Skip to main content

ஒரு கிரைம் கதை



ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்


SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH  |
Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa   ||

Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti ( i.e. the matterat large) is their great womb (mother) and I am the sowing father (to all beings)
Shrimad Bhagawad Gita  Chapter 14 Shloka 4


அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ அல்லது குற்றவாளியோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை.


வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரம் முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில் தோகை போல அடுக்கப்பட்ட அன்றைய நாளிதழில் ஒர் இறக்கையைப் பிடுங்கி, பக்கத்தில் இருக்கும் சரவணாவில் “காபி... சக்கரை இல்லாம...” என்று தினத்தந்தி ‘ஆன்மீக அரசியலை’ பிரித்தபோது, முதுகுக்குப்பின் “கண்டரோல் ரூம்... ஓவர்... ஓவர்” என்ற இரைச்சலான வாக்கிட்டாக்கி அதைக் கலைத்து, போலீஸ் என்று உணர்த்தியது.

ரயில் நிலையத்தில் சத்ததுக்கு நடுவில் தூங்கும் குழந்தையைப் போல அந்த இரைச்சலை சட்டைசெய்யாமல் மொபைலில் பேசிக்கொண்டு இருந்தார்.


“சார் நம்ம ஜுரிஸ்டிக்ஷன்தான்...”

“....”

“சார்.. நைட் முழுக்க மெரினாவிலதான் டியூட்டி.. இப்ப தான் காலைல வந்தேன்.”


“....”

“ஆமா சார் என்.ஆர்.ஐ. கன்பர்ம் சார்... அந்த ஜவுளிக் கடை ஓனர் பையன்தான் சார்.”


“....”

“அடிச்சு சொல்றான் சார்..”


“.....”

“நம்ம ஸ்டேஷன்லதான் பையன உக்கார வைச்சிருக்கேன் சார்.”


“.....”


“ஓகே சார்... சார்... சார்...” என்று பேச்சு துண்டிக்கப்பட்டு இரைச்சலுக்கு நடுவில் “சாவுக்கிராக்கி...” என்று முணுமுணுத்துக் கொண்டு ஒரு விதப் பதட்டத்தில் இருந்தது தெரிந்தது.

காபி வர அதை எடுத்துச் சுவைத்தேன். சக்கரையுடன் இருந்தது.

“ஹலோ... சக்கரை இல்லாத காபி கேட்டா... பாயசம் மாதிரி...” என்ற போது பின்பக்கத்திலிருந்து, “உங்க காபி இங்கே வந்திருச்சு... சீனியே.. இல்லாம” என்றார் போலீஸ் அதிகாரி. திரும்பிப் பார்த்தேன். நல்ல உயரம், அளவான மீசையுடன் சினிமாவில் வரும் சமுத்திரகனி மாதிரியே இருந்தார்.

“சாரி சார், மாறிப்போச்சு. வேற எடுத்தாறேன்” என்று சர்வர் இரண்டு காபியையும் எடுக்க, “வேற காபி கொண்டுவா... அப்பறம் இதை எடுத்துகிட்டு போ... இதையே மாத்தி கொடுத்தா?”

“அப்படில்லாம் செய்ய மாட்டோம் சார்...” என்று உள்ளே மறைந்தான். நான் காவல் அதிகாரியைப் பார்த்துச் சிரித்து, “உங்க வேலையே ரொம்ப டென்ஷன்... இப்ப குழப்பமான அரசியல் சூழ்நிலை வேற..?” என்று சொல்லிக்கொண்டே, முதல் பக்கத்தைப் பார்த்தபோது அவரும் முதல் பக்கச் செய்தியைப் பார்த்தார்.

“ஆமா... தேர்தல் வந்தா நிம்மதி... எல்லா இடத்திலேயும் இழுக்கிறாங்க.... டிரான்ஸ்பர் நிச்சயம்.”

அதற்குள் இன்னொரு போன் வந்தது.

“எஸ் சார்.”

“....”

“நானே பாஸ்போர்ட்டை பாத்துட்டேன்... யூ.எஸ். சிடிசன்தான் சார்.”

“....”

“நம்ம ஸ்டேஷன்தான்.”


“...”

“சார்... எஸ் சார்.”

அவர் பேசியபோது அவர் முகத்தில் மேலும் டென்ஷன் கூடியிருந்தது.

“சார் இது உங்களுக்கு” என்று சர்வர் கொண்டு வந்த காபியை கையில் எடுத்துக்கொண்டே, “எந்த மாதிரி எல்லாம் கேஸ் வருது பாருங்க...” என்றார்.

“என்ன ஆச்சு சார்?”

“இன்னிக்கு காலையில ஐஞ்சு மணிக்கு ஒத்தன் வந்தான்.. என்.ஆர்.ஐ.
போன வாரம்தான் யு.எஸ்ஸிலிருந்து வந்திருக்கிறான். இங்கேதான் சாரி ஸ்ட்ரீட்டுல வீடு.”

“பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சா?”

“அதெல்லாம் இல்ல. எங்க அப்பா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு ஒருத்தன் என்னை ஏமாத்துகிறான் என்கிறான்.

“அது யார்?”

“அவன் அப்பா!”

“அது எப்படி சார்? அவனோட அம்மா?”

“அவங்களும் போலியாம்.”

“இண்ட்டரஸ்டிங்...”

“எங்களுக்கு அப்படி இல்ல. பெரிய இடம், என்.ஆர்.ஐ வேற. ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ண வேண்டியிருக்கு. மீடியா வேற பிரேக்கிங் நியூஸுக்கு அலையிது. சரி...நீங்க என்ன செய்யறீங்க”

“.....சாப்ட்வேர் கம்பெனியில… பிராஜக்ட் மேனேஜர்..”

“கந்தன்சாவடியிலே இருக்கே அதுவா?”

“ஆமாம்…. அதே தான்.… ”

“நம்ம அக்கா பையன் ஒருத்தன் இருக்கான் ஜாவா எல்லாம்  படிச்சிருக்கான்.. உங்க கம்பெனியில இழுத்துவிட முடியுமா ? .. ”

“நம்பர் தரேன் அவனை பேச சொல்லுங்க”

”இப்ப அந்த பையன் எங்கே...”

“எந்த பையன் ?”

“இந்த பெரிய இடத்து பையன்…”

“நம்ம ஸ்டேஷன்ல தான் இருக்கான்...” தீடீர் என்று நினைவு வந்தது போல அவசரமாக காபியை குடித்துவிட்டு புறப்பட்டார்

இதை வைத்துக்கொண்டு க்ரைம் கதை ஒன்றை எழுதலாமே என்ற எண்ணமும், கூடவே "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்று மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காபிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் பின்னால் தன்னிச்சையாகச் சென்றேன்.

செல்போனில் யார் நம்பரையோ தேடிக்கொண்டு இருந்தவரிடம் சென்ற போது

”ஆங்… உங்க நம்பர சொல்லுங்க அக்கா பையனை பேசச் சொல்றேன்… பார்த்து ஏதாவது செய்யுங்க…”

என் நம்பரை மிஸ் கால் அடித்து சேமித்துக்கொண்டார்.

“என்னால முடிஞ்சத செய்யறேன்… ” என்று தயங்கி “அப்பறம் . ஒரு ரிக்வஸ்ட்” என்ற போது திரும்பினார்.

“அந்த பெரிய இடத்து பையனை பார்க்கலாமா ?”

“எதுக்கு... நீங்களும் மீடியாவா?”

“அதெல்லாம் இல்ல… சும்மா ஒரு ஆர்வம் தான்…”

பத்து செகண்ட் யோசைனைக்கு பிறகு.

“வாங்க ஆனா மொபைல்ல படம் ... ஃபேஸ்புக், வாட்ஸாப் எல்லாம் கூடாது.. சரியா?” என்றார் முன் ஜாக்கிரதையாக.

“ஓகே சார்.”

சல்யூட் அடித்த கான்ஸ்டபளிடம், “ஸ்டேஷன் வாசல்ல பைக் நிப்பட்டியிருக்காங்க... க்ளியர் செய்ங்க”

“என் பைக்தான்.”

“சரி ஓரமா நிப்பாட்டுங்க...”

