கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு
(1) ஒரு சிறுவனின் கதை:
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார்.
வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான்.
பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை.
(2) என் சொந்தக் கதை:
முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாயுடுவின் 'திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்' குறித்துக் கூறினார். அப்போதுதான் 'ஈடு' என்ற வார்த்தையையே முதல்முறையாகக் கேள்விப்பட்டேன். ”இது என்னது?” என்று சுஜாதாவிடம் கேட்டேன். "நம்பிள்ளை, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஈடு வியாக்கியானத்தை மணிப்பிரவாளத்தில் செய்துள்ளார். அதை புருஷோத்தம நாயுடு தமிழாக்கம் செய்துள்ளார்" என்று விளக்கினார். என் அடுத்த கேள்விக்கு, “சென்னை பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம், விசாரித்துப் பாருங்கள்” என்றார்.
உடனே என் வாகனத்தை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு எதிரே உள்ள பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். அங்கே ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்று விசாரித்தேன்; யாருக்கும் தெரியவில்லை. தட்டுத்தடுமாறி ஒருவழியாக இடத்தைக் கண்டறிந்து சென்றபோது, ஒரு பெரிய அறையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
’திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது. "மொத்தம் பத்து புத்தகங்கள்; எல்லாம் இருக்கிறதா என்று தெரியாது, தேட வேண்டும். ஒரு வாரம் கழித்து வாருங்கள். எதில் வந்தீர்கள்?" என்றார். "பைக்" என்றேன். "எப்படி எடுத்துக்கொண்டு போவீர்கள்? அடுத்த வாரம் ஆட்டோவில் வாருங்கள்" என்றார்.
ஒரு வாரம் கழித்துச் சென்றேன். "மொத்தம் ஒன்பது புத்தகங்கள்தான் இருக்கின்றன, ஏழாம் பகுதி இல்லை" என்றார். "ஒன்று கூடவா இல்லை?" என்று கேட்டேன். "இருந்தாலும் ரொம்பப் பழசாய் இருக்கும், பார்க்கிறேன்" என்று கூறி, ஒரு பழைய கந்தலான புத்தகத்தை எடுத்து வந்தார். எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஒரே புத்தகம், ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய 'பு.ரா.புருஷோத்தமனாரின் வைணவத் தமிழ்த் தொண்டு - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்' (சாகித்திய அகாதெமி). ம.பெ.சீனிவாசன் வைணவ தமிழுக்கும் சாகித்திய அகாதெமிக்கும் புதியவர் அல்ல. ஏற்கனவே பெரியாழ்வார், குலசேகராழ்வார், முதலாழ்வார்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
(i) ‘பு.ரா.புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்த் தொண்டு’ என்ற தலைப்பில் திரு. ம.பெ.சீனிவாசன் அவர்கள் சுமார் இருபது பக்கங்களில் நாயுடுவின் வைணவத் தமிழ்த் தொண்டு குறித்து மிக அழகாக விவரித்துள்ளார். இதை ஒரு ‘மஸ்ட் ரீட்’ (Must Read) என்பேன்.
(ii) அடுத்த பகுதி, திரு. நாயுடு வைணவம் தொடர்பாக எழுதிய சில கட்டுரைகள்.
ம.பெ.சீனிவாசன் தன் கட்டுரையில், நாயுடுவின் பிறப்பும் கல்வியும் என்ற தலைப்பில் அவரது கல்வி மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் எவ்வாறு தனித்துவமானவை என்பதைக் குறிப்பிட்டுள்ளார். நாயுடுவின் இலக்கணப் புலமை, அவரது பன்முகத்தன்மைக்கு உதாரணமாக அவர் வெற்றிலையைத் துளையிடும் உதாரணம் எனப் பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. இன்றைய தமிழகத்தில் தமிழை விரும்பிப் படிக்க வைக்க இவரைப் போன்ற ஆசிரியர்கள்தான் தேவை என்று தோன்றுகிறது.
அடுத்து, 'ஈட்டின் தமிழாக்கம்' என்ற தலைப்பில், அவர் எவ்வாறு மணிப்பிரவாளச் சொற்களை அழகு தமிழில் தந்தார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளை விவரிக்கும்போது நம்மையறியாமல் ‘அட’ போட வைக்கிறது. இதைப் படித்தாலே எப்படித் தமிழில் எழுத வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக எனக்குத் தோன்றியது.
ஓர் உதாரணம், "விதி என்கிறது பகவத் கிருபையை" என்று ஈட்டில் வருவதை, நாயுடு அவர்கள் "விதி என்றது பகவானுடைய கிருபையை" என்று சற்றே அழகாக மாற்றி அமைக்கிறார். எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களை - "இதர விஷய அநுபவத்தாலே வரும் களிப்பும்" என்பதை "சிற்றின்ப நுகர்ச்சியாலே வரும் களிப்பும்" என்று மாற்றிப் புரிய வைக்கிறார்.
இப்படிப் பல உதாரணங்களைக் குறிப்பிட்டு, "கற்போரைக் கைப்பிடித்துச் சென்று காட்டுவது போல் அமைந்தவை இவருடைய அடிக்குறிப்புகள்" என்கிறார் ம.பெ.சீ. எவ்வளவு உண்மை.
நாயுடு அவர்களின் தனித்தன்மை என்னவென்றால், ஈட்டின் தமிழாக்கத்தில் இயன்ற இடங்களிலெல்லாம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், நீதி நூல்கள், நிகண்டுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். எவ்வளவு பரந்த அறிவு இருந்தால் இதைச் செய்திருக்க முடியும் என்று வியப்பே மிஞ்சுகிறது!
உதாரணமாகத் திருவாய்மொழியில்,
'சீரார்செந் நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை' (5-8-1)
என்ற பாசுரத்தில், 'செந்நெற்கள் எப்போதும் அங்கு செழித்துள்ளன' என்பதைக் குறிக்க ஆழ்வார் 'வீசும்' என்ற நிகழ்காலச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாக 'ஈடு' விளக்குகிறது. இதிலுள்ள இலக்கண நுணுக்கத்தை மெய்ப்பிக்க, நன்னூல் சூத்திரம் ஒன்றை உரிய அடிக்குறிப்புடன் புருஷோத்தம நாயுடு கொடுத்து விளக்கியுள்ளார். நம்பிள்ளை இருந்தால் நிச்சயம் நாயுடுவை பாராட்டியிருப்பார்.
மொழிகளிலும் வைணவ மரபிலும் ஒரு மனிதரால் இவ்வளவு அறிவை எவ்வாறு திரட்ட முடிந்தது என்பது மலைக்க வைக்கிறது. இவரின் அடிக்குறிப்புகளை மட்டுமே தனியாக ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தத் தொகுதியில் உள்ள வைணவம் சார்ந்த கட்டுரைகளை வாசிப்பது ஒரு தனி அனுபவம். அதை இன்னொரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
பி.கு: கன்றுக்குட்டி விற்று தந்தையிடம் அடி வாங்கி, தன் பெரியப்பாவிடம் தமிழ் மற்றும் வைணவம் கற்ற அந்தச் சிறுவன்தான், வைணவ அறிஞராகத் திகழ்ந்து, நம்மாழ்வாரின் திருவாய்மொழி உரைகள் (ஈடு), ஆச்சார்ய ஹ்ருதயம் மற்றும் ஸ்ரீவசன பூஷணம் போன்ற கடினமான வைணவ நூல்களை எளிய தமிழில் தந்த மாமேதை திரு புருஷோத்தம நாயுடு.
சாகித்திய அகாதெமிக்கு ஒரு சிறிய வேண்டுகோள்: ஆங்கிலத்தில் "Putting a name to a face" என்பார்கள். முகத்தோடு பெயரைப் பொருத்திப் பார்ப்பது. இந்தப் புத்தகத்தின் அடுத்த பதிப்பில் திரு. பு.ரா.புருஷோத்தம நாயுடு அவர்களின் புகைப்படம் ஒன்றைச் சேர்த்துவிடுங்கள்.
-சுஜாதா தேசிகன்
1.2.2026
படம் : திரு புருஷோத்தம நாயுடு பழைய படத்தை ஏ.ஐ கொண்டு மெருகேற்றினேன்.
Comments
Post a Comment