Skip to main content

வந்தே குரு பரம்பராம்

வந்தே குரு பரம்பராம்
எங்கள் வீட்டு பால்கனியில் பூக்கும் கொடி ஒன்று புதுசாக வளந்து வருகிறது. அதற்கு அருகில் சின்ன சுள்ளியை வைத்து மேலே எழுப்பிவிட்டேன். தினமும் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது எனக்கும் என் பையனுக்கும் பொழுதுபோக்கு.

இன்று அவன் ”கொடியை சைடில் படரவிட்டால் இன்னும் வேகமாக வளரும்” என்றான். ”அப்படியா ? எப்படி ?”

அதன் விடை கடைசியில் தருகிறேன்.

கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது.

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்


இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும்.

திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணங்குகிறேன்

கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கணினி கோட் போன்று மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது.

பல நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம்.

சங்கீதத்தில் எப்படி ஆரோகண, அவரோகண இருக்கிறதோ அதுபோலத் தனியனிலும் இருக்கிறது. கூரத்தாழ்வானின் தனியன் ஆரோகண க்ரமம் என்றால் இன்னொரு தனியன் அவரோகண க்ரமத்தில் இருக்கிறது. ( இது மேல் கோட்டையில் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஸ்ரீராம பாரதியின் பிரபந்த புத்தகத்தில் இதை பார்த்திருக்கிறேன்).

அஸ்மத் குரு சமாரம்பாம்
யதி சேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்


இதில் தற்போது உள்ள குரு பரம்பரை ஆசாரியர்களை வணங்கி ஸ்ரீ ராமானுஜரை நடுநாயகமாகக் கொண்டு திருமகள், திருமால் என்று முடிவடைகிறது.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரியனை முன்னிட்டு தான் பெருமாளை அணுகுவார்கள். அது தான் முறை. ஆசாரியன் என்பவர் நம் குரு, அந்த ஆசாரியனை நமக்குக் காட்டுபவரும் நம் குருவே.

ஒரு சின்ன அவரை விதையை மண்ணில் புதைத்துவிட்டு, அதற்கு மேலே ஒரு பந்தல் கட்டுவார்கள். விதையிலிருந்து சின்ன அவரைக் கொடி வந்தபிறகு அதை அந்தப் பந்தல் மீது செல்வதற்கு ஏதுவாக ஒரு சின்னக் குச்சியை நடுவார்கள். அந்தக் குச்சியைப் பற்றிக்கொண்டு அந்த அவரைக் கொடி அந்தப் பந்தல் மீது படரும்.

பந்தல் வைகுண்டம் என்றால் அதன் மீது ஏற்றிவிடும் அந்தச் சின்னக் குச்சி நம் ஆசாரியன், அந்த ஆசாரியனை குரு என்று சொல்லலாம்.

என் அப்பாவிற்குப் பிறகு ஸ்ரீ வைஷ்ணவத்தில் அடியேனை மேலே ஏற்றிவிட்டவர் ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் என்றால் அது மிகை ஆகாது.

சிலர் அருமையாகப் பேசுவார்கள். சிலர் தெளிவாகப் பேசுவார்கள். நம் வேளுக்குடி ஸ்வாமி இரண்டையும் சேர்த்துச் செய்வார். தன் நலம் கருதாது தினமும் ’என் பணி’, மற்றும் பல ஊர்களுக்குச் சென்று உபன்யாசம் என்று என்னைப் போலப் பலருக்கு வழிகாட்டியாக, ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொண்டு இருக்கிறார்.

’Attention to details’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அதற்கு எடுத்துக்காட்டு அவர். அவருடன் பல யாத்திரைகள் அடியேன் சென்றபோது எந்த அறையின் குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதில் ஆரம்பித்து, 60 கரண்டி, 32 பாத்திரம் தொலைந்து போனது, 22 பேர் திரும்பப் போவதற்கு இன்னும் விவரம் தரவில்லை, நள்ளிரவு 1 மணிக்குப் போக வேண்டிய ரயிலில் முன் தினம் தேதியில் தப்பாக முன்பதிவு செய்தவர்களைப் பதட்டப் பட வைக்காமல், கவலைப் படாதீர்கள் என்று ஆறுதல் கூறி, பேருந்து நம்பர் சொன்னால் அதன் தன்னார்வலர் யார் என்று உடனே கூப்பிட்டது கூடவே திருமந்திரம் காலட்சேபம் என்று வியக்காமல் இருக்க முடியாது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் அவர் தூங்கியிருப்பார், ஆனால் கண்ணில் எந்தக் களைப்பும் தெரியாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருப்பார்.

ஒரு சமயத்தில் அடியேன் எங்குச் சென்றாலும் அங்கு அவர் இருந்தார். திரைப்படத்தில் வரும் இரட்டை வேடம் மாதிரியோ என்ற பிரமை கூட எனக்கு ஏற்பட்டது.

ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் அதை எதிர்கொள்ளும் விதம் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆழ்ந்து படித்ததால் வந்த பக்குவம் என்று சொல்லிவிடலாம்.

உபன்யாசத்தில் தேவை இல்லாத அசட்டு உதாரணம் எதுவும் இல்லாமல் ஸ்ரீ வைஷ்ணவம் என்ற ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து, அதே சமயம் நம்மை உள்ளே இழுத்து ஆழ்வார்களையும் திவ்ய தேச பெருமைகளையும் செவி வழியாக ஊட்டி விட்டார்.

பத்ரி விஷால் பெருமாளைத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் கொண்டு அனுபவித்தது திருமந்திரம் விவரணத்தை ஆழ்வார்கள் பாசுரங்களுடன் கேட்டபோது பல இடங்களில் கண் கலங்கியது. கயாவில் மைக் இல்லாமல் இருபது நிமிடம் கண்கலங்கி ஏன் அம்மாவிற்கு 16 பிண்டம் வைக்கிறோம் என்று சொன்னது என்றும் அடியேனின் மனதைவிட்டு அகலாது. இவர் காலத்தின் அடியேனும் இருக்கிறேன் என்பதே பெரிய பேறு.

ஸ்ரீ வேதாந்த தேசிகன், அஞ்சலி வைபவம் என்று தனியாக எழுதியுள்ளார். அதில் கையைக் கூப்பிக்கொண்டு அஞ்சலி செய்வது தான் சிறந்தது என்று கூறியுள்ளார். ஒரு அவரைக் கொடிபோல அவரைச் சுற்றிக்கொண்டு வணங்குகிறேன்.

- சுஜாதா தேசிகன்
31.07.2022
இன்று ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் திருநட்சத்திரம்.

பிகு: கொடி மேலே சென்றால் புவியீர்ப்புக்கு எதிராக வளர வேண்டும் அது கஷ்டம் 

Comments

  1. வேளுக்குடி சுவாமியால் பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது.
    அடியேன் தாசன் 🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment