைக்கு அடியில்,மேஜைடிராவில்,என்று எல்லா இடத்திலும் தேட ''என்ன மாமா தேடறீங்க''என்று அப்பாவியாக கேட்டான் வெங்கிட்டு.எங்களுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு ,அடக்க ரொம்பவே சிரமப்பட்டோம்


''என்னோட பொடிடப்பாவை எடுத்தீங்களாடா?''என்று சிறிது அதட்டலாக கேட்டார். கேட்காமலே இருந்திருக்கலாம்.''மாமா,எங்களுக்கு பொடிபோடற வழக்கமே கிடையாதே''என்று சீரியசாக சொல்லவும்,''என்னடா ,கிண்டலா?''என்றார் கோபமாக.அவருக்கு பொடிபோட முடியாமல் மூக்கும்,கையும் துறு,துறு என்று இருந்தது போலும்.


''பத்மா,பத்மா,''என்று சித்தியை உரக்க கூப்பிட்டார்.''எதுக்கு இப்படி குடி மூழ்கினா மாதிரி கத்தறீங்க''என்று அலுத்து கொண்டே வந்தாள் சித்தி. உடனே சித்தப்பாவின் குரல் பலஹீனமாகிவிட்டது. அவர் அப்படித்தான்.


''குடி ஒன்றும் மூழ்கவில்லை பத்மா,என்பொடிடப்பியைத்தான் காணோம்.அதான் நீபார்த்தியான்னு கேக்கத்தான் ...''என்று இழுக்கவும்,''எனெக்கென்ன தெரியும் நீங்கதானே எப்பவும் புதையலை மறைச்சு வைக்கறமாதிரி உங்கவேஷ்டியிலே சுருட்டி வச்சிண்டுஇருப்பீங்க எங்கே போயிருக்கும்?''என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு சொன்னார்.


இந்த சமயத்தில்தான் என் தங்கை சீதா,''சி...சித்..சித்தப்பா''என்று ஏதோ சொல்ல வந்ததும்,ரங்கு அதன் வாயை பொத்தி ''சீதா,வா, உனக்கு பக்கோடா வாங்கித்தறேன்''என்று அதை அங்கிருந்து கிளப்பி  அழைத்துக்கொண்டு போய்விட்டான்.


''சின்னமாமா, எனக்கொரு சந்தேகம்,கார்த்தாலே பெரியமாமா பொடிதீர்ந்த்போச்சு வாங்கணும்னு சொல்லிண்டு இருந்தார்,ஒருவேளை,அவசரத்துக்கு உங்கபொடி டப்பாவை எடுத்திருப்பாரோ?''என்று வம்புக்கிழுத்தான் அவனுக்கு தெரியும், என் அப்பாவிடம் ,சித்தப்பாவுக்கு பயம் என்று.வேண்டுமென்றே மாட்டிவிட்டான்
முதலில் சித்தப்பா தயங்கினாலும்,பொடிமீதிருந்த அபாராஆசையால்,''விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்'' ஈஸிசேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த என் அப்பாவிடம் சென்று,தலையை சொறிந்துகொண்டே


''முத்தா''[அண்ணா] எ..என்..என்னோட பொடிடப்பியை எ..எ...எடுத்திண்டீங்களா'''என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.


ரொம்ப  சுவாரஸ்யமாக படித்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு,சித்தப்பாவின் இந்த அபத்தமான கேள்வி எரிச்சலை தர,''நான் ஏண்டா,ஒன்னோடதை எடுக்கிறேன்.நேத்துதானே ஃபுல் டப்பா வாங்கி வச்சிருக்கேன் வேணும்னா என்கிட்டே இருந்து கொஞ்சம் எடுத்துக்கோ''என்று சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கிவிட்டார்.


இனி மேல் இந்த பொடிவிஷயத்தை  பெரிதாக்கினால் நம் மரியாதை போய் விடும் என்று நினைத்தாரோ என்னமோ பெரியடப்பாவில் இருந்து சிறிது  பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சியவர் ஞாபகமாக அந்தடப்பாவை கையில் எடுத்துக்கொண்டு போனார்.


இனி மேலும் அவரை தவிக்க விடுவது பாவம் என்று நினைத்த வெங்கிட்டு தான் ஒளித்து வைத்த பொடிடப்பாவை எடுக்கப்போனான்.ஆனால் அவன் வைத்த இடத்தில் அது இல்லை.எங்கே போயிருக்கும் ? எல்லோரும் தேடினோம் அகப்படவே இல்லை. படுக்கைக்கு அடியில் எங்கேயாவது சிக்கிகொண்டதோ,என்னவோ படுக்கையை எங்களால் நகர்த்தக்கூடமுடியாது.


''சரி,விடுடா,நாளைக்கு ஆறுமுகத்தை விட்டு படுக்கையை நகர்த்தசொல்லிட்டு எடுத்து குடுத்துடலாம். என்று சொன்னேன். பாவம் சித்தப்பா அன்று பூராவும் தேடிக்கொண்டேடான் இருந்தார்.


ஆனால்,அடுத்த நாள் எல்லோரும் மகாபலிபுரம்,பீச் என்று சுற்றி விட்டு வந்ததில் பொடிடப்பாவை மறந்தே போனோம் என்றுதான் சொல்லவேண்டும்.


இரண்டு நாளில் வெங்கிட்டு,ரங்கு குடும்பங்கள் ஊருக்கு கிளம்பிவிட்டனர். அப்போதுதான் நினைவு வந்தாற்போல் ''ஏய்;கீதா மாமாவோட பொடிடப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்திடுங்கடி பாவம் நான்லெட்டர்லே எழுதிகேப்பேன்''என்று உருகி சொல்லிவிட்டு போனான்.


நாங்களும் சரி,சரி  என்று தலையை ஆட்டிவிட்டு மறந்தேபோனோம். பள்ளிதிறந்து போக ஆரம்பித்ததும் இன்னும் சுத்தம்.


வெங்கிட்டுவும் கடிதம் போடும்போதெல்லாம்,நினைவு படுத்திகொண்டுருப்பான். என் சித்தப்பாவே மறந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அவர் வேறு பொடிடப்பா மரத்தினால் ஆன சதுரடப்பா வாங்கி அதில் பொடிநிரப்பி வைத்துக்கொண்டார்.


ஆனால் மறந்தும் அதை கீழே வைப்பதில்லை.ஒரு நாள் எங்கள் ஆத்தில் எலித்தொல்லை ஜாஸ்தியாக இருந்ததால் வேலையாள் ஆறு முகம் வீட்டை ஒழித்துக்கொண்டிருந்தபோது, படுக்கையை எடுத்து கீழே போட்டான். படுக்கையை எல்லாம் எலி குதறி வைத்திருந்தது.


அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.காணாமல் போய் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த சித்தப்பாவின் பொடிடப்பி டொம் என்று கீழே விழுந்து உருண்டோடியது.


''ஹை; பொடிடப்பி கிடைச்சுடுத்து'' என்று கத்தி கொண்டே அதை எடுத்து என் சித்தப்பாவிடம் கொடுத்தேன்.என் சித்தப்பா என்னை பாராட்டுவார் என்றூ ஒரு நப்பாசையில் இருந்த எனக்கு அவர் அதை  அலட்சியமாக வாங்கி சூள் கொட்டிக்கொண்டே மேஜை ஒரு ஓரமாக தூக்கிப்போட்டார்.எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.


''ஏன் சித்தப்பா  இது வேண்டாமா''என்று கேட்டதற்கு,''புது டப்பாவே அழகா,அடக்கமா இருக்கு இனிமே இந்த பழசு எதுக்கு ?''என்று சொல்லிவிட்டார்.


அடுத்த நாளே வெங்கிட்டுவுக்கு விபரமாய் கடிதம் போட்டேன்.சித்தப்பா சொன்னதையும் மறக்காமல் எழுதினேன். மறுவாரமே அவனிடம் இருந்து பதில் வந்து விட்டது,''மாமாவின் பொடிடப்பி கிடைத்தது பற்றி மிகவும் சந்தோஷம்,பழையது கழிந்து,புதியது புகுந்ததும் மகிழ்ச்சியாகவே உள்ளது.ஆனாலும் அந்தபழைய டப்பாவை பத்திரமாக எடுத்து வை,அடுத்த விடுமுறையில் இப்போது  இருக்கும் டப்பி காணாமல் போனால்,  வேண்டி இருக்கும். அப்படியே பத்மா மாமியையும் பத்திரமாகப்பார்த்துக்கொள்..''என்று எழுதி இருந்தான் அந்த பொல்லாத குறும்புக்காரன்.

Comments