இந்த பெயரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.
அமரர் எஸ்.இராஜம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறுவிய நிறுவனம்.
"வரலாற்று முறைத் தழிழ் இலக்கியப் பேரகராதி" என்ற பெயரில் அற்புதமான ஒரு அகராதியை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.
வரலாற்று முறை அகராதி - Etymological Dictionary - அதாவது ஒரு சொல்லுக்கு நாம் விருப்பத்துக்கேற்பச் பொருள் காணாமல், இலக்கியத்தில் எந்தெந்த இடத்தில் அச்சொல் வருகிறது, அதற்கு அந்த இடத்தில் என்ன பொருள், அதற்குப் பழைய உரையாசிரியரின் ஆதாரம் உண்டா, காலப் போக்கில் அச் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்த்துள்ளது என்பவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு விரிவான, முழுமையான, தரமான ஒர் அகராதி.
மொத்தம் ஐந்து தொகுதிகள், 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக தழிழ் பேரறிஞர் பலருடைய 40 ஆண்டு கால கடின உழைப்பைக் கொண்டு இது வெளிவந்துள்ளது.
இதற்கு மேல் கொஞ்சம் சீரியஸ் விஷயம்.
தமிழ் அகராதி என்பது காலப் போக்கில் அவசியம் கருதித் தானாக வளர்ந்த ஒன்று. 18ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றே கூறலாம். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் சூத்திர முறையை பின் பற்றி எதுகை மோனை தொடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொற் பொருள் காணும் அளவில் முன்னோடியாக திகழ்ந்தாலும் அகராதி யடிப்படையானதன்று.
தொல்காப்பியர் காலத்துற்கு பிறகு சமய வளர்ச்சிக்காகப் பெளத்தம், சமணம், சைவம், வைணவம் முதலிய சமயங்கள் தத்தம் கொள்கைகளை பரப்ப பற்பல இலக்கியங்களை இயற்றி தமிழ் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போராடின. இச்சமயங்களுக்கு அடிப்படை மொழி சமஸ்கிருதம். இது தமிழ் சொற்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. அப்போது தான் அகராதி அல்லது கலைக் களஞ்சியம் வந்தது என்று சொல்லலாம்.
8ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், சேந்தன் "திவாகரம்" என்ற நிகண்டு நூல் தான் அகராதி கருத்துக்கொண்டு வந்த முதல் நூல். பின் 13 ஆம் நூற்றாண்டில் வந்த 'பிங்கலந்தை' என்ற நிகண்டு, ஏறக்குறைய 14700 சொற்களுக்குப் பொருள் கண்டுள்ளது. இந்நூல் திவாகரர் என்பவரின் புதல்வரான பிங்கலரால் இயற்றப்பெற்றது.
அடுத்து குறிப்பிடத் தக்கது சூடாமணி நிகண்டு. மண்டல புருடரால் விருத்தப்பா என்ற வகையில் இயற்றபெற்ற இந்நூல் கிருஷ்ணராயர் என்ற குறிப்பு வருவதால், இது விஜய நகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தையொட்டி 16ஆம் நூற்றாண்டில் (கிபி 1520 )தோன்றியிருக்கூடும் என்று கருதலாம். இந்நூலில் பல புதுச் சொற்கள்(ஏறக்குறைய 11000 சொற்கள்) இடம்பெற்றுள்ளது.
பின்னர் உரிச் சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு கந்தசாமியம், கைலாச நிகண்டு சூளாமணி, நாம தீப நிகண்டு, தொகை நிகண்டு, பொருட்டொகை நிகண்டு, தொகைப் பெயர் விளக்கம், இலக்கத் திறவு கோல் முதலியன வெளியாயின. இவற்றில் ஒன்றும் தற்போது இல்லை.
