Skip to main content

மன்னிக்கும் ஆவி


பட்டப்பகலில் ரகு ரம்யாவை கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை. ரம்யா ரகுவின் மனைவி. ரகு விபத்து என்று சொன்னதை எல்லோரும் நம்பினார்கள்.

பிச்சாவரத்துக்கு சுற்றுலா சென்ற ரகுவும் ரம்யாவும் தனியாக படகு சவாரி... மன்னிக்கவும், கூட மோமோ என்ற நாயுடன் சென்ற போது அந்த சம்பவம் நடந்தது.
மனைவி தண்ணீரில் மூழ்கிவிட்டாள் காணவில்லை என்று ரகு சத்தம் போட்ட போது தான் சற்று
தொலைவில் இருந்தவர்கள் கவனித்தார்கள். உடனே சில படகுகளில் நீச்சல் தெரிந்தவர்கள்
ரகு சொன்ன இடத்தில் குதித்தார்கள் ஆனால் ரம்யாவை கானவில்லை.



ரகு
சொன்ன இடத்தில் மோமோ மட்டும் நீந்திக்கொண்டு இருந்தது.
மோமோ குதித்தது ...ரம்யாவும் குத்தாள் என்று ரகு ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தான். சில மணி நேரம் தேடியும் ரம்யாவை காணவில்லை. மோமோவை யாரோ படகில்
ஏற்றிய போது அது தன் ஈரத்தை உதறித்தள்ளியது. ரகு தன் தோற்றத்தை ஆர்வமும், வருத்தமும் கலந்ததாக ஆக்கிக்கொண்டான்.
அரை மணியில் எல்லோரும் களைப்பாகிவிட்டார்கள். எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது.
ரம்யாவை இனி கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். ரகு கையை காலை
உதைத்துக்கொண்டு அழத் தொடங்கினான். சுற்றி இருந்தவர்கள் வேறு ஏதாவது அசம்பாவிதம்
நடந்துவிட போகிறது என்று ரகுவை கரைக்கு அழைத்து வந்தார்கள். அங்கே போலீஸ் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
இன்ஸ்பெக்டர் அனுதாபத்துடன் ரகுவிடம் வந்து ”என்ன நடந்தது?” என்றார். “எனக்கு நீச்சல் தெரியாது... வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்...சார் பிடிவாதம்... எனக்கு நீச்சல் தெரியும் பயப்படாதீங்க ” என்று ரகு மீண்டும் அழ
தொடங்கினான். மலையாளம் கலந்து உச்சரிப்பில் “நாய்....?” என்று ஆரம்பிக்க...

ரகு தொடர்ந்தான். ”ரம்யாவிற்கு மோமோனா அவ்வளவு பிரியம். என்னைவிட. சென்னையிலிருந்து காரில் வந்த போது மோமோவையும் அழைத்து வந்துவிட்டோம்” ”படிச்சவங்க தானே நீங்க ஏன் லைப் ஜாக்கெட் போடலை”

“ ரம்யா அவ்வளவு அழகு சார். அழகிற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்வார்... விட்டமின் டிக்கு சூரியனில் காய வேண்டுமாம் அதனால் படகில் போய்க்கொண்டு இருந்த போது லைப் ஜாக்கெட்டைலக் கழட்டிவிட்டாள்.... எல்லாம் விதிசார்” “நாயும் தண்ணீரில் குதித்தகாக சொன்னீர்கள் இல்லையா?” “மோமோ அவளுக்கு குழந்தை மாதிரி... எங்கே போனாலும் அது வர வேண்டும். நாய் “
எப்படி குதித்தது என்று என்னை கேட்காதீர்கள்... படகிலும் மோமோவை கையில் வைத்திருந்தாள். கீழே தவறி விழுந்ததா அல்லது குத்தித்தா என்று தெரியவில்லை... திடீர் என்று தண்ணீரில் பார்த்தேன்... ரம்யா கத்திக்கொண்டு குதித்தாள்”
தூரத்தில் படகில் இருப்பவர்கள் “இல்லை” என்பது போல சைகை காண்பிக்க ”எவ்வளவு தான் நல்ல நீச்சல் தெரிந்தாலும், திடீர் என்று குதித்தால் சில சமயம் காலில் கிராம்ப் வந்தால் அவர்கள் தண்ணீருக்கு கீழேயே இருப்பார்கள்” என்று இன்ஸ்பெக்டர் “கொலை” இல்லை என்பதை முடிவு செய்துவிட்டது ரகுவிற்கு தெரிந்தது. சந்தோஷத்தில் மீண்டும்
“ஓ” என்று அழ தொடங்கினான்.
ரம்யாவை ஒழித்தாகிவிட்டது. ஆனால் ரம்யாவிற்கு ப்ரியமான மோமோ ? முடியவில்லை. அறையில் மோமோ இங்கும் அங்கும் தன் எஜமானியை தேடியது. வருத்ததில் சின்னதாக
குலைத்தது. அறையில் ரகு மட்டும் தான்.. அதை உதைக்க ஆயத்தமான போது மோமோ உடனே
ஒரு மூலைக்கு ஓடி ஸ்பிரிங்கை அழுத்தியது போல சுருக்கிக்கொண்டு படுத்துக்கொண்டது.
“ரம்யா இறந்துவிட்டாள்” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு படுக்கையில் குதித்தான்.
மோமோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தது. ”இன்னிக்கு தப்பித்துவிட்டாய்... ஆனால் உனக்கும் கூடிய சீக்கிரம் சங்கு” என்றான் மோமோவைப் பார்த்து. மோமோ எப்படி தப்பிப்பது என்று பார்த்துக்கொண்டு இருந்தது.

“மோமோ நீயும் எனக்கு உதவி செய்திருக்கிறாய்... உன்னால் தான் இதை விபத்து என்பதை போல நம்ப வைத்தேன்.. என்ன அழகாக நீச்சல் அடிக்கிறாய் ? உன்னை வேறு மாதிரி கொல்ல வேண்டும்” என்று சிரித்தான். அப்படியே தூங்கிப்போனான். நல்ல தூக்கத்தில் மோமோ சத்தம்
போட்டது. எரிச்சலில் எதையாவது அதன் மீது விட்டெறியலாம் என்று முழித்த போது மோமோ தன் பின்னங்கால்களில் நின்று கொண்டு இருந்தது. வழக்கமாக ரம்யாவை பார்த்தால் தான் இந்த மாதிரி மெய்மறந்த இன்பம் அடையும்...
“ரகு” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான். கேட்ட குரலாக இருந்தது.. ரம்யாவின் குரல். கனவாக இருக்கலாம் என்று சுற்றும் முற்றூம் பார்த்தான்... டிவியில் ஏதோ விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது. கனவு இல்லை என்ற முடிவுக்கு வந்தான்.
ஷாம்பு விளம்பரம் மாதிரி தலையை பறக்கவிட்டுக்கிண்டு ஈரம் துளியும் இல்லாமல் கார்டன் ஷோரூமில் பார்க்கும் அந்த சின்ன பூ போட்ட மெல்லிய புடவை கட்டியிருந்தாள். உதட்டில் சாயம். கண் சிமிட்டிய போது கண் மீது தங்கத் துகள்கள் தெரிந்தது. கதவைப் பார்த்தான். கதவு மூடியிருந்தது.
”ரகு... என்ன பேச்சையே காணோம்?” என்று மெலிதாக சிரித்தாள். “நீ என்னை இங்கே எதிர்ப்பார்க்கவில்லை இல்லையா ?”

”நீ இன்னும் உயிருடனா இருக்கிறாய் ?”

“சேசே.. நான் உயிருடன் இல்லை... ஆவி” என்று மோமோவை பார்த்து கண் சிமிட்டினாள் ரம்யா மோமோ வாலை இன்னும் பலமாக ஆட்டியது. ரகுவிற்கு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை..

“ரம்யா.. நீ... நீங்க... நிஜ பேய்.. ஆவியா?” என்று உளறினான்.

 ”ஆமாம் நிஜ ஆவி தான்.. . பிழைக்க வாய்ப்பே இல்லாமல் என்னை எப்படி நீரில் அழுத்தி.. கவலைப்படாதே நான்... நிஜ ஆவி தான்”

“அது விபத்து” என்றான் ரகு அவரசமாக

“அட...பேய்கிட்ட எதற்கு பொய் ?.. நான் தான் பார்த்தேனே... நீ என்னை தள்ளிவிட்டு என் தலையைத் தண்ணீருக்கு கீழே அழுத்தி..அழுத்தி... .”

ரகு இப்போது நம்ப ஆரம்பித்தான். “நான் என்ன சொல்லுகிறேன்..” மீண்டும் ரகு பேச ஆரம்பித்த போது ரம்யா…

“எனக்கு கொலை என்று தெரியும்... நான் வந்த இடத்திலும் எல்லோருக்கும் தெரியும்... கொலை செய்யப்பட்டவர்கள் தான் ஆவியாக வருவார்கள். உனக்கு அது தெரியுமா ?” “தெரியாது?” என்றான் ரகு. ரம்யா சிரித்தாள்.

“எனக்கு பயமாக இருக்கிறது” ”கால் வலிக்கிறது” என்று டீவியை அணைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்த போது சோபா அமுங்கவில்லை.
”உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது ரகு.. உன்னை பயமுறுத்த வரவில்லை.. ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் திரும்பி வர முடியும்.. அந்த சலுகை எங்களுக்கு உண்டு.. அந்த வாய்ப்பை விட மனசு வரலை” என்றாள்.

ரகுவிற்கு சற்று தைரியம் வந்தது. “ஏன் வந்தாய்?” என்று கேட்டுவிட்டான்.

“என்ன இப்படி கேட்டுவிட்ட ரகு... அந்த சமயத்தில் உன்னுடன் பேசவே நேரமில்லை.... வாயிலல்லாம் ஒரே தண்ணீ”

“என்ன பேச வேண்டும்?”

“நிறைய இருக்கிறது...உதாரணத்துக்கு மோமோ” தன் பெயரை கேட்டவுடன் மோமோ சின்னதாக குலைத்தது. ரகு சிறிது நேரத்துக்கு முன் மோமோவுடன் நடந்ததை யோசித்துப் பார்த்தான். ”நீ போன பின் மோமோ சந்தோஷமாக இருக்காது..” “நீ தான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும்..சந்தோஷப்படுத்தவேண்டும்.. இப்போ அது அனாதை. திரும்ப உதைக்க கூடாது...சத்தியம் செய்து கொடு”

 “சத்தியமாக.. “என்றான் ரகு.

”தேங்க்ஸ் ரகு....” சற்று நேரம் அந்த அறையில் அமைதி குடிக்கொண்டது.

 “வேற ஏதாவது... “ என்று ரகு கேட்டான்.

“ரகு... ரொம்ப தேங்க்ஸ்... சந்தோஷமா இருக்கு... மோமொ பற்றி இனிமே கவலை இல்லை” ரம்யா ரகுவிடம் வந்து முத்தம் கொடுக்கலாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு ரகு என்றாள்.

“சாரி ரம்யா” என்றான் ரகு.

“நீ எதற்கு சாரி சொல்ல வேண்டும்...எனக்கு இந்த தண்டனை வேண்டும்”

”அப்படியா ? எப்படி ?” ஆச்சரியமாக ரகு கேட்டான்.

