Skip to main content

கும்பகோணம்

[%image(20060609-kootani_vans.jpg|175|131|kootani)%]

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரசார வாகனங்கள் இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்த நேரத்தில்  குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம். வீராணம் குழாய், மதுராந்தகம் ஏரி, பண்ருட்டி பலாப்பழம், ரோடில் காயந்துகொண்டிருக்கும் கருப்பு உளுந்து, சுவரில் மாம்பழச் சின்னம் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே போனால் 7 மணி நேரம் ஆகிறது.


 


 



[%image(20060609-uppiliappan_gopuram.jpg|175|131|uppiliappan)%]

கும்பகோணம் வந்தடைந்து மதியம் சாப்பிட்டபின் முதல் கோயிலாக திருவிண்ணகர் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் சென்றோம். திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் பாடிய இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. பெருமாள் ஒப்பிலியப்பன் - ஒப்பற்றவன் என்று பொருள். இக்கோயில் தளிகையில்(பிரசாதத்தில்) உப்பு சேர்ப்பதில்லை அதனால் பெருமாள் 'உப்பிலியப்பன்' என்றும் அழைக்கப்படுகின்றார். (கோயிலிக்குள் உப்பையோ உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் சென்றால் நரகத்துக்குச் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது!). திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற தோற்றம். நின்ற திருக்கோலம்.


நம்மாழ்வாருக்கு பெருமாள், தானே மிகவும் உகந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார் அவை - பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்பது ஐதீகம்.  இந்த ஐந்து பெயர்களில்


 


என்னப்ப னெக்காய்யிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப்பொன் மதிழ் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லாப்பன் தந்தனன் தனதாழ் நிழலே


( நம்மாழ்வார் 6-3-9, 3373)


[ எனக்குத் தந்தையாகவும் பெற்ற தாயாகவும் செவிலித் தாயாகவும், உள்ளவன் எம்பெருமானே ஆவான். தங்கம், மணி, முத்து ஆகியன போன்ற என் அப்பன் ஒளிவீசும் மதிள்களுடைய திருவிண்ணகரில் உள்ளான். தன்னை அன்றி வேறு யாரும் ஒப்பாகாத அவன் திருவடி நிழலை எனக்குத் தந்தான் ]


என்று நம்மாழ்வார் மனமுருகப் பாடியுள்ளார். நம்மாழ்வார் 11 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள், பொய்கையாழ்வார் 1 பாசுரம், பேயாழ்வார் 2 பாசுரங்கள் என மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.


கோயிலில் இருக்கும் குளத்தில் மீன்கள் நிறைய இருக்கின்றன. குழந்தைகள் அவைகளுக்கு பொரி போட்டு மகிழ வெளியிலேயே  பொரி விற்கிறார்கள்.


அன்று இரவு, பக்கத்தில் இருக்கும் ஒரு சத்திரத்தில் சூடான வத்தக் குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ், ரசம் என்று கலக்கியிருந்தார்கள்.


[%image(20060609-sarangapani_gopuram.jpg|175|234|sarangapani)%]

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுந்து திருக்குடந்தை என்று அழைக்கப்படும் சாரங்கபாணி சுவாமி கோயில் விஸ்வரூப தரிசனம். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிகவும் முக்கியமான கோயில் என்று இதைச் சொல்லலாம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள், இப்பெருமானை தரிசித்த போது கோயிலில் 'ஆரா அமுதே அடியேன் உடலன் நின்பால் அன்பாயே' (  3310 , 5-8-1) என்று தொடங்கும் திருவாய்மொழியின் பதினோரு பாசுரங்களைப் பாட கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து,  கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சுட்டுவதால் அவைகளைச் சொல்லுமாறு கேட்டார். அதற்கு அங்குள்ளவர்கள் நாங்கள் அறிந்தவை இந்த பதினோரு பாசுரங்களே என்றும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் அங்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றனர். ஆழ்வார் திருநகரிக்குச் சென்ற நாதமுனிகள் பிரபந்தத்தின் ஏடுகளைப் பற்றி விசாரித்தார். அங்குள்ளவர்கள் 'பிரபந்தம் மறைந்து வெகுநாள்கள் ஆயின. அதனை அருளிய நம்மாழ்வார் சீடரான மதுரகவிகள், அவரைப் பற்றி பாடிய பதினோரு பாசுரங்களைக் கொண்ட 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்னும் பதிகம் ஒன்று உள்ளது; அதனை பன்னீராயிரம் முறை உருப்போடுகின்றவர்களுக்கு முன் ஆழ்வார் தோன்றியருளுவார்' என்று சொன்னார்கள். நாதமுனிகளும் அவ்வாறே செய்து, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பெற்றார் என்பது குருபரம்பரை வரலாறு. நாதமுனிகள் முதல் தொகுப்பாசிரியர் என்று கூறலாம்.