இவை எல்லாம் ஆங்கிலத்தில் புதிய அமைப்பான சொற்பொருட் களஞ்சிய அகராதி(Thesaurus)க்கு ஒப்பான அமைப்பு முறை கொண்ட நூல்களேயாகும். காலப்போக்கில், ஒரு சொல்லுக்கு பல பொருளும், ஒரு பொருளுக்குப் பல சொற்களும் காணவேண்டிய நிலையில், இவற்றை அகராதிப் படுத்த வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டது.
பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள நிகண்டுகள் எல்லாம் அகர வரிசைப் படுத்தப் படாமல், தாம் எடுத்துக் கொண்ட பொருள்வரிசைக் கேற்பவே காணப் படுகின்றன.பிற்பாடு அதை பதிப்பித்தவர்கள் கூடிய வரை அகர வரிசைப் படுத்திப் பதிப்பிக்க முனைந்துள்ளார்கள்.
சூடாமணி நிகண்டு ஞாபகம் வைத்துக்கொண்டு மனப் பாடம் செய்வதற்கேற்ற முறையில் எதுகை நயத்தில் இயற்றப்பெற்றுள்ளது. 'கயாதரம்' நிகண்டு அந்தாதித் தொடையில் அமைந்திருக்கிறது. பின்னர் அரும் பொருள் விளக்க நிகண்டு, வேதகிரியார் நிகண்டு, நானார்த்த தீபிகை முதலியன பல நிகண்டுகள் பல வித முன்னேற்றங்களோடு வெளிவந்தன.
தொடர்ந்து கிபி 1594 இல் சிதம்பர ரேவண சித்தர் இயற்றிய "அகராதி நிகண்டு" அகராதி வரிசையைப் பின் பற்றிய முதல் நிகண்டு ஆகும்.
13 அல்லது, 14 ஆம் நூற்றாண்டில் மணிப் பிரவாள நடையில் காணப் பெறும் கடின சொற்களுக்கு விளக்கம் தரும் வகையில் அகராதி நூல் ஒன்று வந்தது குறிப்பிடதக்கது. இந்நூல் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது.
பாதர்பெஸ்கியின் "அகராதி மோனைக் ககராதி யெதுகை" என்ற நூல் புது முயற்சியாய் அமைந்தது. பாட்டுச் சொல்லகராதி என்ற மற்றொன்று ஓரெழுத்து சொல், ஈரெழுத்துச் சொல், மூவெழுத்துச் சொல் என்ற முறைப் படி 10 பிரிவுகளாக அமைந்ததுள்ளது.
தற்போது சொற்பொருள் காணும் கடின முயர்ச்சியும், மனப்பாடஞ் செய்யும் கடின உழைப்பும் மறைந்து போய் அகராதி வரிசையில், வேண்டும்போது சொற்களுக்கு பொருள் தேடும் முயற்ச்சி வளர்ந்து விட்டது. இக் கால கட்டத்தில் அயல் நாட்டினரின் செல்வாக்கும் நுழைய தொடங்கிவிட்டது.
ஐரோப்பிய வணிகர்களைத் தொடர்ந்து இந்நாட்டில் புகுந்த சமய நிறுவனங்களின் காரணமாகத் தமிழ் அகராதி முறையில் வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. சமயப்பிரசாரத்திற்குத் தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகி, தமிழை கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிபி 1577 இல் கொச்சியில் இயேசு மதப் பிரசாரகர் ஜோன்ஸ் கான்ஸ்வெல்ஸ் என்பவர் தமிழ் அச்சுகளை உண்டாக்கினார். கிபி 1679 இல் தமிழ் போர்ச்சுகீஸ் அகராதி ஒன்று அச்சிடப்பெற்றது. பல தமிழ்-போர்ச்சுகீஸ் அகராதி அச்சிடப் பெறாமலே இந்திய அரசர்களால் அழிக்கப் பெற்றன.
கிபி 1712 இல் வீரமா முனிவர் எனப்படும் பாதர் பெஸ்கி தமிழ்மீது கொண்ட ஆர்வர்த்தினால், பழைய நிகண்டு முறையைக் கைவிட்டு, அகராதி முறையில் சொற்பொருள் காணும் முன்னோடியாகத் திகழ்ந்து "சதுரகராதி" என்ற அகராதியை தொகுத்து வெளியிட்டார். முதன் முதலாக 'அகராதி' என்ற பெயரில் வந்த நூல் இதுவேயாகும்.
