ஸ்ரீரங்கத்து ஓவியங்கள்
ஒரு நாள் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம் என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பத்து பன்னிரண்டு கதைகளுக்குக் குறிப்பு வைத்திருக்கிறேன் என்றும் சொன்னார்.
ஒவ்வொரு வாரமும், என்னைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடுத்து எழுதப் போகிற கதையை முழுவதும் சொல்லிவிடுவார். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே உண்மை கதையைச் சொல்லிவிட்டு அதை எப்படி ‘கதை’யாக மாற்றப் போகிறேன் என்று விளக்குவார். மற்றவர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் கதை எழுதும் பாட வகுப்பாக அமைந்தது. அடுத்த வாரம் அவர் சொன்ன கதை எப்படி எழுத்தாக வருகிறது என்று பார்க்கப் பார்க்கப் பரவசம்.
அனந்த விகடனில் அவர் முடித்தபின், முன்பு வந்த சாவியில் வந்த ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் + ஆனந்த விகடனில் வந்த ஸ்ரீரங்கத்துக் கதைகளும் சேர்த்து புத்தகமாகப் போடும் பேச்சு வந்தது.
”சார் நடுவில் நிறைய ’ஸ்ரீரங்கத்து கதைகள் ‘எழுதியிருக்கிறீர்கள்” என்றேன்
“என்ன இருக்கப் போகிறது... நான்கு அஞ்சு கதை இருக்குமா ?” என்றார்
“அதுக்கும் மேலே பத்து, பன்னிரண்டு ...” என்று சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.
முழுவதும் தொகுத்தபோது அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்
”சினிமா படத்தில் காமெடி டிராக் தனியாக வருவது போலப் புத்தகத்தில் நான் படம் வரையட்டுமா ? ” என்றேன்
“நிச்சயமா செய்யுங்கள்.. ”
”ஸ்ரீரங்கத்தில் சில முக்கியமான இடங்களைப் படம் வரையலாம் என்று இருக்கிறேன்.. உங்களுக்குப் பிடித்த இடங்களைச் சொல்லுங்கள்..” என்றவுடன் சர சர என்று ஸ்ரீரங்கத்தை வரைந்து தந்தார்.
ஒரு படத்தை வரைந்து அவரிடம் காண்பித்தேன் “ரொம்ப நல்லா இருக்கு” என்றார்.
“உங்க கையெழுத்து எங்கே ? ..எல்லா படத்திலும் கையெழுத்து போட்டுவிடு..இல்லை சுட்டுவிடுவார்கள்” என்றார்.
“கையெழுத்து போட்டால் அந்த படம் கெட்டுப்போய்விடும் வேண்டாம்” என்றேன். ( விகடனில் வந்த மூன்று படங்களுக்கு மட்டும் “இதுல போட்டுவிடு” என்று சொன்ன பிறகு போட்டேன். அதைப் அற்றி கீழெ )
புத்தகம் வந்தபோது அவரிடம் கொண்டு சென்று காண்பித்தேன். ( நானே காண்பிக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை இருந்தது ! )
அவர் கண்களில் ஆனந்தத்தைப் பார்க்க முடிந்தது. பொதுவாக உணர்ச்சி வசப் படமாட்டார், ஆனால் அன்று அவர் உணர்ச்சிவசப்பட்டார். பிறகு ஒரு முறை அவர் தம்பியிடம் பேசியபோது சுஜாதா இந்தப் புத்தகத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் சொன்னதை இங்கே சொன்னால் தற்பெருமையாக இருக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
இன்றும் இந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது அதில் எல்லோரும் பழக்கப்பட்டவர்கள் மாதிரியே எனக்குத் தோன்றும்.
மேலே உள்ள படத்தை நன்றாகக் கவனித்தால் பின் புறம் ஏதோ எழுதியிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியும். அது வேற ஒன்றும் இல்லை. என்னைப் பற்றி அவர் தம்பிக்குச் சுருக்கமாக இரண்டு மூன்று வரிகள் தான் அவை. அது இன்று. என் பொக்கிஷம். அதில் அவர் என்னை ‘Srirangam addict’ என்று அடியேனை விவரித்துள்ளார் !
Srirangam addict
ஸ்ரீரங்கத்துக் கதைகள் புத்தகத்தில் விகடனில் எழுதி முடித்தபின் அவர் என்னைக் கூப்பிட்டு ”தேசிகன் விகடனில் ஸ்ரீரங்கத்து கதைகள்பற்றிச் சின்ன கட்டுரை எழுதப் போகிறேன். நீங்க வரைஞ்ச படங்களை அவர்களுக்கு அனுப்புங்கள் - அப்பறம் மறக்காம அதில் உங்கள் கையெழுத்தை போட்டு அனுப்புங்கள்” என்றார்.
விகடனில் அவர் எழுதியதிலிருந்து ஒரு பகுதி
சாஃப்ட்வேர் திறமையாளரும் என் கதை, கட்டுரைகள் அனைத்தையும் சேர்த்துவைத்து எது, எந்தப் பத்திரிகையில், எப்போது வந்தது என்பதை நானே அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒழுங்காக ஒரு தகவல்தளம் அச்சு வடிவத்திலும் நெட்டிலும் வைத்திருக்கும் நண்பர் தேசிகன். போதாக் குறைக்கு ஒரு திறமை வாய்ந்த ஓவியர். அவரை ஸ்ரீரங்கத்துக்குச் சென்று, சில காட்சிகளை வரைந்து தருமாறு கேட்டுக்கொண்டேன்.
சிலவற்றைத் தந்திருக்கிறேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் புத்தகமாக வரும்போது இவையும் பயன்படும். பக்கக் கட்டுப்பாடு காரணமாகச் சுருக்கப்பட்ட ‘மாஞ்சு’ கடைசிச் சிறு கதையும் முழுவடிவத்தில் அந்தப் புத்தகத்தில் வரும். தேசிகன் ராஜகோபுரம் ராயகோபுரமாக, மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை ஏ.கே. செட்டியாரின் பழைய புத்தகத்திலிருந்து பார்த்து வரைந்தார். மற்றவை நேரடியாக வரைந்தவை. நான் வளர்ந்த காலத்தில் கோபுரம் இப்படித்தான் இருந்தது. இப்போது இலங்கையை எட்டிப் பார்க்கிறது. கீழச்சித்திரை வீதி அதிகம் மாறவில்லை. வெள்ளை கோபுரம் ஒரு ‘அல்பைனோ’ போல உள்ளது. கம்பன் மண்டபம், சேஷ ராயர் மண்டபம், கிருஷ்ணன் கோட்டை வாசல், கொட்டாரம், கருடமண்டபம் போன்றவை பாதிக்கப்படவில்லை. சித்திரை, உத்திரை வீதிகள் கொஞ்சம் பழசை ஞாபகப்படுத்துகின்றன. மற்றபடி, ஸ்ரீரங்கத்தின் வெளிநகரம் முழுவதும் அடையாளமிழந்துவிட்டது
ஸ்ரீரங்கத்து கதைகள் புத்தகத்தில் சுஜாதா எழுதிய முன்னுரையில்
“இந்தப் புத்தகத்தை சாத்தியமாக்கிய இருவரை நான் இங்கு பிரியத்துடன் சொல்ல வேண்டும். என் நீண்ட நாள் வாசகர் திரு. தேசிகன், ஸ்ரீரங்கம் கதைகளை தனிப்படுத்தி அவை எழுத பட்ட வருடங்களை பதிப்பித்த பத்திரிகை, புத்தகங்களிலிருந்து எடுத்து வரிசைப்படுத்திய அருமையான நண்பர், ஆச்சரியம் போக வில்லையொளில் மற்றொன்றும் சொல்கிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ள சித்திரங்களையும் அவர்தான் வரைந்திருக்கிறார்”
கையெழுத்துடன் படம் !
ஸ்ரீரங்கத்து படங்கள் வரைந்த அனுபவங்கள் சிலவற்றை சொல்லுகிறேன்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள சில முக்கியமான இடங்களைக் கோட்டோவியங்களாகப் பதிவு செய்வது என்று முடிவு செய்தேன். கலர் படம் பழைய காலத்து ஸ்ரீரங்கத்தை காட்டாது. ஒவ்வொரு படம் வரையக் கிட்டத்தட்ட 12 முதல் 15 மணி நேரம் ( நான் ஸ்டாப் ) ஆகும். லென்ஸ் வைத்துக்கொண்டு மொத்தம் 35 படங்கள் வரைதேன்.
