Skip to main content

சோளிங்கர்!

ரகுராமுக்கு மத்தியானம் கனவு வந்து எழுந்த போது நம்ரத்தா, ஹவ் இஸ் திஸ் சுடிதார்? ஐ ஜஸ் காட் இட் வைல் யூவேர் ஸ்லீபிங்" என்றாள்.

ரகுராமும் அவர் குடும்பமும் இந்தியா வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடுராத்திரி... அதாவது திங்கள் காலை ஃபிளைட். கடைசி நிமிஷ அம்பிகா அப்பளமும், தி.நகர் சுடிதாரும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சுடிதார் கேள்விக்கு ‘ஒரே கனவு’ என்ற பதில் நம்ரத்தாவுக்கு எரிச்சலைத் தந்தது.

கனவுல யாரு... நான் இருந்திருக்க மாட்டேனே..."

அம்மா"

வாட் ஷி வான்ஸ் நவ்?"

குழந்தைகளை அழைச்சிண்டு சோளிங்கர் போட்டுவான்னு சொல்லியிருந்தா... ஷி ரிமைண்டட் மி."

இந்த சுடிதார் சாயம் போகுமா?"





நம்ரத்தா பிறந்து, வளர்ந்தது எல்லாம் தில்லியில்தான். பதினைந்து வருடங்கள் முன் இருவரும் பாரிஸ் ஏர்போர்ட்டில் சந்தித்துக் கொண்டபோது ஹை, விச் ப்ளேஸ் இன் இண்டியா?" என்ற அறிமுகத்துடன் பிரிந்து, பாரிஸ் ஈஃபிள் டவர், மியூசியத்தில் திரும்பவும் சந்தித்துக் கொண்டு தத்தம் ஃபோன் நம்பர், ஈமெயில் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு...

ஒரு மாச மின்னஞ்சல் பழக்கத்தில், மை மாம் இஸ் ஆஸ் கிங் டூ கெட் மேரிட்"இட்ஸ் சேம் ஹெயர்" என்று ஆரம்பித்த சம்பாஷணை, ஏன் நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கக் கூடாது?" என்று முடிந்தது அல்லது ஆரம்பித்தது.

ரகுவின் அம்மா நம்ரத்தா நம்ம ஊர் பேர் மாதிரி இல்லையேடா.. இது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா?" என்றாள்.

பிபில் ஃபிரம் சவுத்.. யுவர் வேவ்லென்த் மைட் நாட் மேட்ச்" என்றார் நம்ரத்தாவின் அப்பா.

இருவரும் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றபின்தான் குழந்தை என்று முடிவு செய்து பெற்றுக்கொண்ட பின், பதினைந்து வருஷத்தில் ஐ.சி.யூ.வில் அப்பாவைப் பார்க்க, திருப்பதியில் மொட்டை அடிக்க, சொத்தைப் பல்லைப் பிடுங்க என்று ஐந்து முறை இந்தியா வந்திருப்பார்கள். இந்த முறை ரகுவின் பெரியப்பா பையனுக்குக் கல்யாணம்.

அவர்கள் வீட்டில்தான் இந்தக் கனவு. பெரியப்பா, அதுக்கென்ன கார்த்தால கிளம்பினா எல்லோரும் சாயங்காலம் வந்துடலாம்" என்றார்.

ரகுராம் நம்ரத்தாவைப் பார்த்தபோது, ஜஸ்ட் ஒன் வீக் லெப்ட்.. ஜாக்கெட் தைக்கக் கொடுத்திருக்கிறேன். வை டோண்ட் யூ கோ வித் பெரியப்பா."

அம்மா குடும்பத்துடன் போகச் சொல்லியிருக்கா."

இரண்டு சின்ன மலைதான்.. சட்டுனு போயிட்டு வந்துடலாம்..."

நாட் வித் த கிட்ஸ்... வெயிலை பாருங்க...ஐ அம் நாட் ஃபார் தட்."

ரகுராம் தீர்மானமாக, நாளைக்குப் போகலாம். ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க."

