Skip to main content

ஸாளக்கிராமத்தை கடித்த குழந்தை

பக்தி என்பது தமிழ் வார்த்தை கிடையாது; சமஸ்கிருத வார்த்தை. ஆழ்வார் பாடல்களிலும் சங்கப் பாடல்களில் பக்தி என்ற வார்த்தையே கிடையாது. திருமங்கையாழ்வார் ‘பத்திமை’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். (பெரிய திருமொழி). பத்திமை என்றால் அன்பு, காதல்! உண்மையான பக்தி.

1925-ல் பிரசுரமான ஒரு தமிழ் அகராதியில் பக்தி=பத்தி என்ற குறிப்பு உள்ளது. பக்தி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘மிஸ்டிஸிசம்’ (Mysticism) என்று சொல்லுவார்கள். (பக்தர்கள் - Mystics).

மிஸ்டிஸிசம் என்பதற்கு ஆங்கில அகராதியில் விளக்கம் இப்படி இருக்கிறது “One who seeks by contemplation or self-surrender to obtain union with or absorption into the Deity, or who believes in spiritual apprehension of truths beyond the understanding”

தமிழில் “இறைப் பொருளினிடம் தம்மையே அடைக்கலமாகத் தந்து பக்தி அல்லது தியானம் மூலம் இறையனுபவத்தைப் பெறுபவர் என்றும் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டதாகிய ஆன்மீக உண்மைகளை உணரமுற்படுபவர்” என்று விளக்கம் சொல்லலாம். ( நன்றி: அ.ச.ஞானசம்பந்தன் )

நிச்சயம் மேலே சொன்ன ஆங்கிலம், தமிழ் இரண்டு விளக்கமும், இரண்டு மூன்று முறை படித்தால்தான் புரியும். ஆனால் பக்தி அவ்வளவு கஷ்டம் இல்லை. மேலே சொன்ன இந்த அகராதி விளக்கம் ஏன் கஷ்டமாக இருக்கிறது? நாம் அதைப் படிக்கிறோம். படித்தவுடன் அதை நம் அறிவு புரிந்துகொள்ள முயல்கிறது. ஆனால் பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

முதலில் அறிவு வேறு; உணர்வு வேறு என்பதை நன்றாகப் புரிந்துககொள்ள வேண்டும். அறிவில் மலர்வது தத்துவம். தத்துவம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். பலர் நிறைய படித்துவிட்டு வறட்டு தத்துவங்களைச் சொல்லுவார்கள். பக்தி கலக்காத தத்துவங்கள் வெறும் வேதாந்தங்கள். ஒன்றுக்கும் பயன்படாது. நிறைய படித்துவிட்டால் “கடவுள் இருக்கிறாரா?” என்று கூட கேட்கத் தோன்றும். பக்தியைப் புரிந்துகொள்ள அறிவு தேவை, ஆனால் பக்திக்கு அறிவு தேவை இல்லை.

ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பிரபந்தங்கள் என்று பலவற்றையும் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று தான். பிரம்மத்தை, பரம்பொருளை அடைய கர்மயோகம், ஞானயோகம் காட்டிலும் பக்தியோகமே எளிமையான வழி. முற்றிய பக்தியே ஞானம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை.

பக்தி என்பது என்ன ? கேள்வி கேட்காத நம்பிக்கை உருவாக, என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி தான் இருக்கிறது. நாம் அவனிடம் பக்திகொள்ள வேண்டும். அதற்கு அவன் அருள் வேண்டும். அவன் அருளின்றி அவனுக்கு பக்தி செலுத்தக் கூட நம்மால் முடியாது.

“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி – நலம் அருளினன் எவன்? அவன்”

இதில் இரண்டாவது வரியைப் பாருங்கள் “மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்” என்கிறார். அதாவது அவன் அருளினால் தான் பக்தி கிடைக்கும் என்கிறார். திட நம்பிக்கை என்பது பக்தியில் மிக முக்கியமானது. இந்த திட நம்பிக்கையை சிலர் குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று சொல்லுவார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே.

சின்ன குழந்தைக்கு பெருமாள் பிரசாதம் சாப்பிட்ட கதையை சொல்லும் போது கவனித்துப்பாருங்கள். அதை கேள்வி கேட்காமல் அப்படியே நம்பும். அதுவே அதுக்கு கொஞ்சம் வயசான பிறகு கம்ப்யூட்டர் மௌஸ் உபயோகப்படுத்தும் போது சொல்லிப்பாருங்கள். குழந்தை பிரசாதம் கொடுத்ததை பெருமாள் சாப்பிட்டாரா? என்ற சின்ன சந்தேகம் வந்து, கேள்வி கேட்ட ஆரம்பிக்கும். இதனால் தான் இந்த மாதிரி கதைகள் எல்லாம் குழந்தைகளுக்கான பக்திக் கதைகள் என்று முத்திரைக்குத்தி ஃபேண்டஸி வகையில் ஹாரிபாட்டருடன் சேர்த்துவிடுகிறோம்.

சரி எதெல்லாம் பக்தி ?

ஒன்பது விதமான பக்தி இருக்கிறது என்கிறார்கள். அர்ச்சனை செய்வது, பூ சமர்பிப்பது, பாசுரம் சேவிப்பது, ஆலவட்டம்(விசிரி) வீசுவது, கோலம் இடுதல், மொழுகுதல், திருவிளக்கு ஏற்றுதல், பிரதக்‌ஷனம், ததியாராதனம், நமஸ்கரித்தல், பெருமாளை நண்பனாக பாவித்தல் என்று இவை எல்லாமே பக்தி தான்.


”காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே”
(திருவாய்மொழி 9-10-1 )
என்கிறார் நம்மாழ்வார்.  காலையும், மாலையும் தாமரைப் பூவை சமர்பித்து, நீங்கள் உங்கள் பாவம் தொலையும்படி வணங்குங்கள் என்கிறார். bottom line - பக்தி சுலபம்.

ஸ்ரீஉடையவர் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் குழந்தைகள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பெரிய பெருமாளின் சயனத் திருக்கோலத்தைக் கோடுகளால் வரைந்து, மண் குவியல்கள் கொண்டு மண்டபங்கள், ’நீள் மதில் சூழ்’ திருவரங்கமாக மானசீகமாக உருவாக்கி, “நீ தான் அர்ச்சகர், நீ தான் அரையர்” என்று விளையாடிக்கொண்டு, ஈரமணலை கொட்டாங்காச்சியில் எடுத்து பெருமாளுக்கு அமுது செய்விப்பது போல காட்டி அர்ச்சகர்கள் அழைப்பது போன்றே “அருளப்பாடு, திருப்பாவை ஜீயர்” என்றனர் சிறுவர்கள்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீரமானுஜர் அங்கே பெருமாள் எழுந்தருளியிருப்பதாகவே நினைத்தார். சிறுவர்களின் பாகவத கோஷ்டியில் தாமும் சேர்ந்துக்கொண்டு, தன் திரிதண்டத்துடன் கீழே சாஷ்டாங்கமாக சேவித்தார்.  சிறுவர்கள் கொடுத்த மணல் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டார்.

ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், திருவாய்மொழி, திருப்பாவை என்று கரைத்துக் குடித்தவரின் கேள்வி கேட்காத பக்தி.

பூஜை செய்யும் குழந்தை
இந்த படத்தில் இருக்கும் குழந்தையைப் பாருங்கள் ஒரு தட்டு ஸ்டாண்ட், தட்டை சொறுகும் இடத்தில் பெருமாள் படம் அதன் மீது சின்ன துளசி, இடது கையில் மணி, வலது கையில் கற்பூர ஆர்த்தி. நாளடைவில் அந்த படம் (நரசிம்மர் படம்) தொலைந்துபோனது.

