Skip to main content

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்...

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்...


செல்வி ஜெயலலிதா இருந்த வரைக்கும் எப்போதும் அதிமுக கூட்டணிக்குத்  தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். 1996’ல் ரஜினி குரல் கொடுத்த போது ஜெ செய்த செயல்களால் சற்று முகம்சுளித்தாலும் அப்போதும் கூட அம்மாவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். தமிழகத்தில் நாத்திகம், தேச விரோத,  ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம் செய்யும் கட்சிகளுக்கு நான் எப்போதும் நான் ஓட்டுப் போட்டதில்லை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு சங்கி! 


ஜெ என்னை வசீகரித்த தலைவர். ஒரு பெண் என்றும் பாராமல் பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆபாசமாகத் தூற்றி பத்திரிக்கை அட்டைப் படத்தில் கேவலமாகச் சித்தரித்த போது அவர்களை ஒரு பெண் சிங்கமாக எதிர்கொண்டார். தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்று வீரம் பேசுபவர்கள் கூட, தங்களால் ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. பிராமணர்கள் என்றால் அவர்களுடைய பூணூலும் குடுமியையும்,  மற்றவர்கள் என்றால் ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்கிறார்கள் குடும்பப் பெண்கள். இந்த வீரதீரச் செயலுக்கு இன்னொரு பெயர் கையாலாகாத்தனம். 


தமிழக அரசியலில் பல உதாரணங்கள் பார்க்கலாம்.  ஜெயலலிதாவை  ‘பாப்பாத்தி’, என்றார்கள், சட்டசபையில் அசிங்கப்படுத்தினார்கள்.  இப்படிப் பட்ட முரட்டு மீசை வைத்துக்கொண்டு, டாட்டா சுமோவில் எக்ஸ்ட்ரா பம்பர் வைத்துக்கொண்டு சுற்றிய ஓர் ஆண் பட்டாளத்தையே தான் இருக்கும் வரை கூன் போட வைத்தார். ஜெ மறைவிற்குப் பிறகு எல்லோரும் physiotherapy செய்துகொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.  ‘அம்மாவிற்குத் தெரிந்தால் தொலைந்தோம்’ என்ற பயம் எல்லோரிடமும் இருந்தது. இதைத் தவிர ஜெ ஆட்சியில் இருந்தால் ரவுடிகளின் அட்டகாசம், தண்ணீர் பிரச்சனை வராது போன்ற நம்பிக்கைகள் வேறு உலாவந்தது. . 


திமுகவிற்கு அடுத்த கட்ட தலைவர் என்ற பிரச்சனை இல்லை ஆனால் ஜெ மறைவிற்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு மாதிரி இல்லை என்றாலும் இரட்டை இலையை நோக்கி மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது. எடப்பாடியார் மிகச் சாதுர்யமாகத் தன் காய்களை நகர்த்தினார். ஒரு தேர்ந்த அரசியல் தலைவர் எப்படித் தன் நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இவரிடம் பாடமாகப் படிக்கலாம். இரட்டை இலை கிடைத்தாலும், ஜெ இருந்த போது இருந்த அதிமுக, திமுக என்ற பகைமை தளர்ந்தது. ஒன்றாகத் தேநீர் அருந்தினார்கள் , உபய குசலோபரியை  பரிமாறிக் கொண்டார்கள்… ஜெ இருந்த காலத்தில் திமுக பக்கம் திரும்பினாலும் அவர்களைக் கட்சியை விட்டு நீக்கிவிடுவார் என்ற பயம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் ஜெ மறைந்த பின் காணாமல் போனது. தீய சக்தி, பங்காளியானார்கள். 


இந்த கால கட்டத்தில் சிஸ்டம் சரியில்லை என்று அண்ணாத்தே ரஜினி ’ஆன்மீக அரசியல்’ என்று எண்டரி கொடுத்தார். யானை வெடி போல இருக்கும் என்று நம்பிய தமிழக மக்கள் அது வெறும் ஊசி(ப் போன) பட்டாசு என்று தெரிந்துகொள்ள அதிக நேரம் ஆகவில்லை.உலக நாயகன்  பிக் பாஸ் புஸ் வானமானார். இந்த இடத்தில் ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்ததற்குத் தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டும்! நமக்கு அண்ணாமலை கிடைத்திருக்க மாட்டார். 


பிஜேபி என்றால் ஹிந்தி பேசும் ஏதோ வடக்கு தேசத்து அரசியல் கட்சி. அதில் இருப்பவர்கள் தேச நலன், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அரசியல் செய்யும் வயசானவர்கள் என்ற பிம்பத்தை, பொறியாளர், எம்பிஏ, ஐபிஸ் என்று நன்கு படித்த ஓர் அக்மார்க் கிராமத்து இளைஞரைக் களத்தில் இறக்கி அண்ணாமலை மூலம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து திமுக vs அதிமுக என்று இருந்ததை இன்று திமுக vs தமிழக பிஜேபி என்று மாற்றியுள்ளார். 


பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் முன்பு சொன்ன அதே கையாலாகததனத்தை செய்ய ஆரம்பித்தார்கள். ‘ஆடு’ என்று உருவக்கேலி செய்து கேப்டன் விஜயகாந்துக்கு கொடுத்த அதே ட்ரீட்மெண்டை கொடுக்க ஆட்டின் ஆட்டம் ஆரம்பமானது.  பத்திரிக்கைகளை ‘கோபால புரம் கோஷ்டி’ என்று அந்தக் கால ஸ்ரீகாந்த் போல முதல் பந்திலேயே அடித்து தும்சம் செய்தார்.  ஜெ போல ஊடகத்தை இடது கையால் ஒதுக்காமல் வலது கையால் திருப்பி செவிட்டிலேயே அடிக்க, இவருக்கு எப்படிப் பந்து போட்டு அவுட் ஆக்குவது  என்று குழம்பினார்கள். அடி வாங்கியவர்கள் விளக்கு முன் வந்து மடியும் விட்டில் பூச்சிகள் போல வந்து அடி வாங்கிக்கொண்டே அண்ணாமலையின் டி.ஆர்பியை ஏற்றினார்கள். அண்ணாமலை இல்லாமல் செய்தி இல்லை என்ற நிலை போய் அண்ணாமலையே செய்தியானார். 


அதிமுக பிஜேபி கூட்டணி நிச்சயம் 2024 தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுப்பார்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டு இருந்த போது அதிமுக கூட்டணியில் மெதுவாகப் பிளவு ஏற்படுத்தப்பட்டது. அண்ணாமலையின் சில பேச்சுக்கள்  ’இவர் ஏன் இப்படிப் பேசுகிறார்?’  என்ற விமர்சனம் எழுந்து, அதிமுகவில் ஜெயகுமார் போன்றவர்கள் வழக்கம் போல மைக் முன் பதிலடி கொடுக்க ஒழுகிய பானை உடைந்தது. இன்று திரும்பிப் பார்க்கும் போது அண்ணாமலை இதை நன்கு வடிவமைத்து நிகழ்த்தியுள்ளார் என்றே தோன்றுகிறது. பிஜேபி சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளாமல், சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொண்டார்கள்.  


என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தி அடிமட்டத்துத் தொண்டர்கள் மக்களுடன் நானும் உங்களில் ஒருவன், என்ற மிக வலிமையான அஸ்திவாரத்தைப் போட்டு,  திராவிடப் பங்காளிகளுக்கு தாங்கள் தான் ஒரே மாற்று என்ற நம்பிக்கையைக் கடத்திச் சென்றுள்ளார். டிஎம்கே ஃபைல்ஸ், திருநீறு பூசிய ஆண்டி, அரைவேக்காடு என்று அரசியல் கட்சிகளுடன் மோதி, மோதி புகழைப் பறைசாற்றுகிறார். 

ஐஐடி, ஆங்கில ஊடகங்கள் என்று கலக்குகிறார். அண்ணாமலையால் தமிழகத்துக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இவர் அடுத்த பாரதப் பிரதமர் மெட்டிரீயல் என்று நமக்கு இயற்கையாகவே தோன்றுகிறது. 


இந்த 2024 தேர்தல் பிஜேபி 25% வாங்கும் என்று அண்ணாமலையே சொல்லுகிறார். இரண்டு இலக்கு என்று சங்கிகள் சொல்லுகிறார்கள். எவ்வளவு வாங்கினாலும் பிஜேபி தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.  இந்த வளர்ச்சி தொடர்ந்தால் வரும் காலத்தில் திமுக, அதிமுக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படக் கூடாது.  அண்ணாமலை தமிழக முதலமைச்சராகும் காலத்தில் தமிழகத்தில் திருவண்ணாமலை தீபம் ஒளி வீச ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டிக்கொள்வோம். 


- சுஜாதா தேசிகன்
16.3.2024
Cartoon: Jegan, with thanks. 

Comments

  1. அருமை... எல்லோருடைய மனத்தில் உள்ளதை அழகாக எடுத்து சொல்லி விட்டீர்கள் ... வாழ்த்துக்கள் 💐💐

    ReplyDelete
  2. தமிழகத்தில் எந்தக் கட்சியும் சார்ந்திராத மக்களின் கருத்தைத் தாங்கள் விவரித்திருக்கிறீர்கள். நல்லோரின் நம்பிக்கையையும், ப்ரார்த்தனையையும் நடத்திவைப்பது பெரிய பெருமாளின் பொறுப்பு!

    ReplyDelete
  3. திமுக சார்பு ஊடகங்கள் அண்ணாமலையிடம் யார்க்கர் போல கேள்விகளை வீசினாலும்
    புல்டாஸ் ஆக மாற்றி சிக்ஸர் பதில்களை கொடுத்து அவர்களை வாயடைக்க வைத்த
    விதம் , தாய் மொழி தமிழையே துண்டு சீட்டில் எழுதி தப்பும் தவறுமாய் படித்த
    அரசியல்வாதிகள் நடுவே எந்தவித ஆயத்தமும் இல்லாமல் வெகு சரளமாக தமிழிலும்
    ஆங்கிலத்திலும் உரையாடுவது போன்றவை இவர் முதல்வர் மட்டுமல்ல பிரதமர் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
    குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறந்த இளம் வயதினர் இவரால் கவரப்பட்டு உள்ளனர்.
    எல்லார் மனதிலும் உதித்த எண்ணங்களே இவை . இதை பதிவு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையான பதிவு, வாழ்த்துகள்

    ReplyDelete
  5. Excellent portrayal of Today's politics. superb article

    ReplyDelete

Post a Comment