உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடம் கழித்து அம்மாவை அழைத்துக்கொண்டு சென்றேன். சில வாரங்களுக்கு முன் குடும்பத்துடன் மீண்டும்.
பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் சந்திரபாகா நதிக்கரையில் அமைத்திருக்கிறது. பாத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி குறிப்பு இருக்கிறது. பண்டரீபுரம் என்று வழி கேட்டால் “பந்தர்பூர் ?” என்று கேட்டுவிட்டு வழி சொல்லுகிறார்கள்.
சந்திரபாகா நதிக்கரையில்... பண்டரீபூர் ( படம் D.Prabhu ) |
புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரையாகக் காசிக்கு போகவேண்டும் என்று புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்துப் பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான்.
புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலம் அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகன் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். வந்திருப்பவர்களைப் பார்த்து லட்சியமும் செய்யாமல் அலட்சியமும் செய்யாமல் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு, “சற்று இரும்! நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்," என்றான். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும், ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.
சற்று இரும் !.. |
புண்டரீகன் பணிவிடை செய்துவிட்டு வந்து, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரிக்க, "நான் துவராகா நாதனான கிருஷ்ணன், இவள் என் மனைவி ருக்மணி” என்று சொல்கிறார்.
புண்டரீகன் பூரித்துப் போய், குடும்ப சகிதமாக பகவான் காலில் விழுந்து, இங்கேயே சந்தரபாகா நதிக்கரையிலேயே நித்தியவாசம் செய்யவேண்டும்" என்று கேட்கிறான்.
இன்றும் பண்டரீபுரத்தில் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு செங்கல் மேல் சுயம்பு மூர்த்தியாக ’விட்டலனாக’ சேவைச் சாதிக்கிறார்.
’விட்’ என்றால் மராத்திய மொழியில் செங்கல் என்று பொருள். ’விட்டலன்’ பெயர் காரணம் இது தான்.
விட்டலனை சேவிக்க காரில் புறப்பட்ட போது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அவர்களின் கன்னட , மஹாராஷ்டரா பக்தர்களின் உபன்யாசங்களை கேட்டுக்கொண்டே சென்றோம். கேட்கக் கேட்க எப்போது விட்டலனை பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியது.
திராவிட நாட்டில் ஆழ்வார்கள் பாசுரங்களை போல ஞானேஷ்வர், நாமதேவ், ஏதநாதர், ஜனாபாய், ஞானதேவர், கபீர்தாஸர், துக்காராம், ஏகநாத், புரந்தரதாஸர், விஜயதாசர், மோகனதாஸர் என்ற பெரிய அடியார்களின் பட்டாளம் பாண்டுரங்கனைப் பற்றி ஏராளமான கன்னடக், மராட்டிய அபங்கங்களை மூச்சு விடுவது போல பாடியுள்ளார்கள். மூச்சு விடும் போது அதை எண்ண மாட்டோம். அதே போல அவர்களும் எண்ணிக்கை இல்லாமல் பாடியுள்ளார்கள்.
குடும்பத்தாருக்கு விட்டலனை ‘தொட்டு’ சேவிக்கலாம் என்பதால் அவர்களுக்கும் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகமாகியது.
கதிர் மதியம்... |
மாலை ஏழு மணிவரை சூரியன் பிரகாசித்து வழி காண்பித்தது. எட்டு மணிக்கு பண்டரீபுரம் வந்தடைந்த போது வெளிச்சம் சித்ரா பௌர்ணமி உபயத்தால் “கதிர் மதியம்” போலத் தொடர்ந்தது.
”ஹோட்டலில் ரூம் இருக்கா ?” என்ற கேள்விக்கு முன் ”கோயில் எத்தனை மணி வரை ?” என்ற போது ”பதினோரு மணி வரை” என்ற ஹோட்டலில் மாட்டப்பட்ட பலகையை வரவேற்பறையில் இருந்தவர் காண்பித்த போது ’அப்பாடா’ என்று கிளம்பினோம்.
இரவு ஒன்பது மணிக்கு கியூவில் சென்று நின்றுகொண்டோம்.
பண்டரீபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டும், உட்காரத் திண்ணையும் உண்டு.
பில்டிங் முழுக்க க்யூ ! |
இன்ஸ்டண்ட் எனர்ஜிக்கு ஆரஞ்சு கலர் புளிப்பு மிட்டாய், சூட மிட்டாயும் ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். முன்பும், பின்பும் விட்டல் விட்டல் என்று கோஷங்களுடன் சிலர் அபகங்களை பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். சிறுவர்கள் பிளாங்க் நெற்றிக்கு எல்லாம் கோபி சந்தன திருமண் இட்டுவிடுகிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில்...
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என: நிலம் விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து, எங்கும் பரந்துளன்: இவை உண்ட கரனே.
”குளிர்ந்த கடல் நீரின் அணுக்களிலும், அண்டத்திலும், பூமி, வானம் ஆகியவற்றுள்ளும் எங்கும் நிறைந்துள்ளான். கண்களுக்குத் தெரியாத மிகச் சிறியவற்றிலும், ஞானம் மகிழ்ச்சியுடன் ஆத்மாவாய் உள்ளான். உலக முடிவில் யாவற்றையும் தன்னுள் அடக்கிக் காத்து தான் நிலையாக இருக்கிறான்” என்று நாராயணனை வர்ணிக்கிறார்.
இன்ஸ்டண்ட் எனர்ஜி - புளிப்பு, சூட மிட்டாய் ! |
“அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறைந்துள்ளவனை நான் கண்டது ஒரு செங்கல் மீது ! பண்டரீயில் ! வேதங்களும் புராணங்களும் யாரைப் புகழ்ந்து பாடுகின்றனவே அவன் புண்டலீகனின் பின்புறம் காட்சியளிக்கிறான். யாரை அறிய முடியவில்லை என்று ஸ்ருதிகள் செல்கின்றனவோ அவன் எளிமையாக சந்திரபாகா நதிக்கரையில் நிற்கிறான்”
க்யூவில் நிற்கும் போது, வெற்றிலை ‘பான்’ துப்பிய கறைகளை எங்கும் பார்க்க முடிகிறது. சிலர் காது குடைகிறார்கள் அல்லது பல்லை நோண்டுகிறார்கள், தலையை சொறிந்துகொண்டு ஒருவர் விட்டலனுக்கு வாங்கிய துளசியை பிய்த்துச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க… சற்று நேரத்தில் அதே கையுடன் விட்டலனை தொட்டுச் சேவிக்க போகிறார்கள் என்ற எண்ணிய போது பகீர் என்றது.
பெருமாளின் குணங்களை ‘திருக்கல்யாண குணங்கள்’ என்று சொல்லுவோம். இந்த இந்தக் குணங்கள் என்று எண்ணிக்கை கிடையாது. பெருமாளே நினைத்தாலும் அவனுடைய கல்யாண குணங்களை எண்ணுவது என்பது முடியாது. அதில் ஒன்று எளிமையானவன்.
28 யுகங்களாக... பழைய படம் ! |
வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், அங்கே கிடைக்கும் சுகங்களுக்கு அடிமையாகி மீண்டும் தாய்நாடு வர யோசிக்கும் இந்தக் காலத்தில் வைகுண்டத்தைவிட்டு நமக்காகச் செங்கல் மீது 28 யுகங்களாக இடுப்பில் கைவைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கும் விட்டலன் தான் எத்தனை எளிமையானவன் ! நாம் தான் சென்று சேவிக்க யோசிக்கிறோம்.
அவனுடைய ஒரே லட்சியம், குறிக்கோள் நம்மைக் காக்க வேண்டும் என்பது தான். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி பிடித்ததில் ஆச்சரியம் என்ன இருக்கு ? அங்கே பார்க்க வேண்டியது “குன்றம் ஏந்திக் குளிர் மழை ’காத்தவன்’” தன்னை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் காத்தான் என்பது தான் முக்கியம்.
