Skip to main content

உயிரின் உயிரே

[%image(20090824-life.jpg|225|200|Life)%]

உயிர் என்பது என்ன என்று பல முறை வியந்திருக்கிறேன். எவ்வளவுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்டாலும். உயிர் என்றால் என்ன என்று வரும் கடைசிக் கேள்விக்கு விடை கிடையாது. கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கும் கேள்விக்கும், உயிருக்கு தேவையான ப்ரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு உயிரை உற்பத்தி செய்யுங்கள் என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் முழிப்பதுதான். கடைசிக் கேள்விக்கு கடவுள் தேவைப்படுகிறார். எவ்வளவு தான் முன்னேறினாலும் செயற்கைகோள் அனுப்பும் முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் இதனால்தான் செய்யப்படுகிறது!.



fநம் உடலில் உயிர் என்பது என்ன என்றால் அதற்குச் சரியான விடை தெரியாது. என்னதான் கீதையையும், பிரம்மசூத்திரத்தையும் படித்து ஆத்மா, சரீரம் என்று கரைத்துக் குடித்தாலும் உயிர் மீது பற்றும் அதனால் பயமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு நீச்சல் குள பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் வரும் ஒரு விதமான பயம் இரண்டும் உண்டு. அடுத்த முறை ஆட்டையோ கோழியையோ வெட்டும்போது கவனித்தீர்களானால், அதன் கண்களில் ஒருவிதமான பயம் தெரியும். உயிரின் மீது உள்ள பயம்!.


[%image(20090824-gopis-yamuna.jpg|270|350|Krishna with Gopikas)%]

சின்ன வயதிலிருந்து எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. திருச்சியில் எங்கள் வீட்டுப் புழக்கடையில் இருந்த தொட்டி ஒரு சிமெண்ட் பாத் டப், அவ்வளவு தான். அதில் நீச்சல் எல்லாம் டூமச். சென்னையில், பக்கெட் தண்ணீரில் எப்போது சோப் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தெரிந்தாலே பெரிய விஷயம். நீச்சல் எல்லாம் கெட்ட வார்த்தை.


பெங்களூர் வந்த புதிதில் எங்கள் அடுக்ககத்தில்( தமிழ் வார்த்தை ஃபிளாட்) இருந்த நீச்சல்க் குளத்தில் குளிர்காலத்தில் ஆர்வக்கோளாறினால் உள்ளே இறங்கிய போது உடம்பு செல்பேசி வைபரேஷன் மோடில் ஆடுவது போல ஆடியது. கொஞ்சநாள் கழித்து ஒரு மாஸ்டரிடம் நான் சிஷ்யனாகச் சேர்ந்தேன். முதல்நாள் வகுப்பில் என்னை முழுகச் சொன்னார். அவ்வளவு தான், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை. அதனால் சில மாதங்கள் வரை நான்(னும்) முழுகாமலே இருந்தேன். :)


போன வருடம் வேறு அடுக்ககம் மாறியவுடன், புத்தம்புதிய நீலக் குளத்தைப் பார்த்தவுடன் மீண்டும் நீச்சல் ஆசை வந்தது. திரும்பவும் வேறு மாஸ்டர். இவர் கறாரானவர். கையில் விசில் வைத்துக்கொண்டு சின்னப் பையன்களுக்குச் சொல்லித்தருவது போல சொல்லிக்கொடுப்பார். காலை 6 மணிக்கு வந்துவிடுவார். முதல் இரண்டு நாள் குளிர்; பிறகு பழகிவிட்டது. ஒரு வாரம் கழித்து வேறு பல பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. சில பெண்களும் வந்து சேர்ந்துக்கொண்டார்கள். அதனால் இல்லாத தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஸ்விம் ஸூட் எலாஸ்டிக் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டு நீச்சல் அடிக்க வேண்டிய நிலைமை. அடுத்தப் பிரச்சினை மாஸ்டர் என்னைத் தண்ணீரில் காலாட்டச் சொல்லிவிட்டு, பெண்கள் பக்கமே இருந்தார். நான் உள்ளே மூழ்கியிருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க முடியாது. எப்படியோ கஷ்டப்பட்டு ஒருமாதிரி நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டேன்.