[%image(20060609-sarangapani_chariot.jpg|175|131|chariot)%]

பெருமாளின் கருவறையைச் சுற்றிச் செல்லும் போது அந்த அழகான காட்சி நம் கண்களைக் கவர்கிறது. பெருமாளின் கருவறையே தேர்வடிவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்ட சக்கரங்கள் கொண்ட திருத்தேர்- யானை குதிரைகளுடன் மிகவும் அழகு. இதைப் பார்த்துதான் திருமங்கை ஆழ்வார் திருவெழு கூற்றிருக்கை என்னும் பிரபந்ததை அருளிச்செய்தாரோ என்று தோன்றுகிறது.
[ திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். தேரின் உருவமைப்பை ஒத்ததான பாடல்களைக் கொண்ட இத்திருவெழு கூற்றிருக்கை 'ரதபந்தம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ]


மொத்தம் 52 பாசுரங்களில் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். ஸ்ரீரங்கம், திருமலைக்கு அடுத்து இங்குதான் ஆழ்வார்கள் மங்களாசாசனம் அதிகம். அதே போல் 150 அடி உயரமுள்ள இங்குள்ள ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. கோபுரத்தில் பல சிற்பங்களை மனைவியின் முறைப்புக்கு ஊடே ரசித்தேன். இந்தக் கோயிலின் குளமும் மிகவும் அழகு. கும்பகோணத்தில் சுற்றி உள்ள மற்ற கோயில்களின் குளங்களும் அழகு மிகுந்தவை.


ஆராவமுதனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலுக்குச் சென்றோம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ தூரத்தில் இருக்கிறது. 'நாச்சியார் கோயில்' என்று சொன்னால்தான் தெரிகிறது.


அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும்  வடமத்தினிலை மேல் பள்ளி
கூடினான் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கொச் செங்கணான் சோந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே


( 1498 ) ( பெரிய திருமொழி 6-6-1)


[ ஆகாயம், நிலம், எட்டு திசைகள், அலைகடல், மலைகளுடன் புவிமுழுவதையும் விழுங்கி வடமரம் என்னும் ஆலமரத்தின் இலைமேல் பள்ளிக்கொள்ளக் கூடிய எம்பெருமானின் திருவடியில் கூடுங்கள். செண்பக மலர்களின் வாசனையோடு மணம்மிக்க வகுள மலர்கள் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யக்கூடிய திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் சோழ வேந்தன் கோச்செங்கண் தொழுதிறைஞ்சிச் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேருமின்கள் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் நூறு பாசுரங்கள் இத்தலத்திற்கே பாடியுள்ளார். ]


இந்தக் கோயிலில் மூலவர் சன்னதியில் திருநறையூர் நம்பி- ஸ்ரீநிவாசன், வாசுதேவன் என்ற திருநாமங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம்புரிந்து கொள்ளும் நிலை. தாயார் வஞ்ஜுளவல்லி ( நம்பிக்கை நச்சியார் ). பெருமாளுக்கு வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன். இடப் பக்கத்தில் குட்டையான திருமேனியுடன் அநிருத்தன் எழுந்தருளியுள்ளார். பக்கத்தில் புருஷோத்தமன் ஷோக்காக நின்ற திருக்கோலத்தில். இது வரை நான் பார்த்த திவ்வியதேசங்களிலேயே இந்தக் கூட்டணி தான் மிகவும் அழகான ஒரு கூட்டணி. நிச்சயம் பார்க்க வேண்டிய கோயில். இந்தச் சிற்பங்கள் சாளக்கிராமக் கல்லினால் ஆனது என்று சொல்கிறார்கள்.