சிகப்பு, நீல வண்ண போர்டில் ஆர்-4 என்று எழுதியிருக்க அதன் கீழே பேரிகேட் ஒன்று கால் இல்லாமல் சாய்ந்திருந்தது. அதன் மீது ஏதோ ‘சில்க்ஸ்’ என்று எழுதியிருப்பதைக் கடந்து உள்ளே சென்றபோது பார்சல் தோசை வாசனை என் மூக்கிலும், தோசை கான்ஸ்டபிள் வாயிலும் போய்க்கொண்டு இருந்தது.

சல்யூட்டை வாங்கிக்கொண்டு இன்ஸ்ப்பெக்டரை தொடர்ந்தேன். அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அந்த பையன் தன் ஐபோனை தடவிக்கொண்டு இருந்தான்.  மெலிதான லினென் சட்டை, முட்டி பகுதியில் ஒட்டுப்போட்ட ஜீன்ஸ் இரண்டு பட்டன் போடாமல் உள்ளே வெள்ளை நிற பனியன் அதில் கருப்பாக ஏதோ எழுதியிருக்க ஜிஎஸ்டி அளவுக்கு சிரித்தான்.

போலீஸ் அதிகாரி இருக்கையில் உட்கார்ந்தபோது மேஜை மீது அவர் பெயர் ஷண்முகம் என்று காட்டியது. தூசு ஸ்ப்ரே அடித்த மேஜை கண்ணாடிக்குக் கீழே காஞ்சி பெரியவர் ஆசிர்வதித்துக்கொண்டு இருந்தார்

அந்த பையன் அவர் முன் வந்து உட்கார்ந்தான்.

“எதுக்குப்பா உங்க அப்பா மாதிரி வேஷம் போட்டு ஏமாத்தணும் ?”

“தட்ஸ் வை ஐம் ஹியர் ”

”சரி உங்க வீட்டு நம்பர் கொடு...”

கொடுத்தான். இன்ஸ்பெக்டர் போனில் பேச ஆரம்பித்தார்.

“நான் பாண்டி பஜார் R4 போலீஸ் இன்ஸ்பெக்டர் சன்முகம் பேசறேன். ஒண்ணுமில்ல சார். ஒரு... ஸ்டேஷன் வர முடியுமா?”

”...”

"பையன் இங்கே தான் இருக்கான்”

”...”

“வாங்க சார் பேசிக்கலாம்”

”.....”

“அவசரம் இல்ல... ஆனா இன்னும் ஒன் ஹவர்ல வாங்க... ராஜ்பவன் டியூட்டி...”

மறு முனையில் பதற்றமான சூழ்நிலையை உணர முடிந்தது.

“உங்க அப்பா வராரு”

“லுக் ஹி இஸ் நாட் மை டாட் ...” என்று அந்த பையன் ஐபோனில் ஆப் ஆனான்.

நாற்பது நிமிடத்தில் ஸ்டேஷன் வாசலில் ஒரு ஆடி ஏ-3 கருப்பு நிற கார் வந்து நின்றது. செண்ட்டும் கோல்கேட் வாசனையின் கலவையாக நுழைந்தவர் முகத்தில் கலவரம் தெரிந்தது. கையில் வெயிட்டான வாட்ச் பளபளத்தது. சமீபத்தில் அடித்த டை என்பதை மீசை காட்டிக்கொடுத்தது. கூலிங் கிளாஸுடன் ஐம்பத்தைந்து வயது.. என்று யூகிக்கும் போது

”இன்ஸ்பெக்டர் நான் சொல்றதை கேளுங்க” என்று கூலிங் கிளாசை கழட்டிய போது கண்கள் சிகப்பாக சரக்கு என்றது.

“பொறுமையா பேசுங்க... நீங்க அவன் அப்பா இல்லையாமே ”

“சார்..நான் தான் சார் அவன் அப்பா” என்று சுற்றிமுற்றும் பார்த்துக்கொண்டார். பார்வையில் அந்தஸ்து கவலை தெரிந்தது.

“ஹீஸ் நாட் மை டாட்”

“இருங்க சார் இங்கே சண்டை வேண்டாம்...”

“இல்ல சார் இவங்க அம்மா கூட வந்திருக்காங்க.. கேட்டுப்பாருங்க..”

“எங்கே ?..”

“கார்ல தான் இருக்காங்க... போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே வர… இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா எங்கே வீட்டுலேயே நீங்க விசாரிக்கலாம்.. அப்பறம் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்”

“என்ன பேசணும் ... ” கேட்டுக்கொண்டே இன்ஸ்பெக்டர் வெளியே சென்றார்

பையன் ’கிரஷ் கேண்டி’ விளையாடிக்கொண்டிருக்க அவனிடம் “ஹலோ” என்றேன்.

திரும்ப அவன் ‘ஹை’ என்று சொல்லுவதற்குள் போன் வர “எக்ஸ்யூஸ் மீ” என்று பேச ஆரம்பித்தான்.

“எஸ். டாட்.. ஐம் இன் போலீஸ் ஸ்டேஷன்..காப்ஸ் ஆர் இன்வஸ்டிகேட்டிங்... வில் கம் ஹோம்”

அவன் பேசி முடித்த பின் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். முகத்தில் கலவரம் தெரிந்தது.

என்னை தனியாக கூப்பிட்டு.

”இந்த கேஸுக்கு நீங்க உதவ முடியுமா ? ”

“நானா?”

“ஆமாம்… .இந்த பையனை கொஞ்சம் ஃபிரண்டிலியா விசாரிக்கணும்... என்ன மோட்டிவ் என்று தெரியலை... ஏதோ குடும்ப பிரச்சனையா இருக்கலாம்.. லவ் மேட்டர் என்று நினைக்கிறேன்”

”பிரச்சனை ஒண்ணும் வராதே...”

“சேச்சே.”

“அப்பறம் ஒரு விஷயம்.”

“சொல்லுங்க….”

”நீங்க வெளியே போன சமயம் அவனுக்கு ஒரு போன் வந்தது...” என்று சொல்ல  “யார் அவன் டாடி பேசினாரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆச்சரியமும் குழப்பமும் கலந்து கண்ணை சுருக்கிக்கொண்டு “எப்படி உங்களுக்கு தெரிந்தது...” என்றேன்.

“வெளியே போன போது இங்கே வந்த அவன் அப்பா தான் போன் போட்டு பேசினார்... ஸ்பீக்கர் போனில். அவன் டாட் டாட்ன்னு  சொல்றான்.. ஆனா நேர்ல பார்த்தா டாட் இல்லையாம்”

”நான் என்ன செய்யணும்?” என்றேன் குழப்பமாக.

”ஒண்ணும் இல்ல அவனோட பழகிப் பாருங்க ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்கலாம். பெரிய இடத்து விவகாரம்… டிபார்ட்மெண்ட் ஆளை போட்டா லீக் ஆகிவிடும்..”

“எவ்வளவு நாள்...”

“பழகுங்க.. பார்க்கலாம்... “

”தினமும் எனக்கு ரிப்போர்ட் செய்யுங்க... வாட்ஸ் ஆப்பில் இருக்கீங்க இல்ல… அதே நம்பர் தானே. ?”

”ஆமாம்” என்று பையன் பக்கம் சென்ற போது சின்னதாக ‘ஹாய்’ யை தொடர்ந்தான்.

“ஹாய்.. சாரி வாஸ் ஆன் எ கால்...ஐயம். தீபக்”

என் பேர் சொன்னேன்.

“க்ரேட்...” என்றதில் அமெரிக்கா கலந்திருந்தது.

கொஞ்சம் நேரம் மௌனத்துக்கு பிறகு அவன் “எவரித்திங் குட் ? “

“யா ”

“தென் வை ஆர் யூ ஹியர் ?”

”ஐ லாஸ்ட் மை பைக்...” என்று சட்டுனு தோன்றிய பொய்யை சொன்னேன்.

“ஐ லவ் பைக்ஸ்… யூ லாஸ் இட் ?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“பட் காட் இட் பேக்… ஜஸ்ட் கேம் ஹியர் டு தாங்க் தெ காப்ஸ்” என்று பொய்யின் ஆயுட்காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

“வாவ்.. வேர்ஸ் இட் ?”