வரைவதற்கு ஒப்புக் கொண்ட நாள் முதல் எனக்குள் ஒரு சின்னப் பயம் பற்றிக் கொண்டது. காரணம் நான் கடைசியாக வரைந்தது 10 வருடம் முன்னால்! மற்றொன்று கதை நான் பிறப்பதற்கு முன்பு நிகழ்ந்ததால் அன்றைய ஸ்ரீரங்கத்தை வரைய வேண்டும். டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்தில் சில நாள் காலை முதல் மாலைவரை ஸ்ரீரங்கத்திலேயே இருந்தேன். வெளிச்சம் சரியாக அடிக்கக் காத்துக்கொண்டு இருந்து படம் எடுத்தேன்.
ஸ்ரீரங்கம் கோபுரங்களையும், தெருக்களையும் எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுப் பார்த்தபோது ‘அட வெயில் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்குமே’ என்று மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று மேலும் மேலும் பல படங்களை எடுத்தேன்.
பானரோமிக் ஷாட் போன்றவை என்னுடைய கேமராவில் இல்லை. அதனால் ஒரு சாக்பீஸில் சாலையில் கோடு போட்டு அந்தக் கோட்டில் நின்றுகொண்டு வரிசையாக மூன்று நான்கு படங்கள் எடுத்து அதை ஒன்றாகத் தைத்தேன்.
அப்போது ஸ்ரீரங்கத்துக் கதைகளில் வரும் ரங்கு கடையைப் படம்பிடித்தபோது, கடைக்கு உள்ளே இருந்தவர் என்னிடம், “உங்களைச் சுஜாதாதானே அனுப்பினார்?” என்று கேட்டார்.
“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
“இந்தக் கடையை மெனக்கெட்டு வேற யார் சார் படம் எடுக்கப் போறாங்க?” என்றார்.
படம் எடுத்தபின் மரம், புதிய கட்டிடம் என்று சிலவற்றை எடிட் செய்து பிறகு வரைந்தேன். மாடு, மாட்டு வண்டிகளை உள்ளே கொண்டு வந்தேன். டியூப் லைட் எடுத்துவிட்டு குண்டு பல்ப் இப்படிப் பல விஷயங்கள் செய்தேன்.
சில படங்களைப் பற்றிய குறிப்பு கீழே
வெள்ளை கோபுரம்
அழகான பெண்களின் உடலமைப்பு மாதிரி ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம். நான் வரைந்தபோது மாட்டு வண்டி எல்லாம் இல்லை, ஆனால் சிறுவயதில் இதே தெருவில் மாட்டு வண்டியில் சென்றிருக்கிறேன். மாட்டுவண்டியை கற்பனையில் சேர்த்தேன்.
தாமரை இல்லாத தாமரைக் குளம்
சுஜாதாவிடம் “மெயின் ரோடுலிருந்து உள்ளே வரும் போது மூங்கில் கடைகள் இருக்கும்... அங்கே தாமரை குளம் இருக்கும்.. ”
“ஆமாம் பார்த்திருக்கிறேன்.. அதையும் வரைந்துவிடவா ?”
“ஓ தாராளமா ..”
“ஆயிரம் தாமரை மொட்டுக்களே...” .. என்று மனதில் பாடிக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றபோது அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது குளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
“... இங்கே தாமரை குளம்.. “
“தாமரையா ?..”
தாமரையைத் தேடிக்கொண்டு குணசீலம் வரை சென்றேன். சில மணி நேரத்தில் சின்னக் குட்டையில் சில தாமரை பூக்கள் இருந்தது.
அதைப் மனதில் வாங்கிக்கொண்டு சிறுவயது ஞாபகத்தைக் கொண்டு வரைந்த ஓவியம் இது. அந்தக் கால கிராபிக்ஸ் !
சேஷராயர் மண்டபம்
ஸ்ரீரங்கத்தில் எல்லோரையும் வியக்க வைப்பது சேஷராயர் மண்டபம். விக்டோரியா முயூசியத்தில் சேஷராயர் மண்டபம் படம்( 1850 எடுத்தது) அதை சமீபத்தில் பார்த்த போது நான் எடிட் செய்து வரைந்ததும் அதுவும் சரியாக இருந்ததைக் கண்டு வியப்புற்றேன். இன்று சின்ன சறுக்கு மரம் மாதிரி... மாறிவிட்டது!
தனியாக தான் வெள்ளை கோபுரம் !
பொதுவாக வெள்ளை கோபுரத்தைப் படம் எடுக்கும்போது சைடில் இருப்பதை எல்லாம் ஏனோ புகைப்பட கலைஞர்கள் வெட்டிவிடுவார்கள். கோபுரத்துக்கு அழகே பக்கத்தில் இருக்கும் இவை தான். அடியேன் வரைந்தபோது அதை எல்லாம் சேர்த்து வரைந்தேன்.
மரம், செடி, கோபுரம்
அரச மரம், ஆலமரம் இரண்டும் சந்து, பொந்து, இடுக்கில் வளருவதைப் பார்த்திருப்பீர்கள். எப்போது மேல்கோட்டைக்கு சென்றாலும் ராய கோபுரத்தில் மீது ( திரைப்பட ஷூட்டிங் இடம் ) அரச மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஸ்ரீரங்கத்திலும் பார்த்திருக்கிறேன். அதை ஸ்ரீரங்கத்துக் கதைகளின் ஓவியங்களிலும் பதிவு செய்திருக்கிறேன்.
‘மொட்டைக் கோபுரம்’ படம் எனக்குக் கிடைக்கவில்லை. . தற்போது இருக்கும் கோபுரத்தைப் படம் பிடித்து அடிபாகத்தை மட்டும் வரைந்தேன் ( பார்க்க மஞ்சள் வண்ணம் ). ஏ.கே. செட்டியார் புத்தகத்தில் ஸ்டாப் சைஸுக்கு ஒரு படம் இருந்தது ஆனால் அதில் எனக்கு வேண்டிய details கிடைக்கவில்லை.
படத்தில் இருந்த கான்கரிட் வீட்டைக் குடிசையாக மாற்றினேன். பிறகு முன்பு இருக்கும் பெட்டிகடையின் சட்டை, டிரவுசரை கழட்டி வெறும் மண்டபமாகக் கொண்டு வந்தேன். சமீபத்தில் இந்த படம் கிடைத்தபோது இரண்டையும் கம்பேர் செய்தேன். பரவாயில்லை என்று தோன்றியது.
மொட்டை கோபுரம் பற்றி நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி :
......எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமிஸ்கிரததில் சர்வெஷ்டானம் என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்று சொல் கிட்டேவருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கிறது( தெற்கு கோபுரம் 1987 ஆம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது ). பெரியவர்களுக்கு இவை ராய கோபுரம். சின்னவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’.
சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். "எப்படி கட்டியிருக்கிறார்கள் பாருடா!" என்று அப்பா ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கம் போகும் போது காண்பிப்பார். 130 X 100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவு சட்டம் 43 அடியில் ஒரே கல்லினானது. மேல் கூறையில் இருக்கும் குறுக்கு சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். சின்ன வயசில் இதற்கு மேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தை தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன்.
இந்த மொட்டை கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாக கட்ட ஆரம்பித்து பின்பு பிரஞ்சு, பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலால் கட்டுமான பணி பாதியில் 1736-1759 ஆண்டுகளில் நின்று இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.
தேவதைகள் ஒரு நாள் ராத்திரியில் ஸ்ரீரங்கத்தை கட்ட ஆரம்பித்து கடைசியாக ராயகோபுரம் கட்டும் போது விடிந்துவிட்டதால் அவர்கள் சென்று விட்டார்கள் என்று சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். இன்றும் அந்த கதையை நம்பவே எனக்கு ஆசையாக இருக்கிறது.
தெற்கு ராயகோபுரம் 1979 வரையில் மொட்டையாக இருந்தது. பிறகு 1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் அதை ராஜகோபுரமாக்கினார். இன்றும் பலர் அதை கட்டியிருக்க கூடாது என்று சொல்லுவதை பார்க்கலாம். பதின்மூன்று நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் கட்டியபின் ஸ்ரீரங்கத்துக்கு கூட்டம் வர தொடங்கியது. வானத்தை தொடும் என்று என் கற்பனை முடிவுக்கு வந்தது. 85 வயதில் கோபுரத்தை கட்ட தொடங்கி, தன் 92 வது வயதில் இதை கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது. இன்றும் ஸ்ரீரங்கம் செல்லும் போது அந்த அடி பாகம் தான் தான் என்னை பரவசப்படுத்தும். அதன் கீழே நடக்கும் போது இந்த 'ஐபோன்' காலத்திலும் வியக்க வைக்கிறது. இப்போது எழுப்பட்ட ராஜகோபுரம் முந்தைய மொட்டை கோபுரத்தை சிறியதாக்கி ஸ்ரீரங்கத்துக்கு வரும் கூட்டத்தை பெரியதாக்கியுள்ளது.
