இப்போது வால்வ் ரேடியோ என்றால் பலருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் நிச்சயமாக ட்ரான்சிஸ்டர்க்கு பின் பிறந்தவர்கள். வால்வ் ரேடியோ ஒரு விசித்திரமான ரேடியோ. ஒரு பெரிய மரப்பெட்டி. அதில் மூன்று பீங்கான் குமிழ்கள் - ஒன்று வால்யூமிற்கு, ஒன்று முள்திருப்புவதற்கு, மற்றொன்று பாண்ட் திருப்புவதற்கு. பாண்ட் குமிழை திருகினால் ஒரு வித 'கடக் கடக்' சத்தம் வரும். முள்திருப்பும் குமிழை பார்த்து திருக வேண்டும், அதிகம் திருகினால் முள் திருப்புவதற்கு பயன்படும் 'ட்வைன்'(twine) நூல் அறுந்துவிடும்.
இடது ஓரத்தில் 'மர்ஃபி' என்று எழுதியிருக்கும். ஒரு குழந்தை (ஆணா, பெண்ணா என்று தெரியாது) வாயில் ஒரு விரல் வைத்துக் கொண்டிருக்கும். வலது ஓரத்தில் 'மாஜிக் ஐ' இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டு முள்ளை திருப்ப வேண்டும்.'மாஜிக் ஐ'யில் சின்னதாக ஒரு கோடு வந்தால் நன்றாகப்பாடும். சுவிட்ச் போட்டவுடன் பாடாது. உள்ளேயிருக்கும் வால்வ் சூடானவுடன் தான் பாடும். ஏழுமணிக்கு செய்திகள் என்றால், ஆறு ஐம்பத்தைந்துக்கு ரேடியோவை ஆன் செய்ய வேண்டும், இல்லை என்றால் தலைப்புச்செய்திகள் முடிந்திருக்கும்.
துணி உலர்த்தும் கொடிபோல அதற்கு ஒரு ஆண்டெனா இருக்கும். அதை ஆட்டினால் ரேடியோ விசில் அடிக்கும். ஈரக்கையால் ஆட்டினால் ஷாக் அடிக்கும்.
வாயு தொல்லையில் அவதிப்படுவது போல் அவ்வப்போது ஒரு 'கரகர' சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சில சமயம் 'கரகர' சப்தத்துடன் கோபித்துக்கொண்டு அடுத்த ஸ்டேஷனுக்கு போய்விடும். தட்டியோ, திருகியோ பழைய இடத்துக்கு அழைத்துவர வேண்டும். முன்னாடியிருக்கும் கண்ணாடி வழியாக பார்த்தால் உள்ளே ஒட்டடை படிந்திருப்பது தெரியும்.
எங்கள் தாத்தா விடாமல் இந்த ரேடியோ பக்கத்தில் தான் இருப்பார். அந்த நாட்களில் சாய்ந்திரம் வரும் மாநிலச்செய்திகள், ராத்திரி ஒன்பது பதினைந்துக்கு வரும் வண்ணச்சுடர் போன்ற நிகழ்ச்சிகளை எங்கள் தாத்தா தவறாமல் கேட்பார். சில சமயம் கேட்டுக்கொண்டிருக்கும் போது ரேடியோவில் திடீரென்று சத்தம் சின்னதாகிவிடும். அந்த சமயத்தில் எங்கள் தாத்தா காதை ரேடியோவுடன் ஒட்டிவைத்து கேட்பார். எண்ணைப் பசையுடன் ஓரத்தில் கொஞ்சம் அழுக்காக இருப்பதற்கு காரணம் இதுவே. இந்த ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளை கேட்பதில் எங்களுக்குள் ஒரு போட்டியே இருக்கும். நான் சினிமா பாட்டு கேட்கும் போது, தாத்தா பிரகலாதன் கதாகாலட்சேபம் வேண்டும் என்பார். கிருஷ்ண மாமா வீட்டு டேப்ரிக்கார்டர் எங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து இந்த போட்டி நின்று போனது.சொல்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை அப்பாவும் நானும் சைக்கிலில் மார்கெட் சென்று கிருஷ்ணன் மாமா வீட்டு வழியாக வந்து கொண்டிருந்தோம். கிருஷ்ணன் மாமா எங்களை பார்த்துவிட்டார்.