“அவுட்சைட் ”

என்னிடம் அனுமதி கூட கேட்காமல்.. வெளியே ஓடினான்

“வாவ் யமஹா...ஆ15.. கான் வீ கோ ஃபார்  ரைட் ?”

“நாட் நவ்... மே பி இவினிங் ஆப்டர் ஃபை ?”

ஏமாற்றத்துடன் என் நம்பரை வாங்கிக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தான்.

அவர்கள் கிளம்பி செல்லும் போது, போலீஸ் அதிகாரி என்னை காண்பித்து அவனுடைய பெற்றோரிடம்  ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்.


ஆடி புறப்பட்டபின்

“பையனை ஃபிரண்ட் பிடித்துவிட்டீங்க போல.. ?”

“பைக் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் போல . சாயந்திரம் வெளியே போகலான்னு சொல்லியிருக்கிறேன்...”

“சரி பார்த்து போங்க.. வந்தவர் யார் தெரியுமா ?”

“பார்த்த மாதிரி இருக்கு... “

அவர் விரலை நீட்டிய திக்கில் திரும்பிய போது “.... புடவை கடை ஓனர்”

சட்டென்று நினைவுக்கு வந்து ”ஆமாம்... பார்த்திருக்கிறேன்..”

“போன சனிக்கிழமை … அமெரிக்காவிலிர்ந்து கிறுஸ்மஸ் லீவுக்கு வந்திருக்கான்.. தை மாசம் அவனுக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்திருக்காங்க… ஏர்போர்ட்டுல இறங்கியதுமே ”நீ என் அப்பா இல்லை” என்று பிரச்சனை…  உங்களை பத்தி சொல்லியிருக்கிறேன்.. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க...”

அலுவலகத்தில் டிசைன் ரெவ்ய்யூ போது அந்த ’வாட்ஸ் ஆப்’  செய்தி ஒளிர்ந்தது.

“Deepak : What time  ?”

“6pm" என்று பதில் அனுப்பினேன்.

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பி உஸ்மான் சாலை அவசரத்தை கடந்து இடதுபக்கம் திரும்பியபோது எல்லா அவசரமும், சத்தமும் ஸ்விட்ச் போட்ட மாதிரி நின்று அமைதியாக இருந்தது சாரி தெரு.

அமுல் ஐஸ்கிரீம் கடையும், மின்சாரகம்பத்தில் மஞ்சள் நிறத்தில்  “நிரந்திர வைத்தியம்!! மூலம் விரைவீக்கம் பௌத்தரம்.. ஆண்மைக்குறைவு!! ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை...”  சுவற்றில் ’ஸ்வச் பாரத் - தூய்மையான இந்தியா என்று எழுதியிருந்த காம்பவுண்ட் கேட்டில் பெயர் பலகை பித்தளையில் பளபளத்தது.

பைக்கை நிறுத்திவிட்டு இறங்குவதற்குள் செக்யூரிட்டிக்கும் முன்  வேர்வை வாசனை வந்தது.

“யார் சார் ?” என்று கேட்டதில் ”இங்கே பைக் வைக்க கூடாது” என்பது அவர் பார்வையில் தெரிந்தது. சொன்னேன்.

“என்ன விஷயமா ?” என்ற கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு “பார்க்கணும்” என்றேன்.

அங்கே சின்ன பெட்டிக்கடை மாதிரி அவர் இருந்த அலுவகலத்தை அடைந்து இண்டர்காமில் பேசினார்.

“ ஐயா வர டைம்… பைக்கை ஓரமாக வெச்சுட்டு போங்க” என்று அனுமதி கொடுத்தார்.

சி.சி.டிவி கேமராவை கடந்து பளபளத்த கார்களுக்கு நடுவில் மினி கோயிலில் பளிச் சென்று வேட்டி கட்டிக்கொண்டு இருந்தார் பிள்ளையார். வரவேற்பு அரையில் இருந்த செடிகள் பிளாஸ்டிக் மாதிரி இருந்தது. வரிசையாக தஞ்சாவூர் தட்டு கேடயமும், முதலமைச்சர், மந்திரிகளுடன் ஐயாவின் படங்கள் வரிசையாக அடுத்தடுத்த முதலமைச்சர்களுடன் இவருடைய உயர்வும், வயதும் சேர்ந்து கூடியிருந்தது தெரிந்தது.

“ஹேய்”  என்று குரல் கேட்டு திரும்பிய போது தீபக் ரவுண்ட் நெக் வெள்ளை டி.சர்ட்டில் “When nothing goes right… go left” என்றது.

“யூ லுக் வெரி ஃபார்மெல்”.

”ஜெஸ்ட் ரிடர்னிங் ஃபர்ம் வர்க்..”

”ஓ.கே.. வேர் கான்வி கோ ?..” என்று கேட்டுவிட்டு அவனே “பீச் ?” என்றான்

நான் பைக் ஓட்ட பைக் பின்புறம் உட்கார்ந்துகொண்டான். செக்யூரிட்டி ஆச்சரியம் கலைவதற்குள் தி.நகர் ஜனத்தொகையில் கலந்து ஜி.என்.செட்டி சாலையை தொட்டபோது, “திஸ் பைக் இஸ் ஆஸம்...”

“தாங்க்ஸ்”

“யூ நோ வாட் திஸ் பைக் இஸ் 19பிஸ் பவர், ஃபோர் ஸ்டிரோக் அலுமனியம் என்ஜின்..ஆம் ஐ ரைட் ?”

புரியாமல் ”ஐ டோண்ட் நோ… யூ நோ அ லாட் அபவுட் பைஸ்”

“ஐ லைவ் பைக்ஸ்”

பீச்சில் துப்பாக்கியால் பத்து ரூபாய்க்கு இரண்டு பலூனை சுட்டுவிட்டு “க்ரேஸி” என்றான்.

“விச் யூனிவர்சிட்டி இன் அமெரிக்கா ?” என்று பேச்சை ஆரம்பித்தேன்

“மாசசூசெட்ஸ்… யூநோ ?”

“யா…”

“டிட் எம்.எஸ் இன் டாட்டா அனலிடிக்ஸ்..ஐ லவ் திஸ் பிலேஸ்” என்றான் மாங்கா கடித்துக்கொண்டே.

“ஹவ் இஸ் யூ எஸ் ?”

“கூல்… யூ வாண்ட் டு சீ மை பிக்சர்ஸ் ?” என்று ஐபோனை  தேய்த்து சில படங்களை காண்பித்தான்.

ஆரஞ்சு கலர் மரக் கூட்டங்களுக்கு மத்தியில் தனியாக நின்றுகொண்டு இருந்தான் “சீ திஸ்” என்று காண்பித்த படத்தில் அவன் ஒரு ராட்சச பைக்குடன் இருந்தான்.

அந்த படத்தை பெரிது செய்ய முற்பட்ட போது அடுத்த படம் வந்தது. அதில் அவனுடன் அவன் அப்பா, அம்மா ஜீன்ஸுடன் இருந்தார்கள்.

“யூர் டாட் அண்ட் மாம்?”

“யா.. “ என்று கொஞ்ச நேர மௌனத்துக்கு பிறகு “டாட் ஆண்ட் மாம் நௌ அட் மை ஹோம் ஹியர் ஆர் இம்போஸ்டர்ஸ்.. தீஸ் ஆர் மை ரியல் டாட் ஆண்ட் மாம்” என்றான் என்ன பதில் சொல்ல என்று யோசிக்கும் போது இன்ஸ்பெக்டரிடமிருந்து போன்

“...”

“கிளம்பிட்டோம்..சார்…”

”….”

“இன்னும் அரை மணியில இருப்பேன்…”

“லெட்ஸ் கோ” என்று கிளம்பி அவன் வீட்டுக்கு போகும் போது ”யுவர் பை டிஸ்க் பிரேக்ஸ் ஆர் ஆசம்.” என்றான்.

அவன் வீட்டுக்கு வந்த போது “கான் ஐ ரைட் யூர் பைக் ஒன்ஸ் ?”

“வை நாட்” என்று யோசிக்காமல் கொடுக்க ஏ.ஆ.ரஹ்மான் கிட்டாரை எடுப்பது போல எடுத்து அதில் உட்கார்ந்து அவன் இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல பைக்கின் முன் பக்க சக்கரத்தை மேலே உயர்த்தி  ஒற்றை சக்கரத்தில் வீலீங் செய்து புன்னகையுடன் திருப்பும்  போது முகத்தில் அலட்சியம் தெரிந்தது.

“தாங்க்ஸ்… நைஸ் இவினிங்… பை” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

கனவு போல இருந்தது.

இன்ஸ்பெக்டரை பார்க்க சென்றேன்.

ரிப்போர்ட்டரை படித்துக்கொண்டு “கொஞ்சம் வெயிட் செய்யுங்க… ராஜ்பவன் டியூட்டி. வந்துடுவார்” என்றார் ஒரு காக்கி.


சிறுது நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கே வந்த போது எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

“சாப்பிட்டாச்சா ?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் சரவணபவனுக்கு அழைத்து சென்று “இட்லி, மசால் தோசை, காப்பி” என்று சொல்லிவிட்டு ”உங்களுக்கு என்ன ?”

“ஒண்ணும் வேண்டாம் வீட்டுக்கு போய்…”

“சரி… என்ன சொல்றான் உங்க ஃபிரண்ட் தீபக்?”

அமெரிக்கா படிப்பு, டேட்டா மைனிங், பைக் பற்றிப் பல விஷயங்கள் தெரிவது, கடைசியாக வீட்டுக்கு வந்தபோது அவன் செய்த வீலிங் என்று எல்லாவற்றையும் சொன்னேன்.

“தெரியும்” என்றார்.

“அவன் அப்பா, அம்மா பற்றி பேசினீங்களா ?”

“அவன் அப்பா அம்மா படம் அவன் மொபைலில் இருக்கு. அது தான் அவன் நிஜ அப்பா அம்மாவாம்.. வீட்டில் இருப்பது அவன் அப்பா அம்மா இல்லையாம்” என்றேன்.

இட்லி, தோடை வர “மண்டை காயுது…” என்று அவசரமாக சாப்பிட்டு முடித்தார். கிளம்பும் போது

அடுத்த முறை அவனை சந்தித்தால் உங்க பைக்கை கொடுக்காதீங்க… வில்லங்கமான பையன்..அமெரிக்காவில இப்படி ஓட்டி ஆக்ஸிடண்ட் ஆகி ஒரு வார கோமாவுல வேற இருந்தான்..ஜாக்கிரதை” என்ற போது நல்லவேளை என்று நினைத்துக்கொண்டேன். 

”சரி சார்.. வெள்ளிக்கிழமை வரை ஆபீஸில் கஸ்டமர் விசிட்… தீபக்கை பார்க்க முடியாது…”

“சரி பாருங்க.. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க.. என் நம்பர் இருக்கில்ல ?

“அப்பறம் சனிக்கிழமை லீவு தானே ? “

“ஆமாம்”

“அப்ப லஞ்சுக்கு லீமெரிடியன் வந்துடுங்க.. தீபக் அப்பா கூப்பிட்டிருக்கிறார்..தீபக்கையும் கூட்டிகிட்டு வருவாங்க… ஏதாவது பேசி செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கலாம்”


“சரி”

சனிக்கிழமை லீமெரிடியன் சென்ற போது ஸ்டார் ஹோட்டல் வாசனை அடித்தது. தலைக்கு மேலே விளக்குகள் பளபளக்க, ரெடிமேட் புன்னகையுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


“மே ஐ ஹெல்ப்யூ” என்ற லிப்ஸ்டிக் பெண்ணிடம் “ஃபுபே ஹால்” என்றவுடன் அது ஏதோ ஜோக் போல சிரித்துவிட்டு எட்டு அடி கூட நடந்து கதவை திறந்துவிட்டாள்.


ஊழியர்களை போல நாற்காலிகளும் யூனிபார்ம் போட்டுக்கொண்டு இருந்தன. மூலையில் தீபக் அமர்ந்திருக்க அவன் அப்பா அம்மா அவன் எதிரில் அமைதியாக இருந்தார்கள். இன்ஸ்பெக்ட்ருக்கு முன் சூப் இருந்தது.


