ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன்
ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது.
அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன்.
சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வது போல அமைந்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? என்று கேள்வி எழுப்பி, இதை எல்லா வைணவர்களும் கண்டிக்க வேண்டும் என்கிறார்கள். இத்தகைய கல்விமான்கள் கூறும் கண்டனங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு அடியேனுக்கு ஞானம் இல்லை. இருப்பினும், இது தொடர்பாக அடியேனுக்குத் தோன்றிய சில கருத்துக்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஸ்ரீராமர் சென்ற பாதையில் (இலங்கையைத் தவிர) அடியேன் ஃபிளைட், பேருந்து ஏன் டிராக்டரில் கூட பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். அப்போது ராமருடைய சிவந்த பிஞ்சுக் கால்கள் மேலும் சிவக்க ‘நடந்த கால்கள் நொந்தவோ’ என்று ஆழ்வார் போல, அவர் மீது பரிதாபம் தான் ஏற்பட்டது. சென்ற ஸ்ரீராமர் ஆலயங்களில் திரும்பும் இடமெல்லாம் அனுமாரும், சிவனும் இருப்பார்கள். வீர வைணவர்கள் அனுமாரை ஒரு வணக்கத்துடன் கடந்துவிடலாம், ஆனால் சிவபெருமானை என்ன செய்வது என்ற குழப்பமும் தர்மசங்கடமும் உண்டு.
அப்போது அடியேனின் ஆசாரியன் சொன்னது தான் என் நினைவுக்கு வரும்.
அலுவலகத்தில் மேலாளர் எதிரே வருகிறார் அப்போது நாம் அவருக்கு சலாம் போடுகிறோம். ஆனால் தாய் தந்தையரை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கிறோம். இரண்டும் மரியாதை தான். ஆனால் வேறுபட்டது. சிவபெருமான் அலுவலக மேலாலர் போல். எதிரே வந்தால் நாம் அவரை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நம் மிகச் சிறந்த ராமர் பக்தனை அவமதித்ததைப் போல ஆகிவிடும். நாம் தினமும் இரண்டு முறை சொல்லும் “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே” என்ற சஹஸ்ரநாம வரிகளே இதற்கு சான்று.
பார்வதி தேவி, சிவனைப் பார்த்து “ஐயனே! விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களையும் பெரியோர்கள் தினமும் எளிதாக ஜபிக்க உபாயம் எது என்று அறிய விரும்புகிறேன்?” என்று கேட்க அதற்கு ஈஸ்வரனின் (சிவன்) பதில், “சிந்தனைக்கினியனான ஸ்ரீராம நாமத்தை ‘ராம ராம ராம’ என்று நாவினால் நவின்று இன்பமெய்தினேன். இந்த ராமநாமம் ஒன்றே விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு ஒப்பானது. இந்த ராமநாமம் ஒன்றே போதும். இது முழு விஷ்ணு சகஸ்ரநாமமாகும்” என்று பதில் அளித்தார்.
இவ்வாறு சிவபெருமானே ஸ்ரீராம நாமத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிலையில், ஸ்ரீராமரும் மஹாதேவரை வணங்கிய அந்த நிகழ்வை குறித்து ராமாயணங்கள் என்ன சொல்லுகிறது ?
வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஸ்ரீராமர் புஷ்பக விமானத்தில் சீதையுடன் அயோத்திக்கு புறப்படுகிறார். வழியில் தென்படும் முக்கிய இடங்களை சீதைக்கு காட்டுகிறார் ராமர். ”இங்கு தான் ராவணன் கொல்லப்பட்டான். இந்த இடத்தில் தான் மண்டோதரி புலம்பினாள்…” என்று கூறிக்கொண்டு வரும் போது, ”வைதேகி! உப்புக் கடலில் பாலம் அமைப்பது செயற்கரிய செயல். உனக்காக சேது பாலம் கட்டினேன். பாலம் கட்டுவதற்கான தொடக்கப் பகுதியை ‘சேதுபந்தம்’ என்று புகழ்பெற்று, மூவுலகத்தோராலும் வணங்கப்படும் இந்தப் புனிதப் பிரதேசம், பேராற்றலும் பேருருவமும் கொண்ட பெருங்கடலில், இதோ காணப்படுகிறது. இது மிகவும் புனிதமானது; இங்கே நீராடுபவர்களின் பெரும் பாவங்களையும் அழிக்கக் கூடியது. இவ்விடத்தில்தான் முன்பு, நான் பாலம் கட்டத் தொடங்கியபோது தனிப்பெரும் ஈசரான ’மஹாதேவர்’ எனக்கு அருள் புரிந்தார்” என்கிறார்.
பொதுவாக மஹாதேவன் என்றால் அது சிவனைக் குறித்தாலும், ராமர் இலங்கைக்கு புறப்படும் போது சமுத்திர ராஜனை தான் வணங்கினார், அதனால் ’மஹாதேவன்’ என்றால் அது ’மஹா’ சமுத்திர ராஜனை குறிக்கிறது; அது சிவனை அல்ல என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் கருத்து.
’அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்’ என்று நம்மாழ்வார் கூறுவதால் நான் இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
வடக்கில், வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு துளசிதாசரால் எழுதப்பட்ட ‘ராமசரிதமானஸ்’ என்ற ராமாயணம் மிகப் பிரபலம். அயோத்தியில் பல இடங்களில் அதை பாராயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். துளசிதாசரின் ராமாயணத்தில் ஸ்ரீராமர் சிவனை வணங்கினார் என்று இருக்கிறது. புஷ்பக விமான யாத்திரையின் போது ஸ்ரீராமர் இங்கு தான் சிவபிரானை நிறுவினேன். பூஜித்தேன் என்று கூறியவாறு ராமரும் சீதையும் இராமநாதப் பிரபுவை வணங்கினர் என்றும் இருக்கிறது.
2003ல் அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற ராமர் கோயில் வழக்கின் குறுக்கு விசாரணையின் போது ராமானந்தாச்சார்யா துளசிதாசரின் ‘தோஹ சட்டகம்’ என்ற 8 ஸ்லோகங்களை மேற்கோள் காட்டினார். இது ஸ்வாமி தேசிகனின் ‘அபீதிஸ்தவம்’ போல நமக்கு ஒரு பெரிய வரலாற்று ஆவணம்.
‘தோஹ சட்டகத்தில்’ துளசிதாசர் கூறிய சாரம் இது தான்: அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜனனமான இடத்தை முஸ்லீம்களும் பாபரும் எப்படி அழித்து, அதற்குப் பதிலாக ஒரு மசூதியைக் கட்டினார்கள் என்பதைத் துளசிதாசர் தெளிவாக விவரித்துள்ளார். மேலும் அதில், ஹிந்து நூல்கள், உபநிஷதங்களை கேலி செய்து அவமதித்தது, இந்துக்களின் மத அடையாளங்களான குடுமி, பூணூலை அகற்றியது மற்றும் இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைக் கைவிடுமாறு பார்ப்பனர்களுக்கு அழுத்தம் கொடுத்தது ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளது. பாபர் 1528 ஆம் ஆண்டு அயோத்தியில் இந்துக்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்த கொடூரமான பிரச்சாரத்தை எவ்வாறு வழிநடத்தினான் என்பதையும், பாபரின் கூட்டாளியாக இருந்த ’மிர் பாக்கி’, ஸ்ரீ ராம் ஜன்ம பூமியில் இருந்த கோவிலை இரக்கமின்றி அழித்து, அதை மசூதியாக மாற்றியதைக் கண்டு தான் எவ்வளவு மனம் உடைந்திருந்தார் என்பதையும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஐந்நூறு ஆண்டுகளாக ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் போராட்டத்தில் ராம பக்தர்களின் தியாகங்களும், துளசிதாசர் மனம் வெம்பி எழுதிய ‘தோஹ சட்டகம்’ போன்றவற்றால் இன்று நமக்கு அயோத்தியில் ராம் லல்லா கிடைத்துள்ளார்.
