உடையவர் திருவல்லிக்கேணி (படம் : சப்மத் குமார் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி) |
இராமானுச நூற்றந்தாதியில் ”செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் திருவடிக்கீழ்” என்பது அமுதனாரின் அமுத மொழி.
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ”பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி ” என்ற இந்த வரியும் கிட்டதட்ட அதே மாதிரி இருப்பதைக் கவனிக்கலாம்
நூற்றந்தாதி பாசுரத்தை இரண்டு முறை சேவிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பதம் பிரித்த முழு பாசுரம் கீழே. மெதுவாகப் படித்தால் அர்த்தம் சுலபமாக புரியும்.
செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் - திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி - நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து,இரைத்து, ஆடும் இடம் -அடியேனுக்கு இருப்பிடமே.
புரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்தக் கட்டுரையின் ‘அடிக்கீழ்’ இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தை சொல்கிறேன்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்.ஏ, டாக்டரேட், வேதம்,, கீதை, திவ்ய பிரபந்தம் என்று பல விஷயங்கள் படிக்கலாம், படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் ’அடிக்கீழ்’ என்ற ஒரு வார்த்தையில் பாம்பை சுருட்டி கூடையில் அடைப்பது போல ஸ்ரீவைஷ்ணவத்தின் மொத்த கருத்தையும் அடக்கிவிடலாம்.
நம்பெருமாள் திருவடி ( படம் அரவிந் ) |
அடிக்கீழ் என்றால் சரணாகதி. ஆங்கிலத்தில் இதற்குச் சரியான வார்த்தை கிடையாது. அருகே வரும் வார்த்தை ‘surrender’ . “He surrendered to police” என்பதை “அவர் போலீஸில் சரணடைந்தார்” என்று தான் மொழிபெயர்க்க முடியுமே தவிர, யாரும் ”அவர் போலீஸில் சரணாகதி அடைந்தார்” என்று சொல்லுவதில்லை.
சரணாகதி என்பது நாராயணன் மட்டுமே ஆசாரியர்கள் மூலமாகத் தர முடியும்.
ஸ்ரீ திருப்பாணாழ்வார் உரையூர் |
சரணாகதி மிகச் சுலபம் அதற்கு ஒன்றே ஒன்றைத் தான் செய்ய வேண்டும் அவன் அடிக்கீழ் அவன் பாதத்தை பற்ற வேண்டும். அதனால் தான் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் திருவடியை பற்றினார்கள். திருப்பாணாழ்வார் “கமல பாதம்” என்று பாதத்தை பற்றிக்கொண்டு அமலனாதிப்பிரானை ஆரம்பிக்கிறார்.
கீதையின் பதினெட்டாவது அத்தியாயம். 66 ஸ்லோகம் கண்ணன் தர்மத்தைப் பரிபூரணமாக தியாகம் செய்துவிட்டு தம்மையே சரணமாகப் பற்றுமாறு அர்ஜுனனுக்கு சொல்லுகிறார். தர்மத்தை முழுமையாக விட்டுவிட வேண்டுமா ? என்று படிக்கும் போது சந்தேகம் வருவது இயற்கையே. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் தன்னை சரணடைந்தவர்களில் சுமையை தானே ஏற்றுக்கொண்டு உன்னைப் பாவங்களிலிருந்து முழுவதும் விடுவிக்கிறேன் என்கிறான்” கண்ணன். புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும் அதனால் ஓர் உதாரணத்துடன் இதைப் பார்க்கலாம்.
கை குழந்தை நடு இரவில் உரக்க அழுது வீட்டையே எழுப்பும். உடனே வீட்டில் இருப்பவர் குறிப்பாக அம்மா பதறியடித்துக்கொண்டு குழந்தைக்கு என்ன ஆனதோ என்று சமாதானம் செய்வார். அதே போல நாம் சரணாகதிக்கு பின் நாராயணன் உடனே வந்து நம்மைச் சமாதானம் செய்வார். உடனே கீதையை கரைத்துக் குடிக்கிறேன் என்று இறங்கிவிடாதீர்கள். குடிக்கலாம் ஆனால் அதன் ரசத்தை ருசிக்க வேண்டும். சரணாகதி என்பது மிகச் சுலபம். பெருமாளின் திருப்பாததைப் பற்றி எனக்கும் அவனுக்கும் ஒழிக்க ஒழியாத உறவு என்ற உணர்வொன்றிய நிலைக்குச் செல்ல வேண்டும்.
இன்னொரு உதாரணம் பார்க்கலாம். ஒரு மீனவன் மீன்பிடிக்க வலை வீசுகிறான். வலையில் மீன்கள் சிக்கிக்கொள்ளும். ஆனால் ஒன்று கவனித்தால் மீனவனின் காலருகில் இருக்கும் மீன்கள் அவன் வலையில் என்றுமே சிக்குவதில்லை. அதே போல மாயனின் திருபாதத்தை பற்றினால் அவனின் மாயையால் மமதை, அகந்தை போன்றவற்றை வலையில் சிக்காத மீன்கள் போல கடந்துவிடலாம்.
சுழலும் உரலின் மத்தியில் அகப்படும் தானியங்கள் அரைபடுகிறது. ஆனால் கைபிடி அருகில் உள்ள தானியங்கள் தப்புகிறது என்று கூறுகிறார் கபீர்தாசர். அதே போல சரணாகதி செய்பவர் இந்த உலக அடிதடியிலிருந்து தப்புகிறார் என்கிறார்
இன்னொரு கதையை சொல்கிறேன், இது எந்தப் புராணத்தில் வருகிறது, என்று வீண் ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் அதில் உள்ளக் கருத்தை மட்டும் பாருங்கள்.
ஸ்ரீராமர் குருப் போட்டோ ( படம் இணையம் ) |
ஸ்ரீராமர், சீதாபிராட்டி, ஸ்ரீஹனுமார் மூவரும் ஒரு முறை காட்டில் சென்று கொண்டு இருந்தார்கள். ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். மரத்தின் மீது ஒரு கொடி படர்ந்திருந்தது. கொடியில் துளிர், பூக்கள், பழம் என்று அலங்காரமாக இருந்தது. ராமருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ”என்ன அழகு இந்த மரத்துக்கு இதுவே அழகு சேர்க்கிறது” என்றார். இதைக் கேட்ட சீதாபிராட்டி ஹனுமானைப் பார்த்து “மரத்தை அண்டியே இந்தக் கொடி இருக்கிறது, மரம் இல்லை என்றால் இந்தக் கொடிக்கு ஆதாரம் எங்கே ? அதனால் மரத்துக்குத் தான் எல்லாப் பெருமையும். நீ என்ன சொல்லுகிறாய்?” என்றாள்.
ஹனுமான் அமைதியாகப் பதில் சொன்னார் ”இவை இரண்டும் இல்லை... ”
“பின் எது?” என்றாள் சீதை
“மரம், கொடி இவ்விரண்டினுடைய நிழல் மிகவும் சுகமாக இருக்கிறது”
அதாவது மரம் போல இருக்கும் தங்களுடைய நிழலும், மரத்தை அண்டி இருக்கும் பக்தனின் நிழலும் என்று எடுத்துக்கொள்ளலாம் (இங்கே மரம் பெருமாள்-பிராட்டி, கொடி ஆசாரியர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
ஒப்பிலியப்பன், காஞ்சி வரதராஜப் பெருமாள் |
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், ஒப்பிலியப்பன், காஞ்சி வரதராஜப் பெருமாள் கையில் “மாமேகம் சரணம் வ்ரஜ” அல்லது “ மாசுச” என்ற வரியைப் பார்க்கலாம். “வேறு ஒன்றைப் பற்ற வேண்டும் என்ற எண்ணமே வராமல் என்னிடம் சரணடை, கவலை கொள்ளாதே ” என்பது இதன் பொருள்.
இது நமக்குக் கிடைத்துவிட்டதா என்று அறிந்துகொள்ள ’ஷுகர் டெஸ்ட்’ மாதிரி நீங்களே பரிசோதித்து பார்த்துக்கொள்ளலாம். அடுத்த முறை கோயில் கூட்டத்தில் நம் காலை யாராவது மிதித்துவிட்டார்கள் என்றால் கோபம் வரக் கூடாது ! அவன் பாதக் கமலங்களைப் பற்றினால் நம் காலை யார் மிதித்தாலும் கோபம் வரக் கூடாது, மிதிப்பது அவன் அடியார் என்ற எண்ணமே வர வேண்டும்.
பெரியாழ்வார் திருமொழியில்
சீதக்கடல் உள் அமுத அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே, பவளவாயீர்! வந்து காணீரே!
கடைசி இரண்டு வரியை மட்டும் பாருங்கள். வேதத்தில் எம்பெருமானுடைய திருவடியில் தேன் வெள்ளமுண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்மாழ்வார் “தேனே மலரும் திருப்பாதம்” என்கிறார். எல்லோரும் சொல்லுகிறார்களே, உண்மையாக இருக்குமோ என்று கண்ணன் தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட யசோதைப் பிராட்டி மிக மகிழ்ந்து, பக்கத்தில் இருப்பவர்களை அருகில் அழைத்து, “நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்” என்று காட்டுகிறார்
நம்மாழ்வார் - மதுரகவி ( ஓவியம் நன்றி: கேஷவ் ) |
அவர் திருவடிகளைப் பற்றிய நம்மாழ்வார் அதனுடன் ஐக்கியமாகி சடாரியாகவே ஆகிவிட்டார். அவரை பற்றிய மதுரகவியாழ்வார் “தேவு மற்றறியேன்” என்று கண்ணனை காட்டிலும் நம்மாழ்வாரைப் பற்றி பேறு பெறுவதே என்று பற்றி நமக்கு ஆசாரியனைப் பற்றினால் போதும் என்று சொல்லிக்கொடுத்த முதல் ஆசாரியன் அவரே என்று கொள்ளலாம்.
