பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்த்த தொடக்க காலங்களில். [எழுபதுகளின் பிற்பகுதி] அதற்கு முன்னால் இதுபோல இன்னும் ஒரு காமெடியான யூகம் உண்டு. சிறு வயதில் ரேடியோ கேட்கும்போது ஜோடியாக செவிகளை வருடிய, ட்டி.எம்.எஸ்.- சுசீலாவை புருஷன் பொண்டாட்டி என்று ரொம்ப நாள் வரை கற்பனை செய்து கொண்டிருந்தேன்.
இதை ‘முதல் ரேடியோ பாடிய வீடு’ என்னும் எனது சிறுகதையில் [விகடனில் பிரசுரம்] பதிவு செய்திருப்பேன். அக்கதை என் அம்மாவின் வாழ்க்கைச் சுருக்கம் என்று சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்த அம்மாவின் வீடுதான் எங்கள் ஊருக்குள் முதல் ரேடியோ பாடிய வீடு.
நான் அந்தக் கதையில், அம்மாவின் வீட்டில் விவரித்திருந்த பழைய மர்ஃபி வால்வ் ரேடியோ பற்றிதான் அப்பாவின் ரேடியோவில் தேசிகனும் வர்ணித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லாத சிலதை அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதே போல் நான் சொன்னவை சில அவர் சொன்னதில் விடுபட்டிருந்தது.
இருவரின் மர்ஃபி ரேடியோ காலமும் கொஞ்சம் முன் பின் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கதைகளையும் வாசித்தால் அந்த பழைய மர்ஃபி ரேடியோ பற்றிய ஒரு ஒட்டுமொத்த பிம்பம் கிடைக்கும். அதுதான் எழுத்தாளன் என நாம் காலர் தூக்கிவிட்டுக் கொள்ளக் கூடிய பெறும்பேறு போலும்!
நிற்க. -
அக்காலக் கடிதங்களில் தப்பாமல் இடம்பெறும் இந்த வார்த்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு வகையில் இது சுய பிரேக் போல. ஆம்! கடிதம் எழுதத் தொடங்கிய உடன் சம்பிரதாய நல விசாரிப்புகள் முடித்து, மெயின் மேட்டருக்கு வருவதற்கான இணைப்புச் சொல். அதனால் - நிற்க...
இம் மாதிரி ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக நமக்கெல்லாம் எழுதக் கற்றுத் தந்த வாத்தியார் சுஜாதாதான். அதனால் சுஜாதா தேசிகன் என்ற பெயரே முதலில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அப்புறம் அவரது கதைகள்.
இயக்குநர் பாலுமகேந்திராவை ஒரு முறை சந்திக்கச் சென்றேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பான மழைவாசனையின் மேலட்டை ஒளிப்படம் வாங்குவதற்காக. அப்போது அவர் கூறியது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது: “ தேசிய விருதுகளைக் கூட நான் சரியாக பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை. இப்போது அவை எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை!”
சுஜாதாவின் படைப்புகளுக்கெல்லாம் ஆவணக் காப்பகமாக இருப்பற்கு நாம் முதலில் தேசிகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரின் எழுத்துகளை எல்லாம்
சேகரித்துப் பாதுகாத்துவரும் பெரும்பணி.போற்றுதலுக்குரியது. சுஜாதாவே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு பொறுப்பான வாசகர் கிடைப்பது அவன் பெறும் பெரும்பேறுதான்.
சுஜாதாவை நேசிக்கும் தேசிகனுக்கு அவர் எழுத்துகளின் பல நற்கூறுகள் கைகூடி வந்திருக்கின்றன. குறிப்பாக இவரின் எளிய கதை மொழி. ஒரு சூரியோதயப் பொழுதில் டி ஷர்ட்-பெர்மூடா அணிந்த ஒரு அழகான இளம்பெண் காதில் கேட்கும் miley cyrus ஸின் 7 things ஆல்பத்தின் வரிகளுக்கேற்ப நடனத் துள்ளலுடன் நடக்கும் நடை அது.
சிறுகதைளின் உள்ளடக்கமும் சிம்பிளாகவே இருக்கின்றன.
கஷ்டப்பட்டு கதை தேடி அலையாமல் அல்லது வலிய ஒரு விஷயத்தைக் கதை என்று சொல்லி வாசகனைக் கஷ்டப்படுத்தாமல், பெரும்பாலானவை மிக இயல்பான கதைக்களங்களைக் கொண்டுள்ளன.
அப்பாவின் ரேடியோவில் - அப்பா முதல் சம்பளத்தில் வாங்கிய மர்ஃபி ரேடியோ, டேப் ரெகார்டரின் வருகைக்குப் பின் ஏற்படும் கால மாற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறது என்பதை இயல்பாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் செல்கிறார். கடிதம் என்பது அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும், எவ்வளவு மதிப்புமிகு ரகசிய வாழ்வாவணமாக விளங்கியது என்பதையும் அழகாக கதைமுடிவில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் ஏனோ என் நினைவில் அந்த மர்ஃபி ரேடியோ ஒரு முதியவரின்
பரிதாபமான பிம்பம் மாதிரி தோன்றியது. பல வீடுகளில் இன்று முதியவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு, இக்கதையில் வரும் ரேடியோ ஒரு குறியீடு போலவே பொருந்திப்போகிறது.
லஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே என்ற கதை ஒரு புதுமையான கதைக்களம். இது நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் ஐரோப்பிய கலாச்சார போதையில் மூழ்கித் திளைக்கும் நம் நாட்டில் இந்த ஓரினத் திருமணம் என்பதெல்லாம் தூரத்தில் இல்லை என்பதையே இக்கதை முன்மொழிகிறது.
ஆண்- பெண் உறவில் அதிகரித்துக் கொண்டே போகும் விரிசலின் அடுத்தகட்டம் ஓரின ஈடுபாடாகத்தானே இருக்க முடியும்! இக் கதையில் சினிமாவில் வரும் பேரலல் கட் [ஒரே சமயத்தில் காட்டப் படும் இரு வேறு சம்பவங்கள்] முறையைக் கையாண்டிருப்பது கூடுதல் சுவை.
பெரிய விவாதத்துக்குரிய விவகாரங்களை போகிற போக்கில் பகடி செய்யும் கதைமொழி, எல்லோருக்கும் சுலபத்தில் கூடிவராது. கேலி செய்வதை விட ஒரு பிரச்சனையை அல்லது முறைகேடுகளை வெறுப்பேற்றும் உபாயம் வேறில்லையே. சுஜாதா இந்த வெறுப்பேற்றும் கலையில் வித்தகர். அந்த எள்ளல் இத் தொகுப்பின் பல கதைகளிலும் தேசிகனுக்கு நன்றாகவே வசப்பட்டிருப்பது சிறப்பு.
உதாரணமாக கல்யாணி கதையைக் குறிப்பிடலாம்.சங்கீத சபாக்களில் இன்று [வெளிநாட்டு] அரைகுறை கத்துவான் – சாரி வித்துவான்கள் எப்படியெல்லாம் கச்சேரி வாய்ப்பு வாங்குகிறார்கள் என்பதையும், அந்தக் கச்சேரிகளை இலவச
குளிர்பதன [அதாங்க ஏ.சி.] உறக்கத்துக்காக வரும், உணவுச் சுவை உபாசகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் ஸடையராக விவரிக்கும் பாங்கு ரசிக்கத் தக்கது.
போராளி-புதிய கதைக்களத்தில் அமைந்த கதை. விமானப் பயணத்தை தமிழில் இதற்கு முன் யாரும் சிறுகதையாக்கியதாக நினைவில்லை. பஸ்- ரயில்களில் பல நல்ல தமிழ்ச்சிறுகதைகள் பயணப்பட்டிருக்கின்றன.
நல்ல சாலைகள் இப்போது உருவாகியுள்ளன. ஆனால் நல்ல பயணங்கள் சாத்தியமில்லை. ஒரு புறம் விபத்துகள். இன்னொரு புறம் பயண வழிகளில் அநியாயமாக பயணிகளைச் சுரண்டும் வணிக நிறுவனங்கள். வாயைப் பொத்திக் கொண்டு இருக்கைகளில் இருந்தால் சேதாரமின்றி ஊர்ப்போய்ச் சேரலாம் என்பதே யதார்த்தம். இதை மையமாக வைத்து நான் எழுதிய ரௌத்ரம் பழகாதே என்ற சிறுகதை இம்மாத திரைக்கூத்து என்ற சினிமா இதழில் பிரசுரமான சமயத்தில் இந்த போராளி கதையை வாசித்தேன்.
