Skip to main content

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ?

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ?தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் திரு உ.வே.சாமிநாதையர் பற்றி பள்ளியில் எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அவரைப் பற்றி விரிவாகத் தமிழ் பாட நூல்களில் எங்கும் கிடையாது. ( இப்போது இருக்கிறதா என்று தெரியாது). 

சங்க நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி தன் வாழ்கையைக் கழித்தார் என்று மட்டும் நம் எல்லோருக்கும் தெரியும். உ.வே.சா பற்றிப் பத்து வரிகள் எழுதுங்கள் என்றால் நிச்சயம் பலருக்கு அது ஒரு சவாலகவே இருக்கும்.

சில மாதங்கள் முன் எங்கோ ஒர் ஓலை சுவடியை அவர் தேடிய அனுபவம் பற்றி யாரோ சொல்ல, அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். தேடும் போது உலகத் தமிழ் மாநாடு புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்த் தலைவன், தமிழரைத் தலை நிமித்திய தலைவன் என்று வரிசையாகத் திராவிடத் தலைவர்களின் பெயர்களும் படங்களும் முகப்பில் இருந்தது ஆனால் உ.வே.சா படமோ அல்லது அவரைப் பற்றி ஸ்டாம்ப் சைசுக்கு கட்டுரையோ சாஸ்திரத்துக்குக் கூட அதில் இல்லை. காரணம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. 

தேடுவதை தொடர்ந்த போது இணையத்தில் அவர் எழுத்துகள் பல கிடைத்தது. ஒரு விஷயம் பலரிடம் போகும் போது முதலில் சொன்ன விஷயம் மாறிவிடும். அது போலத் தான் இணையத்தில் கிடைக்கும் உ.வே.சா கட்டுரைகளும். காலச்சுவடு உ.வே.சா எழுதிய நூல்களையும் பதிப்பித்துள்ளார்கள், இது சிறந்த பதிப்பாக இருக்கிறது.

உ.வே.சா எழுத்தை படிக்கும் போது நூறு வருடம் முன் எழுதிய எழுத்து போல அல்லாமல், இன்று நாம் படிக்கும் எளிமையான உரைநடையில் அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் சிக்கரி கலக்காத காபி போலச் சுவையாக இருக்கிறது.

உ.வே.சாமிநாதையரின் ஆசான் மீனாட்சிசுந்திரம் பிள்ளை. அவரது குருபக்தி விசேஷமானது. சாமிநாதையர் பிள்ளையவர்களின் முடிவு வரை அவர் பக்கத்திலேயே இருந்திருக்கிறார். அவரது குரு மரணப்படுக்கையில் இருக்கும் போது நள்ளிரவுக்கு மேல் நினைவிழுந்த பிள்ளையவர்களின் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதையர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். பிள்ளையைத் தமது மார்பில் தாங்கிக் கொண்டார் அவர் நெற்றியில் விபுதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.

இதைப் படித்த போது ஆனந்த விகடனில் சுஜாதா பற்றி நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது

“அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.”

நான் தேடி சென்ற கட்டுரை கிடைத்து, அதைப் படித்த போது இன்னொரு ஆச்சரியம் காத்துக்கொண்டு இருந்தது. அதை ஒரு கட்டுரையாக  வலம் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறேன். ( மேலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் ) 

பிகு: குமுதம் இதழில் சுஜாதா எழுதிய தொடரில் அடியேனுடைய பெயரை இப்படி குறிப்பிட்டுள்ளார். 

”கணையாழியின் கடைசி பக்கம் அத்தனையையும் உ.வே.சா ஓலைச் சுவடிகளத் தேடி அலைந்தது போல என் நண்பர் தேசிகன் ஓடி ஒடிச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்”

- சுஜாதா தேசிகன்
19.2.2019
டெய்லி காலண்டர் கிழிக்கும் போது 
உ.வே.சா பிறந்த தினம் என்று தெரிந்து கொண்ட நாள்.

Comments

 1. ஹரியண்ணா குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள்:

  https://www.evernote.com/shard/s498/u/0/sh/e6d9bfdd-4c12-43bd-938e-e61b4c4c86ea/79b65ed8dd006c59c69d2bfa6277465f
  https://vikatakavi.in/articles.php?mId=43&aId=38&t=1550577981705