மதுரகவியாழ்வாரை சத்ருக்கனனுக்கு ஒப்பிடுவார்கள். சத்ருக்னனை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. நாம் பேசுவது எல்லாம் - லக்ஷமணர் ஸ்ரீராமருடனே எப்போதும் இருந்தார்; ஸ்ரீராமர் வனவாசம் சென்ற போது பரதன் அவர் பாதுகைகளை பெற்று உரியப் பக்தியை செலுத்தி, பாதுகைகளே 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்த சிறப்பை உருவாக்கினார்.
ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸ்ஹஸ்ரத்தில் இப்படி ஆரம்பிக்கிறார் “பாதுகைகளை வணங்கிய பரதனை போற்றி வணங்கிவிட்டு, பெரியபெருமாளின் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகையே உன்னை வணங்க வேண்டு என்று நினைக்கும் போது என் உள்ளம் பூரிக்கிறது” என்கிறார்.
ஸ்ரீரங்க ரகசியம் |
உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுகிறேன். ஸ்ரீரங்கம் கோயிலில் கூட்டம் அதிகம். பெருமாளைச் சேவிக்க முடியவில்லை என்றால் கவலையை விடுங்கள். கொட்டாரம் பக்கம் இருக்கும் சன்னதிக்கு சென்றால் பெருமாளுக்கு சமர்ப்பித்த பாதுகைகள் அங்கே ஒரு தூணில் தொங்கிக்கொண்டு இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் அதைத் தொட்டு சேவிக்கலாம் !
சத்ருக்னர் பக்கம் திரும்பலாம். ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை இப்படி எழுதுகிறார் “ஸ்ரீசக்ருக்னாழ்வார், ஸ்ரீ பரதாழ்வானையே பற்றிக்கொண்டு, அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று இருப்பார். இவர் பரத கைங்கரியத்திற்கு விரோதமாக ராம சௌந்தரியம் ( அழகு ) குறிக்கிட்டால் நித்ய சத்ரு என்று கருதி அதை வென்றவர். இருந்தாலும் பரவாயில்லை, தான் விரும்பிய பரதன் விரும்பும் ராமரைப் போனால் போகிறது என்று பற்றுபவர். இது போல மதுரகவியாழ்வார். நம்மாழ்வார் தவிர வேறு தெய்வம் வேண்டாம் என்று “திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்” என்று நம்மாழ்வார் உகப்புக்காக எம்பெருமாளைச் சேவிப்பேன்” என்கிறார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ( படம் இணையம் ) |
நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில் கண்ணிநுண் சிறுத்தாம்பு நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் நடுவில் இருக்கிறது. ஏன் என்பதற்கு மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் ”வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்க லையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” என்கிறார்.
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் எட்டு எழுத்து அஷ்டாக்ஷர மஹா மந்திரம் போல் என்று வைத்துக்கொண்டால், அதில் நடுவில் ’நம’ மாதிரி கண்ணிநுண் சிறுத்தாம்பை கொள்ளலாம்.
ஸ்ரீ ராமானுசன், ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் ( படம் இணையம்) |
திருமந்திரத்தில் நடுவே உள்ள “நம” என்கிற சொல்லை நம் ஆசாரியர்கள் பாகவத சேஷத்துவத்தை அதாவது அடியார்க்கு அடிமைப்பட்டிருத்தல் என்ற முக்கியமான பொருளாக விவரிப்பார்கள். அடியார் என்பது வயது முதிர்ந்தவர்கள் இல்லை அரங்கனிடம் தொடர்பு வைத்துள்ளவர்கள் எல்லோரும் அடியார்களே.
அடியாரின் தொடர்பு பற்றி சுலபமாக தெரிந்துக்கொள்ள மீண்டும் ஸ்வாமி தேசிகனிடம் செல்லலாம். பாதுகை முன் - பின் பருத்து நடுவில் சிறுத்தும் காணப்படுகிறது இதற்கு வேதாந்த தேசிகன் இவ்வாறு அர்த்தம் சொல்லுகிறார் ( பாதுகா ஸஹஸ்ரம் 790 ) அரங்கனின் அடியார்கள் பட்ட பூமியில் அவை படுவதால் அரங்கனின் தொடர்பு கிடைத்து அதில் கிடைக்கும் சுகத்தினால் பருத்து காணப்படுகிறது. ஆனால் நடுவில் ? இழந்த நிலையில் துக்கத்தினால் இளைத்து சிறுத்துபோய்விட்டது என்கிறார்.
அடுத்த முறை ஸ்ரீரங்கம் செல்லும் போது, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்று பல அடியார்கள் மிதித்த இடம். செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள்.
தேன், பழம், வெல்லம் கலந்த பஞ்சாமிருதம் போல மதுரகவியாழ்வார், பரதன், சத்ருக்னரை கலந்தால் நமக்கு கிடைப்பது வடுகநம்பி.
ராமானுஜர் 1000 ஆம் ஆண்டில் “உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்ற வாசகம் மிக பாப்புலரானது. இந்த வாசகத்துக்கு ஒரே எடுத்துக்காட்டு வடுகநம்பி மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது.