இந்த நாலு மூலையிலும் Pilaster என்னும் ஒரு பக்க தூண்களின் மேல் கும்பம் மாதிரி அழகிய வேலைப்பாடுகளை பார்க்கலாம். இதை கும்பபஞ்சரம் என்று சொல்லுவார்கள்.
பழைய படத்தில் இந்த கோபுரத்துக்கு முன்பு நாயக்கர்கள் கட்டிய சின்ன மண்டபம் மாதிரி ஒன்று இருக்கும், இன்று இந்த மண்டபம் பெட்டிக்கடையாக மாற்றபட்டு தினத்தந்தியும் மாலைமுரசும், வாழைப்பழ கொத்தும், பெப்ஸியும், கோக்கும்
தொங்கவிடப்படுள்ளது. கோயிலுக்கு முன்பு காந்தி சிலை என்று எல்லாம் இந்த நூற்றாண்டின் சாதனைகள்.
எட்டாம் பிரகாரத்தில் இன்னும் மூன்று மொட்டை கோபுரங்கள் இருக்கிறது. இதன் வடிவமைப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் தூண்கள் ஒருவிதமான சுருள் வடிவமாக செதுக்கியிருப்பதைக் காணலாம். நான் இந்த வடிவத்தை மேல்கோட்டை, மாமல்லபுரத்தில் பார்த்திருக்கிறேன்.
இந்த விதமான கோபுரம் எழுப்பட்டதா அல்லது அரசர்கள் தங்கள் வெற்றியை பறைசாற்றுவதற்காக எழுப்பபட்ட நினைவு சின்னங்களா என்று தெரியவில்லை. தற்போது இவை சாணித்தட்டுவதற்கும், “இங்கே கம்ப்யூட்டர் முறையில் நியூமராலஜி பார்க்கப்படும்’ என்று விளம்பரப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. சிலர் சிமிண்டை கொண்டு தங்கள் வீட்டுக்கு ஒரு பக்க தூண்களாகவும் சுவர்களாகவும், சிலர் அதை உபயோகப்படுத்தியுள்ளார்கள். நம் நாட்டு heritage !
பழசு, புதுசு, ஓவியம் என்ற வரிசையில் இருக்கிறது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதற்கு உதாரணம் ஸ்ரீரங்கத்து கொட்டாரம் தான். 2015ல் ஸ்ரீரங்கத்தில் மறைந்து கிடந்த கொட்டாரம் பூசப்பட்டு அட உள்ளே போய் கூட பார்த்துவிட்டு வந்தேன்! கொத்தனார் கட்டிய புதிய கிராமத்து வீடு மாதிரி செய்யாமல், பழைய செங்கல் மாதிரியே பினிஷ் செய்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
கோயிலில் இருப்பதிலேயே பழையதான பராந்தக சோழனுடைய கல்வெட்டு ஒன்று கொட்டாரம் பக்கம் இருக்கிறது என்று தெரியும். அதைத் தேடிக்கொண்டுபோய் அங்கிப்பவரிடம் கேட்க அவர் அங்கிருக்கும் ஒரு கல்வெட்டைக் காண்பித்தார். கிரானைட் கல்லில் அந்தக் கோயிலைப் புதுப்பித்த புதிய கல்வெட்டு. அதே மாதிரி தாயார் சந்நிதியில் தற்காலக் கல்வெட்டுகள் நிறைய முளைத்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் ஆராய்ச்சி நடந்தாலும் நடக்கலாம்.
ஜெர்மனி சென்ற போது எல்லாத் தெருக்களும் ஒரு வித டிசைன் மாதிரி இருப்பதைப் பார்த்தேன் பிறகு மற்ற ஐயோப்பா தேசங்களுக்குச் சென்ற போதும் அந்த அழகான டிசைன் தொடர்ந்தது.
நந்தகிராமம் (விருந்தாவனம்) தெருக்களில் நடந்த போது எனக்கு ஐரோப்பாவில் பார்த்த தெருக்கள் தான் நினைவுக்கு வந்தது. அங்கேயும் கிராம தெருக்களில் அதே மாதிரி சுவடு!
வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் ’ரங்கா ரங்கா’ என்று கூப்பிட்டால் எதிரொலிக்கும் இடத்தில் க்யூவில் நின்ற போது அங்கேயும் தரையில் அதே மாதிரி.
இதன் பின்னாடி அறிவியல் இருக்கிறது! தண்ணீர் தேங்காமல் உடனே கீழே போய் நிலத்தடி நீர் அதிகரிக்கும்!.
ஸ்ரீரங்கத்தில் மழை நீர் சேகரிப்பு எல்லாம் எப்போதோ வந்துவிட்டது. ஸ்ரீரங்கத்தில் மொத்த நீரும் இரண்டு புஷ்கரணிக்கு சென்று நிரம்பிவிடும்.
நம்மிடமிருந்து தான் ஐரோப்பா போன்ற தேசங்கள் கற்றுக்கொண்டார்கள் ஆனால் நாம் தான் சிமிண்ட் போட்டு எல்லாவற்றையும் அடித்துவிட்டு, ‘ஆழி மழைக் கண்ணா’ என்று பாடி மழையை வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.
Sin Cos Tan அந்த ஈக்யூவேஷனை எப்படி சால்செய்ய வேண்டும் என்று சொல்லித்தருகிறோம். அத்துடன் இளைய தலைமுறைக்கு இதையும் சொல்லி தர வேண்டும்.
Bird’s eye view என்பார்கள். ஸ்ரீரங்கத்தை அப்படிப் பார்க்க ஆசை. ஆனால் 2003 டிரோன் என்ற வஸ்து எல்லாம் இல்லை. பிபிசி என்று நினைக்கிறேன் ஒரு ஆவணப்படம் ஸ்ரீரங்கத்தைப் பற்றி வெளியிட்டார்கள். அதில் ஒரு சில நொடிகள் ஸ்ரீரங்கத்தைக் கழுகு பார்வையாகக் காண்பித்தார்கள்.
ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்கு அது மாதிரி வரைய வேண்டும் என்று தேடியபோது ஒரு பழைய படம் ஒரு புத்தகத்தில் கிடைத்தது. அதை அப்படியே காப்பி அடித்தேன். இன்று டிரோன் எல்லாம் விளையாட்டுப் பொருட்கள் ஆகி பலர் திருமணத்தில் கூட மந்திரம் சொல்லும் வாத்தியார் தலைக்கு மேலே பறக்க ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் ஒரு ஒரு படத்தைப் பார்த்தபோது 2003ல் அடியேன் வரைந்த படம் மாதிரியே இருந்தது.
வால் பேப்பர் !
1994ல் வரைந்தது ( 25 வருடங்களுக்கு முன்!) ஸ்ரீரங்கத்துக் கதைகள் புத்தகத்தில் இந்த படம் கிடையாது. ஆனால் இந்த படம் சுஜாதாவின் கம்ப்யூட்டரில் கடைசிவரை Wall Paper ஆக இருந்தது. அவருடைய கணினியில் ஏதாவது ரிப்பேர் என்றால் முதலில் அவர் “இந்த வால் பேப்பர் மட்டும் மாத்தாதீங்க. அது அப்படியே இருக்கட்டும்” என்பார்.
கடைசிவரை இந்த வால் பேப்பர் அவர் கம்யூட்டரை அலங்கரித்தது எனக்குக் கிடைத்த பெருமை.
இந்த ஓவியங்களுக்கு என்ன சன்மானம் என்று ஒருவர் கேட்டார். இதனை வரைவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு- ஒன்று சுஜாதா, மற்றொன்று ஸ்ரீரங்கம். இந்த ஒவியங்கள் வரைந்ததற்குச் சன்மானமாக . ஸ்ரீரங்கத்துக் கதைகள் புத்தகம் ஐந்து 50% தள்ளுபடியில் வாங்கிக்கொண்டேன். ஒன்றில் சுஜாதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.
- சுஜாதா தேசிகன்
Comments
Post a Comment