“எனக்கு இந்த தண்டனை... கொலை தண்டனை சரி தான்.. உனக்கு நல்ல மனைவியாக இருக்கவில்லை.. ஆபிஸிலிருந்து வந்த உனக்கு காப்பி கொடுக்கவில்லை... நீ முக்கியமான மீட்டிங்கில் இருந்த போது போன் செய்து உன்னை தொந்தரவு செய்தேன்...ஞாயிற்றுகிழமை உன்னைத் தூங்கவிடவில்லை.. இரவு படுக்கையில் டார்ச்சர் செய்தேன்... எனக்கு இந்த தண்டனை சரி தான்”

”அது வந்து.. “ “நான் கொடுத்த அந்த மினி அட்டவணை சரி தானே? அதனால் கில்டி ஃபீலிங் வேண்டாம்”

“ரம்யா!”

”நான் கொலை செய்யப்பட்டது சரி தான்.. உன்னை மன்னித்துவிட்டேன்.. என் அடி மனத்திலிருந்து இதை சொல்லுகிறேன்” கொஞ்ச நேரம் ரகுவையே பாத்துக்கொண்டு இருந்த ரம்யா “வரேன்” என்று புறப்பட்டு சென்றாள். மோமோ சின்னதாக குலைத்த போது வருத்தம் தெரிந்தது.

”திரும்பவும் அந்த நாயை அப்பார்ட்மெண்ட் உள்ளே அழைத்து வர கூடாது” என்று ஆஷா கிட்டதட்ட கத்தினாள். பிங்க் வண்ணத்தில் தொடை தெரிய ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த கோபத்திலும் கவர்ச்சியால் கிறங்கடித்தாள்.

”ஆஷா.. தெரியும்.. ஆனால் இது ரம்யாவின் நாய்.. மோமோ” “மோமோ..இந்த நாய் சனியனை எனக்கு பிடிக்காது என்று உனக்கு தெரியாதா... அதவிட ரம்யாவை”

“தெரியும்..

ஆனால் அதை தனியாக விட முடியாது.. நான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும்”

“ஏன்.. இதையும்..கொலை செய்ய வேண்டியது தானே?. “

“சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்” என்று ரகு சொன்ன பிறகு பல்லை கடித்துக்கொண்டான்.

“என்ன ? யாருக்கு சத்தியம் ?” “ரம்யா போன பிறகு ஒரு வித மானசீக சத்தியம்,,,,அதன் மீது கொஞ்சம் பரிவு காட்டலாம்...யோசித்து பார்.. இப்ப நாம ஃப்ரீ.. நானும் நீயும் ... இரண்டு பேர் மட்டும்... ”

“மூன்று... நான் நீ.. இந்த சனியன்” என்றாள் ஆஷா சரி என்னை உள்ளே விடு என்றான் ரகு.

கொஞ்சம் நேர மவுனத்துக்கு பின் ஆஷா பக்கம் வந்த ரகு அவளின் தொடை மீது தன் கையை வைத்து தடவி கொடுத்தான். ஆஷா கையை விலக்கிவிட்டாள்.

“இன்னுமா என் மீது கோபம் ?”

”கோபம் இல்லை ரகு... வருத்தம்...”

“உனக்காக தானே இவ்வளாவும் செய்தேன்... நீ என் தேவதை..” என்று மீண்டும் கையை எடுத்துக்கொண்டு சென்ற போது மோமோ பின்னங்கால்களில் நின்று கொண்டு இருந்தது.

“இந்த தேவதைக்காகவா என்னை கொலை செய்தாய் ரகு?”

அதிர்ச்சியில் ரகு “ரம்யா.!” என்றான்

“என்ன ரம்யாவா... இன்னும் அவள் நினைப்பா ?” என்றாள் ஆஷா.

