மேல்kind என்று ஒரு வலைப்பதிவை மீனாக்ஸ், க்ருபா, ஷங்கர் ஆகியோர் நடத்திவருகிறார்கள். அதில் ஒரு புதிய பகுதி மேல்Kind சர்வே! சில சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அதன் பதில்களை வெளியிடுகிறார்கள். என்னிடமும் "அந்த" கேள்வியை போன வாரம் கேட்டார்கள். கேள்வி இது தான்: 1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது? நான் ஐந்து வருடம் முன் எழுதிய ஒரு பகுதியை கொஞ்சம் தூசுதட்டி அனுப்பினேன் அவர்களும் பெரிய மனம் கொண்டு , மதித்து பிரசுரித்தார்கள். அதை இங்கு தந்துள்ளேன். பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி... நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம் சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் ப...