மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை -
பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன்
தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'.
பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.
பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.
இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் 'பட்டக்காரர் சப்ளை'யும் நின்று போனது.
# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.
எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்
மொட்டைக் கடுதாசி
ஐஸூக்கு வந்த மவுஸ்!
உடைந்த கையை ஒட்டின கதை
கல்யாண ஊர்வலம்
பணம் காசின் பரிணாமம்
எண்ணெய்க் குளிப் படலம்
ரயில் பிரயாணத்தின் கதை - ரயில் பயணங்களில்
அது அந்தக் காலம்
[...] பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன் June 16, 2006 By Desikan Leave a Comment [...]
ReplyDeleteஇந்த விசயங்கள் இப்பொழுது உள்ள பட்டக்காரர் அவர்களுக்கு தெரிய வாய்ப்பி இல்லை என்று நினைக்கிறேன்,இதை அவர்களிடம் எடுத்து செல்கிறேன்,நன்றி
Deletepalaya kottai pattakarar dheeran chinnamalai vamsam...goundergal perumai vaaindhavargal..
ReplyDeleteகாலங்கள் மாறினாலும் அவர் வழி தோன்றல்கள் சீர் செய்வார்கள் !"
ReplyDeleteகாலங்கள் மாறினாலும் அவர் வழி தோன்றல்கள் அதை சீர் செய்வார்கள்
ReplyDelete