[%image(20060609-nachiyar_garuda.jpg|175|115|kal garudan)%]

கோயிலின் கருவறைக்கு கீழே மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பிரசித்தி பெற்ற கல் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் என்றால் கரு(சிறகுகளைக் கொண்டு) + ட (பறப்பவர்).
கருடஸேவையின் போது, சன்னதியிலிருந்து கிளம்பும்போது 4 பேர்கள் மட்டுமே ஏலப்பண்ணி (தூக்கி) வருவார்கள். அவ்வளவு எடைகுறைவாக இருப்பது, பின் 16 பேர் என்று மேலும் மேலும் ஏறத் துவங்கி முடிவில் கோயில் வாசலில் 64 பேர்களும் பிறகு படிகளில் இறங்கும் தருவாயில் பலபேர்கள் தாங்க வேண்டிய அளவுக்கு அதன் கனம் ஏறிக்கொண்டே போக, இந்தக் காட்சி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அடுத்த முறை பார்க்கவேண்டும்.


இந்தத் தலத்தில் நீண்ட காலமாக நந்தவனத்தில் வசித்துக்கொண்டு பூஜை நேரங்களில் வந்து காட்சி கொடுத்த இரண்டு கருட பட்சிகள், 1999 ஜனவரி மாதம் 18ஆம் தேதி (தை-சிரவணத்தன்று) கோயில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே ஒன்றை ஒன்று அணைத்தவாறு மோட்சம் அடைந்தது என்று குறிப்பு இருக்கிறது. இந்தப் பட்சிகளுக்கு ஒரு சன்னதியும் இப்போது வந்துள்ளது.


கல்கருடன் சன்னதியின் எதிர்ப்புறம் பழைய பஞ்சலோக விக்கிரகங்கள் பல இருக்கின்றன. பார்க்கவேண்டியவை.


திருமங்கையாழ்வார் மட்டும் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்த திருச்சேறை என்ற இடத்திற்கு அடுத்து சென்றோம். நாச்சியார் கோயிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கிறது. பிரளய காலத்தில் பிரம்மா மண்ணால் ஒரு குடம் செய்து அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக் காப்பாற்ற எண்ணினார். பல இடங்களில் மண் எடுத்துக் குடம் செய்ய, எல்லாம் உடைந்து போக, கடைசியாக இங்கு வந்து மண் எடுத்துக் குடம் செய்தபோது அது உடையாமல் இருந்தது என்பது புராண வரலாறு. ஆகவே இத்தளம் திருச்சேறை என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில் பெருமாள் 5 தாயார்களுடன் காட்சி கொடுப்பது இங்கு மட்டும்தான்.


[%image(20060609-thirucherai_small_girl.jpg|175|234|small girl)%]

கோயிலுக்குள் நுழையும் போது ஆறு வயதுக் குழந்தை, ஐந்து ரூபாய்க்கு துளசி வாங்கிக் கொள்ளுங்கள் என்றது. கோயிலில் மூலவர் ஸாரநாதன், தாயார் ஸார நாயகி. கோயிலிருந்து வெளியே வரும் போது அங்குள்ள குளம் கண்களைக் கவர்கிறது. பெருமாளை சேவித்துவிட்டு வரும் போது, துளசி விற்ற சின்னப் பெண் பெயர் என்ன என்று கேட்டேன் - ஸார நாயகி என்றாள் மூக்கொழுகிக்கொண்டு!.


