Skip to main content

கதிர்மதியம் போல் முகத்தான்

And how can man die better
than facing fearful odds,
for the ashes of his fathers,
and the temples of his Gods?
- Thomas B. Macaulay


மதுரை தேனி மார்க்கம் உசிலம்பட்டிக்கு முன் தெற்கே அறுபது கிமீ தூரத்தில் ஸ்ரீரங்கபுரம் இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் ஊர் இல்லை, மலை அடிவாரக் கோயில். கோயிலுக்கு பின்னணியில் சூல வடிவத்தில் மலை இருப்பதால் சூலகிரி என்ற பெயரும், “கோயிலுக்கு பின்னாடி நாமம் தெரிகிறது பாருங்க!” என்ற இன்னொரு கண்டுபிடிப்புடன் ஸ்ரீரங்கபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான். ஸ்ரீதேவி, பூதேவி என்று மலையடிவாரத்தில் பெட்ரோல் புகை வாசனை எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த ஸ்ரீரங்கராயன் இரண்டு வருடத்துக்கு முன் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருடு போனார்.



1972 தொல்பொருளாய்வு அறிக்கையில் ஸ்ரீரங்கராயன் பற்றி குறிப்பு இருக்கிறது அதிலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்கு(மொழிபெயர்ப்பு).


ஸ்ரீரங்கராயன் இந்த வகைக் கூடு போன்ற திருமேனியில் ஆனவர். அதனாலேயே அவர் சுலபமாக திருடுபோனார்.

திருடு போவது இந்தக் கோயிலுக்குப் பழக்கப்பட்ட விஷயம். சமீபத்தில் கொடிமரத்தைச் சுற்றி பித்தளைக் கவசம் முழுவதும் காணாமல் போன போது முழுக் கொடிமரமும் உளுத்துப் போயிருந்தது தெரியவந்த போது “பெருமாளாப் பாத்து இதை செய்துட்டார், இல்லைன்னா கொடிமரம் விழுந்திருக்கும்!” என்றார்கள். ஆனால் பாதுகாப்புக்கு என்று எதுவும் செய்யவில்லை.

கோயில் வாசல் உத்திரத்திற்கு கீழே கல்வெட்டுகள் காணப்படும் இடத்தில் காலை ஏழு மணிக்கு ஹெர்குலஸ் சைக்கிள் ஒன்றைக் காணலாம். அர்ச்சகர் ரங்கசாமியுடையது. பளிச் என்ற திருமணுடன் ஆறு மைல் தொலைவிலிருந்து பெருமாளுக்குக் கண்டருளப் பண்ண வேண்டியவற்றையும் சைக்கிள் முன்னாலும், தன் குழந்தை ஆச்சானை பின்னாலும் வைத்து எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்.

குழந்தைக்குப் போன மாசம் பதிமூன்று பூர்த்தியாகிவிட்டது. ரங்கசாமி நித்தியாராதனை செய்யும்போது ஆச்சான் கள்ளி மந்தாரை பூ ஒன்றை காதில் சொறுகிக்கொண்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றி ‘டர்ர்ர’ என்று சத்ததுடன் எச்சில் ஒழுகக் ஸ்கூட்டர் ஓட்டுவது போல சுற்றிக்கொண்டு இருப்பான். புத்தி சுவாதீனம் இல்லை. பிரஜா விருத்திக்கு என்று சொல்லிக்கொள்ளப் பெற்றாலும், “இந்த அசடு எங்கே கைங்கரியம் பண்ண போறது?” என்று அலுத்துக் கொள்வார். சென்ற முறை ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்திற்கு சென்றிருந்த போது, அங்கே பாடசாலையில் படிக்கும் பையன் யாராவது தனக்கு ஒத்தாசையாக வருவானா என்று ‘வார்டன் சாமி’களைக் கேட்டுப் பார்த்தார். இதுவரை யாரும் முன்வரவில்லை.

புரட்டாசி சனிக்கிழமை தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து வசதி செய்துகொடுத்த காரணத்தால் எலுமிச்சம் சாதம் சகிதமாக வந்த கூட்டமும், தற்காலிகக் கடைகள், பலூன்காரர்களுடன் பெருமாள் பல்லக்கில் வீதி உலா முடிந்து உள்ளே செல்ல இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. கடைசிப் பேருந்து புறப்படும் சமயம், பல்லக்கில் லாலாட்டம் போட்டுப் பூட்டி இருந்த பெருமாளை பல்லக்குடன், தன் சைக்கிளையும் கோயிலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுக் கிளம்பினார் ரங்கசாமி. அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது உற்சவரைக் காணவில்லை. காணவில்லை என்று சொல்ல முடியாது கொஞ்சம் மீதம் இருந்தது!

உற்சவர் கணுக்கால் கீழே வெட்டப்பட்டு, கீழ் பாகம் பீடத்துடன் பல்லக்கில் இருந்ததைப் பார்த்த. ரங்கசாமிக்கு உடல் முழுவதும் பதறியது.

“நாராயணா!” என்று தலையில் கை வைத்து ரங்கசாமி கீழே உட்கார்ந்தார். சத்தத்தில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு இருந்த ஆச்சான் வண்டியை நிறுத்தினான்.

வெளியே ஓடிப் போய்ப் பார்த்தார் யாரும் இல்லை. கோயிலைப் பூட்டிவிட்டு ஓடினார். ஆச்சானும் ஸ்கூட்டரில் ஓடினான். ஐம்பது அடி ஓடிய பிறகு சுய நினைவு வந்து, திரும்ப ஓடி வந்து சைக்கிள் மீது ஏறினார், ஆச்சான் ஸ்கூட்டருடன் பின்னால் ஏறிக்கொண்டான்.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற போது ரைட்டர் மட்டும் ஸ்டேஷனில் இருந்தார்.

“என்ன ஐயரே?.. என்ன விஷயம் ?”

“ஸ்ரீரங்கராயன் காணாமல் போய்விட்டார்..”

“என்ன வயசு ?”

“கோயில் சிலை சுவாமி”

“இன்ஸ்பெக்டர் வருவார்” என்று ரைட்டர் ஏதோ ஒரு நடிகை அட்டைப்படம் போட்ட வாரப் பத்திரிக்கையைப் பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளே வர ரங்கசாமி குபுக் என பொங்கிய கண்ணீருடன் எழுந்து நின்று, “உற்சவர்… ரங்கராயன்… சாமி சிலை திருடுபோய்விட்டது… யாரோ வெட்டி எடுத்துண்டு போயிட்டா…”

பல்லை நோண்ட ஆரம்பித்த இன்ஸ்பெக்டர் அதை நிறுத்துவிட்டு, “என்ன?” என்று அதிர்ந்தார்.

ரங்கசாமி முழுதும் சொல்லி முடிக்க, டேபிளில் இருந்த ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொடுத்து, “இதை அப்படியே எழுதித் தாங்க ஐய்யரே” என்றார் இன்ஸ்பெக்டர்.

“நேத்திக்கு கோயிலை பூட்டினது எத்தனை மணிக்கு ?”

“கடைசி பஸ் பத்துக்கு கிளம்பிடும்… அதனால பெருமாளை பல்லக்கிலேயே வெச்சுட்டு, கோயிலை பூட்டிட்டுக் கிளம்பிட்டேன்”

“பஸ் பிடிக்கிற அவசரத்துல..ம்..ஒழுங்கா பூட்டினீங்களா ?”

“தெரியலையே”

“இவ்வளவு அஜாக்கிரதையா இருந்திருக்கீங்க ?..யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

“நேத்திக்கு நல்ல கூட்டம்.. யாரை சந்தேகப்படுவது ?”