"வாடா நானி வந்து டேப்பிர்க்கார்டரை பார்த்துட்டு போ"
"இன்னொரு நாள் வரேனே"
"வாடா கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்".
கிருஷ்ணன் மாமா வீட்டுக்கு சென்றோம். கிருஷ்ணன் மாமா, என் அப்பாவுக்கு இரண்டு கிளாஸ் சீனியர். லேட்டாகத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டார். மனைவி அவர் கூட இல்லை. ஏதோ சண்டை என்று அம்மா சொல்லியிருக்காள். நன்றாக கணக்கு போடுவார். காலேஜ் பசங்களுக்கு வீட்டில் டியூஷன் எடுப்பார். கோல்டன் ராக்கில் உள்ள ஒரு தொழிற்சாலை மேனேஜராக இருக்கிறார்.எப்போ வீட்டிற்கு வந்தாலும் ஒரு 'கிராக் ஜாக்' பிஸ்கெட் பாக்கேடுடன் வருவார். நல்ல ஜோக் கடிப்பார். எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். சமிபத்தில் ஒரு டேப்பிரிக்கார்டர் வாங்கியிருந்தார்.
ஹாலில் புதிதாக வாங்கிய டேப்பிரிக்கார்டர் ஒரு சின்ன துண்டால் போர்த்திவைக்கபட்டிருந்தது.
"மாமா டேப்பிரிக்கார்டரை பாக்கலாமா ?" என்றேன்.
"தாராளமாக" என்று துண்டை விலக்கினார். பார்க்க சின்னதாக அழகாக இருந்தது. நிறைய பட்டன் இருந்தது. ஆரஞ்சு கலரில் ஒரு பட்டன் இருந்தது, இரண்டு ஸ்பீக்கர், "Panasonic" என்று ஓரத்தில் எழுதியிருந்தது. விவிதபாரதி வைத்து காண்பித்தார்.'கரகரப்பு' இல்லாமல் துல்லியமாக கேட்டது. "சும்மா சொல்ல கூடாது ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான்" என்றார். ஒரு பாட்டை ரிக்கார்ட் செய்து போட்டு காண்பித்தார். எனக்கு கொஞ்சம் ஆசையாகவும், பொறாமையாகவும் இருந்தது.
"மாமா இது எவ்ளோ ரூபாய்?"
"எட்டு நூறு ரூபாய்"
"எங்க கடைக்கும் மாமா?"
"என் ·பிரண்ட் ஒருத்தன் சிங்கப்பூரில் இருக்கான் போன மாசம் வந்த போது வாங்கிண்டு வந்தான். நல்ல மாடல் உடனே வாங்கிட்டேன்."
"ஏண்டா நானி அடுத்த மாதம் திரும்பவும் வரான் ஒனக்கும் ஒண்ணு எடுத்துண்டு வரச் சொல்லட்டுமா?"
"வேண்டாண்டா எங்காத்து ரேடியோவே நன்னாயிருக்கு"
"இதில் சிலோன் எல்லாம் கேட்கிறது தெரியுமோ ?"
எங்கப்பா அதற்கு மேல் பேசவில்லை. காப்பி சாப்பிட்டவுடன் கிளம்பிவிட்டோம்
வீட்டுக்கு வந்தவுடன் அதன் நினைவாகவே இருந்தது.
"அப்பா அதே போல் ஒண்ணு நம்மாத்துக்கு வாங்கணும்" என்றேன்.
"டேப்ரிக்கார்டரில் வரும் அதே பாட்டுதானே இதுலையும் வருது"
தினமும் அப்பா ஆபிஸ்சிலிருந்து வந்தவுடன் டேப்ரிக்கார்டரை பற்றி பேசுவேன். அப்பாவும் எதாவது காரணம் சொல்வார்.
"அது எதுக்குடா? நம்மாத்து ரேடியோக்கு என்ன குறைச்சல்?” என்பார்.

மாமா வாங்கிய இரண்டே மாதத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த டேப்ரிக்கார்டர் புதுசாகத்தான் இருந்தது. பாட்டு துல்லியமாக கேட்டது. பாட்டை ரிக்கார்ட் செய்து பார்த்தேன். புது பெண்டாட்டி போல் அதன் கூடவே இருந்தேன். டேப்பிரிக்கார்டர் வந்தவுடன் வால்வ் ரேடியோ இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. அந்த பெட்டியை என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மா தான் "யாராவது கேட்டால் குடுத்துடுங்கோ" என்றதற்கு. “நான் முதல் சம்பளத்தில் வாங்கியது அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்று கொஞ்சம் கோபமாக தான் சொன்னார்.