குலசேகர ஆழ்வார்
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே
”வெள்ளமாக ஓடும் ஆறுகள் எப்படி முடிவில்வேறு இடம் போகாமல் கடலையே அடைவது போல, அவ்வாறுகள் போல் என் நெஞ்சினுள்ளே புகுந்து விளங்குகிற உனது கல்யாண குணங்கள் தவிர மற்றோரிடத்தில் ஈடுபட மாட்டேன்” என்கிறார்.
அவனுடைய எளிமையை நினைத்துக்கொண்டே க்யூவில் செல்லும் போது வலது பக்கம் இருக்கும் மண்டபத்தில் அபகங்களை பாடிக்கொண்டு இருப்பது காதில் விழுகிறது.
படிக்கட்டுகள் கீழே அழைத்துச் செல்லும் இடத்தில் ஒரு மரக்கிளை வர தை தொட்டுச் சேவித்துக்கொள்கிறார்கள்.
இது என்ன மரம் ? ஒரு சின்ன கதை.
நான் கண்ணனுக்கே !... கானோ பாத்திரை |
கானோ பாத்திரை அழகில் சிறந்தவள். எப்போதும் கண்ணனை பத்தியே ஆடல் பாடலுடன் பக்தி பரவசத்துடன் இருக்க. மன்னன் அவளை எப்படியும் அரண்மனையில் ஆட வைத்து அவளை அடைய வேண்டும் என்று விரும்பி காவலாளிகளை அனுப்புகிறான்.
இதைச் சற்றும் விரும்பாமல் 'மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன்' என்று ஆண்டாள் சொல்லுவதைப் போல் நான் கண்ணனின் உடைமை என்று உறுதியாக விட்டலன் பாதங்களைப் பிடித்து ஒளிமயமாகிக் கலந்து மரமாக வெளிவந்து காட்சி அளித்தார் என்கிறது இவளின் சரித்திரம்.
இன்னும் சில அடிகளில் விட்டலனை பார்க்கப் போகிறோம் என்று கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது. பலர் ஏற்கனவே வந்தவர்கள் என்று தெரிகிறது இருந்தாலும் அவர்கள் முகத்தில் முதல் முறை பார்க்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கிறது !
மகரகுண்டலம் ஆடுதே... ! |
சில அடிகள் நடந்த பின் விட்டலன் கண்களுக்கு தெரிகிறார். பக்தர்களின் தலை இடுக்கில் விட்டலன் முகம் காதுகளில் மீன் வடிவில் குண்டலம் தெரிகிறது.
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
பூமியையும், மலைகளையும், கடல்களையும், ஏழு உலகங்களையும் தன் வயிற்றில் வைத்துக் காத்த பகவானே, இங்குப் பாலனாக வந்துள்ளான். அழகிய நிறத்துடன் கூடிய இக்குழந்தையின் இரு மகர குண்டலங்களை பாருங்கள் ! என்கிறார் பெரியாழ்வார் ( மீன்வடிவமாகச் செய்யப்படும் காதணிக்கு மகரகுண்டலமென்று பெயர். )
ஸ்ரீமத் அழகியசிங்கர் 46 ஆம் பட்டம் - பண்டரீபூர் மங்களா சாசனம் |
வரிசையில் போகும் போது பெரிய புத்தகத்தை(வேதம்) சேவித்துவிட்டு நம் முன்னே இருக்கும் சிலர் விட்டலனின் பாதங்களைப் பற்றி தங்கள் தலையை அவன் பாதங்களில் வைத்து வணங்குகிறார்கள். அதே பாதங்களை பல நூற்றாண்டுகளாகப் பல அடியார்கள் பற்றியுள்ளார்கள். சமீபத்தில் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீமத் அழகியசிங்கர் ( 46 ஆம் பட்டம் ) இங்கே வந்து விட்டலனின் பாதங்களை பற்றினார்.
ஞானேஷ்வர் ”விட்டலனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி கொப்பளிக்கிறது” என்கிறார். துக்காராமோ “அவன் உருவமே எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்.
இத்தனை மஹான்கள் பற்றிய பாதத்தை நாமும் பற்ற போகிறோம் என்ற நினைப்பே ஆனந்தத்தை கொடுக்கிறது. அவன் பாதங்களை பற்றும் முன் சில அடியார்களைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
மாஹான்களும்... பக்தர்களும்.. |
சுலபமான வழி ! ( படம்: D.Prabhu ) |
பக்தி ஒன்றாலே நான் கிடைப்பேன் என்கிறார் கீதையில். கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் செய்து சுலபத்தில் பெற்றுவிடலாம். கோகுலத்தில் ஒரு பெண் தயிர் விற்றுக்கொண்டு சென்றுகொண்டு இருந்தாள். “தயிர் வாங்கலயோ.. தயிர்… மோர் வாங்கலயோ மோர்… ” என்று கூவிக்கொண்டு சென்றாள். அவள் உள்ளம் கண்ணனிடத்திலேயே ஈடுபட்டிருந்தபடியால் “கண்ணன் வாங்கலயோ கண்ணன் ! மாதவன் வாங்கலயோ மாதவன்” என்று மாற்றிக் கூவத்தொடங்கினாள்.
பெரியாழ்வார் திருகோட்டியூரில்
கேசவா! புருடோத்தமா! கிளர்
சோதியாய்! குறளா! என்று
பேசுவார் அடியார்கள் எந்தம்மை
விற்கவும் பெறுவார்களே.
”கேசவா! புருடோத்தமா” என்று அவன் நாமங்களைச் சொல்லும் அடியவர்கள் தன்னை விற்கவும் வாங்கவும் கூட உரிமையுள்ளவர்கள் என்கிறார்.
நாமாச்சா பாஜார் ! |
From the book... |
Raam Naam book by Mahatma Gandhi
|
“விட்டல விட்டல யேணே சந்தே” என்று தொடங்கும் துக்காராம் அபங்கத்தின் அர்த்தம் இது “ கைகளிலோ தாளத்தினாலோ, தாளம் போட்டுக்கொண்டு விட்டல விட்டல என்ற சந்தத்தை பிரமானந்தத்துடன் கூறுங்கள். எல்லாச் செயல்களின் ஆரம்பத்திலும், முடிவிலும் விட்டலன் பெயரைச் சொல்லுங்கள். விட்டலனை மனதில் கொள்ளுங்கள், காதலால் விட்டல நாமத்தையே கேளுங்கள். அதனால், பிரச்னைகள் பொசுங்கும்” என்கிறார்.
இன்னொரு அபங்கம். ஸ்ரீ கானோபாத்ராவின் “நாமே தோஷ ஜளதீ” என்று தொடங்கும் அபங்கத்தின் அர்த்தம் “ விட்டலனின் திருநாமம் தோஷங்களை எல்லாம் பொசுக்கிவிடுகிறது. முடிவற்றதாகத் தோன்றும் இந்த சம்சாரக் கடலை தாண்டி கரையேற்றுகிறது” என்கிறார்.
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய்
என்கிறாள் நம் ஆண்டாள் ! அடியவர்களின் பாத தூளி கூடவே கேசவனின் நாமங்களைச் சொன்னால் மோட்சத்தில் கர்சீப் போட்டு ஒரு சீட் நிச்சயம்.
அப்பேர்பட்ட நாம மகிமைக்கே பெயர் போனவர் நாமதேவர். நாமமே அவருக்குத் தேவன். அதனால் நாம’தேவர்’. ஐந்து வயது சிறுவனாக இருந்த போது ஒரு நாள் அவர் தந்தை
வெளியூருக்குச் சென்று திரும்ப நேரம் ஆகிவிட, இவர் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு ரொட்டி, சக்கரை பாலை நெய்வேத்யம் செய்ய கர்ப்பகிரம் சென்று பெருமாள் சாப்பிடுவார் என்று காத்துக்கொண்டு இருக்கிறார். விட்டலன் சாப்பிடாமல் போக அழுது அழுது அங்கேயே சோர்ந்து மயங்கிவிழ இவருடைய திட விஸ்வாசம் கலந்த பக்தியை. பார்த்த விட்டலன் “கொடுடா நான் சாப்பிடுகிறேன்” என்று நேரில் தோன்றி பிரசாதத்தைச் சாப்பிடுகிறான்.
