Skip to main content

பாடம் கற்றுக்கொடுத்த பத்து நூறு கண்ட பாஷ்யகாரர்

மேல்கோட்டை, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் 
கடந்த ஒருவருட காலமாக உற்சவங்கள்,உபன்யாசங்கள், பஜனைகள், கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், புத்தகங்கள், காலண்டர்கள், ஸ்டிகர்கள் சிறிய/பெரிய சிலைகள் என்று எங்கு பார்த்தாலும் ’ஸ்ரீராமானுஜர்-1000’ கொண்டாட்டமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. ராமானுஜர் சம்பந்தமாக எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எல்லோரிடமும் இருப்பதை காணமுடிந்தது. கோயிலுக்கு முன் போஸ்டர் ஒட்டினார்கள் முடியாதாவர்கள் ’வாட்ஸ் ஆப்’, ஃபேஸ்புக்கில்; தீபாவளி மலர் மாதிரி ராமானுஜர் மலர் கொண்டு வந்தார்கள், தில்லியில் ஸ்டாம்ப் ரிலீஸ்.. எல்லோரும் எதையோ ஆசையுடன் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அடியேனுக்கு ஒரே ஆசை. அவர் அவதரித்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் கால் பதித்து ‘தான் உகந்த’ திருமேனியை தூரத்திலிருந்தாவது சேவித்துவிட்டு வர வேண்டும் என்று. ஸ்ரீபெரும்புதூரில் நண்பர்களிடம் (மே-1) சித்திரை திருவாதிரைக்கு வரலாம் என்று இருக்கிறேன் என்று பேச்சுக்கொடுத்த போது
“ஸ்வாமி தயவு செய்து வந்துவிடாதீர்கள்…” “கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கு மேல் கூட்டம் வரப்போகிறது.. நிற்கக் கூட இடம் இருக்காது...ஊர் தாங்குமா என்று தெரியவில்லை. பார்த்துக்கோங்க!” “அடுத்த வருடம் முழுக்க ஆயிரம் தான். சாவகாசமாக ஒரு திருவாதிரைக்கு வாரும்..” என்று உபதேசம் செய்தார்களே தவிர, யாரும் “ஸ்ரீராமானுஜரை வந்து சேவியுங்கள்” என்று சொல்லவில்லை.
ஸ்ரீராமானுஜர் மட்டும் “வந்துவிட்டு போ” என்றார். ஏப்ரல் -27 அன்று என் பயணத்தை தொடங்கினேன். முதலில் மேல்கோட்டை.
மேல்கோட்டை - ஏப்ரல் 27, 2017 - தமர் உகந்த திருமேனி
மேல்கோட்டை

மேல்கோட்டை கோயிலின் முகப்பு ( சில மாதங்களுக்கு முன் எடுத்தது)
’பஜ எதிராஜம்’ என்று மேல்கோட்டை, தொண்டனூர் யாத்திரை ஒன்று ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமிகள். கலந்துகொண்டேன்.
திருநாராயணபுரம் என்ற மேல்கோட்டை எனக்கு எப்போதும் பிடித்த இடம். ஸ்ரீராமானுஜரை நமக்கு ரட்சித்து கொடுத்தவர்கள். இன்றைக்கும் அங்கே சென்றால் நம்மை பரிவுடன் விசாரிப்பார்கள். அதனால் தான் என்னவோ ஸ்ரீராமானுஜர் தன்னுடைய ஆறு கட்டளைகளில் “திருநாராயண புரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ வேண்டும்” என்கிறார். அதற்கு ஏற்றார் போல் மேல்கோட்டை வெயிலுக்கு ஸ்ரீராமானுஜருக்கு வெட்டி வேர் பந்தல் அமைத்து இயற்கை முறையில் ஏ.சி அமைத்து பரிவுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.
இயற்கை ஏசி - வெட்டி வேர் பந்தல்
காலை சென்ற போது ஸ்ரீராமானுஜர் கிரந்தங்கள் ( அவர் எழுதிய நூல்கள் ) பல்லக்கில் ஏற்றி ஜீயர் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த புறப்பாட்டுடன் கூட நடந்தேன். சும்மாவா சொன்னார்கள் மேல்கோட்டை ஞான மண்டபம் என்று !.
ஸ்ரீராமானுஜர் அருளிய நூல்கள் பற்றிய சிறு குறிப்பு: எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. நவரத்தினங்களாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீராமானுஜர் அருளிய கிரந்தங்கள் 
ராமானுஜர் அருளிய நூல்கள் ஸ்ரீபாஷ்யம்(1) - பிரம்ம சூத்திரத்துக்கு விளக்க உரை
கீதா பாஷ்யம்(1) - கீதைக்கு விளக்க உரை.
வேதார்த்த சங்ரஹம்(1) - உபநிஷத்துகள், புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு.
வேதாந்த தீபம் - வேதாந்த சாரம்(2) - இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது.
நித்ய க்ரந்தம்(1) - பக்தியின் பல்வேறு நிலைகளை விளக்கும் நூல்.
கத்ய த்ரயம் - சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் (3) - சரணாகதி பற்றிய நூல். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் தாயார் சேர்த்தியின் போது இதை எம்பெருமானார் அரங்கேற்றினார். கொஞ்சம் புஷ்டியான ’தமர் உகந்த’ திருமேனியை எவ்வளவு சேவித்தாலும் திகட்டாது. அன்றும் அப்படியே.
யதிராஜரின் முகபாவங்கள்
இது நாள் வரை பார்க்காத ஒன்றை அன்று
கவனித்தேன். யதிராஜரின் முகபாவங்கள். திருமஞ்சனத்துக்கு முன் ஒரு மாதிரியும், திருமஞ்சனத்தின் போது கண்களை மூடிக்கொண்டும் ( குளிக்கும் போது நாம் எப்படி கண்களை மூடிக்கொண்டு இருப்போமோ அது மாதிரி). பிறகு ஆசாரியன் திருமுடியுடன் அலங்காரமாக அட்டகாசமாக இருந்தார்.
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிரிந்து வந்த போது தொண்டனூரில் தான் முதலில் கால் பதித்தார்.
தொண்டனூரில் புதிய பெரிய ராமானுஜர்
தொண்டனூர் சென்று அங்கே நம்பி நாராயணன், வேணுகோபாலனை சேவிக்கும் போது, இந்த இரண்டு கோயில்களிலும் யதிராஜரின் அர்ச்சா மூர்த்திகள் (அங்கும்) இருப்பதைக் கண்டேன். தொண்டனூரில் புதிய ராமானுஜர் விக்ரஹம் ( பெரிய ) பிரதிஷ்டை செய்துள்ளார்கள்( சூரியனும் மேக கூட்டங்களும் பின்னாடி வர காத்திருந்து ஒரு படம் எடுத்தேன்)
தொண்டனூர் ஸ்ரீராமானுஜர்
ஸ்ரீராமானுஜர் 1000 முகம் கொண்ட ஆதிசேஷன் உருவத்தை எடுத்துக்கொண்டு, ஒரே சமயத்தில் 1000 சமண மதத்து அறிஞர்களை வென்ற இடத்தில் ஆசாரியனையும், புதிதாக ஏரி பக்கம் பிரதிஷ்டை செய்த பெரிய ராமானுஜரையும் சேவித்தது திருப்தியாக இருந்தது.
இரவு உடையவர் புறப்பாட்டுக்கு சென்ற போது அவர் ஆசாரியன் திருமுடியுடன் வலம் வந்தார். அவருக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு மறு நாள் ஸ்ரீரங்கம் கிளம்பினேன்.


ஸ்ரீரங்கம் - ஏப்ரல் 29, 2017 - தானான திருமேனி ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் முன் உறையூர் என்ற திருக்கோழியூர் திவ்யதேசத்துக்கு சென்றேன். கோயில் வாசலில் பெயருக்கு ஏற்றார் போல இரண்டு கோழி ( சேவல் ) சண்டை போட்டுக்கொண்டு இருந்தது. இந்த திவ்ய தேசத்தின் மீது எனக்கு எப்போதும் ஒரு அபிமானம் - ஸ்ரீராமானுஜர் சம்பந்தப்பட்ட சில அந்தரங்க அனுபவங்கள் இந்த திவ்யதேசத்தில் அடியேனுக்கு உண்டு.
திருக்கோழியூர்!
பயணம் இனிதே நிறைவேற கமலவல்லி நாச்சியாரை ( அழகிய மணவாளனுக்கு எப்போதும் இந்த நாச்சியார் மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு ) சேவித்துவிட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தேன்.
ஸ்ரீராமானுஜர் பல திவ்யதேசங்களுக்கு சென்றிருந்தாலும், அவர் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தது ஸ்ரீரங்கத்தில் தான். ஸ்ரீபெரும்புதூர்/காஞ்சி அவருடைய பிறந்த வீடு என்றால், ஸ்ரீரங்கம் அவர் புக்ககம் என்று கொள்ளலாம். ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். கோயிலில் பல சீர்த்திருத்தங்களை செய்து ”ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்று இன்றும் அதை நாம் அதை போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமானுஜரை எதிர் கொண்டு அழைத்து ‘உடையவர்’ என்ற திருநாமம் கிடைத்த இடம். தமிழ் நாடு அறநிலையத் துறை மற்றும் கிஞ்சித்காரம் டிரஸ்ட் வேளுக்குடி ஸ்வாமி அவர்கள் ”ஸ்ரீராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்ற தலைப்பில் ஒரு நாள் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஸ்ரீவேளுக்குடி அவர்களின் உபன்யாசம் வழக்கம் போல் பிரமாதம். கோவையிலிருந்து வந்த மாதவ ராமாநுஜ தாஸர் குழுவினர் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாற்றிலிருந்து, கூரத்தாழ்வானுக்கு கண் போன நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்து கண்களை கலங்க வைத்தார்கள். ஆயிரம் கால் மண்டபம் பல விசேஷங்களை கொண்டது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக நம் பெருமாள் ஆழ்வார்கள், புடைசூழ வீற்றிருக்கும் மண்டபம். எதிரே உடையவர் தானான திருமேனி சன்னதி. இந்த இடத்தில் ஸ்ரீராமானுஜர் 1000க்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களுடன் ஸ்வாமியின் உபன்யாசம், நாடகம், ஒலி/ஒளி காட்சிகள் என்று உடையவரை மட்டும் அனுபவிக்க செய்தார்கள்.
ஸ்ரீரமானுஜர் பரமபதித்த பின்பு அவர் ஸ்ரீரங்கத்திலேயே அதுவும் கோயிலுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக பெரியபெருமாள் தம்முடைய வசந்த மண்டபத்தையே கொடுத்து அங்கேயே அவருடைய சரம திருமேனியை திருப்பள்ளிப்படுத்த நியமித்தார். ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளிப்படுத்தப் பெற்ற இடமே தற்போது உடையவர் சன்னதியாக இருக்கிறது. அங்கு பிரதிஷ்டை செய்யபெற்ற திருமேனிக்கு கீழே தான் அவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டுள்ளார். அங்கே பிரதிஷ்டை செய்ய பெற்ற திருமேனி அவர் உபயோகித்த வஸ்த்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டு ’தானான திருமேனி’ என்று வழங்கப்பெறுகிறது.
அடியேனை திருச்சி வானொலியில் ஸ்ரீராமானுஜர் பற்றி பத்து நிமிடம் ‘லைவாக’ பேச சொன்னது - மகிழ்ச்சி.
. உடையவர் சன்னதியில், ஸ்ரீராமானுஜரை சிறுது நேரம் சேவித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவு ஆழ்வார் திருநகரிக்கு பயணமானேன்.
ஆழ்வார் திருநகரி - 30 ஏப்ரல் - பவிஷ்யதாசார்யர்
பவிஷதாசாரியார் சன்னதி முகப்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அந்த இரவிலும் ‘ஜேஜே’ என்று இருந்தது, சேலம், தஞ்சாவூர், மதுர, திண்டுக்கல் என்று கூவி கூவி அழைத்துக்கொண்டு இருந்தார்கள். எல்லா பேருந்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பேருந்தில் ஏற முற்பட்ட போது கண்டெக்டர் ‘ டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்’ மட்டும் என்று திருநெல்’வேலி’ போட்டார். ஒரே நிமிடத்தில் பஸ் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் மதுரை பஸ் ஒன்று வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டேன்.
அதிகாலை ஒன்றரை மணிக்கு மதுரையில் மல்லிகைப்பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள். தூக்கக்கலக்கத்துடன் அடுத்த பஸ்ஸை தேடிக்கொண்டு இருந்த போது “சார் ஜிகர்தண்டா?” என்று தூக்கத்தை கலைத்தார்.
திருச்சியில் பார்த்த அதே காட்சியை மதுரையிலும் ‘ரிப்பீட்’ செய்தார்கள். பஸ் வந்தவுடன் கைகுட்டை, துண்டு, பையை ஜன்னல் வழியாக போட்டு கூட்டம் இடம் பிடித்தது. ’நாகர்கோயில்’ பேருந்தில் சீட் பிடித்தது அதிர்ஷ்டம். ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.
“நாகர்கோயில் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள்… பைபாஸுல போகுது… திருநெல்வேலி எல்லாம் இறங்கிக்கொள்ளவும்” என்ற போது பைபாஸுக்கு தயாரானேன்.
சின்ன தம்பி பிரபு வேஷம் போட்டுக்கொண்டு சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த சமயம், கண்டெக்டர் ஒவ்வொருவரிடமும் வந்து விசாரித்தார். திருநெல்வேலி என்று சொன்னவர்களை இறக்கிவிட்டார். என்னிடம் வந்த போது பாபநாசம் கமல் போல( பேச்சில் மட்டும் தான் ) ‘தின்னவேலி’ ஆனா நாகர்கோயில் டிக்கெட் கொடுங்க ’தின்னவேலியில இறக்கிடுங்க’

“பைபாஸ் தான் டவுன் உள்ளார போகாது இறங்குங்க”
“பரவாயில்லை.. ரோடு மேலேயே இறக்கிவிடுவே”
“நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்…” போல கண்டெக்டர் ஒன்றும் செய்ய முடியாமல் விழித்தார்.
காலை நான்கு மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து பிறகு அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்கு வந்த போது விடியற்காலை ஐந்து மணி. நேராக தாமிர பரணிக்கு கிளம்பினேன்.
நீண்ட நாள் ஆசை 
இந்த ஆற்று நீரில் நீராட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஏன் என்று சொல்லுகிறேன். நம்மாழ்வார் இந்த பூவுலகில் மொத்தம் 32வருடங்களே இருந்தார். அவர் ஸ்ரீவைகுண்டம் போகும் முன் மதுரகவி ஆழ்வார் “நீங்கள் சென்றுவிட்டால் நான் யாரை ஆராதிப்பேன்?” என்றதற்கு நம்மாழ்வார் “தாமிர பரணி ஆற்று நீரை காய்ச்சும்” என்றார்.
அதை காய்ச்சிய மதுரகவி ஆழ்வாருக்கு ஓர் விக்ரஹம் கிடைத்தது ஆனால் அந்த விக்ரஹம் திரிதண்டம், அஞ்சலி முத்திரையுடன் இருக்க மதுரகவி ஆழ்வார் ”இது யார் ?” என்று வினவ அதற்கு நம்மாழ்வார் இவர் ”பவிஷ்யதாசார்யர்” என்றார். (பவிஷ்யதாசார்யர் என்றால் எதிர்கால ஆசாரியார் என்று அர்த்தம்). நம்மாழ்வார் “மீண்டும் காய்ச்சும்” என்று சொல்ல அபய அஸ்தத்துடன் நம்மாழ்வார் விக்ரஹமாக எழுந்தருளினார். திருவாய்மொழியில் ”பொலிக பொலிக” என்று ஆரம்பிக்கும் பாசுரத்தில் நம்மாழ்வார் எம்பெருமானாருடைய அவதாரத்தையே காட்டி எம்பெருமானார் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே ’பவிஷ்யதாசார்யன்’ பற்றி குறிப்பிடுகிறார்.
நாதமுனி பிரபந்தங்களை தேடிக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்கு வந்த போது மதுரகவி ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்து நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற நம்மாழ்வாரை பற்றிய 11 பாசுரங்களை நம்மாழ்வார் குடிகொண்ட திருப்புளியாழ்வார் (நம்மாழ்வார் குடிகொண்ட புளிய மரம் )முன்பு 12,000 முறை சேவித்த போது, நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த விசேஷங்களையும் அருளினார்.

மீண்டும் இந்த விக்ரஹத்தை நாதமுனிகளுக்கு தந்தார். அதை நாதமுனிகள் முதல் திருக்கோட்டியூர் நம்பி வரை பாதுகாத்துத் திருவாராதனம் செய்தார்கள். பிறகு, திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பவிஷ்யதாசார்யன் சன்னதியில் திருவாராதனம் செய்தார்கள்.
பவிஷ்யதாசார்யனை பல மணி நேரம் அனுபவித்தேன். இங்கே இருக்கும் மூலவர் தொண்டனூரில் இருப்பது போல ஆதிசேஷனுடன் காட்சி அளிக்கிறார்.
ஆழ்வார் - எம்பெருமானார் ( இணைய படம் ) 
பவிஷ்யதாசார்யரையும், நம்மாழ்வாரையும் மாற்றி மாற்றி சேவித்துக்கொண்டு இருந்த போது தான் அடுத்த நாள் ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும் என்ற நினைவுக்கு வந்தது.
நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பாகவதர் பலருக்கு இட்லி, காபி, ஆட்டோ பிடித்துக்கொடுப்பது போன்ற உதவி செய்துக்கொண்டு இருந்தார். அவரிடம் நாளைக்கு சென்னை செல்ல வேண்டும் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்றேன்.
உடனே ஒரு ‘பாய்’க்கு போன் செய்தார்.
“தெரிந்த பாய் தான்… உடனே அவரை சென்று பாருங்கள்..”
ஆட்டோவில் ஏதோ சந்து பொந்தில் நுழைந்து கடைசியாக ஒரு பழைய பேப்பர் கடை வந்தது. பாய் ஓடி வந்தார்.
“சென்னைக்கு டிக்கெட் வேண்டும்”
“மூன்று நாள் லீவு பாருங்க.… டிக்கெட் எல்லாம் ரொம்ப கஷ்டம்.. ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பேசறேன்.. “ என்று என் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார்.
சில மணி நேரம் கழித்து பாய் ஆழ்வார் திருநகரி கோயில் வாசலுக்கு வந்து
“இந்தாங்க டிக்கெட் என்று எனக்கு SMS செய்தார்… ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் எக்ஸ்டரா” என்று பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார். அவருடைய நாணயம் எனக்கு பிடித்திருந்தது.
அன்று வேளுக்குடி அவர்கள் ”சமத்துவம் போற்றுவோம்” என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். மாறுபட்ட உபன்யாசமாக இருந்தது. மாதவ ராமாநுஜ தாஸர் குழுவினர் இங்கேயும் திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகளை அனுக்கார வைபவமாக கண் முன்னே கொண்டு வந்து மீண்டும் அழ வைத்தார்கள். அதில் ‘பெண் பிள்ளை’ யாக நடித்த ஸ்ரீரங்க ப்ரியா அவருடைய பெண் பிள்ளை. ( விஜய் டிவியில் http://www.hotstar.com/tv/best-of-bhakthi-thiruvizha/4249/spiritual-sojourn/1000078393 )
அன்று இரவு சென்னை பஸ்ஸுக்கு புறப்பட்டேன். எனக்கு உதவி செய்த பாகவதர்
“இருங்க சாமி ஆட்டோ வரச் சொல்றேன்..” என்று மொபைலில் ஆட்டோவை கூப்பிட்டார்.
“ரொம்ப நன்றி..சென்னைக்கு டிக்கெட் ஏற்பாடு செய்ததற்கு”
“இதுல என்ன சாமி.. நாளைக்கு ஸ்ரீபெரும்புதூரில் நல்ல தரிசனம் கிடைக்கும்.. கவலை படாம போங்க”
பாகவதற்கு நன்றி கூறிவிட்டு அவருக்கு கொஞ்சம் பணம் சன்மானமாக கொடுத்தேன்.
“எதுக்கு சாமி.. “ என்று தயங்கி பிறகு வாங்கிக்கொண்டார்.
ஆட்டோ வர நான் கிளம்பினேன். அப்போது அந்த பாகவதர் ஒரு காரியம் செய்தார்
“சாமி நான் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கிறேன் ?” என்று நான் அவருக்கு கொடுத்த காசை நீட்டினார்.
அசந்துவிட்டேன். நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால் இந்த மாதிரி தயாளகுணம் நமக்கு எப்போது வர போகிறது ?
”உங்க பேர் என்ன?”
சொன்னார்.
அவரை நினைத்துக்கொண்டு சென்னைக்கு பயணமானேன். இரவு பஸ்ஸில் ஏறியவுடன் “ஒன்றும் பிரச்சனை இல்லையே ?” என்று பாய் போன் செய்தார். கமிட்மெண்ட்!

ஸ்ரீபெரும்புதூர் - மே - 1 , 2017 - தாம் உகந்த திருமேனி ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்உ
ய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை
- உபதேச ரத்ன மாலை
ஆழ்வார்கள் திருவவதாரம் செய்த திருநக்ஷத்திரங்களை காட்டிலும் கலியிலும் நாம் உஜ்ஜீவிக்கும் படியாக செய்த எதிராசர் திருவவதாரம் செய்த சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்திரம் அன்று ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து சேர்ந்தேன்.
வெளியே வந்த எம்பெருமானார்
வெயில் அதிகமாக, கூட்டம் கம்மியாக இருந்தது. நிச்சயம் இளையாழ்வார் வெளியே வரும் போது பார்த்துவிடலாம் என்று நின்றுகொண்டு இருந்தேன்.
அதே போல இளையாழ்வார் வெளியே வர கண்குளிர சேவித்துக்கொண்டேன். பல இடங்களிலும் அன்னதானம், தர்பூசணி பழம், மோர் என்று கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார்கள். கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன். எம்பெருமானார் அழகை பார்த்த போது காஞ்சிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.. ஸ்ரீரங்கம் உட்பட பல திவ்ய தேசங்களிலும் உடையவர் சன்னதியில் இருக்கும் பெருமாள் ஸ்ரீவரதன் தான். ஸ்ரீரங்கத்திலும் அவர் ஆராதனை செய்த பெருமாள் என்று வரதனை தான் சேவை செய்துவைப்பார்கள்.
கூட்டம், யானை !

ஸ்ரீராமானுஜரை பாதுகாத்து கொடுத்த பேரருளாளன்; தீர்த்த கைங்கரியம் செய்ய வைத்த பெருந்தேவி நாச்சியார்; இளையாழ்வாரைப் பார்த்து “ஆம் முதல்வன் இவன்” என்று ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷித்த கருமாணிக்க சன்னதி; அவர் சன்யாசம் மேற்கொண்ட அனந்த சரஸ் புஷ்கரணி; ஸ்ரீராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிய ஆறு வார்த்தை மண்டபம் முதலியவற்றை சேவிக்க காஞ்சிக்கு கிளம்பினேன்.
360 டிகிரியில் இளையாழ்வார் - காஞ்சிபுரம் 
நான் போன சமயம் இளையாழ்வாருக்கு திருமஞ்சனம் ஆரம்பிக்க சரியாக இருந்தது. ஸ்ரீராமானுஜரை 360 டிகிரியில் சேவித்துவிட்டு. வரதராஜ பெருமாள், பெருந்தேவி நாச்சியாருக்கு நன்றி கூறிவிட்டு ’தியாக’ மண்டபத்திலிருந்து புறப்பட்டேன். எனக்கு அழ்வார் திருநகரியிலிருந்து பல உதவிகள் செய்து, ஆட்டோ வர வைத்து, நான் கொடுத்த பணத்தையே ஆட்டோவிற்கும் கொடுக்க முன்வந்தவர் பெயர் - ’ராமானுஜன்’
ராமானுஜர் ஆயிரத்தில் அடியேன் கற்றுக்கொண்ட பாடம் பிகு : நன்றி
1. எனக்கு எப்போதும் ஸ்ரீரங்கத்தில் உதவி செய்யும் ஸ்ரீரங்கம் கேசவன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வாசுதேவன் ஸ்வாமி, வீரராகவன் ஸ்வாமி.
2. இந்த முறை பலர்(நிஜமாகவே!) என்னை எல்லா திவ்ய தேசங்களிலும் அடையாளம் கண்டு கொண்டு முகநூல் பதிவுகளை பாராட்டி ஊக்குவித்தார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. 3. கடைசியாக என்னை ஊர் சுற்ற அனுமதித்த என் மனைவி ‘சுஜாதா’.
ஸ்பெஷல் நன்றி !
படங்கள், கட்டுரை - சுஜாதா தேசிகன்
மதுரகவியாழ்வார், அனந்தாழ்வார் திருநட்சத்திரத்துக்கு முதல் நாள் எழுதியது.
ஐந்து நாள், ஐந்து திருமேனி, 2000km. 

Comments

 1. Udayavaridam Koduthu vaithavar!!

  ReplyDelete
 2. Super Sir. Even I visited Sriperumbudur on 1st May. I was amazed with the crowd and was there till 8PM.

  ReplyDelete
 3. உங்கள் கட்டுரையின்மூலம் ஆசாரியாரைத் தரிசிக்க முடிந்தது. தொண்டனூரில் ராமானுசர் படம் புதியதாக எழுதியிருக்கிறார்கள் போலிருக்கிறது.

  மேல்கோட்டை இன்னும் சேவிக்கவில்லை. பவிஷதாசாரியாரைப் பற்றி நான் ஆழ்வார்திருநகரி சென்றிருந்தபோது தெரியாது. கச்சியும் சேவிக்கணும்.

  ReplyDelete

Post a Comment