“ஊர்லயே இருங்க… எங்களுக்கு உங்க மேலையும் சந்தேகம் இருக்கு”

“பெருமாளே என்னை ஏன் இப்படி சோதிக்கறே” என்று அழ ஆரம்பித்தார்.

ரங்கசாமி முழுவது எழுதி முடிக்க ஒரு மணி நேரம் ஆயிற்று. லாக்கப் பக்கம் மணல் மீது இருந்த பானையிலிருந்து பிளாஸ்டிக் டம்பளரில் தண்ணி எடுத்துக் குடித்தார்.

“எவ்வளவு நாளா இந்தக் கோயில்ல வேலை?”

“நாங்க பரம்பரையா கோயில் கைங்கரியம் செய்துண்டு வரோம். எங்க தாத்தா, அவர் அப்பா, எங்க அப்பா இப்ப நான்.”

“அடுத்து உங்க பையன்… அப்பறம் உங்க பேரன்”

“அதுக்குப் பிராப்தம் இல்லை. பையனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை”

ஆச்சான் வெளியே ஸ்டாண்ட் போட்ட இன்ஸ்பெக்டர் பைக் மீது உட்கார்ந்துக்கொண்டு வேகமாக ஓட்டிக்கொண்டு இருந்தான்.

ரங்கசாமி பக்கத்தில் உள்ள எஸ்.டி.டி பூத்துக்குச் சென்று ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்வாமிக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்ன சிறிது நேரத்தில் சென்னையிலிருந்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்டேஷனுக்குத் அலைப்பேசினார்.

“எஸ்.மேம்”

“எஸ்”

“இஸ் இட்”

“ஓ.கே மேம்”

“எஸ்.மேம்”

பதினைந்து நிமிஷம் ‘மேம்’ உரையாடலுக்கு பிறகு

“என்ன ஐயரே இவ்வளவு முக்கியமான சிலை.. ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை”

“சொன்னேனே… கிருஷ்ணதேவராயர் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கார்.. உடையவர் அழகர் மலைக்கு வந்த போது இங்கே வந்தார்… இதோ எழுதியும் கொடுத்திருக்கேனே”

“இவ்வளவு முக்கியமான சிலை.. ஆனா நீங்க மட்டும் தான் புகார் கொடுக்க வந்திருக்கீங்க…நேத்திக்கு ஒரு தீக்குளிப்பு கேஸ். மொத்த ஊரும் இங்க வந்தது”

* * * *

மாலை முரசு மதுரை பதிப்பு மூன்றாம் பக்கத்தில் சிலை திருட்டு என்று ஒரு பெட்டி செய்தியும் உற்சவர் வெட்டப்பட்டுத் திருடு போனார் என்ற படமும் வந்தது.

செய்தி பரவி ஊர் மக்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். இரண்டு போலீஸ் நாய் வந்து கோயிலை சுற்றி பிரதக்ஷணம் செய்துவிட்டு போனது. ஜமீந்தார் கேரளாவுக்கு ஆள் அனுப்பி சோழி போட்டு பிரஸ்னம் பார்த்ததில் கிழக்குப் பக்கம் நீர் சம்பந்தமான இடத்தில் பெருமாள் இருக்கலாம் என்று தெரிந்துக்கொண்டு வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மாட வீதி கல்யாண மண்டபத்தில் லட்சம் முறை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும், ஹோமமும் செய்ய ஆரம்பித்தார்கள்.

இது எல்லாம் நடந்துக் கொண்டு இருந்த சமயம், ஸ்ரீரங்கராயன் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஆசாரியின் இல்லத்தில் சாக்குப் பையில் இருந்தார். கால் பாகத்தைத் தேய்த்துவிட்டு வந்தவர்களிடம், “இது பஞ்சலோகம் இல்ல…தங்கம் எல்லாம் இருக்காது… வெறும் பித்தளை”

கொண்டு வந்த இருவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஸ்ரீரங்கராயன் திரும்ப கோணிக்குள் சென்று, போகும் வழியில் குளத்தில் வீசப்பட்டார்.

கோயில் சிலை திருடு போனதால் தான் ஊரில் மழை இல்லை என்றார்கள். ஊர் குளத்தில் தண்ணீர் வற்றி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது ஸ்ரீரங்கராயன் மண்ணில் பாதி புதையுண்டு கிடைத்தார்.

“டேய் சாமி சிலைடா!”

“காலு இல்லைடா”

“எங்க அப்பாரு இந்த குளத்திலே முதல இருக்கு என்று சொல்லுவாரு”

“சாமியை முதல எல்லாம் கடிக்க முடியாது”

“அப்ப காலு எங்கே?”

ஸ்ரீரங்கராயன் பஞ்சாயத்துக்கு சென்று பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்.

“மேலிடத்திலிருந்து தினமும் ஒரே டார்ச்சர், இந்த சிலை தானே ?” என்ற இன்ஸ்பெக்டரிடம்

ரங்கசாமியால் அடையாளம் காட்டப்பட்டு, சில மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கராயனும் கோர்ட் படியேறினார்.

நீதிபதி தீர்ப்பின் ஒரு பகுதி


“…. கோயிலில் கல்வெட்டுக்களில் உள்ள லிபி எழுத்துகளைப் பார்த்தால் இது ஸ்ரீராமானுஜருக்கு முன்பே எழுப்பப்பட்ட கோயில் என்று தெரிகிறது. இதே போன்ற ஒரு புராதனமான சின்னம் வேறு எந்த நாட்டிலிருந்தாலும் அதை அவர்கள் “heritage’என்று பாதுகாத்து வருவார்கள். இனி வரும் காலங்களில் இந்தக் கோயிலை அரசு எப்படி பாதுகாக்கப் போகிறது என்று இந்து அறநிலையத்துறை இரண்டு மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்தச் சிலையைத் திருடியவர்களை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காவல்துறையை இந்த கோர்ட் கேட்டுக்கொள்கிறது….”

தீர்ப்புக்குப் பிறகு அரசு எண்டோன்மெண்ட் போர்ட் இந்தக் கோயிலை தன் வசம் எடுத்துக்கொண்டது. சுவாமிமலையிலிருந்து ஸ்தபதி ஒருவரை நியமித்து பங்கப்பட்ட சிலையை பழுதுபார்க்க, இரண்டே மாதங்களில் ஸ்ரீரங்கராயன் புதுப் பொலிவுடன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். குஷ்மாண்ட ஹோமம், நாலாயர திவ்ய பிரபந்தம், வேதம் என்று நாள் முழுக்க கோயில் களைகட்டியது. ஸ்ரீரங்கராயன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஊர் மக்கள் குடும்பத்துடன் வந்து தெருமுழுக்க பொங்கல் வைத்தார்கள். ரங்கசாமியின் பேட்டி ஒரு பிரபல பக்திப் பத்திரிகையில் அவர் படத்துடன் வந்திருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி…

இந்தக் கோயிலுக்கு வேறு ஏதாவது அரசு செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?இந்தக் கோயில் தேர் பல வருடங்களாகப் பழுதாகி இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் தேரின்அடிப்பாகம் அதிக எடை கொண்டவை. பிரிட்டிஷ் வைஸ்ராய் ஒருவர் இதன் எடைபற்றிக் குறிப்பு எழுதியுள்ளார். முழுக்க ஒரே மரத்தினால் ஆன ஒரிஜினல் பர்மா தேக்கு. இந்தத் தேர் ஐந்தடுக்கு கொண்டது. எல்லாம் அலங்காரத் தட்டு- குதிரை, சிம்மம், யாளி, துவாரபாலகர் என்ற சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது. அரசு இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.


