Skip to main content

சுஜாதாவும் நானும்என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும் விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். நானும் ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வேன். நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அங்கு தமிழ் சுமாராகத் தான் கற்றுத் தருவார்கள். நானும் ரொம்ப திக்கித் திணறி பாஸ் செய்வேன்; எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படிப்பேன். கோனார் நோட்ஸுக்கே ஒரு நோட்ஸ் எனக்குத் தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாள், அப்பா அடிக்கடி ஏதோ 'சுஜாதா, சுஜாதா' என்று சொல்கிறாரே என்னதான் எழுதுகிறார் பார்க்கலாமே என்று, திருச்சி ஜங்ஷனுக்குப் போய் ஒரு லெண்டிங் லைப்ரரியில் சுஜாதா புத்தகம் ஒன்று எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முன்பே சொன்னது போல் என் தமிழ் புலமை அதிகம் ஆதலால் மிகவும் மெதுவாகப் படித்தேன். ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மாதத்தில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் படித்தவுடன், சுஜாதாவின் தமிழ் நடை, உத்தி, அவர் மொழியைக் கையாளும் முறை போன்றவை என்னை மிகவும் வசீகரித்தது. சுஜாதாவின் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தைத் திருப்பி கொடுக்க லெண்டிங் லைப்ரரிக்குச் சென்ற போது அதை நடத்துபவர், "தம்பி, புத்தகத்தின் விலை 14ரூ, ரீடிங் சார்ஜ்,ஃபைன் எல்லாம் சேர்த்தால் 32 ரூ" என்றார்.
நான் 14ரூ கொடுத்து புத்தகத்தை வாங்கிவிட்டேன். அதுதான் நான் வாங்கிய முதல் சுஜாதா புத்தகம் ! அதன் பின் வீட்டிற்கும் லெண்டிங் லைப்ரரிக்கும் அலைவதே எனக்கு வேலையாக இருந்தது. லைப்ரரிக்காரருக்கு என் மேல் ஒரு தனி மரியாதை எற்பட்டது- லைப்ரரியில் புத்தகத்தை வாங்கும் ஒரே நபர் நான்தான். புத்தகங்களைப் படிக்கப் படிக்க கொஞ்சம் வேகமாகப் படிக்க முடிந்தது, சில தமிழ் வார்த்தைகளுக்கு அப்போது தான் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

அவ்வப்போது எதையாவது வரைவேன். வாட்டர் கலர் கொண்டு ஒரு சுஜாதா படம் வரைந்து( 1988 ) என் ரூமில் மாட்டினேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் எந்த சினிமா எங்கே ஓடுகிறது என்று பார்த்துக்கொண்டு இருந்த போது, அந்த "லயன்ஸ் கிளப்" விளம்பரம் என் கண்ணில் பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினார் திரு.சுஜாதா!. "All are Welcome!!" என்று அழைத்திருந்தார்கள்.

 விழாவிற்குச் சென்று சுஜாதாவை ஒர் ஓரத்தில் நின்றாவது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் வரைந்த சுஜாதா படத்தை சுருட்டிக்கொண்டு விழாவிற்குச் சென்றேன். அவர் பேச்சைக் கேட்டேன். கைதட்டினேன். அவர் கிளம்பும்போது நான் வரைந்த படத்தை அவரிடம் காண்பித்து, ஒரு ஆட்டோ கிராஃப் கேட்டேன். படத்தைப் பார்த்துவிட்டு, "அட, நான் இப்படியா இருக்கேன்?" என்றார்.

"பேர் என்ன?"

"தேசிகன்"

"வீட்டில் தம்பி கூட நிறைய சண்டை போடுவியா?" என்று கேட்டு படத்தில் ஒரு கையெழுத்திட்டுத் தந்தார்(28-07-91).

நான் முதல் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது அப்போதுதான்!

பிறகு காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வேலைக்கு வந்ததேன். இப்போது நான் பல சுஜாதா புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். என் அப்பாவே என்னிடம் சுஜாதா புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்திருந்தார்.

தமிழ்.நெட் குழுமத்தில் உறுப்பினராக சேர்ந்து, தமிழ் கீபோர்டு, தமிழ் என்கோடிங் விவாதங்களில் கலந்து கொண்டு இருந்தேன். அப்போது திரு.முத்து நெடுமாறன்(முரசு அஞ்சல்) அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.

ஒரு சமயம் முத்துவும் நானும் சுஜாதாவை தமிழ் கீபோர்ட், என்கோடிங் சம்பந்தமாக சந்திக்கச் சென்றோம். இது என் இரண்டாவது சந்திப்பு. முதல் சந்திப்பிற்கும் இரண்டாவது சந்திப்பிற்கும் ஏறத்தாழ 6 ஆண்டுகள் இடைவெளி. தமிழ் கீபோர்ட், என்கோடிங் விவாதத்திற்குப் பிறகு, சுஜாதா அவர்கள் இண்டர்நெட்டிலிருந்து சில தகவல்களை என்னிடம் கேட்டிருந்தார். ஒரு நாள் அவர் வீட்டிற்குப் போய் கொடுத்துவிட்டு விடைபெறும் முன்..

"சார் ! உங்கள் கதை, கட்டுரை, எல்லாம் என்னிடம் இருக்கிறது" என்றேன்.

"இருக்காது, என்னிடமே அவை இல்லை" என்றார்.

விட்டுக்கு வந்துவிட்டேன்.

பிறகு என்னிடம் உள்ள சுஜாதா அவர்களின் கதை, கட்டுரை, கவிதை, நாடகம், எல்லாவற்றையும் தொகுத்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு மூன்று வரி பதில் அனுப்பியிருந்தார். அதில், 'நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்; நான் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று இன்று தான் தெரிந்தது; நீதான் என் Official Biographer' என்று எழுதியிருந்தார். பிறகு திரு.சுஜாதாவிற்கு ஒரு வலைத்தளம் அமைத்து அவருடைய எழுத்துகளை அவர் அனுமதியுடன் இணையத்தில் அரங்கேற்றி மகிழ்ந்தேன். அவரே என் வீட்டுப்பக்கத்துக்கு ஒரு முன்னுரையும் எழுதிக் கொடுத்தார். இந்த சமயத்தில் தான் என் அப்பா அம்மா எனக்குக் கல்யாணத்திற்குப் பெண் பார்த்தார்கள். (இந்த அனுபவத்தை என் வலைத்தளத்தில் கொடுத்துள்ளேன்). கல்யாண பத்திரிகையை சுஜாதாவிடம் கொடுத்த போது அதைப் பார்த்துவிட்டு, "உன் தலை எழுத்து அப்படி என்றால் மாத்த முடியாது" என்றார். (காரணம், என் மனைவி பெயரும் சுஜாதா தான்!).

என் திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு, "எனக்கும் தேசிகனுக்கும் நம்மாழ்வார் சொல்வதைப் போல் இது பூர்வ ஜென்ம பந்தம்" என்று என் அப்பாவிடம் செல்லிவிட்டுச் சென்றார்.

பிறகு திருச்சியில் ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் ஸ்ரீரங்கத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவிடம் பிரபந்தத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு ஆழ்வார், பிரபந்தம் முதலியவற்றில் ஈடுபாடு வந்ததற்குக் காரணமும் என் அப்பா தான். இந்த இடத்தில் கொஞ்சம் என் அப்பாவை பற்றி... என் அப்பா சுஜாதா தொடர் கதைகளை ரொம்ப விரும்பிப் படிப்பவர். யாராவது படித்துவிட்டு அவருக்கு கதையைச் சொல்லிவிட்டால், அவருக்குப் பிடிக்காது. அவரேதான் அதைப் படிக்க வேண்டும். சில சமயம் சுஜாதா அவர்கள் என்னிடத்தில் இந்தக் கதையை இப்படிக் கொண்டு போகப் போகிறேன், இதுதான் இந்த கதையினுடைய 'நாட்' என்று சொல்லுவார். என் அப்பாவிடம் "அப்பா, கதை எனக்குத் தெரியும், சுஜாதா சொல்லிவிட்டார், சொல்லட்டுமா" என்றால் "வேண்டாம் டா, சொல்லிராதே, நான் அடுத்த வாரம் குமுதத்தில் படித்து கொள்கிறேன்" என்பார்.

இப்படித்தான் சுஜாதா அவர்களின் "இரண்டாவது காதல் கதை" தொடர் வந்து கொண்டு இருந்த சமயம். தொடர் முடிவதற்கு 2 வாரம் தான் இருக்கும். நான் என் அப்பாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தேன். 'இரண்டாவது காதல் கதை' பற்றி பேச்சு எழுந்தது.

"முடிவு தெரியும் சொல்லட்டுமா" என்றேன்.

"கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது, முடிவை நானே படிச்சிக்கிறேன்" என்றார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் அப்பா திடீரென்று இறந்து போனார் என்று செய்தி கேட்டு திருச்சிக்குச் சென்றேன். கடைசிவரை அவர் அந்தக் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளவே இல்லை.


Old Comments from my previous blog.

Post by Pradeep
Welcome 2 BlogWorld! Please give meaning of azhvar padal. I got another blog to read regularly ;)
Fri, May 21 2004 5:33

Post by Pari
அமைதியா போய் கடைசில ஒரு குண்டத் தூக்கிப் போட்டுட்டீங்களே :(
Fri, May 21 2004 9:33

Post by prakash
வீட்டுலே தம்பி கூட போடுற சண்டை ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்னு அவர் கிட்ட எப்பவாவது கேட்டிருக்கீங்களா? :-)
Sun, May 23 2004 2:30

Post by Haranprasanna
Congrats Desikan on yr new blog.
Mon, May 24 2004 1:32

Post by sivasankar
haha...romba nalla irunthathu desi, and well, u r a professional artist or what? i didnt know this? anyway the climax, unga appa pathi sonnapa, konjam kastamaagiduchi desi..:( anbudan, siva...sri...
Mon, May 24 2004 4:30

Post by Princess
Hi Mr. D. Saw your letter, and came rushing here, first thing :-) Kalakkalaa irukku. I'm glad you're going to write about your sketches. Am looking forward to them. [Done any more painting lately?] Aarambame asaththal. Will keep popping in :-)
Mon, May 24 2004 7:29

Post by Balaji-paari
Welecome to Blogspot. Nalla eluthu... Padamum arumai... Appa-patri sonnathu athirchi...
Mon, May 24 2004 11:29

Post by sathyarajkumar
sujaathaavukkE uriya antha laagavathOdu ulukki vittIrgaL.
Tue, May 25 2004 6:30

Post by Lazy Geek
nice potrait of sujatha. and felt sorry about your dad who himself was a big sujatha lover.
Tue, May 25 2004 5:33

Post by J. Rajni Ramki
கற்றதும் பெற்றதில் சுஜாதா ஒரு தடவை சொல்லியிருந்த அந்த தேசிகன் நீங்கதானா? வெல்கம் ஸார்!
Wed, May 26 2004 9:35

Post by Raviaa
// கோனார் நோட்ஸுக்கே ஒரு நோட்ஸ் எனக்குத் தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.// அட நம்ம கேஸூ !! :) அழகாக எழுதுகிறீர்கள்...Bravo..
Wed, Jun 2 2004 3:31

Post by Arun
Nice blog, I am also a very VERY fan, tamizh VERY, In fact Mr.Desikan we both are similiar, my father introduced me to Sujatha stories, and even my name Arun is took from His story in 1980, But he does not remember the title can u please find it out and tell me the name of the Hero is ARUN, in that story, and it came in Ananda viktan as 'thoar'. if u find the title reply, Nice writing,
Sat, Jul 24 2004 9:57

Post by Murali
Dear Desikan I very much liked your writing style. Sorry to hear about your Dad's demise. Keep writing more. Murali
Fri, Jul 30 2004 8:58

By Desikan, at Tue Nov 02, 06:47:38 PM IST  

This post has been removed by the author.

By Anandham, at Wed Mar 30, 02:01:51 PM IST  

I'm reading this blog nearly after 10 months. when you people were writing blogs i was just reading about what is blog. still i'm new to blogs. i was searching for good blogs. at last found lots of well crafted tamil blog.
one small request. I need a list of Sujatha writings. will you please help me..

By Anandham, at Wed Mar 30, 02:02:02 PM IST  

சுஜாதாவின் புத்தகங்கள் PDF வடிவில் இருக்கின்றனவா? அவை கிடைக்கும் வலைப்பதிவு உள்ளதா?

சுஜாதா அவர்களின் Radio interview ஒன்றில் படிப்பதன் முக்கியத்துவத்தை அவர் விளக்க கேட்டேன். ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது படிக்கவேண்டும் என்றார். ஒரு பக்கமாவது படிக்க ஆரம்பித்தபின் படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். தூங்கிக் கழித்துக்கொண்டிருந்த எனது தினசரி ரயில் பயணங்களை இப்பொழுது படித்துக் க(ழி)ளிக்கிறேன்.

Anyway!! சுஜாதாவின் புத்தகங்கள் PDF வடிவில் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.

உங்கள் வலைப்பதிவுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி அடிக்கடி வருவேனென்று நினைக்கிறேன்.

மிக்க நன்றி,
சரவணன்.

By Saravanan, at Tue May 03, 10:41:00 PM IST  

Very Nice to see the articles you have written. Interesting too... I will keep coming to your site very ofter hereafter.

By Anonymous, at Thu May 05, 10:29:19 AM IST  

Comments