ஊர் எனப்படுவது உறையூர் ! கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு. உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். வேறு என்ன பெருமை என்று தெரியாது ஆனால் இந்த ஊருக்கு ஒரு மகிமை உண்டு. இங்கே அவதரித்தவர்கள் எல்லாம் நம்பெருமாளிடம் மோகித்துள்ளார்கள். இங்கே அவதரித்த நம் திருப்பாணாழ்வார் ’அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார். பிள்ளை உறங்காவில்லி தாஸர் அவர்களை உடையவர் அரங்கன் முன் நிறுத்த அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும். இவருக்கும் உறையூர் தான் பூர்வீகம். உறையூர் நாச்சியாரும் நம்பெருமாளிடம் மோகித்தவர் தான் (நம்பெருமாள் மோகித்தார் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்!) ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் ஆண்டாள் என்பது போல உறையூர் என்றால் அது நாச்சியார் கோயில். இந்த இரண்டு ஊரையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார் கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் ...