”நீ அவளுக்கு இதை பற்றி எல்லாம் சொல்லாதே ரகு... கொலை செய்தவன் கண்ணுக்கு மட்டும் தான் நான் தெரிவேன்... இதை எல்லாம் சொன்னால் உன்னை பைத்தியம் என்று நினைத்துவிடுவாள்.. நீ பாட்டுக்கு அவள் தொடை.. இடுப்பு என்று தடவிக்கொண்டு இரு” என்று அட்வைஸ் செய்தாள் ரம்யா.
”ரகு என்ன ஆச்சு உனக்கு ?”

“ஒன்றுமில்லை.. கொஞ்சம்... அன்னீசியா இருக்கு“

“ஆஷா ரொம்ப அழகு ரகு...என்னைவிட பல மடங்கு” என்றாள் ரம்யா.

ரகு அவசரமாக எழுந்துக்கொண்டு “ஆஷா நான் வீட்டுக்கு போகிறேன்.. பிட் அப்செட் அவ்வளாவு தான்”

”வீட்டுக்கா ? அப்ப இந்த இடம் என்ன ? லாட்ஜா ? போனா திரும்ப இங்கே வர கூடாது”
“என்னமா டிமாண்ட் செய்கிறாள் அவள்.. நானும் அவள் மாதிரி இருந்திருக்க வேண்டும்”

“ரகு... என்ன ஆச்சு” “இந்த மாதிரி டிமாண்ட் செய்தாலே ஒரு வித கிக் கிடைக்கிறது” என்று ரம்யா ரகுவிடம் வந்து காதோடு கிசுகிசுதாள்.

“ஆஷா இன்னொரு நாள் வரேன்... இப்ப நான் கிளம்பறேன்...”

“கிளம்பு ஆனா திரும்ப வரக் கூடாது” “என்னமா டிமாண்ட் செய்கிறாள்.. ரொமான்ஸ் செய்வதற்கு இந்த கிக் வேண்டும்...”

 “டிமாண்ட் செய்தால் எனக்கு பிடிக்காது அதில் கிக் இல்லை . சொன்னா புரிந்துக்கொள்” என்று ரகு கத்தினான்.

”ஏன் கத்தி கூச்சல் போடற...?”

“ஆஷா டியர்” “ஆஷாவும் இல்லை டியரும் இல்லை... நீ கிளம்பு” என்று ஆஷா கதவை திறந்தாள்.

”ஆஷா உனக்காக தானே நான் இவ்வளவையும் செய்தேன்...”

“அது எல்லாம் உன்னுடைய பிளான்... என்னை அதில் சேர்க்காதே..”

“.நீ சரி என்று ஒப்புதல் கொடுத்த பிறகு தானே நான் செய்தேன்”

“உன்னுடைய குற்றத்தில் என்னை சேர்க்காதே..... இனிமே இந்த பக்கம் வராதே.. நாயைத் தடவிக்கொண்டு இரு” என்று ஆஷா ரகுவைக் கதவிற்கு வெளியே
தள்ளிவிட்டுக் கதவை சாத்தும் முன் மோமோ கதவு இடுக்கு வழியாக வெளியே போனது.

வீட்டில் ரம்யா ரகுவிற்க்காக காத்துக்கொண்டு இருந்தாள். ரகு லேசாகக் குடித்திருந்தான். ரகுவிற்கு ஆறுதலாக இருந்தது. “ரகு நீ என்னை கொலை செய்ததற்கு ஆஷா தான் பரிசு அதை தொலைத்துவிடாதே... நான் அந்த
சமயத்தில் வந்திருக்க கூடாது தான் மன்னித்துவிடு”

“பரவாயில்லை.. அவ...”

”ஆஷாவிற்கு என்ன பிரச்சனை?”

 “மோமோ தான்”
“அநியாயம்... என்னை மாதிரியே அவளும் சின்ன விஷயத்துக்கு அடம்பிடிக்கிறாள்.. என்னை மாதிரியே அவளுக்கு நீ தண்டனை கொடுக்கலாம்... ஆனால் அவளும் ஆவியாக வந்துவிட்டால் அவளுக்கும் எனக்கு சரிப்பட்டு வராது... வேண்டாம்” ரம்யா குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு சோசித்தாள். மோமோ அவள் பின்னால் சென்றது.

 “உலகத்தில் அனுசரித்து போகாத பெண்களை கொலை செய்வது தான் தீர்வு என்றால் பெண்களே இருக்க மாட்டார்கள் அதனால்.. உனக்கு ஏற்ற பெண்னை கண்டுபிடுத்துவிட்டேன்”

‘யார்?”

“நான் தான்... உன்னுடைய குணம் எனக்கு தெரியும்.. நானும் அந்த மாதிரி சின்னதாக ஷார்ட்ஸ் அணிந்தால் கவர்ச்சியாக இருப்பேன்... இப்ப வேற ஒரு உடலுக்குள் நான் புகலாம் ஆனால் தற்போது அது முடியாது என்று சொல்லிவிட்டார்கள்”

கொஞ்சம் நேரம் மவுனத்துக்கு பிறகு “எனக்கு இன்னொரு ஐடியா தோன்றுகிறது... ரம்யா டார்லிங்”

”என்ன ரகு?”

“நீ என்னுடன் வந்து சேர்வதை காட்டிலும் நான் உன்னுடன் வந்து சேர்ந்தால் ?”

“பைத்தியமா ?”

“இல்லை ரம்யா... நாம திரும்பவும் சேர்ந்து வாழலாம்...”

“ஆஷா ? “

“இரண்டு நாள்.. சேசே ஒரு நாள் துக்கமாக அனுசரிப்பாள் அது கூட சந்தேகம்”

“இருந்தாலும் உனக்கு வயசு இளமை எல்லாம் இருக்கிறது... யோசித்து பார்த்து முடிவு செய்...
உனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருக்கிறது ரகு”

”இதோ இப்பவே உன்னுடன் வந்து சேருகிறேன்... என்று அவசரமாக மெடிக்கல் பாக்ஸ் இருக்கும் இடத்துக்குச் சென்றான் ரகு”

“அப்படியே மோமோவுற்கு ஏதாவது எடுத்துக்கொண்டு வா?”

“நிச்சயமாக... மோமோ இல்லாமலா?”

”சீக்கிரம்... வா ரகு வெல்கம் டிரிங்க் மாதிரி வெல்கம் கிஸ்“

ரகுவிற்கு அந்த உலகம் புதிதாக இருந்தது. ரம்யாவை அந்த கூட்டத்தில் தேடினான். மோமோ
இருந்த பக்கம் பார்த்தான் ரம்யா அதை கொஞ்சிக்கொண்டு இருந்தாள். அவளை நோக்கி போனான்.
கருப்பு சிகப்பு சீருடையில் சிலர் அவனை தடுத்தார்கள். “அங்கே போக கூடாது” “அவள் என் மனைவி” “உங்க பேர் ரகுவா ?” “ஆமாம்” “அப்ப நீங்க எங்க கூட வாங்க” ரகு புரியாம விழித்தான். ரம்யா தான் ரகுவிற்கு புரிய வைத்தாள். ”நானும் மோமோவும் உங்களுடன் சேர்ந்து இருக்க தான் ஆசை, ஆனால் பாருங்க இங்கே பழைய
ரூல்ஸ் சிலது இருக்கிறதாம். நீங்க கொலை குற்றம் சாட்டப்பட்டவர் அதனால் உங்களை வேறு
இடத்துக்கு அழைத்து போகிறார்கள்.”
ரம்யா மோமோவை தழுவிக்கொண்டு வெல்கம் கிஸை வாங்கிக்கொண்டது.

C.B.Gilford எழுதிய சிறுகதையை அப்படியே மொழிபெயர்பு செய்யாமல் ரிமேக் செய்தேன்.

Comments

  1. Thank you for sharing your thoughts. I truly appreciate your efforts and I am
    waiting for your next write ups thanks once again.

    ReplyDelete

Post a Comment