தமிழகத்தில் கம்ப ராமாயணம் பிரசித்தம். கழகங்களுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் கம்பனுக்கும் கழகம் உண்டு. 'நம் சடகோபனைப் பாடினாயோ?' என்று நம்பெருமாள் கேட்க, சடகோபர் அந்தாதி பாடிய பிறகு, ஸ்ரீமத் நாதமுனிகள் துணைக்கொண்டு ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த அரங்கேற்றத்தின் போது, வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ஸ்ரீநரசிம்மர் குறித்த 'இரணியன் வதைப் படலம்' பகுதிக்கு எழுந்த ஆட்சேபணைகளை மேட்டு அழகியசிங்கர் தன் கர்ஜனை மூலம் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். இன்றும் வைணவ உரையாசிரியர்கள் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டுவதுடன், சில பாசுரங்கள் அரங்கன் முன் ஸ்ரீரங்கம் அரையர் சேவையிலும் சேவிக்கப்படுகிறது.
இப்படிப் பெருமை பெற்ற கம்பராமாயணத்திலும், அகத்தியர் ராமரை சிவபூஜை செய்யுமாறு அறிவுறுத்துகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் எடுத்துவர அனுமான் சென்று வர தாமதமானதால், வெண் மணல் பிடித்து 'ஆலம் உண்ட' சிவன் இவரே என்று கருதி, உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் விஷ்ணுவாகிய ராமன் பூஜை செய்தார் என்று யுத்தகாண்டத்தில் ஒரு பகுதி வருகிறது. எனினும், இந்தப் பாடல்கள் பழம் பிரதிகள் பலவற்றில் இல்லாது, சில பிரதிகளில் மட்டும் காணப்படும் 'மிகைப் பாடல்கள்' என்ற தலைப்பின் கீழ் வருகின்றன. இவை இடைச் செருகல் என்று உறுதியாக சொல்ல முடியாத பாடல்கள் என்பதால், ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்த மிகைப் பாடல்கள், பால காண்டம் முற்பகுதியிலும், சுந்தர காண்டத்தின் இறுதிப் பகுதியிலும், யுத்த காண்டத்தின் இறுதிப் பகுதியிலுமே அதிகமாக இருத்தல் காணலாம் என்று எஸ். ராஜம் பதிப்பித்த கம்பராமாயண புத்தகத்தின் முன்னுரையில் இவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எது எப்படி இருப்பினும், கம்பநாட்ட ’ஆழ்வானும்’, துளசி ‘தாசரும்’ ராம பக்தியில் ஊறித் திளைத்தவர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இருவரும் ஸ்ரீராமர் சிவனை வணங்கினார் என்று கூறுவதால், அவர்களுடைய ராம பக்தியை நாம் சந்தேகப்படக் கூடாது. அதே போல், அயோத்தி ராமர் ஆலயம் உருவாகப் பாடுபட்ட ஒவ்வொருவருடைய தொண்டையும், அவர்களுடைய ராம பக்தியையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களுடைய தொண்டினை நினைக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்தப் பாசுரம் நினைவுக்கு வருகிறது.
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்
ஸ்ரீராமருக்குப் பாலம் கட்டக் குரங்குகள் கல்லைத் தூக்கிச் சென்றன. அதைப் பார்த்த அணில்கள், மலையைத் தூக்க இயலாமல், கடலுக்குள் சென்று தங்கள் உடலை ஈரமாக்கி, அதில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று அணைகட்ட உதவின. 'நான் அந்த அணில் போல் நான் இல்லையே' என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார்.
அயோத்தி சென்ற போது அங்கே வேலை செய்துகொண்டு இருந்தவர்களைப் பார்த்த போது அடியேனுக்கு அப்படி தான் தோன்றியது. அதனால் அங்கே ஸ்ரீராமர் சிவனை பூஜிப்பதாக அமைந்த சிற்பத்திற்கு எந்த உள்நோக்கமும் இருக்க முடியாது. அதை நாம் கற்பிக்கவும் கூடாது.
நாம் இப்போது மேலே பார்த்த அணில் கதை, வால்மீகி ராமாயணம் உட்பட எந்த ராமாயணத்திலும் இல்லை. அதை ஆழ்வார் மட்டுமே பாடுகிறார். 'வால்மீகி ராமாயணத்தில் இல்லாததால் ஆழ்வார் சொல்லுவதை ஏற்க முடியாது' என்று நாம் ஒதுக்கிவிட முடியுமா? வால்மீகிக்குத் தெரியாத சில விஷயங்களை ஸ்ரீராமர் ஆழ்வாருக்கே காட்டியிருப்பார் என்று நான் எப்பொழுதோ ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன்.
ஸ்ரீராமாயணத்தில் ராமர் தான் ஒரு மனிதனாக அவதரித்து, மனிதனாகவே நடந்துகொள்கிறார். தான் ஒரு பரம்பொருள் என்று எங்கும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல், சமுத்திர ராஜனிடம் சரணாகதி செய்து, கடற்கரையில் தர்ப்பைப் புற்களைப் படுக்கைபோல் பரப்பி, கடலைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம், அதையே தலையணையாக வைத்துக்கொண்டு மூன்று நாள் உணவு ஏதுவும் இல்லாமல் கருணைக் கடலான ராமர் உப்புக்கடலை எதிர்நோக்கிப் படுத்திருந்தார். தெய்வத்துக்கு எல்லாம் தெய்வமாகிய ஸ்ரீராமருக்கு ஏன் இந்த நிலைமை? ராமர் தன் அவதாரத்துக்கு ஏற்றவாறு நடந்துகொண்டார். இதனால் ராமர் மேலும் புகழடைந்தார். ஏன் என்று சொல்லுகிறேன்.
ராமாயணத்தில் பக்தர்களின் மீதான பெருமாளின் பிரேமையை விளக்கும் சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, யுத்த காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமர் மீது கொண்ட பிரேமையினால், ராமரின் உத்தரவு இல்லாமலேயே ராவணனுடன் சண்டையிட்டான். பின்னர், அவனுடன் யுத்தம் செய்வது உசிதமல்லவென்று எண்ணி ராமர் பக்கம் வந்து நின்றான்.
அப்போது ஸ்ரீராமர் சுக்ரீவனைப் பார்த்து, “நண்பா, என்னுடன் ஆலோசிக்காமல் இப்படிப்பட்ட துணிவான காரியத்தைச் செய்யலாமா? இது உனக்குப் பெரிய துணிச்சலான காரியமாக இருக்கலாம், ஆனால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கருதிக் கவலைப்பட்டேன்,” என்று கூறினார். மேலும், ராமர் சுக்ரீவனைப் பார்த்து இப்படிச் சொல்லுகிறார்:
“ராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஏன் உன் உடம்பிலிருந்து ஒரு ரோமம் கீழே விழுந்தால்கூட, சீதையாவது, பரதனாவது, லக்ஷ்மணனாவது, சத்துருக்கனனாவது... ஏன் என் உயிர் கூட எனக்குத் தேவையில்லை” என்கிறார்
அடுத்து, தண்டகாரண்யத்தில் ரிஷிகள் ராமரை சரணாகதி செய்து, “எங்களை யாகம் செய்யவிடாமல் தொல்லைக் கொடுக்கும் ராக்ஷசர்களிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று சரணாகதி செய்கிறார்கள். அப்போது ராமர், “ராக்ஷசர்களை வதம் செய்து, உங்களை காக்கிறேன்” என்று சபதம் செய்கிறார்.
அருகில் இருந்த சீதை, “நமக்கு ராக்ஷசர்களுடன் எந்த முன் விரோதமும் இல்லை. அவர்கள் நமக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. அப்படி இருக்க, நீங்கள் வதம் செய்வதாக சபதம் செய்கிறீர்களே?” என்று கேட்கிறாள்.
அதற்கு ராமர், “இந்த ரிஷிகள் என்னையே கதி என்று நினைக்கிறார்கள். இவர்கள் என் தாஸர்கள். என்னை சரணாகதி செய்த இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். அவர்களை காப்பதைக் காட்டிலும் வேறு எந்த முக்கியமான காரியமும் எனக்கில்லை. அவர்களை காப்பதற்கு ஒருகால் நீ (சீதை) தடையாக இருந்தாலோ, அல்லது லக்ஷ்மணன் தடையாக இருந்தாலோ கூட, நான் உன்னையும் விட்டாலும் விட்டுவிடுவேன், லக்ஷ்மணனையும் விட்டுவிடுவேன். ஆனால் என்னை சரணாகதி செய்த ரிஷிகளை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று அடித்துச் சொல்லுகிறார் ராமர்.
அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டுபிடித்துவிட்டோம் என்று சந்தோஷம் தாங்காமல் குதித்து, ஓடி, ஆடித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வானர சேஷ்சைகளை எல்லாம் செய்து, தன் தோளைத் தானே தட்டிக்கொடுத்து, வாலை எடுத்து முத்தமிட்டு ஆனந்தமடைந்தார் என்கிறார் வால்மீகி. சீதையிடம் என்னுடன் வாருங்கள் பத்திரமாக அழைத்துச் செல்கிறேன் என்கிறார். ஆனால் சீதை அதை மறுக்கிறாள். என்னைக் காப்பவன் ராமன். அவரே என்னைக் காத்து அழைத்துச் செல்லட்டும் என்று பதில் கூறுகிறாள்.
பிறகு அனுமார் ராவணனின் அரண்மனையில் ஸ்ரீராமரின் பராக்கிரமத்தை வர்ணித்து அவரைச் சரணடைவதே உனக்கு நல்லது என்று உபதேசிக்க அனுமாரைக் கொல்லும்படி ராவணன் கட்டளையிடுகிறான். ராக்ஷசர்கள் அனுமானின் வாலில் நெருப்பு வைக்க, வாலில் நெருப்பு எரிந்துகொண்டு இருக்க, ஆனால் அனுமாருக்கு அது குளிர்ச்சியாக இருந்தது.
சீதை தூக்கிக்கொண்டு சென்றதால் தான் ஸ்ரீராமர் ராவணனை அழித்தார் என்பது உண்மை இல்லை, ராம பக்த அனுமார், எந்த வாலை முத்தம் கொடுத்தாரோ அதே வாலின் நுனியில் ஒரு முடிமீது நெருப்பு பட்டதால் ஸ்ரீராமருக்குக் கோபம் வந்து ராவணனை அழித்தார்.
பக்தர்களைக் காக்கும் விஷயத்தில் பெருமாள் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார் என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.
ராமாயணம் முழுக்க பக்தர்களை ரட்சிப்பதையே தன் விருதமாக கொண்டிருக்கும் ராமர், தன்னை சரணடைந்த பிராட்டியை மீட்க என்ன வேண்டும் என்றாலும் செய்வார். எந்த மஹாதேவனையும் வணங்க தயங்க மாட்டார். தன் பக்தர்களை ரட்சிக்க எந்த எல்லைக்கும் ராமர் செல்வார் என்பதையே இது காட்டுகிறது. அதனால் சிவலிங்க பூஜையின் சிற்பத்தைப் பார்க்கும் போது ராமரின் ரக்ஷத்துவம் தான் நினைவுக்கு வர வேண்டும்.
