Skip to main content

எண்ணெய்க் குளிப் படலம்

எண்ணெய்க் குளிப் படலம் - எஸ்.வி. ராமகிருஷ்ணன்


Image hosted by Photobucket.com தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது. ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம், பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் (1945) கால தேச வர்த்த மானங்களையட்டி, இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது. ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். அதாவது, அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு. அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம். ‘வயது வந்த’ பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை.
என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம். கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து, என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார். சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம், அரைக்கீரை விதைத் தைலம். (கும்பகோணம் டி. எஸ். ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம்) இவை இருக்கும். சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள், சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது. ஆனால் விலை அதிகம். மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார். அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ, கோட்டு, டர்பன் அணிந்து, நீள தாடி மீசையுடன், நீண்ட நாமமும் தரித்திருப்பார்.
தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம். இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது. ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும். (இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும்) இது எனக்குப் பிடிக்காத ஐட்டம். முக்கியமாக, முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை. அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும். அப்போது வெயிலில் போகக் கூடாது, ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள். அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது. போனால் தலைவலி வரும். ஆக, சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும்.
பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி, வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி, எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும். எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும். தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ, போன்ற ‘ஜோர்’ எல்லாம் வரவில்லை. சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்(தெலுங்குச் சீமையில், அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில், ‘குங்குடிக்காயை’ அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர். நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் (ஷிஷீணீஜீ ழிut) என்று ஆங்கிலத்தில் எழுதினர். ஆனால் ‘குங்குடிக்காய்’ தான் நிஜமான ‘சோப் நட்’. சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும். நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது. ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்tமீஸீபீ ஆகியிருக்கலாம். கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும், மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம். சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக (சிலை ரூபத்தில்) வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ, பாரா மஹால் (தர்மபுரி) யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.) ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள். சீயக்காய் உஷ்ணம், அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள். சீயக்காய், அவரை வகையைச் சேர்ந்த, ஆனால் சாப்பிட லாயக்கில்லாத (uஸீ ணிணீtணீதீறீமீ) ஒரு. காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை. இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள். நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான ‘திரிதோஷ சமனம்’ . பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை (ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஜிலீக்ஷீமீமீ ) நிறையவே கையாளப்பட்டது. அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல. சீயக்காய் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்’ சாதனம். அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது. அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது. இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ, பழங்கஞ்சி (அதாவது நேற்று வடித்த கஞ்சி) யையோ உபயோகித்தனர். எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார், சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர். அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை.
அரப்புக் கலவை தலைக்குத்தான். உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள். வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும். பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது. அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக ‘பயத்தம் மாவை’ மட்டுமே பயன்படுத்தினார்கள்.
ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது. அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் (பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி, இத்தியாதி) வந்தால் , ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது. சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு. உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள். சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு. ஆனால், தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது.
எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு. முக்கியமாகச் சிறுவர்கள் ‘தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள்’ என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள். அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள். இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள்.
சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள். இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. டாக்டர்களிடம் சொன்னால், இது கூடவே கூடாது, கெடுதல் என்றார்கள். அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்.
பின்னாளில் கண்டேன், வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை (அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள்) முக்கியமாக, குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் ‘மாலிஷ்வாலா’ வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும். 1956 வாக்கில் ஸி. ஐ. டி (சி. மி. ஞி) என்ற ஹிந்திப் படத்தில் ‘தேல் மாலீஷ்’ என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆயிற்று. அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார். இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய, பிரபலமானதொரு ஸீன். இன்றும், பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம்.
தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம். அந்த நாட்களில் எல்லோருக்கும் ‘கட்டுக் குடுமி’ இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது. ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து ‘கிராப்’ வந்துவிட்ட படியால், அவர்களின் கவனம் விதவிதமான ‘கட்டிங்’குகளின் பால் திரும்பவே, ‘மாலிஷ்’ கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.


நன்றி: உயிர்மை, மார்ச் 2005Old Comments from my Previous Blog


Hi!
I was impressed to see someone blogging in his mother tongue; even though mine is not Tamil and hence I cannot read what you have written.
I would really appreacite if you could let me know how you managed to do this, as I would like to follow your example and write in my mother tongue(Kannada).
Thanks!
Gowri


By Gowri, at Thu Mar 31, 05:00:55 AM IST  


Dear Desikan: Superb!Ramakrishnan's description verbatim
portrays similar experiences of mine.So very graphic! thanks for presenting it in its original home style flavour.
I am yet to come to grips with the fonts
All the best


By kichami, at Sat Apr 02, 05:47:55 AM IST  


svk' nostalgia takes us back into our times.we also had similar experiences.thanx


By Anonymous, at Thu May 12, 09:11:52 PM IST  


Reaaly fantastic. SVK' nostalgia
visualizes the story. thanx


By Anonymous, at Sat May 14, 02:22:43 PM IST  


ஏம்பா தேசி...எப்படிப்பா இந்த மாதிரி புக் எல்லாம் புடிக்கிற ?


By ரவியா, at Sat May 14, 03:02:25 PM IST  


Gowri...give ur email id to desi..or ask him to give his..lot of tamil bloggers..have a look at http://www.thamizmanam.com/tamilblogs/index.php


raviaa


By ரவியா, at Sat May 14, 03:09:03 PM IST  


படிக்கும் போதே சீயக்காய் (அதுவும் எங்க ஊரு தயாரிப்பான உலகப் புகழ் பெற்ற 'புலி மார்க்' சீயக்காய்!) கண்ணிலே புகுந்த எபெக்ட் குடுத்திட்டீங்க தலைவா!


By மாயவரத்தான்..., at Sat May 14, 06:04:08 PM IST  


 

Comments

  1. [...] எண்ணெய்க் குளிப் படலம் March 29, 2005 By Desikan Leave a Comment [...]

    ReplyDelete

Post a Comment