ரேடியோ பூஜை அலமாரிக்கு சென்றது. ரங்கநாதர் படமும் ஊதுபத்தி ஸ்டாண்டும் வைக்கவும் உதவிற்று. பிறகு புதிதாக வந்த பெருமாள் போடடோவிற்கு இடம் தேவைப்பட்டது. பூஜை அலமாரியில் இடமில்லாமல், கட்டிலுக்கடியில் சென்றது.
ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்தவுடன் அந்த ரேடியோவில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமே என்று திறந்து பார்த்தேன். கெமிஸ்டிரி லாபில் இருக்கும் டெஸ்ட்யுப் போல் சில வால்வ்கள். ஒரு அலுமானிய கபாசிடர். கொஞ்சம் வயர் என்று இருந்தது. எல்லாவற்றையும் கழட்டிய எனக்கு அதை எப்படி திரும்பவும் சேர்க்க வேண்டும் என்று தெரியவில்லை!
அப்பா வந்து பார்த்த போது, திட்டுவாரென்று எதிர்பார்த்தேன். திட்டவில்லை. அதை பக்கத்தில் இருக்கும் ஒரு ரேடியோ கடைக்கு எடுத்துப் போனார். போன அரைமணியில் திரும்பி வந்தார். "என்னப்பா ஆச்சு" என்றேன் "எல்லா வால்வும் போயிடுத்தாம், ஒண்ணும் பண்ண முடியாது. ரொம்ப வருஷமா பாடிண்டு இருந்தது. போனால் போட்டும். டேப்ரிக்கார்டரை கழட்டிடாதே" என்றார்.
“அப்பா ரேடியோ”, “அப்பா பெட்டியாக” மாறியது. அம்மா தான் "இதையும் அந்த கடையிலேயே விட்டுட்டு வந்திருக்கலாம், எதுக்கு எடுத்துண்டு வந்தீங்கோ" என்றாள். அப்பா பதில் எதுவும் சொல்லவில்லை. கட்டிலுக்கடியில் இருந்த அது பிரமோஷன் கிடைத்து பரண் மேல் போயிற்று.
ராத்திரி நாங்கள் தூங்கியபின், அப்பா இந்த பெட்டியை பரணிலிருந்து எடுத்து அதற்குள் ஏதாவது வைத்து பரண் மேல் வைப்பார். ஒரு முறை பாதி தூக்கத்தில் அதை பார்த்திருக்கிறேன். அதற்குள் என்ன இருக்கும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே ரேடியோவை கழட்டிய எனக்கு அதை பார்க்க தைரியம் வரவில்லை.
-0- -0- -0-

------------------------------------------------------------------------------------------------
Old Comments from my previous blog.
Wonderful! chiththiram super! You have a unique style of writing as seen earlier in 'Winni' and 'Keech Keech'.
VaazththukkaL! keep it up!
enRenRum anbudan
BALA
By Anonymous, at Tue Nov 16, 01:06:10 PM IST
வால்வ் ரேடியோ எங்க வீட்டிலும் ஒண்ணு இருந்தது! அதே 'மர்ஃபி'தான்! எங்க பாட்டி எப்பவும்
காலையிலே வரும் மங்கள இசையை ரொம்பவெ வால்யூம் கூட்டி வச்சு, எங்களையெல்லாம் எழுப்ப முயற்சி
செஞ்சது எல்லாம் ஞாபகம் வருது!
நல்ல பதிவு!
அன்புடன்,
துளசி.
By துளசி கோபால், at Tue Nov 16, 02:36:41 PM IST
வால்வ் றேடியோ எங்கள் வீட்டிலும் இருந்தது. பெரிதானாலும் அழகாகத்தான் இருக்கும்.
Grundic. யேர்மனியத் தயாரிப்பு. எனக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போது அப்பா வாங்கினாராம்.
அதனோடே வளர்ந்தேன். யேர்மனிக்கு வந்த பின்னும் அந்த றேடியோவை நினைக்கும் போது கவலையாக இருக்கும். என்னோடு கொண்டு வந்திருக்கலாமே என்றிருக்கும்.
