Skip to main content

ரங்கராஜனும் ரங்கநாதனும்!

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்....


குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;

- ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 )

இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்:

"எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா;
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது."

சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார்.


அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார்.

அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

- 0 - 0 -

"எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு. என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும். முடியுமா?" என்று என்னிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா கேட்டார்.

ஒவ்வொரு வாரமும் அவரை பார்க்கும் போதும் "இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்" என்று கேட்பார்.

"நிச்சயம் போகலாம்," என்று சொல்லியும் அவர் பிறந்தநாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.


முதல் முறை ரயிலில் போகும் குழந்தை போல் ஆர்வமாக இருந்தார். அன்று எங்கள் ராசி ஒரு மார்க்கமாக இருந்ததால், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் எல்லாம் ஒரு 'சைடாக' கிடைத்தது. 'சைடு அப்பர்', 'சைடு லோயர்' !

"ரொம்பக் குளிருமோ?" என்று ரயில்வே கொடுத்த போர்வையைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கேட்டார்.

டிக்கேட் பரிசோதிக்க வந்தவரிடம், "ஸ்ரீரங்கம் எத்தனை மணிக்கு வரும்... எங்களைக் கொஞ்சம் எழுப்பிவிட்டுடுங்க" என்றார்.

ஐந்து அடி ஆறு அங்குலம் இருக்கும் எனக்கே முழுதாக நீட்டினால் சைடு பர்த்தில் கால் கட்டை விரல் மடங்கும். சுஜாதாவிற்கு?

"சார், வேணும்னா வேற யார்கிட்டயாவது கேட்டு பர்த் மாத்தித் தரேன்," என்றேன்.

"வேண்டாம்,  இதுவே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு," என்று காலை மடக்கிவைத்துப் படுத்துக்கொண்டார்.

"கால் முழங்கால் வரைக்கும் போர்த்திவிடு, குளிரித்துனா இழுத்துக்கறேன்" என்றவர், பின் தூங்கிப் போனார்.

எதோ நினைப்பில் இருந்த டிக்கெட் பரிசோதிப்பவர், சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தார். சுஜாதா தூங்கியபின் என்னிடம் வந்து "'இவர்தானே மிஸ்டர் சுஜாதா?" என்று என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றார். அவர் பார்வையில், "அடடே, அவரிடம் கொஞ்சம் பேசியிருக்கலாமே" என்ற ஏக்கம் தெரிந்தது.

ஸ்ரீரங்கத்தில் காலை ஐந்து மணிக்கு முன்பு இறங்கியவுடன் சுஜாதா உற்சாகமும் சந்தோஷமுமாக, "கோயிலுக்கு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்" என்றார்.

- 0 - 0 -

காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன் (திரு.எஸ்.ராஜகோபாலன் ) கிளம்பினோம். போகும் முன், "எனக்குக் கொஞ்சம் இட்டு விடு" என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.

"வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?"

உள் ஆண்டாள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புற சிற்பங்களைப் பார்த்தார். "நம்ம .... இருக்கானே அவன் எப்பவும் இது பக்கத்திலேயேதான் இருப்பான். அவன் இப்ப எங்கேடா?" என்று தம்பியிடம் கேட்டார். பழைய நினைவுகள்...


"தேசிகன், இந்தச் சிற்பத்துல மட்டும்தான் பெண்களோட அங்கங்களை மிகைப்படுத்தாம ஒழுங்கான அனாடமில செதுக்கியிருப்பாங்க," என்றார்.

"நீங்க சொல்லியிருக்கிங்க, ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குக் கூட இதை வரைஞ்சிருக்கேன்," என்றேன்.

"இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பானை கொளுத்துவாங்க... இங்கே தான் ஸ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடக்கும்... எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!"