ஒரு வருடத்துக்கு பிறகு வந்த தினத்தந்தி செய்தி:



ஸ்ரீரங்கபுரம் ( மதுரை) ஜூலை 6, ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கராயன் எனும் கதிர்மதியப் பெருமாள் திருக்கோயில் தேர் சீரமைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பில் 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தி அதற்கான கரிக்கோல் விழா (சோதனை ஒட்டம்) திங்கட்கிழமை நடைபெற்றது.ஸ்ரீரங்கராயன் திருக்கோயிலுக்குச் சொந்தமான தேர் மரத்தினாலான சக்கரங்களைக் கொண்டு 1931-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. கடைசியாக 1960-ஆம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த ஊர் பிரச்சனைக்கு பிறகு அரசு தேர்த் திருவிழாவை ரத்து செய்தது. நாளடைவில் மரச் சக்கரங்கள் பழுதடைந்தும், சிதலமடைந்து வந்ததால் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதிய இரும்புச் சக்கரம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் அரசு நிதி அளித்தது. மேலும், ரூ.2.20 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 6.20 லட்சம் மதிப்பில் தேருக்கான இரும்புச் சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டது. புதிய தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தும் பணி கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-வது நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பிரமோற்சவத்திற்கான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. 1960-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமோற்சவத்திற்கு அடுத்த நாள் வந்த செய்தியின் ஒரு பகுதி:

…….ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கராயன் எனும் கதிர்மதியப் பெருமாள் பிரமோற்சவ விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் இதில் கலந்துக்கொண்டார்கள். 1960-க்கு பிறகு நடந்த தேரோட்ட விழா என்பதால் பல ஊர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெருமாள் தேரில் பவனி வரும் போது, தேர் சக்கிரத்தில் சிக்கி மூன்று பேர் தங்கள் காலை இழந்தார்கள். அரசுப் பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். …….பெருமாள் வடக்கு வீதியில் வரும் போது சிறு மேடு மீது ஏறி கீழே இறங்கும் போது தேர் கட்டுக்கடங்காமல் வேகமாக ஓட சக்கிரத்தின் பக்கத்தில் இருந்த மூன்று பேர் கால்கள் மீது ஏறி கால் துண்டிக்கப்பட்டது. போன வருடம் பங்கப்பட்ட ஸ்ரீரங்கராயன் சிற்பத்தை பழுது பார்த்த குமரேச ஸ்தபதியும் இதில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நான்கு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்குழமை ஹிந்து நாளிதழ் முழுப் பக்க கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது. அதில் தேரில் நடக்கும் விபத்து பற்றி முழுவதும் அலசியிருந்தார்கள். ஓரத்தில் ஸ்ரீரங்கராயனுக்குத் திருமஞ்சனம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வண்ணத்தில் பிரசுரித்திருந்தார்கள்.

இந்தக் கட்டுரையை லண்டனில் குடிபெயர்ந்த பேராசிரியர் ஒருவர் படித்துவிட்டு இவ்வாறு ஒரு குறிப்பு எழுதி வாசகர் கடிதத்துக்கு அனுப்பினார். (மொழிபெயர்ப்பு)

“கடந்த ஞாயிற்றுக்கிழமை “Temple Cars and Scars” என்ற கட்டுரையில் வந்த ஸ்ரீரங்கராயன் உற்சவ மூர்த்தியின் படத்தையும் பார்த்தேன். நான் இருபது வருடம் முன் சென்ற போது நான் எடுத்த புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். கடந்த 45 வருடங்களாக சிலை ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ள எனக்கு இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் தற்போது இருக்கும் மூர்த்தி ஒரிஜினலாக இருக்க வாய்ப்பு இல்லை என்று திடமாக நம்புகிறேன்….”

