Skip to main content

மெய் அது பொய்


நம் உடம்பை 'மெய்' என்கிறோம் ஆனால் அதில் தான் எத்தனை பொய்!


சில வாரங்களுக்கு முன்பு 'சச் கா சாம்னா' என்ற நிகழ்ச்சியை (ஸ்டார் பிளஸ்) பார்க்க நேர்ந்தது. 'சச்கா சாம்னா' குத்துமதிப்பாக 'உண்மைக்கு முன்னால்' என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. பார்க்காதவர்களூக்கு இந்த நிகழ்ச்சி பற்றிய முன்கதை சுருக்கம்.



கேள்வி கேட்க ஒருவர், பதில் சொல்ல ஒருவர் என்று குரோர்பதி நிகழ்ச்சி மாதிரியான செட்டப்.  சின்ன வித்தியாசம், கேள்விகள் எல்லாம் உங்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றியது. ஏடாகுடமானவை. தப்பான பதில்களை சொல்லி தப்பிக்க முடியாது. உண்மை கண்டறியும் சோதனை கருவி(பாலிகிராப்) மூலம் நீங்கள் சொன்ன பதில் உண்மையா பொய்யா என்று சோதித்து நீங்கள் சொல்லும் பதில் சரி என்றால் பணத்துடன் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். அடுத்த கட்டத்தில் இன்னும் பணம். மேலும் ஏடாகுடமான கேள்விகள். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க, சிறப்பு விருந்தினராக பதில் சொல்லுபவர்களின் குடும்பத்தார் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இதை பார்த்து சகித்துக் கொண்டிருக்க நாம் ரசித்துக்கொண்டு இருப்போம்.


மனிதனுக்கு பொய் சொல்லும் போது, பரபரப்பு, இதய துடிப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் அதிகரிக்கிறது. மூச்சு விடும் தன்மை கூட மாறுபடுகிறது என்கிறார்கள். சொல்லும் பொய்க்கு ஏற்றவாறு ஏசி ரூமில் கூட வியர்வை வரும். இந்த விவரங்கள் அந்த கருவியில் பதிவாகும், அதை கொண்டு நீங்கள் சொல்லும் பதில்கள் உண்மையா பொய்யா என்று கண்டு பிடித்துவிடுவார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது, மனித வாழ்வில் மெகா சீரியல்களை மிஞ்சும் அளவு, முறைகேடான உறவுகளும், சதிகளும் இருக்கத்தான் செய்கிறது என்பது தான் கசப்பான உண்மை.


இந்த கருவி இல்லாமலே உங்கள் மனைவி நீங்கள் சொல்லும் பொய்யை கண்டுபிடிக்கும் ரகசியம் எப்படி என்று அடுத்த முறை யோசித்துப்பாருங்கள். பொய் சொல்லும் போது நம் கண்கள் நம்மை காட்டிக்கொடுத்துவிடும். இப்பெல்லாம் டெலிபோனில் பொய் சொல்லுகிறேன், அப்படியும் கண்டுபிடித்துவிடுவாள். எப்படி என்று தான் தெரியவில்லை. உண்மையான பொய் சொல்ல திறமையும், புத்திசாலித்தனமும், நிறைய ஞாபக சக்தியும் தேவை அது நம்மிடம் இருப்பதில்லை.


இந்த மாதிரி நிகழ்ச்சியில் பக்கத்துவீட்டு  ஓட்டையில் எட்டிப்பார்க்கும் மனிதனுக்கே உள்ள ஆதார குணம் தான் காரணம். பத்திரிக்கையில் கிசுகிசுக்கள், பிரபு தேவா - நயந்தாரா கவர் ஸ்டோரி, மெகா சீரியல்கள் சக்கைபோடு போடுவதற்கு இது தான் காரணம்.


அன்று நான் பார்த்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் "உங்களுக்கு உங்க கணவரை பிடிக்குமா ? அல்லது உங்க மச்சினினனை(கணவனின் தம்பி) பிடிக்குமா ?" என்ற கேள்விக்கு அந்த பெண் "என் கணவர்" என்று பதில் சொல்ல. உண்மை கண்டறியும் கருவி இவர் சொல்லுவது "பொய்" என்று உண்மையை சொல்லியது.


நிகழ்ச்சியின் முடிவில் பதில் சொன்னவர்களில் பலர், அழுதுவிட்டு தங்கள் உண்மைகளை எல்லோர் முன்பு சொல்லிவிட்டு அப்பா அம்மாவிடம் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு , நிகழ்ச்சியை பார்க்கும் நம்மை தவிக்க விடுகிறார்கள். ஆமாம், நம்மில் பலர் ஏன் எல்லோருக்கும் வாழ்க்கையில் இது மாதிரி ஏதாவது கொஞ்சம் அழுக்கு இருக்க தான் செய்கிறது.