யதிராஜ வைபவம்’ என்று இவர் ஸ்ரீராமானுஜரைப் பற்றி இயற்றிய 114 ஸ்லோகங்களில் உடையவருடைய வாழ்க்கை பிரபாவத்தை மிக அழகாக விளக்கியுள்ளார் - அதில் உள்ள கடைசி ஸ்லோகத்தில் :
“தனது அந்தரங்கசிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த ஸ்ரீமானான யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கரியத்தில் நியமித்தருளினார்; இது என்ன ஆச்சரியம்! அத்துடன் தன்னடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும், தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க!” என்கிறார்
வடுக நம்பியின் பூர்வீகம் மேல்கோட்டை பக்கம் இருக்கும் சாளகிராமம் என்ற ஊர். ஸ்ரீராமானுசரின் ஸ்ரீபாத தீர்த்ததால் அவருடைய சிஷயரானார். எப்படி என்று பார்க்கும் முன் ஸ்ரீ வடுக நம்பி குறித்து சில சம்பவங்களை சுருக்கமாக பார்த்துவிடலாம்.
* ஒரு முறை திருவெள்ளரைக்கு சென்று கொண்டிருந்த ஸ்ரீராமானுஜர் தன் திருவாராதனம் செய்யும் பெருமாளை வடுக நம்பியிடம் கொடுத்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமாறு நியமித்தார். ஒரு கூடையில் வடுக நம்பி, திருவாராதனப்பெருமாளுடன், உடையவர் திருவடிநிலைகளையும் ( பாதுகைகள் ) ஒன்றாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டுவந்தார். திருவராதனம் செய்ய வடுக நம்பியிடம் பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணும் படி உடையவர் கூற, வடுக நம்பி கூடையை திறந்து முதலில் ஸ்ரீராமானுஜருடைய பாதுகைகளை வெளியே எடுத்தார். பிறகு பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணினார்.
இதைப் பார்த்த உடையவர் திடுக்கிட்டு “வடுகா! என்னுடைய பாதுகைகளையும், பெருமாளையும் இப்படி ஒன்றாக வைப்பது தகுமோ?” என்று வருத்தப்பட்டார். இதற்கு வடுக நம்பி “அது உங்களுடைய பெருமாள், இது என்னுடைய பெருமாள்!” என்றாராம்.
* தமிழில் ‘நாவகாரியம்’ என்ற வார்த்தை பெரியாழ்வார் திருமொழியில் வருகிறது. இது என்ன நாவகாரியம் என்று குழம்ப வேண்டாம். நா + அ-காரியம் என்று பிரிக்கலாம். அதாவது நாவிற்கு தகாத சொல் ! இந்த வார்த்தைக்கு வடுக நம்பிக் குறித்து ஒரு சம்பவம் ஐதீகமாகக் காட்டப்படுகிறது.
ஸ்ரீராமானுஜருடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் ’….நாராயணாய’ என்ற எட்டெழுத்து திருமந்திரத்தை உச்சரிக்க, பக்கத்தில் இருந்த வடுக நம்பி “எம்பெருமானார் இருக்க எம்பெருமான் திருநாமத்தை சொல்லலாமோ ? இது நாவகாரியம்” என்று கூறி எழுந்து சென்றுவிட்டாராம்.
* ஸ்ரீரங்கத்தில் உடையவர் பெரிய பெருமாள் வடிவழகை சேவித்துக்கொண்டிருக்கும் போது, உடையவருடைய வடிவழகை நம்பிச் சேவித்துக்கொண்டிருப்பாராம். ஒரு நாள் இதைக் கவனித்த உடையவர் “பெருமாளுடைய கண்ணழகைப் பார்” என்ற போது
“என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே” என்று நம்பி எம்பெருமானார் கண்களை காட்டினாராம்.
* பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாது என்பது வழக்கம். அதனால் எம்பெருமானார் அமுது செய்த சேஷ ப்ரஸாதத்தை வடுக நம்பி உண்ட பின் தன் தலையிலே கைகளைத் துடைத்துக்கொள்வாராம். இதை ஒருநாள் கவனித்த உடையவர் கோபிக்க அன்று நம்பி தம் கைகளை அலம்பி சுத்தம் செய்தார்.
மறுநாள் உடையவர் கோயில் பிரசாதத்தை நம்பியிடம் தர அதைச் சாப்பிட்ட பின் கைகளை அலம்பிய போது “வடுகா! என்செய்தாய் ?” என்று எம்பெருமானார் கேட்க “நேற்று அருளிச்செய்தபடி செய்தேன்” என்றாராம்.
“உம்மிடம் தோற்றோம்!” என்றாராம் உடையவர்.
* ஒருநாள் திருவீதி புறப்பாட்டின் போது பெருமாள் மடத்து வாசலில் எழுந்தருள “வடுகா! பெருமாளைச் சேவிக்க வா” என்று உடையவர் அழைக்க, அப்போது திருமடைப்பள்ளியில் உடையவருக்குப் பால்காய்ச்சிக் கொண்டிருந்த வடுகநம்பி “உம்முடைய பெருமாளை சேவிக்கவந்தால், என்னுடைய பெருமாளுக்கு பால் பொங்கிவிடுமே!” என்று பதில் சொன்னாராம்.
