முந்தாநாள் காலை தூறலும் ரயிலும் ஒன்றாக நின்ற சமயம் சென்னை வந்தடைந்தேன். சரஸ்வதி பூஜை அன்று பார்த்தசாரதி கூட்டமே இல்லாமல் சேவை சாதித்தார். கொஞ்சம் நேரம் சன்னதியில் நின்று மீசை, நெஞ்சில் இருக்கும் தாயார் எல்லாம் அமுதனுக்குக் காண்பித்துக்கொண்டு இருந்தேன். நிஜமாகவே அன்று தான் ‘பார்த்த’ சாரதியாக இருந்தார். தாயார் சன்னதி குங்கும பாக்கெட் மாதிரி புளியோதரையை மஞ்சள் பேப்பரில் மடித்துத் தருகிறார்கள். புளியோதரையும் மஞ்சள் பொடி வாசனையுடன் முன்பு மாதிரி இல்லையே என்று நியூரான்கள் சொல்லியது.
ஆதிகேசவ பெருமாள் கோயில் பேயாழ்வார் உற்சவத்தை நிதானமாகச் சேவிக்க முடிந்தது. பேயாழ்வார் பிறந்த கிணறு எங்கே என்று அமுதன் கேட்க அங்கே சென்று சேவித்துவிட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் ராயர் மெஸை எட்டிப் பார்த்த போது அங்கேயும் கூட்டம் இல்லை !
மறுநாள் கலைத்துவிட்ட கரையான் புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகள் போல தி.நகர் முழுக்க கூட்டம். ‘நகையைக் தெரியும் படி அணிந்துக்கொண்டு செல்லாதீர்கள்’, ‘மொபைலில் பேசிக்கொண்டு கட்டைப் பையை பறிகொடுக்காதீர்கள் ஜாக்கிரதை’ என்று ’வணக்க்க்க்ம்’ புகழ் நிர்மலா பெரியசாமி குரலில் மைக்கில் சதா ஒலித்துக்கொண்டு இருக்க நடுநடுவே ‘ஏய் ஆட்டோ நீக்காதே’ என்று காவல்துறை கூட்டத்தை மைக் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள். தூரத்தில் சிகப்பு, நீலம் பளிச்சிட காவல் துறை வண்டி வருவதைப் பார்த்தவுடன் நடைமேடையில் கடை வைத்திருப்பவர்கள் கூடையுடன் மறைந்து வண்டி சென்ற பின் மீண்டும் வருகிறார்கள்.
சந்து பொந்துகளில் A4 சைஸ் லாமிநேட் செய்யப்பட்ட ஆல்பம் பார்த்து ’மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்பது உள்ளங்கை முதல் முழங்கை வரை மருதாணி வைத்துக்கொள்கிறார்கள். டிசைன் போடுபவர்கள் எல்லோரும் ஆண்களே. எல்லாக் கடைகளின் இடுக்கிலும் ஏஸி வெளியேயும் கூட்டம் உள்ளேயும் செல்கிறது.
ஊபர், ஓலாவை விடச் சிறப்பாக இருக்கிறது. ஓட்டுநர்கள் பெரும்பாலும், விஜய், அஜித் ரசிகர்கள். ரஜினி, கமல் அரசியல் பற்றி கேட்டால் சிரிப்பில் நமுட்டு தனம் தெரிகிறது. காலா கலரில் லிங்கா காபியுடன், பிரவுன் கலர் லீயோ கலந்து தான் பல பிராமணர்கள் வீட்டில் காபி போடுகிறார்கள். பல கடைகளில் மெட்ராஸ் மிக்சர் பம்பே மிக்சர் கூடவே ‘மோட்டா’ மிக்சர் கிடைக்கிறது. பட்டுப்புடவையுடன் பைக்கில் போகிறவர்கள் கையில் நவராத்திரி ‘ரிடர்ன்’ கிப்ட் இருக்கிறது. ஆயுத பூஜைக்கு வெட்டபட்ட எல்லா வாழை கன்று அடிப்பகுதியிலும் ஒரு இன்ச் தண்டு வெளியே வந்திருக்கிறது.
பாண்டி பஜார் முழுவதும் ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு தோண்டி வைத்துள்ளார்கள். போத்தீஸ் எதிரே பாலத்தில் எப்போதும் போல தண்ணீர் சொட்டுகிறது. ரங்கன் தெரு கடைசியில் ஒரு குப்பை லாரி அளவு குப்பையை கொட்டி வைத்துள்ளார்கள். பக்கத்திலேயே குழி பணியாரம் வியாபரம் பலமாக நடக்கிறது.
சுந்தர் ஸ்டோரில் ஆக்சா பிளேடில் செய்த கத்தியும், சைக்கிள் பெடலில் செய்த தேங்காய் உடைக்கும் கருவியும் பலர் வாங்கிக்கொண்டு போகிறார்கள். அதே போல் அம்பிகா அப்பளாம் கடையில் இலந்தை வடையும், கமர்கட்டும். சேலையூர் மடத்தில் பன்னிரண்டு திருமண்ணுடன் பளிச் என்று இறங்குபவர்களின் கார்களில் ஆயுத பூஜை சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு பளிச் என்று இருக்கிறது !
- சுஜாதா தேசிகன்
20.10.2018
20.10.2018
Comments
Post a Comment