இது — ராமர் தன்னைச் சரணடைந்த ஜீவாத்மாக்களுக்கு செய்யும் மாற்றமற்ற சங்கல்பம்.
இதே போல், ஸ்ரீமத் பாகவதத்தில் என் பக்தர்களைக் காட்டிலும் வைகுண்டம் பெரிதில்லை, என் சதுர்புஜ ரூபம் எனக்குப் பெரிதில்லை ஏன் என் லக்ஷ்மியும் பெரிதில்லை என்கிறார். கண்ணன் உத்தவரைப் பார்த்து எனக்குப் பிரம்மா பெரிதில்லை, ருத்திரன் பெரிதில்லை, பலராமனும் பெரிதில்லை, ருக்மிணியும் பெரிதில்லை என்கிறார்.
எந்த அவதாரமாக இருந்தாலும் பெருமாளின் நோக்கமும், சுபாவம் மாறுவதில்லை என்பது தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. பக்தர்களை ரக்ஷிப்பதே அவன் நோக்கம்.
இதனால் தான் ’கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்று ராமனைக் கற்பதே நமது சிலபஸ் என்று திருவாய்மொழியிலே காட்டிக் கொடுக்கிறார் நம்மாழ்வார். அந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஆராவமுதே என்ற பாசுரம் மூலம் நமக்கு காட்டிக் கொடுத்தார் ஸ்ரீமத் நாதமுனிகள். ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தங்கள் இல்லை என்றால் இன்று திவ்ய தேசங்கள் இல்லை; ஸ்வாமி தேசிகன் கூறிய ’தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று கொண்டாடப்படும் பிரபந்தங்கள் இல்லை; திராவிட வேதம் இல்லை; ஏன் ஸ்ரீவைணவமே இருந்திருக்குமா என்பதே சந்தேகம். மார்கழி மாதம் முழுக்க கொண்டாடப்படும் கோதையின் திருப்பாவை இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாதமுனிகளின் பேரனான ஸ்ரீ ஆளவந்தார் ‘ஆம் முதல்வன் இவன்’ என்ற ஸ்ரீராமானுஜரை நமக்கு காட்டிக்கொடுத்தார். ராமானுஜர் திருமலைக்கு சென்று பெரிய திருமலை நம்பியிடம் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்பதற்கு ஏற்ப ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றார்.
ஸ்ரீராமர் ஆராதித்த பெரிய பெருமாள் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தைக் காட்டிக் கொடுத்து, அங்கேயே நித்தியவாசம் செய்கிறார். வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் போது, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புடை சூழ நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டையுடன் வீற்றிருப்பார். நாதமுனிகள் ஏற்படுத்திய அரையர் சேவையை நம்பெருமாள் அனுபவிக்கும் அந்தத் தருணத்தில், நாலாயிரத்தைக் காட்டித் கொடுத்த நாதமுனிகளுக்கும், 'வாரும் உடையவரே!' என்ற திருநாமம் சூட்டி நம்பெருமாளால் எதிர்கொண்டு அழைக்கப்பட்ட ஸ்ரீராமானுஜரைக் காட்டித் கொடுத்த ஆளவந்தாருக்கும் ஆழ்வார், ஆசாரியர்களின் கோஷ்டி பூசலால், கோஷ்டியில் இடம் இல்லை. ஸ்ரீராமர் சிவனை வழிபட்டார் என்று வருத்தப்படுவதை விட, இதற்குத்தான் நாம் வருத்தப்பட வேண்டும்.
கடைசியாக, தொண்டரடிப்பொடி ஆழ்வார்: “அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே!” என்று எழுப்புகிறார். ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின் அந்த அயோத்தி எம் அரசே! சக்கரவர்த்தி திருமகனாக எழுந்து நிற்கிறார். அந்த குழந்தையை ’டிரோல்’ செய்யாமல் பாதுகாத்து, வணங்குவது நமது கடமை.
-சுஜாதா தேசிகன்
22.11.2025
Comments
Post a Comment