இதை நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்தால் எம்பெருமானார் மீது ஒருவருக்கு இவ்வளவு பக்தி கூட வருமா என்று யோசிப்போம். இராமானுசர் திருவடிகள் செய்யும் மேஜிக் அது.
ஸ்ரீ யதிராஜன் மேல்கோட்டை ( படம் இணையம் ) |
இராமானுச நூற்றந்தாதின் முதல் பாசுரம் இது.
பூமன்னு மாது பொருந்திய மார்பன் - புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் - பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம், அவன் நாமங்களே.
ஒரு வரி விளக்கம் : “நம்மாழ்வார் அடி பணிந்த இராமானுசருடைய திருவடிகளை நாம் பொருந்திவாழ அவருடைய திருவடிகளையே போற்றுவோம்”
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஓர் ஆசாரியனைச் சேவித்து பஞ்சஸ்ம்ஸ்காரம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது திருமந்திரம் முதலிய மந்திரங்களை உபதேசம் பெறுவது.
ஊமை அவனுக்கு காதும் கேட்காது என்றால் எப்படி உபதேசம் பெற முடியும் ?
எம்பெருமானார் என்ற பெயருக்கு ஏற்றார் போல் அவர் செய்த காரியத்தை பார்த்தால், அட, நாம் அந்த காலத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தமாகக் கூட இருக்கும்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ( படம் இணையம்) |
திருவரங்கத்தில் ஒருசமயம், காது கேட்காத ஊமை ஸ்ரீராமானுஜரிடம் வந்து ஏதோ செய்கை செய்து காண்பித்தார். உடனே அவனை தனியாக அறைக்கு அழைத்துச் சென்றார். இதைக் கவனித்த கூரத்தாழ்வான் என்ன நடக்கிறது என்று சாவி துவாரத்தின் வழியே பார்த்த போது திடுக்கிட்டு அழ ஆரம்பித்தார்.
உள்ளே அவர் கண்ட காட்சி - எம்பெருமானாருடைய திருவடியை அந்த ஊமையின் தலையில்…வைத்து உபதேசம் செய்துகொண்டு இருந்தார்.
“ஐயோ ! கூரத்தாழ்வானாகப் பிறந்து வேத சாஸ்திரங்களைக் கற்று கெட்டேன்... ஒன்றும் அறியாது இந்த ஊமையாகப் பிறந்திருந்தால் அடியேனுக்கும் இப்படி உபதேசித்திருப்பார். ஆனால் அந்தத் தகுதியற்றவனாகி விட்டேனே” என்று ஆழ்வான் தன்னை தானே வெறுத்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு கீழே உள்ள பாசுரத்தை ஒரு முறை படித்தால் அதில் எவ்வளவு உண்மைப் பொருள் பொதித்திருக்கிறது என்று உங்களுக்குப் புரியும்.
கார் ஏய் கருணை இராமாநுச! இக் கடல் இடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்; வந்து நீ என்னை உய்த்த பின், உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே.
மீண்டும் ஒரு வரி விளக்கம் : வேறுபாடு காணாத எங்கும் மழை பெய்யும் மேகம் போல கருணை காட்டுபவர் நம் இராமானுசர்.
ஸ்ரீ உடையவர் - ஸ்ரீரங்கம் ( படம் : யதிராஜன் ) |
வடுக நம்பி எப்படி தன் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபாத தீர்த்ததினால் அவர் சிஷ்யரானார் என்று அந்தக் கதைக்குள் செல்வதற்கு முன் ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வாசகர்களை ஸ்ரீராமானுஜருடன் பயணம் செய்ய அழைக்கிறேன்.
கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கி, அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள்.
விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க
“கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?”
அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உபதேசித்துவிட்டு ஸ்ரீமானுஜரின் பிரபாவத்தைச் சொல்லிவிட்டு ‘நமக்கு எல்லோருக்கும் பரமாசார்யர் எம்பெருமானார் நீங்கள் அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கள்” என்று உபதேசம் செய்தார் என்று பதிலை கேட்ட உடையவர்
“நல்லான் என்கிற காளமேகம் நடுக்காட்டிலும் மழை நீரைப் பொழிய செய்துள்ளதே!” என்று வியப்புற்றுச் சொல்ல அங்கிருந்த ஒரு சீடர்
“இவர் தான் எம்பெருமானார்” என்று உடையவர் திருவடிகளை காட்ட அவர்கள் விழுந்து எம்பெருமானாரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்கள். ( நல்லான் பற்றி பிறகு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்)
அன்று இரவு அவர்களுக்குத் தேனும் தினைமாவும் அமுது செய்ய கொடுத்து இரவு கண்வளர்ந்தருளினார்கள் ( உறங்கினார்கள் ).
