உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை. யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....