Skip to main content

எஸ்.ராஜகோபாலன்

எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர். போன முறை அவரை சந்தித்த போது தொடர்ந்து 5 மணி நேரம் நம்மாழ்வார், அரசியல், சுஜாதா என்று பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம்.

சில வாரங்களுக்கு முன்பு பேசிய போது "என்ன தேசிகன் எங்களையும், ஸ்ரீரங்கத்தையும் மறந்தாச்சா?" எப்ப வருவீர்கள் என்று கேட்டார்.

என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு 72 வயசிலும் முழுவதும் படித்துவிட்டு முன்னுரை எழுதி தந்தது என் பாக்கியம்.

சில விஷயங்கள் குறித்து இவரிடம் சந்தேகம் கேட்டால், அதை பற்றி அறிந்துக்கொண்டு 3-4பக்கம் எழுதி தபாலில் அனுப்பிவிடுவார். சில இக்கட்டான நேரங்களில் இவருடன் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும். இனி அது கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

சமீபத்தில் எழுத்தாளர் கடுகு இவருக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் புத்தகம் அனுப்பினார். நேற்று இறுதிசடங்கின் போது திரு ராஜகோபாலன் மனைவி அதை குறிப்பிட்டார்.

பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.

(மூன்றாம் திருவந்தாதி, 2338, 57 )

இருண்ட கார்மேகத்தின் நடுவே விளங்கும் மின்னல் போலத் திருமாலின் மார்பில் திருமகள் பெருமையுடன் வாழ்கிறாள். நெஞ்சமே!, கருடன் மேல் அமரும் கரிய திருமாலின் திருவடிகளே ஞானத்துக்கு மேம்பட்ட பக்திக்கு உகந்தது என்று தெரிந்துக்கொள். இதுவே ராமானுஜர் காட்டிய சரணாகதி

ஸ்ரீவைஷ்ணவன் இறப்பதில்லை. முதலேது, முடிவேது!

பிகு: மேலே உள்ள படம் சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் சென்ற போது எடுத்தது.'It has captured a moment' என்றார். அவருக்கு ஒரு காப்பி அனுப்பினேன். சந்தோஷப்பட்டார்.

Comments

  1. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  2. சென்ற மே மாதத்தில் சித்திரை வீதியில் அவரை சந்தித்து பேசும் பாக்கியம் கிடைத்தது.

    அவரது ஆன்மா சாந்தியடையட்டும்....

    ReplyDelete
  3. தெரிந்தவர்களை இழந்தது போல வருத்தம் வருகிறது. பெருமதிப்பிற்குரிய ரங்கராஜன் (சுஜாதா) மற்றும் ராஜகோபாலன் - எப்பேர்ப்பட்ட மனிதர்கள்...

    ReplyDelete

Post a Comment