மறுநாள் வேடர்கள் ஸ்ரீராமானுஜரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துச் சென்று மலை மேலே இருக்கும் ஒரு வேடுவர் தலைவனிடம் விட “பிராமணர்கள் பட்டினியிருக்க நாம் எப்படி உண்ணலாம் ?” என்று நினைத்து அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் “கட்டளை வாரி” என்ற பிராமணன் இல்லத்துக்கு அனுப்பி “சீக்கிரம் இவர்களுக்கு அமுது செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று ததியாராதனைக்கு வேண்டிய பொருள்களையும் கொடுத்தனுப்பினான்.
அப்போது அந்த இல்லத்தில் பிராமணன் இல்லை. அவன் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் அந்தச் சீடர்களை வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் “வேண்டாம்” என்றார்கள்.
அந்தப் பெண் “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் ? இங்கே அமுது செய்வதில் சந்தேகம் ஏதும் வேண்டாம். அடியாளும் எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவளே!” என்று அதிர்வைக் கொடுத்தாள்.
”எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தது எப்படி ?” எப்படி என்று சீடர்கள் முழிக்க அந்த அந்தணப் பெண் பழைய கதையை இவ்வாறு சொன்னாள்.
”ஒரு சமயம் இங்கே மழை இல்லாமல் பஞ்சம் வந்தது. நானும் என் கணவரும் ஸ்ரீரங்கம் சென்று சில காலம் வசித்தோம். அங்கு எம்பெருமானார் தினம் மாதுகரம் செய்ய வருவார். அவரைப் பிரபுக்களும், செல்வந்தர்களும் விழுந்து வணங்குவார்கள். ஒருநாள் மாதுகரம் செய்ய வரும் போது அவரைத் தடுத்தேன்.
“இப்படிச் செய்யலாமா ? ஏன்” என்று கேட்டார் உடையவர் அதற்கு நான்
“மகாராஜாக்களும், பிரபுக்களும் உமது திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்கள் ஆனால் நீரோ மாதுகரம் செய்கிறீர் எதனால் ?” என்று கேட்டேன் அதற்கு அவர் புன்முறுவல் கொண்டு “நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்லவார்த்தைகள் சொல்லுகையாலே” என்றார்
“அந்த நல்ல வார்த்தைகளை அடியவளுக்கும் அருளக்கூடாதா ?” என்று கேட்டேன்
அவரும் மனமுவந்து என் காதில் அந்த மகா மந்திரத்தை ஓதினார்.
எங்கள் ஊரில் மீண்டும் மழை பொழிந்து பஞ்சம் போனது. ஊருக்குப் புறப்படும் போது அவர் எனக்குக் காதில் சொன்ன வார்த்தையை மறந்துபோனேன். மீண்டும் அவரைச் சேவிக்க சென்றேன். அப்போது
“தேவரீர் முன்பு அருளிச் செய்த நல்வார்த்தையை மறந்துபோனேன் அதை என் நெஞ்சிலே நிலைக்கும்படி மறுபடி அருளிச்செய்ய வேணும்” என்றேன். மீண்டும் ஒரு முறை த்வயத்தை நெஞ்சிலே நிலைக்கும்படி உபதேசித்தார்.
புறப்படும் முன் “தேவரீர் ஆத்ம ரக்ஷயாக ஏதேனும் ஒன்றை தந்தருள வேண்டும்” என்று கேட்டேன் … எம்பெருமானாரின் கருணையை என்ன என்று சொல்வேன். தாம் தரித்திருந்த திருவடி ஜோடியைக் கழற்றி பிரசாதித்து அருளினார். அவர் உபதேசங்களுடன், ஸ்ரீபாதுகைகளுடன் இங்கு வந்து சேர்ந்தோம். பிறகு மழைக்குக் குறைவில்லை. வாழ்வு வளம் பெற்றது. அதனால் பயப்படாமல் இங்கேயே நீங்கள் அமுது செய்யலாம்” என்றாள்.
எம்பெருமானார் பாதுகை - கொங்கில் பிராட்டி திருமாளிகை |
சீடர்களுடன் உடையவர் வெள்ளை சாத்திக்கொண்டு இருந்தால் அவளுக்கு ராமானுசர் இருக்கிறார் என்று தெரியவில்லை. உடையவர் அவள் கூறியவற்றை தம் திருவுள்ளத்தில் நன்கு ஆராய்ந்து அமுது உண்ணச் சம்மதித்தார். தம் சீடர் ஒருவரை அவள் செய்யும் காரியங்களைக் கண்காணிக்கும்படி நியமித்தார். பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தார். அந்தச் சீடர் மேற்கொண்ட விஷயத்தைச் சொன்னார்.
”அந்தப் பெண் சுத்தமான புடவை தரித்துக்கொண்டு, சமையலறை சென்று “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று கூறி தளிகை செய்துமுடித்து, கதவைச் சாத்திக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து, அதற்கு அமுது கண்டருளப் பண்ணி பிறகு வெளியே வந்து “அமுது செய்யலாம்” என்றாள்.