  விஷயம் ஒன்றுமில்லை. முதலில் பயஹர மாலை என்று எழுதியிருக்கிறார்கள். பின்னால் பிரதியெடுத்தவர் யாருக்கோ கிரந்த எழுத்தில் ஒவ்வாமை இருந்திருக்கிறது. கெலிகாப்டர் என்றும் கமலகாசன் என்றும் இப்போதெல்லாம் எழுதுவதைப்போல ‘பயஹர’ என்பதை ‘பயகர’ என்று பிரதியெடுத்திருக்கிறார்கள். அதற்குஅடுத்ததாகப் பிரதியெடுத்தவருக்கு, ‘பயகர’ என்ற சொல் ‘பயஹர’ என்பதைத்தான் குறிக்கிறது என்று ஊகிக்கமுடியவில்லை. அவருக்குத் தோன்றிய சௌகரியப்படி ஒரு ‘ங்’ சேர்த்து அதை ‘பயங்கர மாலை’யாக்கிவிட்டார். இப்படித்தான் பயத்தைக் கெடுக்கும் மாலை, பயத்தைக் கொடுக்கும் மாலையானது!
  ...
  அப்படி இன்னொரு பிரதியைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘இந்தச் சுவடி எங்கிருந்து கிடைத்தது’ என்று ஆறுமுக தேசிகரைக் கேட்டார். ‘பக்கத்தில்தான். முதலைப்பட்டியில்’ என்று பதில் வந்தது. என்னது! முதலைப்பட்டியா! அப்படியொரு ஊரின் பெயரா என்று திகைத்தபோது ‘அது ஒன்றுமில்லை. மிதிலைப்பட்டிஎன்ற ஊரின் பெயர்தான் திரிந்துபோய் இப்போது முதலைப்பட்டி என்று வழங்கிவருகிறது’ என்று பதில்கிடைத்தது! நாம் முதலில் சொன்ன பழமொழியில் இருக்கும் ‘படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்’ என்பதற்குஇந்த மிதிலைப்பட்டி—முதலைப்பட்டியும் ஒரு உதாரணமாகலாம்.
  ...
  இத்தனைப் பாடுகளைப் பட்டு உவேசாவும் அவரைப் போன்ற பிறரும் பல இடங்களில் சுற்றியலைந்து ஓலைச்சுவடிகளைத் தேடியெடுத்து, கூடுமானவரை பிழை நீக்கி, பாடபேதங்களைக் குறித்து, தானாக எதையும் திருத்தாமல் ‘கறந்தபால் கறந்தபடி’ கொடுத்ததால்தான் இன்றைய யுனிகோடு உலகில் நம்மால் ஒரு கூகிள் ஸர்ச்செய்து பழைய இலக்கியங்களின் வரிகளைத் தேடிப்பிடிக்க முடிகிறது. இதுவும் அவ்வளவு சுலபத்தில் நடந்து விடவில்லை. சுமார் முப்பது வருடங்களாக முதலில் மயிலை, திஸ்கி ஃபான்ட்டுகளில் தொடங்கிய முயற்சி, படிப்படியாக வளர்ச்சியடைந்து யுனிகோடை எட்டியது. மதுரைத் திட்டம் போன்ற அபாரமான தனியார் முயற்சிகள் திஸ்கி காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு தமிழ் இணையக் கல்விக் கழகம் தோன்றியது. சங்கத் தமிழ் கணினிக்குள் புகுந்தது ஒரு தனிக்கதை.

  -------
  https://vikatakavi.in/articles.php?mId=44&aId=33&t=1550578289652
  https://www.evernote.com/shard/s498/u/0/sh/5b48c949-be09-4dee-a4b0-7decf6ac6b94/369bcf90f567549b90e0437560cc0404

  இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. மறுநாள் ரயிலேறி மாயூரம் சென்று கும்பகோணம் கல்லூரிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதனால் தேசிகரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, அந்தச் சுவடிகளை ஒரு கட்டாகக் கட்டியெடுத்துக்கொண்டு வீடு திரும்பினார் உவேசா. வீட்டுக்கு வந்ததும் பதற்றம் தாங்காமல் தான் கொண்டுவந்திருந்த சுவடிகளைப் புரட்டத் தொடங்கினார். அதை அவருடைய சொற்களிலேயே கேட்போம்:

  “மறுநாட்காலை ரெயில் வண்டியிலேறிக் கும்பகோணம் வந்தேன். கொண்டுவந்த ஒற்றையேடுகளைப் பிரித்துப் பார்த்தேன். சில பத்துப்பாட்டு உரை ஏடுகள் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமல் கலந்திருந்தன. ஆத்திரத்தோடு ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எந்தப் பாகம் காணாமல் தவித்தேனோ அதை ஓர் ஏட்டிலே பார்த்தேன். என் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரே மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. என் கண்களைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தேன்; ஏட்டையும் துடைத்துப் பார்த்தேன்.குறிஞ்சிப்பாட்டுத்தான் என்பதில் சந்தேகம் இல்ல; விடுபட்ட மலர்களையே நான் அதில் கண்டேன்”

  “தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ்” என்று மூன்றே மூன்று பூக்களின் பெயர்கள்தாம் விடுபட்டிருந்தன. திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பவும் கண்டெடுத்த தாயின் ஆனந்தத்தை அடைந்தேன் என்கிறார் உவேசா.

  சூரியா சொல்லும் வரிசையில் இவை 64-65ம் அடிகளில் வரும் பூக்கள். உவேசா இத்தனைப் பாடு பட்டிராவிட்டால் 99 பூக்களை நூறு பூக்களாகக் கணக்குக் காட்டியவர், 96 பூக்களைத்தான் நூறாகக் கணக்குக் காட்டியிருக்க வேண்டியிருந்திருக்கும்! இந்தப் பூக்களையெல்லாம் படத்துடன் பிடிஎஃப் வடிவில் https://karkanirka.org/2010/03/15/99tamilflowers_slideshow/ தளத்தில் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றியோடு தரவிரறக்கிக்கொள்ளலாம்
  ---

  ReplyDelete
 2. சிக்கரி கலக்காத காப்பி....நல்ல உவமை
  அருமையான தகவல் உ வே சா கு றி த் து நி னை வு கொ ள் ள ..
  நன்றி

  ReplyDelete

Post a Comment