நான் இதுவரை விமானத்தில் பயணித்ததில்லை.ஏறி உட்கார்ந்தால், ஏர் ஹோஸ்டஸ் தேவதைகளை ரசித்தபடியே ஹாய்யாகப் போய் இறங்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கும் நம் ஜனநாயக அரசியல்வாதிகளால் அச்சுறுத்தலும் இடையூறுகளும் உண்டு என்பதை இக்கதையை வாசித்து அதிர்ந்தேன். இந்தியா என்பது பஸ்-ரயில் மட்டும் ஓடக்கூடிய தேசமில்லை, விமானமும்தான் என்பது இக்கதையால் உறைத்தது.
இத் தொகுப்பில் உள்ள ராமானுஜலு என்ற கதையும் எனக்குப் பிடித்தவற்றுள் ஓன்று. கடவுளின் சன்னதிகளில் காசு வசூலிக்கும் இயந்திரங்களாக வலம் வரும் மீடியேட்டர்களான
கர்ப்பக்கிரகக் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை மையமாகக் கொண்டது. கதாபாத்திர வார்ப்பும் கதை அமைதியும் இதில் இழைந்து வந்திருப்பது சிறப்பானது.
அடுத்து பெருங்காயம் என்னும் கதையைக் குறிப்பிட வேண்டும். கிராம வாழ்வு,நகர வாழ்வு,வெளிதேச வாழ்வு என்ற வாழ்க்கைக் களத்தில் ஊடாடும் கதை. அதில் மத பாகுபாடின்றி வாழும் [அல்லது வாழ்ந்த!] அன்பான மனிதர்களின் சித்தரிப்பு மனதைத் தொடுகிறது. மனிதர்கள் மனிதம் கெடாமல் வாழப் பழகினால் சாதி,மத,இன பேதப் பேய்கள் என் செயக் கூடும் இழி செயல்கள் என்ற கேள்வி இக்கதையை வாசித்து முடித்தவுடன் எனக்குள் எழுந்தது.
தொகுப்பில் உள்ள குறை எனில் மூக்குப் பொடி,வின்னி, போன்ற சில கதைகள் கதைத் தன்மைக் குறைவான ஆனால் சுவையான பத்திகள் [Column] போன்றே உள்ளன. [எஸ். ராஜகோபாலன் தன் முகவுரையில் ஓரிடத்தில் ‘இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்’ எனக் குறிப்பிடுகிறார். அது தேசிகனின் ஏதோ ஒரு கட்டுரை நூலுக்கு எழுதப் பட்டதா? இந்தக் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்!] ஆனால் கட்டுரை போலவே இப்போது நிறைய நவீன சிறுகதைகள் வருவதால் அவைகளை அத்தகு கதைகளாக பாவித்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில்...
இயல்பான எளிமையான ஒரு நடை தேசிகனின் கதைகளில் உள்ளது. அந்த நடையில் அழுத்தமான கதைக்களங்களை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்வாரெனில் இன்னும் கம்பீரமாக நடை போடலாம். வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: சிறுகதை என்பது கடைசி பத்தியின் எதிர்பாரா திருப்பம் [twist] மட்டுமே என்ற கருத்தை கொஞ்சம் மறுபரிசீலனை செய்யவும் தேசிகன். அதே போல் முன்பே முடிவை முடிவு செய்யாமல் கதையைத் தொடங்கிப் பாருங்கள். இன்னும் ஆழமான கதைகள் உங்கள் தூண்டிலில் சிக்கும்! மீண்டும் வாழ்த்துக்கள்!
27.04.2013
எஸ்.ராஜகுமாரன் thamizkkuudam@gmail.com nesamiguraajakumaran@blogspot.com
Nice :-)
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteதேசிகன், சமீத்திய "சுஜாதாவின்" பேட்டி ஊரே அல்லோல கல்லோல படுகிறதே? உம்முடைய கருத்திற்காக காத்திருக்கிறேன்!
ReplyDeleteகருத்து எதுவும் இல்லை.
ReplyDelete