  


[%image(20060609-pasumai_pics.jpg|175|131|pasumai)%]

அடுத்ததாக அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் திருப்புள்ளம்பூதங்குடி மற்றும் திருஆதனூர். சுவாமிமலைக்குப் போகும் வழியில் இருக்கிறது. போகும் வழியெல்லாம் பசுமையான காட்சிகள், வாய்க்கால் என்று  அக்மார்க் கிராமம். சமீபத்தில் விஜயகாந்த் கட்சி நுழைந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நான் போன சமயம் கோயிலில் யாரும் இல்லாமல் புன்னை விருட்சப் பூக்கள் மட்டும் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தன. உள்ளே இருந்த காவலர்( நாராயண சாமி) எல்லா சன்னதிகளையும் திறந்து காண்பித்து தள புராணத்தையும் விளக்கினார் - ஜடாயுவுக்கு மோட்சமளித்துவிட்டு இறுதிக்கடன் செய்த ஸ்தலம் என்று சொன்னர்.


திருஆதனூர் செல்லும் முன் இந்த ஸ்தலம் பற்றி திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றை பார்க்கலாம்.


அறிவதறியா னனைத்துலகும்
உடையானென்னை யாளுடையான்
குறியமானி யுருவாய
கூத்தன் மன்னி யாமருடம்
நறிய மலர்மேல் சுரும் பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறை வண்டிசை பாடும்
புள்ளம் பூதங்குடிதானே.


( 1348, 5--1-1 பெரியதிருமொழி )


[ எல்லா உலகங்களில் உள் உயிராய் ஆளும் இறைவன், எவராலும் தன் முயற்சி கொண்டு அறிய முடியாதவன். அவன் அடியேனை அடிமை கொண்டான். குள்ள வடிவில் பிரம்மசாரியாய் வந்த வாமன பகவானும் அவனே. இப்பெருமான் எழுந்தருளிய திருத்தலம் திருப்புள்ளம் பூதங்குடி ஆகும். இவ்வூரில், மணம் மிகுந்த பூக்களில் தேனீக்கள் அமர்ந்து ரீங்காரம் செய்யும்; மயில்கள் ஆடும்; பொறி வண்டுகள் இசை பாடும். ]


புள்ளம்பூதகுடியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது திருஆதனூர். காமதேனு இங்கு தவமிருந்து பாடியதால் இத்தலத்திற்கு திரு ஆதனூர்( ஆ - பசு ) என்று பெயர். நான் போன சமயம் கோயில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மூலவர் ஆண்டளக்குமையன். ரங்கநாதர் போல் பள்ளிக்கொண்டுள்ளார். தலையின் கீழ் மரக்காலும் இடது கையில் ஓலையும் எழுத்தாணியும் இருக்கிறது. திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். கோயில் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது, நிச்சயம் அங்குள்ள தேர் பழுதுப் பார்க்கப்படும் என்று நம்புவோம்.


[%image(20060609-old_temple_1.jpg|175|131|old temple)%]

திரும்பி வரும் போது, இரட்டை இலை, உதய சூரியன் சின்னங்களுக்கு இடையில் பாழடைந்த கோயில் ஒன்று புதருக்குள் இருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. என்ன கோயில், யார் கட்டியது என்று யாருக்கும் தெரியாமல் புதருக்குள் ஒரு புதிராகவே இருந்தது.


 



கும்பகோணம் ஆல்பம்


திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)
திருக்குடந்தை (சாரங்கபாணி சுவாமி )
திருநறையூர் (நாச்சியார் கோயில்)
திருச்சேறை
திருப்புள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
புதருக்குள் கோயில், பசுமை காட்சிகள், கூட்டணி வண்டிகள்


[ Most of the pictures were taken by me during my trip, some pictures like moolavar's are from my albums/archives ]
<hr>
என் மற்ற பயணங்கள்
நவதிருப்பதி
மதுரை திவ்வியதேசங்கள் மூன்று
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருமெய்யம்
திருநீர் மலை, திருப்பதி

Comments

  1. "108 திவ்விய தேசங்களில் பெருமாள் 5 தாயார்களுடன் காட்சி கொடுப்பது இங்கு மட்டும்தான்." - மூலவரா உத்சவரா? ஏனென்றால் உத்சவர் ஐந்து தாயார்களுடன் ஆழ்வார்திருநகரியிலும் சேவை சாதிக்கிறார். (http://azhwarthirunagari.koyil.org/?page_id=17)

    ReplyDelete

Post a Comment