“செய்திகளை எதிர்பார்த்து கழுகாருக்காக டீ பிஸ்க்கெட்டுடன் காத்திருந்தோம். வந்ததும் நாம் நினைத்தபடியே ஆரம்பித்தார்! டெல்லிக்குச் செல்லும் அவசரத்தில் இருந்த கழுகாரிடம் “புதன்கிழமை மதுரை மாவட்ட எம்.எல்.ஏ சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் பற்றி அவிழ்த்துவிடும்” என்று சொன்னது தான் தாமதம்.தேனி என்றாலே கொட்டும் என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார். தேனியை சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீரங்கபுரம் சிலை பற்றி சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானமாகக் கொண்டு வந்த போது முதல்வர் கவனமாக அதைக் குறிப்பு எடுத்துக்கொண்டார். மறுநாள் சட்டசபை கூடிய போது எதிர்க்கட்சி என்று கூடப் பார்க்காமல் எம்.எல்.ஏவுக்கு நன்றி கூறிவிட்டு, பதில் அளித்த முதலமைச்சர், சிலை விஷயமாக தனிப்படை அரசு அமைக்கும் என்றார்.”வேறு ஒரு விஷயமும் கேள்விப்பட்டேன் பங்கப்பட்ட விக்ரகம் ஆட்சிக்கு ஆபத்து. அதனால் தான் அதே போல புது விக்ரகம் செய்தார்கள்” என்று சூடான டீயை ஒரே முழுங்கில் குடித்துவிட்டுப் பறந்தார் கழுகார்!”

ஸ்ரீரங்கயாரன் பற்றிய கேஸ் முடிய பல வருடங்கள் ஆனது. அதில் ஸ்தபதியிடம் பழுதுப் பார்க்க வந்த விக்ரகம் தொடர்பாக இரண்டு பேர் வந்து ஐம்பது லட்சத்துக்கு இதே போல ஒரு விக்ரகம் செய்து பழைய விக்ரகத்தைத் தங்களுக்கு தருமாறு கேட்டதாகவும் பணத்துக்கு ஆசைப்பட்டு போலி விக்ரகம் செய்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

பழைய விக்ரகம் ஏதோ ஒரு கப்பூர் வழியாக டெல்லிக்கு சென்று அங்கிருந்து கொல்கத்தா வழியாக அமெரிக்காவிற்கு வீசா இல்லாமல் கடத்தப்பட்டு $500,000க்கு ஒரு பெரிய பணக்காரர் அபகரித்து தன் ஹோட்டலின் வரவேற்பறையில் வைத்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தமிழக அரசு, அமெரிக்க அரசை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழியாகத் தொடர்பு கொண்டு ஸ்ரீரங்கராயன் திரும்பப் பெறப்பட்டு தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் பூட்டிய பெட்டியில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.

ஆச்சான் இப்பெல்லாம் “கதிர் மதியம் ‘போல்’ முகத்தான்” என்று பாடிக்கொண்டு “டர்ர்ர்” என்று ஸ்கூட்டரும் ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

பின் குறிப்பு :

இந்த கதையை இந்த வருடம் மே மாதம் எழுதி பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினேன். அனுப்பிய ஒரு வாரத்தில் பத்திரிகை ஆபிஸிலிரிந்து எனக்கு போன் செய்து, கதை நன்றாக இருக்கிறது ஆனால் பிரசுரிக்க முடியாது என்றார்கள். காரணம் கொஞ்சம் விசித்திர மானது!.

அதற்கு பிறகு அதை பற்றி மறந்துவிட்டேன். இரண்டு மாதம் கழித்து ஹிந்து நாளிதழ் முதல் பக்கம் ஒரு கவர் ஸ்டோரி போட்டிருந்தார்கள், அதை படித்த போது நான் எழுதிய கதைக்கும் அதில் வந்த செய்திக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது கண்டு வியந்தேன்.

அதனுடைய சுட்டி கிழே

http://www.thehindu.com/news/national/tamil-nadu/temple-idol-from-tamil-nadu-surfaces-in-australia/article4935770.ece


Comments