ஊர் எனப்படுவது உறையூர் !
கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு.
உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். வேறு என்ன பெருமை என்று தெரியாது ஆனால் இந்த ஊருக்கு ஒரு மகிமை உண்டு. இங்கே அவதரித்தவர்கள் எல்லாம் நம்பெருமாளிடம் மோகித்துள்ளார்கள்.
இங்கே அவதரித்த நம் திருப்பாணாழ்வார் ’அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார்.
பிள்ளை உறங்காவில்லி தாஸர் அவர்களை உடையவர் அரங்கன் முன் நிறுத்த அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும். இவருக்கும் உறையூர் தான் பூர்வீகம்.
உறையூர் நாச்சியாரும் நம்பெருமாளிடம் மோகித்தவர் தான் (நம்பெருமாள் மோகித்தார் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்!)
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் ஆண்டாள் என்பது போல உறையூர் என்றால் அது நாச்சியார் கோயில். இந்த இரண்டு ஊரையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார்
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ! இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
அச்சோ, ஒருவர் அழகியவா!
மாடு மெய்க்கும் கண்ணன் தான் உறையூரிலும், மதுரையிலும் இருக்கிறானா ? குன்றம் போன்ற வலிமை உடைய நான்கு தோள்களும் உடைய அழகனை இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை. வாழ்க பல்லாண்டு! இவர் வடிவத்தின் பெருமை கடல் போன்று பரந்தது. ஒரு கையில் சக்கரமும், மறு கையில் சங்கமும் ஏந்திய இவர் அழகு அடடா என்ன அழகு !
என்று திருமங்கை ஆழ்வார் மோகித்து பாடியுள்ளார்.
இந்தக் கோயில் அடியேனுக்கு மிகுந்த அபிமான ஸ்தலம். ஸ்ரீரங்கம் பெருமாளைச் சேவிக்கும் முன் முதலில் கமலவல்லி நாச்சியாரை சேவித்திவிட்டு தான் ஸ்ரீரங்கம் செல்வேன். ஸ்ரீவைஷ்ணவர்கள் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்றாலும், கமலவல்லி தாயாரிடம் ஒன்றை மட்டும் எப்போதும் வேண்டிக்கொள்வேன் அது “நம்பெருமாள் சேவை நன்றாக கிடைக்க வேண்டும்!”
ஒவ்வொரு முறையும் உறையூர் நாச்சியார் சிபாரிசில் நம்பெருமாள் ‘நம்ம பையன்’ என்று நன்றாகச் சேவை சாதிப்பார்.
உறையூர் ஸ்தல வரலாறுபற்றி விரிவாக எதிலும் இல்லை. அதை விரிவாக இன்னொரு முறை எழுத முயற்சிக்கிறேன்.
உறையூர் நாச்சியார் பங்குனி ஆயில்யம். இந்நாளில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு உறையூருக்கு எழுந்தருளி அழகிய மணவாளனாக கமலவல்லி தாயாருடன் சேர்த்தி கண்டருள்வார்.
இன்றைய நன்னாளில் உறையூர் கமலவல்லி தாயார் வைபவம் இங்கே சுருக்கமாக :
நிசுளாபுரியில் தர்ம வர்மாவின் வம்சத்தில் நந்த சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்குக் குழந்தை இல்லை. ஸ்ரீரங்க நாயகி தாயாரிடம் பிராத்தித்தான். ஒருநாள் தாமரை ஓடையில் தாமரைப்பூவில் ஒரு சிசுவாக ஒரு பெண் குழந்தை இருக்க அந்த அரசன் அந்தக் குழந்தையை தன் இல்லத்துக்குக் கொண்டு வந்து கமலவல்லி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். கமலவல்லி வளர்ந்து பெரியவளாய் தன் தோழிகளுடன் விளையாடும்போது ஒருநாள் அங்கே நம்பெருமாள் குதிரையின் மீது ஜீயபுத்த்துக்கு வேட்டைக்கு எழுந்தருளினார். அப்போது கமலவல்லிக்கு அதிசுந்திரராய் திருவரங்க நாதர் எல்லா அழகையும் காட்டி சேவை சாதிக்கக் கமலவல்லி அவரிடம் மோகித்து மனதைப் பறிகொடுக்கிறாள்.
அரசனும் கமலவல்லி பித்துப் பிடித்தது போல இருக்கும் நிலை கண்டு விசாரிக்க, கமலவல்லி தன்னை அழகியமணவாளனுக்கு விவாகம் செய்துகொடுக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைக் கூறுகிறாள். அரசனும் மந்திரிகளுடன் ஆலோசித்து விவாகத்துக்கு வேண்டியவற்றைத் தங்கத்தாலான அண்டாக்களில் பொருட்களை நிரப்பிக் கமலவல்லியுடன் கோயிலுக்கு வந்து போது கமலவல்லி திருமணத்தூணுக்குள்ளே புகுந்து பெருமாளுடன் சேர்ந்துவிடுகிறாள்.
இதைக் கண்ட அரசன் அதிசயத்து, தம்முடைய பட்டணமான உறையூரிலும் தம்முடைய குமாரத்தியையும் அழாகியமணவாளப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்து கோபுரம், மண்டபங்களைக் கட்டி வைத்து ஆனந்தப்பட்டான். ( இந்தச் சரித்திரம் உத்தம நம்பி திருமலாசாரியரால் எழுதப்பட்டது)
எங்கள் அகத்தில் இன்று அழகிய மணவாளன் ஆழ்வார் கூறுயது போல ‘கோவலரே ஒப்பர்’ என்று உறையூர் நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளினார் ( பார்க்கப் படம் )
- சுஜாதா தேசிகன்
25-03-2021
பங்குனி ஆயில்யம் உறையூர் நாச்சியார் திருநட்சத்திரம்
உறையூர் சேர்த்தி உற்சவம்.
மிக அருமை
ReplyDelete