பதில் சொல்லுபவர்களை பார்த்து "பார்க்க எவ்வளவு டீசண்டா இருக்கிறார் ஆனால் இவ்வளவு மோசமானவரா  ?" என்று கமெண்ட் அடித்தாலும். நம் மனதின் அடித்தளத்தில் "நாம என்ன யோக்கியமா ?" என்ற குற்ற உணர்வு இருக்க தான் செய்கிறது. அதற்கு காரணம் எல்லோர் மனத்திலும் இந்த மாதிரி பல ஆசைகள் ஆழ்மனதில் பதுங்கியிருப்பது தான். போட்டுக்கொண்டு இருக்கும் சட்டை  நன்றாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பனியன் ஓட்டையாக இருப்பதில்லையா ? அது போல தான் இதுவும். பல உண்மைகள் நாம் இறந்து போகும் போது அவை யாருக்கும் தெரியாமல் புதைக்கப்படுவதை தான் நம்மில் பலர் விரும்புகிறார்கள். சிலர் சுயசரிதை எழுதுகிறார்கள்.


இந்த உண்மைகளை யாரிடமாவது சொல்லிவிட்டால் நம் பாரம் குறைகிறது என்பது உண்மை. பெருமாள் மன்னிக்கிறாரோ இல்லையோ பாவ மன்னிப்பு என்ற கான்சப்ட் எல்லா மதத்திலும் இருப்பது இதனால் தான். வாரா வாரம் ஞாயிறுக்கிழமை தேவால்யத்துக்கு செல்வதும், ரம்ஜான் பாவ மன்னிப்பு ஏற்கப்படும் காலம் என்றும், கும்பமேளவில் கோடிக்கணக்கானவர்கள் கங்கை நதியில் நீராடுவதும் இதனால் தான். பாவம் செய்பவர்கள் குறைவதாக தெரிவதில்லை. மனிதனாக பிறந்தால் பாவம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். சொர்கம், நரகம் கருட புராணம், இந்த ஜென்மத்தில் செய்த பாவம் அடுத்த ஜென்மத்தில் பலன் என்பதெல்லாம் பாவம் அல்லது தப்பு செய்யாமல் தடுக்க அல்லது குறைக்க!.


பிரச்சனை என்ன என்றால், இந்த தப்புக்களை நாம் யாரிடமும் சொல்லுவதில்லை, அவை கண்டுப்பிடிக்கப்படுகிறது.  சில வாரங்களுக்கு முன் கந்தசாமி நைட் ஷோ படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன், என் மனைவி என்னை பார்த்து கேட்ட கேள்வி "அது எப்படி மியாவ் மியாவ் பூன பாட்டை நடுராத்திரி அப்படி ரசித்து பார்க்கிறீங்க, சகிக்கலை". சினிமாவில் வரும் ஹிரோயின்களை ரசிப்பதும் தப்புத்தான். கலை உணர்வுடன் பார்ப்பது என்பது வருத்தெடுத்த ஜல்லி.


திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியை  ஆரம்பிக்கும் போதே


வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


"இளம் பெண்களுடன் கூடினேன், அவர்கள் தரும் இன்பமே மேலானதாகக் கருதி அவர்களை தேடி ஓடினேன். ஓடி நிறைவு பெறாது வாடினேன். மனத்தால் வருந்தினேன்.முடிவில் உய்வதற்குக் காரணமான ஒப்பற்ற பரமபத இன்பம் 'நாராயணா என்னும் நாமம்' என்று கண்டு கொண்டேன்" என்று  பெரிய திருமொழியில் ஆழ்வார் தான் செய்த பல தப்புக்ககளை சொல்லி பெருமாள் இடத்தில் சரணாகதி அடைகிறார்.


அதே போல் பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார்


நூலின் நேர்-இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்;
அலியா, அழையா அரங்கா என்று
மால் எழுந்தொழிந்தேன் எந்தன் மாலுக்கே


"பெண் இன்பமே பேரின்பம் என்று கருதி வாழும் உலகத்தாரோடு இனி நான் சேர்வதில்லை" என்று அரங்கனிடம் சொல்லுகிறார் ஆழ்வார்.


நான் தப்பே செய்ய மாட்டேன் என்று அடித்துச் சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். என் தொப்புளில் பஞ்சை பார்த்ததே இல்லை என்று சொல்லுவது போல் தான் இது. அதை நம்பாதீர்கள்.

Comments