என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. பிரேமையுடன் கொடுக்க வேண்டும் என்பதே பக்திக்கு முக்கியம். கீதாச்சார்யனான பார்த்தசாரதியும் கீதையிலே “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி” (எவன் ஒருவன் துளசி இலையோ, புஷ்பமோ, கனியோ, துளி நீரோ கொண்டு என்னைப் பக்தியுடன் பூஜிக்கிறானோ அதனை விருப்பத்துடன் ஏற்கிறேன்) என்கிறான்.
நான் பாடுகிறேன் சத கோடி அபங்கங்கள் ! |
விட்டலன் “என்னப்பா ஆச்சு ? ஏன் அழுகிறாய்?” என்று கேட்க “ராமாவதாரத்தை பாட வால்மீகி இருக்கிறார். ஆனால் உன்னை பாட யாரும் இல்லையே வால்மீகிக்கு அருள் செய்தது போல் எனக்கும் செய்ய வேண்டும் இல்லை என்றால் “நாராயணா வென்னா நாவென்ன நாவே” என்று இந்த நாக்கு எனக்கு வேண்டாம் என்று துண்டிக்க போகும் போது விட்டலன் அவருக்கு அருள் செய்ய அவர் அபங்கங்களை பாட ஆரம்பிக்கிறார்.
பிரேமை தான் பக்தி ! |
பக்தி இருந்தால் ஞானம் வரும் என்கிறது சாஸ்திரங்கள். அதற்கு முக்கியமான தேவை ஆசாரிய சம்பந்தம். பக்தி இருந்தால் பெருமாள் பேசுவார் ஆனால் ஞானமும் மோட்சமும் கிடைக்காது. ஆசாரியன் சம்பந்தம் மூலமே மோட்சம் கிடைக்கும்.
திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு திருக்குலத்தை சேர்ந்தவர் (கீழ் சாதி) தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்கள் உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறியிருக்கிறார்.
தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்ல, “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசாரிய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கரியத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை.
கோயில் முகப்பு தோற்றம்... நாமதேவர் படியுடன் |
நாமதேவரும் திட விஸ்வாசம், பக்தி இருந்தால் விட்டலனுடன் பேசுவார் பழகுவார் ஆனால் ஞானம் வர வேண்டும் என்று விட்டலன் செய்த லீலை ஒன்று இருக்கிறது.
ஸ்ரீஞானேசுவரரின்(இன்னொரு மகான்) ஐந்து வயது தங்கை முக்தாபாய். ஒரு முறை பானைகளை பதம் பார்க்கும் சின்ன கோலை வைத்து நாமதேவரை தட்ட ஓங்க நாமதேவர் சட்டென்று தலையை குனிந்துகொண்டார். அதைப் பார்த்த முக்தாபாய் ”இந்தப் பானை இன்னும் பக்குவமாகவில்லை” என்று சொல்ல நாமதேவர் மனம் நொந்து விட்டலனிடம் சென்று முறையிட அதற்கு பாண்டுரங்கன் ”ஆமாம் உனக்கு ஞானம் வர வேண்டும்” என்று அவரை விசோபகேசர் என்பவரைபார்க்க அனுப்புகிறார். அவரைத் தேடிக்கொண்டு செல்கிறார்.