உடையவர் அந்தப் பெண்ணை பார்த்து “உள்ளே கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள்
“எம்பெருமானார் ஸ்ரீபாதுகைளைச் சோதித்து அவற்றுக்கு அமுது கண்டருளப் பண்ணினேன்” என்றாள்.
“அவற்றைக் காட்டு” என்றார் உடையவர்
அவளும் அதைக் கொண்டு வந்து காட்ட தமது பாதுகைகள் என்று கண்டுகொண்ட ராமானுசர் “ராமானுசரிடம் நீ உபதேசம் பெற்றது உணமையாகில் எங்களில் யாராவது இராமானுசர் போலிருக்கிறாரா ?” என்று கேட்டார்
அப்போது பொழுது சாய்ந்துவிட்டபடியால் விளக்கு ஒன்றை ஏற்றிவந்து அந்தப் பெண் ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு வந்து ஸ்ரீராமானுசர் முன்பு வந்ததும் நின்று ஊன்றிக் கவனித்து அவர் திருவடிகளை கண்டதும் திகைத்து “திரிதண்டமும், காஷாயமும் இல்லாததால் தெரியவில்லை என்று அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றிய உடையவர் அங்கே சில நாள்கள் தங்கி திரிதண்ட காஷாயாதிகளை தயாரிக்கச் சொல்லி அவற்றை தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாள் முன்பு சமர்ப்பித்து அடிபணிந்து பழைய எம்பெருமானாராக தன் பயணத்தை தொடர்ந்தார். நாமும் தொடரலாம்..
எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்கே அவருக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. மேல்கோட்டை பக்கம் மிதுலாபுரி சாளக்கிராமம் என்ற ஊரில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அவர்களைத் திருத்த வேண்டும் என்று எண்ணிய உடையவர் முதலியாண்டானைப் பார்த்து “அவர்கள் நீர் எடுக்கிற துறையிலே திருவடிகளை விளக்கிவாரும்” என்று நியமித்தார். அவரும் அப்படியே செய்தார். யார் எல்லாம் இவர்களை எதிர்த்தார்களோ புனிதமான தீர்த்தத்தை பருகியதால் மறுநாள் கிராமமே ஸ்ரீராமானுசரை அணுகி அவர் திருவடியை ஆச்ரயித்தார்கள். அவர்களில் ஒருவர் ஆந்தர பூர்ணர் எனும் வடுக நம்பி ! அவருக்கு ஸ்ரீவைஷ்ணவ தாத்பர்யங்களை உபதேசம் செய்தார்.
இன்றும் இருக்கிறது ! |
அங்கே திருவடிகளில் நித்யசேவை உண்டாகும் படி தம்மை ஆசிரயித்ததைக் கல்வெட்டிலே பொறித்து வைத்தார் ( இன்றும் இது அங்கே இருக்கிறது ) . எம்பெருமானார் மேலும் அங்கே மறைவாக ஓரிடத்தில் நிக்ஷப்த தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார் ( இன்றும் ஸ்ரீராமானுசர் திருவடிகளாம் முதலியாண்டான் ஸ்பரிசம் பட்ட தீர்த்தம் அங்கே இருக்கிறது. )
’கடைசி வரை’ உடையவரின் பாதுகைகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டார் வடுக நம்பி.
தினமும் காலை நீராட்டத்துக்கு புறப்படும் போது அவருடைய திருவடி நிலைகளைத் தண்டனிட்டு அவற்றைக் கொண்டுவந்து உடையவர் திருமுன்பே வைத்தவர் வடுகநம்பி. தினமும் ஸ்ரீராமானுஜர் ’குள்ளக்குளிரக் குடைந்து நீராடிய’ பின் காஷாயங்களை தரித்து திருமண்காப்பு சாத்தியருளிய பின் தினமும் வடுக நம்பிக்கும் தன் கையால் தான் சாத்துவார்.
பின் அழகு ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூர் |
எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து தன் சிஷ்யர்களுக்கு உடையவர் சொன்ன சத்விஷயங்களை காலக்ஷேபம் செய்தார். முக்கியாக எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று உபதேசம் செய்து கடைசிவரை வேறு ஒரு ஸ்ரீபாத தீர்த்தமும் ஏற்காமல் எம்பெருமானார் திருவடியை சென்று அடைந்தார்.
வடுகநம்பி பரமபதித்த செய்தியை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் “வடுகநம்பி திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்” என்று கூறிய உடனே அவர் அதிர்ச்சியாகி மூர்ச்சை அடைந்தார். பிறகு உணர்வு திரும்பியபின் வடுக நம்பி உடையவரிடத்தில் பரம பக்தி கொண்டிருந்தார். எனவே அவரைத் திருநாட்டுக்குப் போனாரென்று சொல்லக்கூடாது. அவர் உடையவர் திருவடிகளை அடைந்தார் என்றே கூற வேண்டும் என்றாராம்.