சதுரகராதி வெளிவந்த 47 ஆண்டுகளுக்குப் பிறகு செருமன் லூதரன் சமயப் பிரசாரகரான ஜோன் பெப்ரிஷியஸ் என்பவர், தாம் பெற்ற கடனைத் தீர்க்க முடியாது சிறைப் பட்டிருந்தபோது 'தமிழ் ஆங்கில அகராதி' என்பதைச் சிறையிலேயே தொகுத்து ஆங்கிலேயேக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உரிமையாக்கினார். இந்த அகராதி சமயப் பிரசாரகர்களுக்கு உதவியதால் அவர் சிறையை விட்டு வீடு திரும்பினார்!. 1834-1841இல் J.P.ராட்லெர் முயற்சியால் ஓர் அகராதி நான்கு பாகங்களாக வெளிவந்தது.
திரு C.W.கதிரைவேல் பிள்ளை அகராதி சமஸ்கிருதச் சொற்களுடன் மிகப் பெரிய அளவில் 63900 சொற்களைக் கொண்டு 1842ல் வெளி வந்தது.
மேற்கூறிய அகராதி முறையில் காலந்தோறும் ஏற்பட்ட வந்துள்ள வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்ந்து வந்தது. 1912 இல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு 1935 இல் முடிவு பெற்ற, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதி தற்போது பலராலும் பெரிய அளவில் பயன் படுத்த பெற்று வருகிறது.
இத்தகைய அகராதி வளர்ச்சியில் அமரர் எஸ். இராஜம் வரலாற்று முறையில் அகராதி தயாரிக்க அனைத்து நூல்களையும் சந்தி பிரித்து கையெழுத்துப் பிரதி செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றைப் பதிபிக்கவும் வேண்டும் என்பதற்காக வரலாற்று முறைத் தமிழிலக்கியப் பேரகராதித் திட்டம்(Tamil Dictionary/Glossary on Historicial principles project) என்பதை ஏற்படுத்தினார்.
அனைத்து நூல்களுக்கும் சொல் அகராதி செய்யப்பெற்று பாட பேதங்கள் இருப்பின் இன்றியமையா இடங்களில் மட்டும் அவை எடுத்துக் கொள்ளப்பட்டன. பல வகை சொல்லியல் அகராதிகளைப் பார்வையிட்டு அவற்றில் காணப்படும் பலவித அமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் அடை மொழிகளுடன் சேர்ந்து சொல் தனியாகவும், அடை மொழியில்லாமல் மூலச் சொல் மட்டும் தனியாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன. 131 நூல்களுக்கும் ஒவ்வொரு தனி நூலுக்கும் சொல்லடைவு செய்து பின்னர் ஒவ்வொரு சொல்லும் எந்தெந்தநூல்களில் எத்தனை முறை வந்துள்ளது என்று பெருந்திரட்டுச் சொல்லடைவு தயாரிக்கப்பட்டது. இம்முறைக்கு தனித் தனியே அட்டைகள் (Cards) எழுதப் பெற்றது.
பல தமிழ் பேரறஞர்களின் கடின உழைப்பால் இன்று இது சாத்தியமாகியிருக்கிறது.
திரு மர்ரே ராஜம், எஸ் வையாபுரி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, வி.மு.சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ.ஆச்சாரியா, பெ.நா.அப்புசாமி, கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சி சுந்திரம் பிள்ளை, திரு அ.ச.ஞான சம்பந்தன், பு.ரா.புருஷோத்தம நாயுடு, ந.கந்தசாமிப் பிள்ளை, மே.வீ.வேணுகோலப் பிள்ளை, கம்பர், அடிப்பொடி, சா.கணேசன். (இவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை).
இவர்களுக்கு என்றென்றும் தமிழ் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
Comments
Post a Comment