விசோபகேசர் ஒரு கோயிலில் பெருமாளுக்கு நேராகக் காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்க அவரிடம் சென்று நாமதேவர் “பெருமாளுக்கு முன் காலை இப்படி நீட்டிக்கொண்டு இருக்கலாமா ?” என்று கேட்க அதற்கு அவர் பெருமாள் இல்லாத இடம் எங்கே என்று சொல் நான் அங்கு நீட்டிக்கொள்கிறேன்” ( அதாவது பெருமாள் எங்கும் இருக்கிறார் என்ற அர்த்தத்தில் ). நாமதேவருக்கு அப்போதும் அதன் அர்த்தம் புரியவில்லை. அவருடைய காலை பிடித்துத் திருப்பிவிட அவருக்கு உடனே ஞானம் வருகிறது. ஆசாரியன் காலை பற்றிய உடனே ஞானம் வந்த பிறகு அவருக்கு எல்லாம் பாண்டுரங்கானக தெரிகிறார்.
7-ழை திருப்பிபோட்ட மாதிரி மூக்கு ! |
Map of the temple |
”சலே சலே ..” என்று கூட்டம் பாண்டுரங்கனிடம் நம்மை அழைத்துச் செல்லுகிறது. விட்டலனின் பாதங்களைப் பற்றி தலையால் சேவித்துவிட்டு பக்கவாட்டில் பாண்டுரங்கனை பார்க்க அவர் மூக்கு ’7’யை கவிழ்த்தாற் போல் ஷார்ப்பாக இருக்கிறது. மார்பில் வஸ்திரம் எதுவும் இல்லாமல், சந்தனம் மட்டும் சாத்திக்கொண்டு ஒரு நிமிடத்துக்கு கிட்டதட்ட ஐந்து பேர் அவர் பாதங்களை பற்றுகிறார்கள். அவர்கள் எல்லோரும் சேவிக்கும் போது பிரேமை மட்டுமே வெளிப்படுகிறது.
குட்டி யானை சைஸுக்கு குங்கும கோபுரம் ! |
பண்டரீபுரத்து கடைகள் ! |
பச்சை சொக்காவில் ஷோக்காக |
வெளியே வந்த போது அனல் அடித்தது. மொபைல் போனில் வெய்யில் 42 டிகிரி என்று காண்பித்தது. நா. முத்துகுமார் பாடல் வரிகள் “மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !” என்பது நினைவுக்கு வந்தது.
நாமதேவர் இல்லம் |
ஜனபாய் சமையல் செய்த பார்த்திரன்.. உரல் |
இவ்வளவு தூரம் வந்து ஆழ்வார் பாடல்களை பாடி பாண்டுரங்கனை சேவிக்கவில்லையே என்று மீண்டும் இரவு கோயிலுக்கு சென்றேன். திருப்பவை சேவித்துவிட்டு, “சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து” என்ற பாசுரம் சொல்லி அவன் பாதங்களை பற்றிவிட்டு காலை பெங்களூருக்கு புறப்பட்டேன்.
இந்தியா ! |
கிராப் வெட்டிய மரங்கள் |
பூததத்தின் பெயர் பண்டரீபூதம்!
- சுஜாதா தேசிகன்
(11.05.2018)
ஒரு மழை நாள்
பிகு: நேரம் இருந்தால் இந்த ஐந்து நிமிட அபங்கை கேட்கலாம் :
.iga arumai. Thanks for sharing.
ReplyDeleteThank you for sharing this great post.
ReplyDeleteTears rolling in eyes! I have the pride that i have seen that booth. It has captured my mind in the form of guruvsyueappan
ReplyDeleteGreat Sir .
ReplyDeleteThanks for the excellent write up
Excellent,sir...
ReplyDeleteNice
ReplyDeletePurinthu padithen. Arumai. Thanks a bunch.
ReplyDelete- Geethaa Senthilkumar
படங்கள் தெரியவில்லை
ReplyDeleteபடங்கள் தெரியவில்லை. திறக்க மறுக்கிறது
ReplyDeleteசரி செய்ய பார்க்கிறேன். அது வரை இங்கே பாருங்கள் https://www.facebook.com/notes/desikan-narayanan/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-/1916724801731524/
DeleteTHANK YOU
ReplyDelete