அந்த குழந்தைக்கு விபரீத ஆசை ஒன்று வந்தது. பாட்டி தினமும் சேவிக்கும் அந்த பன்னீர் திராட்சை போல இருக்கும் ஸாளக்கிராம மூர்த்தியை கடித்து பார்க்க வேண்டும் என்று.  தினமும் பாட்டியிடம் கேட்டுக்கொண்டிருக்கும்

“பாட்டி இது என்ன ?”
“ஸாளக்கிராம்டா அது”
“நான் தொட்டு பார்க்கலாமா ?”
“நீ குளித்துவிட்டு தொடு”
குளித்துவிட்டு தொட்டு பார்த்து கையில் எடுத்தது.
”பாட்டி திராட்சை மாதிரி இருக்கு கடிச்சு பார்க்கட்டா ?”
“வாயில் எல்லாம் வைக்கக் கூடாது ..அது பெருமாள்”
“ஒரு வாட்டி பாட்டி அப்பறம் அலம்பி வைச்சுடலாம்”
தினமும் கேட்கிறதே என்று பாட்டி ஒரு நாள்
“சரி ஒரு தடவை தான் இன்னிக்கு மட்டும் தான்” என்று சொன்னவுடன் ஸாளக்கிராமத்தை வாயில் கடித்தது அந்த குழந்தை. ”ரொம்ப ஹார்டா இருக்கு” என்று அலம்பி பெட்டியில் வைத்தது.

சிறுவனுக்கு கிடைத்த நரசிம்மர் படம்
பல வருடங்களுக்கு பிறகு அவனுக்கு சின்ன வயதில் ஆராதித்த நரசிம்மர் படம் மீண்டும் கிடைக்க,  சந்தோஷப்பட்டான். சிறுவயதில் ஸாளக்கிராம மூர்த்தியை கடித்தது நினைவுக்கு வந்து, கடித்துவிட்டேனே என்று வருந்தினான்.


சற்று வளர்ந்த பின் அவனுக்கு தென்கலை, வடகலை பேதம் பற்றி தெரியவந்தது. கோஷ்டியில் பேதம், யானைக்கு திருமண் சண்டை, வடகலைக் காரர்கள் மணவாள மாமுனிகள் சன்னதிக்கும், தென்கலை வேதாந்த தேசிகர் சன்னதிக்கும் செல்வதில்லை. பலர் வீட்டில் நேற்று வந்த ஏதேதோ சாமியார் படங்கள் எல்லாம் மாட்டி பூஜிக்கிறார்கள் ஆனால் மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர் போன்ற பூர்வாச்சாரியர்களின் படங்களை வைக்க யோசிக்கிறார்கள்.

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகன், ஸ்ரீமணவாள மாமுனிகள் கோஷ்டி

ஆழ்வார்கள் கோஷ்டி மாதிரி, ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் மூவரையும் ஒரே கோஷ்டியில் பார்க்கவே முடியாதா என்று நினைத்துக்கொண்டான். சில நாளுக்கு முன் ஸ்ரீரங்கத்துக்கு சென்ற போது அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடனே நிறைவேற்றினான்.

ஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகளை சேவித்துவிட்டு, தன் அகத்துக்கு சின்ன மணவாள மாமுனிகள் மூர்த்தியை தன் அகத்துக்கு எழுந்தருளப்பண்ணி,  உபதேச ரத்தின மாலை சேவித்தான்.

”ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூரும்” என்கிறார் மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் ஆசை இருந்தால் போதும்.


நாற்பது வருடம் முன் கீதாசார்யன் பத்திரிக்கையில் சாண்டில்யன் எழுதிய ’அவன் உகக்கும் ரஸம்’ என்ற சின்ன கதை அவனுக்கு படிக்க கிடைத்தது. அதை படித்த பின் ஒரு தெளிவு கிடைத்தது.

அவன் உகக்கும் ரஸம்

ரங்கநாதன் சந்நிதிக்குச் செல்லும் படிகளொன்றில் உட்கார்ந்த வண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய் மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து இடந்தன. எத்தனையோ நல்லவர் இருப்பினும் சதா வெற்றிலை போடும் ஒரு பழக்கம் மட்டும் அவருக்கு இருந்ததால் மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது. அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்கிராமத்தையும் வைத்திருந்தார் அரையர், பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்கிராமம் கிடைத்தது. அதைப் பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்கிராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து மேல் வேஷ்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார். பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணம் தடவி கிழித்து மென்று சுவைக்கலானார்.
இது நடப்பது முதல் தடவையல்ல. தினமும் பலமுறை நடந்த விபரீதந்தான். இதை ஒரு மிக வைதீக வைஷ்ணவர் நீண்ட நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அரையர் ஸாலக்கிராமத்துக்கு இழைக்கும் அநாசாரத்தையும் அபசாரத்தையும் அவரால் பொறுக்க முடியவில்லை. ஆகவே ஒரு நாள் ஸ்வாமி தினம் பெருமாளை வாயில் போட்டு எச்சில் பண்ணுகிறீரே. இது நியாயமா?" என்று கேட்டார்.
”கண் தெரியவில்லை” என்றார் அரையர்,
அப்படியாயானால் பெருமாளே என்னிடம் கொடுமே. நான் ஆசாரமாக வைத்து ஆராதனம் செய்கிறேன்" என்றார்.
"தாராளமாக எடுத்துப் போம்" என்று ஸாளக்கிரா
மத்தை எடுத்து அந்த வைதிகரிடம் கொடுத்து விட்டார் அரையர்,

அன்று அந்த வைஷ்ணவப் பிராம்மணர் வீட்டில் ஒரே தடபுடல் சாளக்கிராமத்தை அவர் தனது கோவிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணினார். திருமஞ்சனம் கண்டருளப் பண்ணி, புளியோதரை, தத்தியோதனம் முதலிய பிரசாதங்களேயெல்லாம் அமுது செய்வித்தார். சேவை, சாற்று முறைக்கு வேறு இரண்டு மூன்று ஸ்வாமிகளையும் எழுந்தருளப் பண்ணி அதையும் விமர்சையாகச் செய்து முடித்தார். அன்று நிம்மதியாகப் படுத்தார் அந்த வைதிகர்.
அவர் நல்ல துயில் கொண்டதும் பெருமாள் அவர் சொப்பனத்தில் வந்து 'நீ எதற்காக என்னை அரையர் வெற்றிலப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாய்' என்று கேட்டார் கோபத்துடன்
'ஸ்வாமி அங்கு உமக்கு அபசாரம் நடக்கிறது. அதனால் எடுத்து வந்தேன்' என்றார் அந்த ஸ்வாமி,
"என்ன அபசாரம்?' என்று பெருமாள் கறுவினர்.
"தேவரீரை தினம் பத்து தடவையாவது எச்சில் செய்கிறார் அரையர்' என்று சொன்னுர் அந்த ஸ்வாமி.
”அட பைத்தியக்காரா அது திருவாய்மொழி சொல்லும் வாயடா. தினம் அந்த ரஸத்தை சிறிது நேரமாவது நான் அனுபவிக்கிறேன். அதிலிருந்து என்னை பிரிந்து இந்த மரப் பெட்டியில் ஏன் அடைத்து வைத்திருக்கிறாய்? உடனே கொண்டுபோய் அரையர் பெட்டியில் என்னை சேர்த்து விடு" என்றார் பெருமாள்.

சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தார் வைதிகர். பகவான் திருவுள்ளத்தை நினைத்து நினைத்து உருகினார். ”திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு, அதில் ஊறும் நீரே அமுதம் அதுவே அவன் உகக்கும் ரஸம்" என்று சொல்லிக் கொண்டார்.
மறுநாளே பெருமாள் பழையபடி வெற்றிப்பெட்டிக்குள் பாக்குடன் கலந்து கிடந்தார். அரையர் கையும் ஒருமுறை பாக்கைத் தேடி பாக்குக்குப் பதில் ஸாளக்கிராமத்தை வாயில் போட்டு மீண்டும் எடுத்து துணியில் துடைத்து பெட்டியில் சேர்த்தது. வாய் திருவாய்மொழியை மெல்ல இசைத்தது.

சாண்டில்யன், கீதாச்சாரியன், நவம்பர் - 1978


பிகு: நீங்கள் படிக்கும் போது நடுவில் நினைத்தது சரி தான். அந்த குழந்தை அடியேன் தான்.


29.1.2017
ஸ்ரீமணவாள மாமுனிகள் எங்கள் அகத்துக்கு எழுந்தருளிய நாள்

Comments

  1. Arpudham
    Arumai.
    Migavum rasiththa padhivu
    nandri.
    anbudan,
    srinivasan. V.

    ReplyDelete
  2. Hi Desigan, Is the Narasimmhar in photo is the deity of Yadhugirigutta near Hyderabad.

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,
      thanks for the information. I was searching this information for the last one week.
      thanks again.
      kind regards,

      Delete
  3. ஆஹா ..அருமை...
    கேள்வி கேட்காத பக்தி யும்..

    திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு..

    சிறப்பான நிகழ்வுகளை அடியவளும் வாசிக்க கொடுத்தமைக்கு மிகவும் நன்றி..

    ReplyDelete
  4. கட்டுரை மிகவும் அருமை!அத்துடன் பெருமாள்,தாயார்களுடன்,எம்பெருமானார்,வேதாந்த தேசிகர் மற்றும் மணவாளமாமுனிகள் ஒருங்கே அமையப்பெற்ற சேவை அதி அற்புதம்!!

    "பலர் வீட்டில் நேற்று வந்த ஏதேதோ சாமியார் படங்கள் எல்லாம் மாட்டி பூஜிக்கிறார்கள் ஆனால் மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர் போன்ற பூர்வாச்சாரியர்களின் படங்களை வைக்க யோசிக்கிறார்கள்."
    'நச்'என்று மண்டையில் ஓங்கி அடித்தது போல் உணர்ந்தேன்!

    ReplyDelete
  5. நீங்கள் எழுந்தருளப் பண்ணியிருப்பது போல ஸ்ரீ தேசிகன், ஸ்ரீ மணவாளமாமுனிகள் எல்லாக் கோவில்களிலும்/வீடுகளிலும் ஒன்றாக எழுந்தருளினால் எப்படியிருக்கும் என்று ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன். ஆஹா! அந்த நாளும் வந்திடாதோ!

    சாண்டில்யன் எழுதியிருக்கும் கதையை நான் வேறுவிதமாக என் அம்மா மூலம் கேட்டிருக்கிறேன். வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவரிடம் ஒரு சாளக்கிராமம் வந்து சேருகிறது. அவர் அதை அரையர் செய்ததுபோல தனது வெற்றிலை செல்லத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பாக்கு என்று நினைத்து அதை வாயில் போட்டுக்கொண்டு 'அடடா' என்று வருந்தி அதைத் தன் மேல்துண்டால் துடைத்து வெற்றிலைச் செல்லத்தில் போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் தெரியாது அதைப்பற்றி. ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போது எதிரில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் இவர் செய்யும் அபசாரத்தைப் பார்த்துவிட்டு அதை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு அகத்தில் வைத்து பூஜை செய்கிறார். தினமும் இவர் கோவிலாழ்வாரை திருக்காப்பு நீக்கும் போது 'கடியலும் தொடையலும் வேணும்' என்று மெல்லிய குரல் கேட்கிறது. சாளக்கிராமம் தான் பேசியது! விதிர்த்துப் போனவர் அந்த அன்பரை தேடிக் கொண்டு போய் 'உம்மிடம் தான் இருக்க விரும்புகிறார் எங்கள் பெருமாள்' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தார்.

    ஸதா ஸ்மராமி யதிராஜம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அது அடியேனுடைய குடிசையாக இருப்பதில் மிக்க சந்தோஷம். சண்டில்யன் கதை தான் பல ரூபங்களில் உலா வருகிறது. நான் ஒரிஜினல் கதையை அப்படியே போட்டிருக்கிறேன்.

      Delete
  6. அடடா, உங்களை பார்க்கவில்லையே! நாங்களும் வந்திருந்தோம்.

    நீங்கள் எழுந்தருளப் பண்ணியிருப்பது பெருமாளுக்கும், தாயாருக்கும் மிகவும் உகப்பாக இருக்கிறது. என்ன சிரிப்பு அவர்கள் முகத்தில்! மணவாளமாமுனிகளும் திருவாய் மலர்ந்து சிரிக்கிறாரே! எல்லோரது மனதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரட்டும் மாமுனிகள்.

    ReplyDelete

Post a Comment