கோயிலுக்குள் போகும்போது கார்த்திகை கோபுரவாயிலில் திருப்பதியில் இருப்பது போல சிறிய குழாய் வழியாக நீர் கசிந்து கால்களை அலம்புவதைப் பார்த்து, "அட ஸ்ரீரங்கத்லயும் வந்துடுத்தா?" என்றார்

அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால் சிறிது நடந்தபின் ஆங்காங்கே சற்றுநேரம் உட்கார்ந்துகொண்டார். அவர் அப்படி உட்காரும்போதெல்லாம் எங்களுக்கு அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. கருட மண்டபத்தில் உட்கார்ந்து, வேடிக்கை பார்த்தபடி, பேசிக்கொண்டு இருந்தார். எல்லாம் நினைவுகள்.

கோயிலுக்குள் பெருமாள் சேவிக்க நெருங்கும்போது அவர் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது. சேவித்துவிட்டு வெளியே வந்தபோது என் தோளை அழுத்திவிட்டு, "எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!" என்ற போது அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேங்கியிருந்ததைப் கவனிக்க முடிந்தது.

பின் தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார்.

"நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் நேரம் பேசிண்டிருங்க. நான் இருந்தா பர்சனலா பேச முடியாது. நான் இப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வரேன்," என்று கிளம்பினேன்.

"நீங்க இருந்தா பரவாயில்ல தேசிகன்".

"இல்ல சார், நீங்க பேசிண்டு இருங்க. நான் மேட்டு அழகியசிங்கர் சந்நிதிக்குப் போயிட்டு வரேன். அங்க ஓவியங்கள் நன்னா இருக்கும்."

நான் போய் அவைகளை என் டிஜிட்டல் கேமராவில் கவர்ந்துக்கொண்டு வந்து காண்பித்தேன். ஆர்வமாகப் பார்த்தார்.


“பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன்.


லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை.


வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீரங்கம் கோயிலை எப்போதோ இழந்துவிட்டேன் என்பது மறு ஊர்ஜித-மாயிற்று.


டிரஸ்டி திருமதி கிரிஜா மோகன் உதவியுடன், அதிக சிரமமில்லாமல் அரங்கனை வணங்க முடிந்தது. அர்ச்சகர்கள் வரவேற்றனர். நல்ல-வேளை... ‘‘சிவாஜி கதை என்ன?" என்று கேட்கவில்லை. ‘‘வாங்கோ! உங்களுக்காக இன்னிக்கு வைரமுடி சேவை. அதிர்ஷ்டம் பாருங்கோ!" இலவச அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்-கொண்டு, வெளியே வந்தேன். ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலதேசிகன் என்னைப் பத்திரமாக அழைத்துச் செல்ல, பெருமாள் தாயார் மட்டும் சேவித்துவிட்டு, ஆசுவாசத்துக்கு தாயார் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உட்கார்ந்து-கொண்டேன்.


சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்-பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார்.


மண்டபத்தில், சின்ன வயசில் இங்கே தேவதாசிகள் தீபம் கொண்டு-வருவதைப் பார்த்திருக்கிறேன். அழகழ காக ஆபரணங்களுடன் நிற்பார்கள். 1954 வரை இந்தப் பழக்கம் இருந் திருக்கிறது. இப்போது சொன்னாலே உதைப்பார்கள்.


வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப் பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி 111, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்”

என்று 'கற்றதும் பெற்றது'மில் சுஜாதா எழுதியிருந்தார்.

ஒன்பது மாதங்கள்( பிப் 27, 2008 ) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்

- 0 - 0 -

அவர் ஆசார்யன் திருவடிகளை அடைந்து சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நான் மேட்டு அழகியசிங்கர் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விபரம் அதில் இருந்தது.

"..... ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளை சேவிக்கும் போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பல சமயம் நினைததுண்டு. மற்ற திவ்யதேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே(Genes) சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ ?

அதற்கான காரணம் 'இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்' என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாக சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் தந்தையரை பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் 'ஆம், அது தான் உண்மை' என்று ஆமோதித்தான். அந்த உண்மையை தான் அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.

அவன் உயிருடன் இருக்கும்வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால் தற்பொழுது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது...."

... என்னை அன்புடன் 'ராஜப்பா' என்றே அழைப்பான்" என்று கடிதத்தை முடித்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை சேவிக்கும்போது, என் அப்பாவையும், ஸ்ரீரங்கம். எஸ்.ஆர் என்கிற சுஜாதா ரங்கராஜனையும் பார்க்க முடிகிறது.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு மற்றொரு பெயர் ரங்கராஜன்.

- சுஜாதா தேசிகன்
( ஆனந்த விகடன் 2010 எழுதியது )
படங்கள், கோட்டோவியங்கள்  : சுஜாதா தேசிகன்.

பிகு: அதன் பிறகு ஸ்ரீரங்கம் செல்லும்போது எல்லாம் அவர் சந்தோஷமாக அமர்ந்த இடத்தில் சற்று நேரம் உட்காருவது எனக்குப் பழக்கமாகிவிட்டது.  ஒரு முறை அப்படி உட்கார்ந்தபோது  என் பையன் என்னைப் படம் எடுத்தான் ( candid shot ).  அவனிடம் ஏன் அங்கே உட்கார்ந்தேன் என்று பிறகு சொன்னேன். 



Comments

  1. எனக்கு பெரிய அளவுக்கு படிக்கும் பழக்கம் கிடையாது, ஆனால் அது ஏனோ இவருடிய இந்த எழுத்துக்களை மிகவும் விரும்பி படிக்கும் பழக்கம் உண்டு. இவருடிய இழப்பு சங்கர், கமல் போன்ற பட்டைபளிகாளுக்கு மெகா இழப்பு. இதை என்னால் எந்திரன் படத்தில் முழமையாக உணர முடிந்தது. என் வறண்ட கண்ணகளில் சிறு நீருடன் இந்த படைப்பை படித்து முடித்தேன். nativity and reality mixes = 200% sentiments(tears)

    ReplyDelete
  2. Though I was born and brought up out of Srirangam, My father born at Srirangam. He is the Second son of Sri. Kundalam Srirangachari. My father passed away during 1975. As Sri. Sujatha mentioned, I have the same feeling when I am visiting Srirangam and while worshipping Sriranganathar and Thayar.

    ReplyDelete
  3. நம் உடலில் உயிர் எங்கே உள்ளது ?
    உயிர் உடலுக்கு வெளியே உள்ளதா?
    இறந்த பின் உயிர் என்ற சக்தி எங்கே போயிற்று?
    Energy can neither be created nor destroyed as per Newton's law.Then the life energy or prana shajkthi that was residing in the human body just before death, where is it now after death? Has it taken a different form which is invisible to the human eyes?
    I would like to know your understanding of this metaphysical question.
    Regards
    Nanu

    ReplyDelete
    Replies
    1. "உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்' - உயிர் இந்த இடத்தில்தான் இருக்கும் என்றில்லாத உடலில் பரந்துபட்ட வஸ்து என்றுதான் நினைக்கிறேன்.உடல் வசிக்கத் தகுந்ததாக இல்லாமலாகும்போது, அதைவிட்டு விலகிவிடுகிறது (அந்த விலகும் ப்ராஸஸ் ப்ராணாவஸ்தை) தேசிகனிடமிருந்து விளக்கம் இல்லாததான் இதை எழுதினேன். இதைப் பற்றித் தொடர ஆசை. Proof கேட்டால், நீங்கள் நான் மறையும்வரை காத்திருக்கவேண்டும்.

      Delete
    2. Prana or Jeeva Aathma or Life Energy, after this body is gone, loses its discriminatory nature and starts its natural tendency, like a drunken person. If the tendencies are intense the Prana finds another body within short time etc.

      Delete
  4. I have felt the same feeling whenever I go to thiruvallikaeni Parthasarathy koil . as a child i had gone to this temple for many New year with my father . now he is no more . so whenever i go to this temple I always feel that i had come to my father and see Perumaal and have a feel of being with my father . and am a GREAT FAN OF SUJATHA . have read this article in Anandha vikatan and was touched when i came to know that even sujatha has had the same feel . miss sujathas writing .

    ReplyDelete
  5. நன்றி திரு தேசிகன். சுஜாதாஉடன் ஸ்ரீரங்கம் சென்ற திருப்தி .

    ReplyDelete

Post a Comment