எதுக்கு வண்டி எல்லாம். நேரா சென்ட்ரல் போய்ட்டு ஒன் ஹவருக்கு ஒரு அரக்கோணம் டிரெயின் இருக்கு. அதைப் பிடிச்சா முடிந்தது. நான் தினமும் வேலைக்கு இப்படித்தான் போவேன். ஏண்டா உனக்கு நினைவில்லையாடா?"

அடுத்த நாள் கிளம்பும்போது, பூ வைத்துக் கொண்டு போம்மா!" என்று பெரியம்மா நம்ரத்தாவுக்கு வைத்துவிட்டாள்.

ஏழு மணிக்கு நம்ரத்தா, ரகு, குழந்தைகள், பெரியப்பா சகிதமாக சென்ட்ரல் ஸ்டேஷனில் ஆஜர் ஆனார்கள். டிக்கெட் கவுன்டரில் ‘சில்லறை’ காரணத்துக்காகப் பத்து நிமிஷம் தாமதம் ஆகி பிளாட்பாரத்தில் இருந்த அரக்கோணம் ரயில் புறப்பட்டுப் போனது. அடுத்த ரயில் ஒரு மணி நேரம் கழித்துத்தான் என்று சொல்லிவிட்டார்கள்.

ஸ்டேஷனில் உள்ள ஒரு ஹோட்டலில் 25 ரூபாய்க்குக் காபி குடித்துவிட்டு அடுத்த அரக்கோணம் ரயில் கிளம்பும்போது கடையில் ஹிந்து பேப்பர் ஒன்றை வாங்கிக் கொண்டார்கள்.

ஹிந்து பேப்பரைப் பிரித்த பெரியப்பா, சரியா முப்பது ஸ்டேஷன் எண்ணிக்கோ" என்றார்.

அரக்கோணம் ஸ்டேஷனில் இறங்கி, ஷேர் ஆட்டோவில் பஸ் ஸ்டாப் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து, அங்கிருந்து திரும்பவும் ஆட்டோ பிடித்து மலை அடிவாரத்துக்குச் சென்றபோது மணி பதினொன்றைக் காட்டியது.

செருப்பை இங்கே விடுங்கம்மா... தேங்காய், பழம் பூ வாங்கிக்கோங்கம்மா... நரசிம்மருக்குத் துளசி விசேஷம்."

வி ஆர் கம்மிங் ஹியர் ஃபார் த லாஸ்ட் டைம்" என்றாள் நம்ரத்தா.

ஒரு கடையில் செருப்பைவிட, குச்சி வாங்கிக்கோங்க.. குரங்குங்க இருக்கும்."

குச்சியா?... ‘

ஒரு குச்சி அஞ்சு ரூபா.. வாங்கிக்கோங்கம்மா."

வேண்டாம்மா..."

உங்க சைஸுக்கு குரங்கு இருக்கும்மா.. வாங்கிக் கோங்க... கையில பை எல்லாம் வெச்சிருக்கீங்க."

வேண்டாம்மா ... நாங்க பார்த்துக்குறோம்..." என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தாள்.

மலை ஏறும்போது மேற்கூரையையும் மீறி வெயில் அடித்தது. நூறு படியைக் கடந்தபோது மூச்சு வாங்கியது.

இன்னும் ஆயிரம் படிதான் இருக்கிறது. மெதுவா ஏறிடலாம். தண்ணி கொஞ்சமாய் குடிச்சிக்கோங்கோ."

முன்னூறு படி வந்தபோது குரங்குகள் தெரிய ஆரம்பித்தன. சின்னச் சின்னக் குட்டிகளுடன், பேன் பார்த்துக்கொண்டும் தாவிக்கொண்டும் சில குரங்குகளுக்கு மூஞ்சி சிவப்பாக, சிலதுக்குப் பின்புறம் சிவப்பாக... இவர்களையே முறைத்து பார்த்துக் கொண்டு...

