"மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப்புத் தூருறை வான்தன்
பொன்னடி காண்பதோ ராசையி னாலே
பொருகயற் கண்ணிணை துஞ்சா.."
என்று ஆண்டாள் பாடியுள்ள ஸ்ரீவல்லிப்புத்தூருக்கு கோகுலாஷ்டமி அன்று சென்றிருந்தேன்.
திருச்சி மதுரை பைபாஸ் சாலை வழியே 1066 டயல் செய்தால் ஆம்புலன்ஸ் உடனே வரும் என்ற அறிவுப்புக்களை பார்த்துக்கொண்டு 80 கிமி வேகத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகிறது.
இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி வடபத்ரசயனர் கோயில். இந்த பெருமாளுக்கு தான் ஆண்டாள் தன் மாலையை சூடிகொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இதன் நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம் 196அடி உயரம்; 11 நிலைகள்; 11 கலசங்களையும் கொண்ட கோபுரத்தின் அகலம் 120' x 82' ஆகும். இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது.
இந்த ராஜகோபுரத்தை பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை திருப்பணி செய்துள்ளதற்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கிறது.
இந்தகோபுரத்தின் உட்பகுதியில் உள்ள கல்வெட்டில் கவிச்சக்கிரவர்த்தி கம்பர் மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக இக்கோபுரத்தை பாடியுள்ளார்.
"இருக்கோத்ய் மந்தணர் சூழ்புதுவாபுரி யெங்கள்பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்,
திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரமென்றே
பருக்கோத லாமன்றி வேறுபமானப் பணிப்பில்லையே.
இன்று எனாமல் பெயிண்ட் அடித்து காணப்படும் வடபத்திர சயனருக்கு ஒரு கலர்புல் ஸ்தல புராணம் இருக்கிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.
இரண்டாம் பகுதி ஆண்டாள் சன்னிதி. இவ்வூரை உருவாக்கிய வில்லியால் கட்டப்பட்டது.
ஆண்டாள் திருக்கோயில் கிபி 15 ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர் காலம் முடிய கல்வெட்டுக்கள் உள்ளன. இன்றும் இந்த கல்வெட்டுக்களை நாம் பார்க்கலாம். மேலும் மதுரை காலத்து 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயண ஓவியங்களும் காணப்படுகிறது. கோயிலின் கல்வெட்டுகளில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் உற்சவர் ஆண்டாளுக்கு தினமும் மாலையில் கிளி சாற்றப்படுகிறது. கிளி கட்டுவதற்கு தேவையான மரவள்ளி கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் மற்றும் குச்சிகள் நந்தவனத்தில் வளர்க்கப்பட்டு கிளி கட்டும் வம்சாவளியினரால் தினந்தோரும் கட்டப்படுகிறது.
பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்து கொண்டு ஒப்பனைப்பார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஒன்று பிரகாரத்தில் கண்ணாடி தொப்பி போட்டுக்கொண்டு, இன்று உண்டியலாக மாறி காசு போட்டு அதில் விழுகிறதா என்று எல்லோரும் எட்டிப்பார்கிறார்கள்.
பெரியாழ்வார் அவதார ஸ்தலமாகிய இந்த இடத்தில் அவருக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. இந்த கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்கு பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்.
கோயிலை விட்டு வெளியே வந்தால் எல்லா கடைகளிலும் ஆண்டாள் ஓவியங்களும் பால்கோவாவும் விற்கிறார்கள்.இன்னும் கொஞ்ச நாளில் பால்கோவா கோயில் பிரசாதம் ஆனாலும் வியப்பதற்கு இல்லை.
வரும் வழியில் யானை மலையை தாண்டியவுடன் குவாலிஸ், ஹோண்டா சிட்டி கார்களுக்கு முன் வந்து தாழம்பூ கொத்து ஐந்து ரூபாய் என்று விற்கும் மூக்கு ஒழுகும் சிறுவர்கள் அவர்களை சுற்றி 'கேப்டன் விஜயகாந்த்' தன் புது கட்சிக்கு போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
"ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815)" - ஆழ்வாருடைய காலம் இடிக்கிறதே... நாதமுனிகள் காலம் 824. கடைசி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். குலசேகராழ்வார் 750. நாதமுனிகள் காலத்தில் திவ்யப்ப்ரபந்தங்களே மறைந்துபட்டன. நம்மாழ்வார் பிரபந்தம் ஆழ்வார் திருனகரியிலிருந்து கடலூர் வரை பரவி, அங்கு பாடப்பெறவேண்டுமானால் (ஆரா அமுதே), அதற்கே பல பத்து ஆண்டுகளாயிருக்கும். ஆழ்வார் காலம், நீங்கள் படித்த பிரகாரம், எது?
ReplyDelete