ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன. பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்! சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற ...