மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும். பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம். தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும். அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட...