And how can man die better than facing fearful odds, for the ashes of his fathers, and the temples of his Gods? - Thomas B. Macaulay மதுரை தேனி மார்க்கம் உசிலம்பட்டிக்கு முன் தெற்கே அறுபது கிமீ தூரத்தில் ஸ்ரீரங்கபுரம் இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் ஊர் இல்லை, மலை அடிவாரக் கோயில். கோயிலுக்கு பின்னணியில் சூல வடிவத்தில் மலை இருப்பதால் சூலகிரி என்ற பெயரும், “கோயிலுக்கு பின்னாடி நாமம் தெரிகிறது பாருங்க!” என்ற இன்னொரு கண்டுபிடிப்புடன் ஸ்ரீரங்கபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான். ஸ்ரீதேவி, பூதேவி என்று மலையடிவாரத்தில் பெட்ரோல் புகை வாசனை எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த ஸ்ரீரங்கராயன் இரண்டு வருடத்துக்கு முன் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருடு போனார்.