ஐ ஆம் ரியலி ஸ்கேர்ட்..." என்று நம்ரத்தா சொல்லும்போது அந்தச் சம்பவம் நடந்தது.

நம்ரத்தாவின் பின்னாடி சின்னப் பையன் சைஸுக்கு ஒரு குரங்கு வந்து அவள் கூந்தலில் இருந்த பூவை ஒரு தாவுத் தாவிப் பறித்தது.

ஆ..." என்று சத்தத்தில் மலை ஏறுபவர்கள் ஒரு நிமிஷம் ஏறாமல் அப்படியே நின்றார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருந்த ஹாண்ட் பேக் கொண்டு அதை விரட்டும்போது பக்கத்தில் இருந்த இன்னொரு குரங்கு அதைப் பிடுங்கிக் கொண்டு கூரை மீது ஓடி மறைந்தது. அந்தக் குரங்குக்கு காதில் ஓட்டை இருந்தது.

ஐயோ... மை பேக்" என்ற சத்தத்தைக் கேட்ட மற்ற குரங்குகளும் ஓடத் தொடங்கின. சில குரங்குகள் அவர்கள் கையில் இருந்த பழம், தேங்காய் பையைப் பிடுங்க வந்தது.

பெரியப்பா சத்தமாக ராம்... ராம்" என்று பயத்தில் கத்தத் தொடங்கினார்.

பையில் என்ன இருந்தது என்ற இன்வென்டரி மனத்தில் ஓட ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் கிளிப், பாஸ்போர்ட், வீசா பேப்பர்கள், டாலர்கள்... என்று ஒன்றொன்றாய் நினைவுக்குவர நம்ரத்தா என்ன செய்வது என்று தெரியாமல்... படியில் உட்கார்ந்து அழத் தொடங்கினாள். குழந்தைகள் ஆர்வமாக ஐ-பேட் கொண்டு குரங்குகளைப் படம் எடுத்துக்கொண்டு இருந்தன.

வாட் ஹாப்பெண்ட்.. ஆர் யூ ஹர்ட்?"

அவர் பாஸ்போர்ட்ஸ் அன்ட் பேப்பர்ஸ்... இட்ஸ் இன் த பேக்..."

வாட்! அதை எதற்கு எடுத்துண்டு வந்த?

சோளிங்கர் மலையில யார் பாஸ்போர்ட் கேட்கப் போறா...?"

இட் வாஸ் தேர் ஆல்வேஸ்... எல்லாம் உங்க அம்மாவால வந்தது... கனவுல வந்து... ஓ காட்..."

குச்சியுடன் நடந்துகொண்டு இருந்தவர்களிடம் குச்சியை வாங்கிக் கூரைமீது தட்டிப் பார்த்தார் பெரியப்பா. குரங்குகள் கத்திக்கொண்டு இன்னும் வேகமாக ஓடின.

பேசாம ஒரு குச்சி வாங்கியிருக்கலாம்... அஞ்சு ரூபாய்க்கு," என்றார் பெரியப்பா.

யாருக்கு தெரியும்..."

வாட் வி கேன் டூ நௌ?"

ஐ திங்க் வீ ஷுட் கால் த போலிஸ்."

பாதி மலை ஏறியாச்சு... பேசாம மேலே போய் நரசிம்மரை சேவித்துவிட்டு வந்துடலாம்... நரசிம்மர் ஏதாவது வழி காண்பிப்பார்" என்றார் பெரியப்பா.

கொஞ்சம் படிகள் கடந்தபோது... ஒரு கடையில் கலர் கலர் கயிறுகள், மணிகள், சோளிங்கர் நரசிம்மர் ஸ்டிக்கர்... கடைக்காரர் எஃப்.எம்.மில் ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூவை’ ரசித்துக்கொண்டு இருந்தார்.

சார், இங்கே போலிஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு? குரங்குங்க பையைத் தூக்கிண்டு போயிடுத்து. அதில அமெரிக்கா பாஸ்போர்ட் எல்லாம் இருக்கு."

பாஸ்புக்கா?"

அவரிடம் இதை விளக்குவது நேர விரயம் என்று லேட்டாகத்தான் புரிந்தது.

முக்கியமான பேப்பர் சார்... போலிஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கு?"

‘கொஞ்சிடும் பாத கொலுசுகளி’ன் ஒலி அளவைக் குறைத்துவிட்டு, கீழே முனிசிபல் காம்ப்ளக்ஸ் இருக்கு. அது பக்கம் சைக்கிள் கடை இருக்கு. அங்கே கேளுங்க."

பாஸ்போர்ட்டை நினைத்துக்கொண்டே மற்ற படிகளை ஏறி முடித்து மேலே போனால், மேலே நரசிம்மர் அமைதியாக யோகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பாஸ்போர்ட் கிடைக்கணும்னு வேண்டிக்கோ... நரசிம்மர் ரொம்ப பவர்ஃபுல்"

சேவிச்சிக்கோங்கோ... திருமங்கையாழ்வார் மங்களாசானம்... திருக்கடிகை... ஒரு கடிகை அதாவது 24 நிமிஷம்... இந்தத் தலத்தில் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதிகம்..."

எங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும்... வீ ஹேவ் ஒன்லி ஒன் வீக் லெப்ட்."

அர்ச்சனை ஏதாவது இருக்கா?"

ரகுராம் தட்டில் புது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைக்க அர்ச்சகர் எல்லார் முகத்திலும் ‘பச்சக்’ என்று தண்ணீர் அடித்தார். இன்னொரு நூறு ரூபாய் வைத்திருந்தால் குளிப்பாட்டியே விட்டிருப்பார்.

நம்ரத்தா, காஷ்... மை கான்டாக்ட் லென்ஸ்" பாஸ்போர்ட் புலம்பலுடன் சேர்ந்துக்கொண்டது.

கீழே இறங்கி வந்தபோது எங்காவது அவர்கள் பை கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தார்கள். ஒரு குரங்கு துளசி மாலையைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.

என்ன சார் தேடுகிறீங்க?"

பை..."

இப்பத்தான் சார் என் டிபன் பாக்ஸை பிடுங்கிண்டு போச்சு!"

அமெரிக்காவில் இப்படி எல்லாம் நடக்காது..

சேஃப்டி இஸ் இம்பார்டென்ட்."

போலிஸ் ஸ்டேஷனில் பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுக்க, குரங்கா?"

ஆமாம் சார்..."

பசங்க ஏதாவது செஞ்சாங்களா?"

சார் இவர்களுக்கு தமிழே சரியா பேச வராது"

இங்கே இருக்கற குரங்குகள் எதுவும் செய்யாதே... பூ, பழங்களைத் தட்டிப் பறிக்கும். அவ்வளவுதான். குச்சி வெச்சியிருந்தீங்களா?"

இல்லை சார் அதுதான் நாங்க செஞ்ச தப்பு."

ஏதாவது அடையாளம்...?"

பெரிய குரங்கு சார்... காதுல ஒரு ஓட்டை கூட இருந்தது."

சார் உங்க பையோட அடையாளத்தை கேட்கிறேன்..."

கருப்பு கலர்..."

நீங்க எதுக்கும் அரக்கோணம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுங்க... இங்கே இந்த புகாரை எடுத்துக்க முடியுமான்னு தெரியலை..."

என்ன சார் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க...ரொம்ப முக்கியம்... அடுத்த வாரம் இவங்க திரும்ப யு.எஸ். போகணும்..."

அவர் யாருடனோ செல்பேசியில் பேசிவிட்டு, புகார் எழுதிக் கொடுங்க பார்க்கலாம். அமெரிக்கா பாஸ்போர்ட்... மேலிடத்துல பேசணும்... நீங்க எதுக்கும் நாளைக்கு வாங்க ஏதாவது தகவல் இருந்தா சொல்றேன்... போன் நம்பர் கொடுத்துட்டுப் போங்க"

போலிஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வந்த போது, கிடைச்சுடும்... வந்தது வந்துட்டோம். எதுக்கும் ஆஞ்சநேயர் மலைக்கும் போய் சேவிச்சுட்டு வந்துடலாம்... அப்பத்தான் பூர்த்தியாகும்.. நானூறு படி தான்... ஆஞ்சநேயரை வேண்டினால் குரங்கு பாஸ்போர்ட்டைத் திரும்பக் கொடுத்தாலும் கொடுக்கும்..."

உங்க அம்மா இன்னிக்கு கனவுல வந்தா கேளுங்க... பாஸ்போர்ட் கிடைக்குமான்னு?"

இந்த முறை குச்சியை வாங்கிக்கொண்டு போன போது அங்கேயும் அர்ச்சகர் முகத்தில் தண்ணீர் அடித்தார். குழந்தைகள் சிரித்தன.

பீ கேர்ஃபுல் வித்யுர் ஐபேட்... இட் வில் கெட் வெட்" ஒன்பது மணிக்கு அலுப்பும், டென்ஷனும் கலந்து வீடு வந்து சேர்ந்தார்கள். பெரியப்பா அவருக்கு தெரிந்தவர்களிடம் என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

"NRI with US passport lost in India" என்று கூகுளில் தேடிப் பார்த்தார்கள். அடுத்த நாள் காலை சோளிங்கர் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. சார் உங்க பை என்று நினைக்கிறேன் கிடைத்திருக்கிறது.. நேர்ல வாங்க..."

நான் சொல்லலை நரசிம்மரும் ஆஞ்சநேயரும் ரொம்ப பவர்ஃபுல்."

கால் டாக்ஸியைப் பிடித்து அங்கே போனபோது அங்கே இருந்த போலிஸ்காரர் அவர்களிடம் பையை எடுத்துக் கொடுத்தார், சரியா இருக்கா பார்த்துடுங்க..."

திறந்தபோது ஸ்டிக்கர் பொட்டு, கிளிப் இருந்தது பாஸ்போர்ட், பேப்பர்ஸ் எதுவும் இல்லை.

என்ன சார் இது முக்கியமானது எதுவும் இல்லையே..."

நாங்க என்னமா செய்யறது... இதுதான் கிடைத்தது... இதுக்கே எங்களுக்கு 500 ரூபாய் செலவு..."

நரசிம்மர் கண்டுபிடித்து தந்துடுவார்... எனக்கு நம்பிக்கை இருக்கிறது" ஏமாற்றதுடன் பெரியப்பா.

இன்னும் இரண்டு நாளில் கிளம்பணும்...

அதற்குப் பிறகு ஊருக்குப் போவதற்கு முன்பு இன்னொருமுறை சோளிங்கர் வந்தார்கள். போலிஸ் ஸ்டேஷனில் புகார் காப்பியில் சீல் அடித்து கொடுத்தார்கள்.. அதை வைத்துக்கொண்டு அமெரிக்கன் கான்சலேட் சென்று டூப்ளிகேட் பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டு அமெரிக்கா சென்றது இந்த கதைக்கு அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை.

அமெரிக்கா சென்று சேர்ந்தபோது அஞ்சல் பெட்டியில் அவர்களுடைய பாஸ்போர்ட் ஒரு நாள் முன்பு வந்திருந்தது.

நன்றி: கல்கி  8.12.2013

Comments

  1. கல்கி பிரசுரத்திற்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. நல்ல கதை....

    கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அமெரிக்கா சென்று சேர்ந்தபோது அஞ்சல் பெட்டியில் அவர்களுடைய பாஸ்போர்ட் ஒரு நாள் முன்பு வந்திருந்தது.

    ஆச்சரியம் ..கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. typical sujatha sir style of writing.it will not be an overstatment to say that you are a clone of sujatha.please contnue where he has left.

    ReplyDelete
  5. typical sujatha sir style of writing.it will not be an overstatment to say that you are a clone of sujatha sir.please continue the good work from where he has left.

    ReplyDelete

Post a Comment