மேலே ‘கடைசி வரை’ என்று சொல்லியிருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம். எம்பெருமானார் நியமனப்படி ஸ்ரீமுதலியாண்டான் திருகுமாரரான கந்தாடையான் தை மாதம் புஷ்ய நக்ஷத்ரத்தன்று ஸ்ரீபெரும்பூதூரில் தானுகந்த திருமேனியைப் பிரதிஷ்டை செய்த போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீராமானுஜருக்கு உடலில் சிறிது சிறிதாகத் தளர்ச்சி ஏற்பட்டது. தம்முடைய சக்தியனைத்தையும் இப்படியாக ஸ்ரீபெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு எம்பாரின் மடியிலே தலைவைத்து, வடுக நம்பியின் மடியிலே திருவடிகளை நீட்டி பெரியநம்பி, ஆளவந்தார் திருபாதங்களை தியானித்து, த்வயமதிரத்தை உச்சரித்துக்கொண்டு திருநாடு அலங்கரித்தார்.
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்
அதாவது ”வேப்ப மரத்தில் உண்டான புழு அம்மரத்தின் இலை முதலியவற்றைச் சுவைபட உண்ணுமேயன்றி வேறொன்றை உண்ணாது. அது போல உனக்கே அடிமைப்பட்டவன் நான் என்பது போல முதலியாண்டான், வடுகநம்பி எல்லோரும் உடையவரின் ஸ்ரீபாத தாங்கிகள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன பாசுரத்துக்கு அர்த்ததை பார்க்கலாம்.
பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் திருவடிக் கீழ் விழுந்து கிடப்பவர்கள் நெஞ்சிலும் இராமானுசரே எழுந்தருளி உள்ளார். ஞானியராகிய வேதியர்களால் வணங்கப்படும் திருவடிகளை உடையவரான இராமானுசனை வணங்கும் பெரியோர்கள் கிளர்ந்து கூத்தாடும் இடமே அடியவனாகிய எனக்கு நிலையான இருப்பிடம் !
இங்க் பேனாவை கழட்ட முடியாமல் பற்கலால் கடித்து கழட்டுவது போல திருமங்க ஆழ்வார் தன் பற்கலால் பெருமாளின் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுக்கும் போது பாத ஸ்பரிசம் பெற்று திருமங்கை ஆழ்வார் ஆனார்.
பெரியாழ்வார் “உன் சேவடி செவ்விதிருக்காப்பு” என்கிறார்.
நம்மாழ்வார் மோக்ஷம் - ஸ்ரீரங்கம் |
எல்லா அழ்வார்களையும் கூர்ந்து படித்தால் எல்லோரும் திருவடியையே பற்ற வேண்டும் என்ற ஒரே கருத்தை பல விதமாக சொல்லியிருப்பது தெரியும். அவன் பாதத்தை பற்றினால் பரமபதம் என்று நிச்சயம் என்கிறோம். பரமபதம் என்றால் ஏதோ இடம் இல்லை - பரமன் என்றால் திருமால் என்று பொருள், பரமபதம் என்றால் திருமாலின் பாதம் என்று பொருள் !
ஸ்ரீரங்கம் கார்த்திகை மண்டப வாசல் சிற்பம் ( படம் : Gopal ) |
பெருமாள் கோயில்களில் தீர்த்தம், சடாரி, திருமண் எல்லாம் அவன் திருவடி சம்பந்தம் பெற்றவை. அதனால் தான் அவ்வளவு ஏற்றம். அடுத்த முறை கோயிலுக்கு செல்லும் போது இதை நினைவு வைத்துக்கொண்டு வேறு பொருள்கள் எல்லாம் கேட்காமல் ”பொற்றாமரை அடியே போற்றும் பொருள்” என்று கேட்க வேண்டும் அதற்கு ஒரே வழி உடையவர் திருவடி !
- சுஜாதா தேசிகன்
(24.4.2018)
நம்பெருமாள் சேரகுலவில்லி தாயார் சேர்த்தி சேவை
( இந்த கட்டுரையை வடுக நம்பி திருநட்சத்திரம் அன்று அவரைப் பற்றி எழுத ஆரம்பித்து, உடையவர் திருநட்சத்திரம் அன்று கொஞ்சம் எழுதி பிறகு முதலியாண்டான் திருநட்சத்திரம் வர அவரைப் பற்றியும் எழுதி கடைசியில் இன்று முடித்தேன் )
முகப்பு படம் : உடையவர் திருவல்லிக்கேணி - படம் : சப்மத் குமார் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
Excellent.
ReplyDeleteவடுகநம்பிகளின் ஆசார்ய பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.
ReplyDeleteநெடிய இடுகை, ஆனால் சிறப்பாக வந்துள்ளது.
ReplyDeleteஇராமர் படம்-கேஷவ் வரைந்தது என நினைக்கிறேன்.
“மாமேகம் சரணம் வ்ரஜ” - திருநின்றவூர் பக்தவத்சலன் கைகளிலும் இதனைக் கண்டேன்.
'அடிக்கீழ்'-அகலகில்லேனுக்கு அடுத்ததான 'அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியேன் வாழ்வின்' பாடலை விட்டுவிட்டீர்களே.