By Chandravathanaa, at Tue Nov 16, 02:44:33 PM IST
அய்யோ தேசிகன் ! பழைய நினைவுகள்...எங்களின் "முதல்" ரேடியொவை நீங்கள் சொல்லுவது போல் "புது பெண்டாட்டிப் போலத்தான்" பார்த்துக் கொண்டோம்...அதே நினைப்பில் ஒரு பழைய ரேடியோவை வாங்கி வைத்திருக்கிறேன்...என் மனைவி அதை "சக்களத்திப் போல்" (இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால்) வெறுப்பதும் உண்மை..:))
//'மர்ஃபி' என்று எழுதியிருக்கும். ஒரு குழந்தை (ஆணா, பெண்ணா என்று தெரியாது) வாயில் ஒரு விரல் வைத்துக் கொண்டிருக்கும்// ம்ம் அமுல் பேபி போல் மர்ஃபி பேபியும் ரொம்ப பிடிக்கும்..calendar நினைவிருக்கிறதா?
By ரவியா, at Tue Nov 16, 06:49:13 PM IST
தேசிகன், சத்தமில்லாம எழுதிக் கலக்கறீங்க. ரொம்ப நல்லா இருக்கு. நடுவுலயே அவசரக் குடுக்கையா ராஜாஜி கடிதங்கள் படிச்சுட்டேன். ஆனாலும் ஒண்ணும் guess பண்ண முடியலை. எங்க வீட்டுல இருந்த ரேடியோவுக்கு பேர் தெரியாது. ஏகப் பெருசு. ஆனா மர்ஃபி ட்ரான்சிஸ்டர் வாங்கினது நல்லா நினைவிருக்கு. உங்கள் விருப்பம், பொங்கும் பூம்புனல்னு அமக்களமா இருக்கும் அந்த நாள்கள். என்னோட பாட்டு வாத்தியார்னு எங்க பாட்டி பேர் வெச்சிருந்தாங்க. ஆமாம் மாசா மாசம் லைசன்ஸ் பணம் கட்டனும் அதுக்கும். என்னவோ போங்க. ஹோம் தியேட்டரே இருந்தாலும் அந்த ஆர்வம் இப்ப இல்லை.
By Jsri, at Tue Nov 16, 08:26:33 PM IST
என்ன ஆச்சரியம்! எங்கள் வீட்டிலும் மர்பி ரேடியோ மற்றும் ட்ரான்சிஸ்டர் இருந்தன. இரண்டாவது என் அப்பாவுக்கு ஒரு மினி லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது. ட்ரான்சிஸ்டரை எல்லா இடங்களுக்கும் எடுத்துத் திரிந்ததில் "ட்ரான்சிஸ்டர் டோண்டு" என்று பட்டப் பெயர் வேறு கிடைத்தது.
நிற்க. சுஜாதாவைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன். என் வலைப்பூவைப் பார்த்து கருத்து கூற முடியுமா?
By dondu(#4800161), at Sun Nov 21, 05:37:34 PM IST
really enjoyed that thin line of suspense till the end. i think this is a real life account. what's interesting is that it is told in the form of a short story. good reading !!
By lazy geek, at Mon Nov 22, 02:33:41 PM IST
முதல் ரேடியோ முதல் காதல் போல.. என் பழைய ஸ்டேஷனையும் ட்யூன் செய்து அனுபவித்தேன்
ReplyDeleteReminded Flash back of childhood days except letters of Rajaji.
ReplyDelete//மாதா மாதம் போஸ்ட் ஆபீசில் அதற்கு பணம் கட்ட வேண்டும் அசோகா முத்திரையுடன் ஒரு புத்தகத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்//
ReplyDeleteமாதா மாதம் அல்ல;
ஆண்டுக்கு ஆண்டு!
Brilliant . . . enjoyed . . .
ReplyDeleteஎன்னிடம் இப்பொழுது 1971இல் மறைந்த என் அன்பு தந்தையின் நினைவாக அவரது முதல் புஷ் ரேடியோ என்னிடம் உள்ளது.இன்றும் வேலை செய்யும்.
ReplyDeleteஅப்பாவின் ரேடியோ,அப்பா தூங்கிய bench ,அப்பாவின் அலமாரி ஆகியவை நான் எந்த ஊருக்கு சென்றாலும் கூடவே வரும்.
Super malarum ninaivugal tkp
ReplyDelete