“கொஞ்சம் லேட்டாவிட்டது…” என்று அமர்ந்தேன்.


“ஹாய்” என்றான் தீபக்  என்னை பார்த்து.  அவன் அம்மா அவனிடம் “பாஸ்தா ” என்பதை சட்டை செய்யாமல் இருந்தான். “எங்களை ஒரு படம் எடுங்க” என்று இன்ஸ்பெக்டர் அவர் மொபைலை என்னிடம் கொடுத்தார். படம் எடுத்து கொடுத்து விட்டு அந்தச் சூழலிலிருந்து தப்பிக்க, சாப்பிடத் தட்டு எடுக்கச் சென்றபோது தீபக் என்னைப் பின்தொடர்ந்தான்.


“யூ நோ வாட் .. மை ரியல் மாம் ஆன் டாட் ஆர் ஆல்சோ ஹியர்” என்றான்.


புரியாமல் விழிக்க ”வில் ஷோ யூ” என்று என்னை அழைத்துக்கொண்டு சென்றான்.


இன்ஸ்பெக்டர் எங்களை பார்த்துவிட்டு பிளேட்டுடன் வர நான் அவரிடம் “சார் அவனுடைய நிஜ அம்மா அப்பாவை வந்திருக்காங்களாம்” என்றேன்


”நிஜ அம்மா அப்பாவா  ?”

“ஆமாம் அப்ப அங்கே பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டு இருப்பது ?” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதை காதில் வாங்காமல்  ”லெட்ஸ் கோ” என்று சொன்ன தீபக்கை பின் தொடர்ந்தோம். எதிரே இருந்த பெரிய சைஸ் கண்ணாடியில் எங்கள் முகம் தெரிய “மை மாம் ஆண்ட் டாட்” என்றான்

“எங்கே ?” என்று நானும் இன்ஸ்பெக்டரும் விழிக்க அவன் காட்டிய இடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. கண்ணாடியில் !

இன்ஸ்பெக்டர் முகத்தில் கலவரம் தெரிந்தது.


சற்று முன் மொபைலில் எடுத்த படத்தை அவனிடம் காண்பித்து “இதில இருப்பது உங்க அம்மா, அப்பா  தானே ?”

தட்டில் ஒரு பட்டர் நான் போட்டுக்கொண்டு  “யா, மாம்.. டாட் ஈட்டிங் பாஸ்தா... .. பட் திஸ் கை லுக்ஸ் லைக் மீ பட் ஹீஸ் நாட் தீபக்” என்றான் பொறுமையாக.


*


Capgras’ delusion: காப்ஸ்ராஸ் மாயை என்பது ஒரு வித மனநலக் கோளாறாகும். விபத்தில் சிலருக்கு மூளை அடிபட்டு, நெருங்கியவர்கள், குடும்பத்தினர் ஒரே மாதிரி மோசடி செய்வதாக எண்ணம் ஏற்படும். வி.எஸ்.ராமச்சந்திரனின் ‘Phantoms in the Brain’ புத்தகத்தில் வந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியது.


- சுஜாதா தேசிகன்

வலம் மார்ச் 2018 இதழில் பிரசுரமானது.

நன்றி வலம்


Comments

  1. something is wrong with publish.
    Picture not loaded and wrapping is missing.

    ReplyDelete
  2. Pl check now. I have republished. thanks

    ReplyDelete
  3. Nice story
    Still the picture is not loaded :-)

    ReplyDelete
  4. செமையான த்ரில்லர்.

    Unexpected end.

    ReplyDelete
  5. /* இதை வைத்துக்கொண்டு க்ரைம் கதை ஒன்றை எழுதலாமே என்ற எண்ணமும், கூடவே "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்று மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. */
    ரசித்தேன். நன்றி !!!!

    ReplyDelete
  6. நல்லா எழுதியிருக்கீங்க. பாதிலேயே இல்யூஷன் ஆக இருக்கும் என்று நினைத்தேன். கதையின் நடை நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. நல்ல திரில்லர். முடிவு எதிர்பாராதது. அருமை.

    ReplyDelete

Post a Comment