"இவர் என்னதான் நீச்சல் அடிக்கிறார்?" என்று பார்க்கலாம் என்று என் மனைவி ஒருநாள் திடீரென்று பிரவேசிக்க நான் நீச்சல் குளத்தின் நட்டநடுவிலும், மற்ற பெண்கள் என்னை சுற்றியும் நீச்சல் அடிக்க.. "என்ன பெரிய கிருஷ்ணர் மாதிரி... உங்களைச் சுத்தி கோபிகைகளா?" என்று கரையேறியவுடன் சுனாமியை சமாளிக்க வேண்டியதாகி விட்டது.
 
"உங்க ஹஸ்பெண்டா? ஃப்ரெஞ்ச் பியர்ட் வைத்துக்கொண்டு இருப்பாரே அவரா? ஹிஸ் இட்" என்று சிலர் என் மனைவியை சூப்பர் மார்கெட்டின் லிப்டிலும் பார்த்துக் கேட்க நிலைமை மோசமாகி ஃப்ரெஞ்ச் பியர்ட் பறிபோனது.


விஷயம் இது தான்; பல போராட்டங்களுக்குப் பிறகு இருபத்தியோராம் நாள் நான் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டேன். தற்போது மல்லாக்கப் படுத்துக்கொண்டு மிதக்கத் தெரியும். ராத்திரி மல்லாக்க படுத்துக்கொண்டு மேலே நட்சத்திரங்களைப் பார்ப்பது தனி சுகம். கவிதை!.


மேற்சொன்ன உபயோகம் தவிர நீச்சலில் பல நல்ல உபயோகங்களும் இருக்கின்றன. உங்கள் இடுப்புச் சுற்றளவு கம்மியாகும். நீச்சல் அடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. டயாபடீஸுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை வரும் வரை நீச்சல் அடித்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணம்.


0


ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியக் கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம். தற்போது நடைபெறும் ஆராய்ச்சிகளில் புற்றுநோய், இருதயக் கோளாறு, சர்க்கரை வியாதி என பலவகையான நோய்களுக்கு மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்று  நம்பிக்கை தருகிறது. இன்னும் 15-20 ஆண்டுகளில் இவை அடுத்த கட்டத்தைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்டெம் செல்களின் உபயோகம் பற்றி ஆராய்ச்சி ஆரம்பம் ஆனது. இதைப் பற்றி விரிவாக இணையத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், வேறு செல்களை போல் மாற்றிக் கொள்ளவும் முடியும் என்றும் கருவில் (Embryo) தான் ஸ்டெம் செல்களின் ஆதாரம் உள்ளது என்பதும் முக்கியமான கண்டுபிடிப்புகள்.


பயப்படாதீர்கள், ஸ்டெம் செல் பற்றி எளிய முறையில் சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.


[%image(20090824-EmbryonicStemCell.jpg|201|150|Stem Cell)%]

உயிரணுவை செல்(Cell) என்கிறோம். இந்த உயிரணுக்களின் இயக்கத்தைத்தான் நாம் உயிர் என்கிறோம். நம்மைச் சுற்றி உள்ள எல்லா உயிரினங்களிலும் இந்த உயிர் இருக்கிறது. நம் உடலில் பல்வேறு விதமான உயிரணுக்கள் இருக்கின்றன. 210 வகையான உயிரணுக்கள் நம் உடலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். படம்: [%popup(20090824-DifferentCells.jpg|418|320|செல்கள் பல விதம்)%] நம் உடலில் என்ன செல்களாக வளர வேண்டும் என்று தீர்மானிக்கப் படாத செல்கள்தான் இந்த ஸ்டெம் செல்கள். அதாவது நம் உடலில் உள்ள எல்லா வித செல்களும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் உருவாகிறது என்பது ஆச்சரியமான விஷயம். ( படத்தில் இருப்பது ஒரு வகை ஸ்டெம் செல்)


நம் உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் ஒரு தனி வடிவம் இருக்கிறது.  எப்படி சீனர், ஜப்பானியர், இந்தியர், அமெரிக்கர், தென் ஆப்பரிக்கர் எல்லோருக்கும் தனிப்பட்ட ஒரு வடிவம் இருக்கிறதோ அதே மாதிரி உயிரணுக்களுக்கும் இருக்கிறது. நரம்பணு(Nerve Cells), தசையணு( Muscle Cells ), செங்குருதி அணுக்கள்(red blood cells), வெண்குருதி அணுக்கள்( while blood cells ) என பல விதமான உயிரணுக்கள் இருக்கின்றன.


தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குரோமோசோம் எனும் அணுக்களைப் பெற்று குழந்தை உருவாகிறது. தாயின் கருமுட்டை, தந்தையின் விந்து இரண்டும் சேரும்போது தாயின் கருப்பையில் கரு(embryo) உருவாகும். அப்போது உண்டாகும் முதல் செல்கள்தான் இந்த ஸ்டெம் செல்கள். கருவில் உண்டாகும் இரத்த அணுக்களில் ஸ்டெம் செல்கள் இருக்கும். இந்த செல்களுக்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது. ஆனால் இந்த வகை ஸ்டெம் செல்கள் மற்ற ஸ்டெம் செல்களை உருவாக்கும் முழு ஆற்றல் படைத்தவை.


கமலஹாசனை எடுத்துக்கொள்ளுங்கள், டைரக்டர் கிழவியாக மாற வேண்டும் என்றால் உடனே அவர் கிழவியாக மாறிவிடுவார். பத்து வேஷம் போட வேண்டும் என்றாலும் அதுவும் செய்வார். அதே போல் தான் ஸ்டெம் செல்களும்!. ஒரு ஸ்டெம் செல் எந்த விதமான செல்களாகவும் மாறும் ஆற்றல் படைத்தது. அதே போல் ஒரு ஸ்டெம் செல் இரண்டாகப் பிரிந்து இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி தன்னைத்தானே காப்பியடித்து பெருக்கிக்கொள்ளவும் செய்கிறது.


சினிமாவில் டைரக்டர் 'ஆக்ஷன்' என்று சொன்னவுடன் அந்தப் பாத்திரமாகவே மாறும் நடிகரைப் போல் ஸ்டெம் செல்களுக்கு ஒரு சிக்னல் வர வேண்டும். சரி யார் இந்த சிக்னலைத் தருகிறார்கள்? சமீபத்தில் (2007) 1Q-1 என்ற சின்ன மூலக்கூறு அந்த சிக்னலைத் தருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு மேல் எனக்குத் தெரியாது. கூகிளில் தேடி பார்க்கலாம். இல்லை எல்லாம் கடவுள் செயல் என்று மேற்கொண்டு படிக்கலாம்.


ஒரு உதாரணம் சொல்கிறேன் புரிகிறதா என்று பாருங்கள். ஸ்டெம் செல்களுக்கு, "நீ ஸ்கின் செல்லாக (Skin Cell) மாறு" என்று சிக்னல் கிடைத்தவுடன், மெதுவாக தங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. வரும் சிக்னலிலேயே எந்த விதமான மரபணுக்கள்(genes) இருக்க வேண்டும், எந்த விதமான புதிய புரோடீன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று எல்லா தகவல்களும் இருக்கும்.


தோல்களுக்கு உள்ள செல்கள் தங்களைத் தாங்களே புதுப்பிக்க வேண்டும்; அதனால் இந்த வகை செல்கள் நம் உடலில் உயிர் உள்ளவரை தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதுவும் அந்த சிக்னலில் இருக்கும்! இந்த அதிசயம் போறவில்லை என்றால் இன்னும் ஒன்றைச் சொல்கிறேன். இந்த செல்கள் உற்பத்தி ஆனவுடன் நேராக நம் தோல்பகுதிக்கு அருகில் சென்று  தங்களை பெருக்கிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. அப்போது அவை மேலும் தோல்பகுதிக்கு அருகில் செல்ல முற்படும்போது செத்து மடிகின்றன. அவ்வாறு  மடிந்துபோன செல்களே உள்ளே இருக்கும் செல்களுக்குக் கவசமாக இருக்கிறது!


ஸ்டெம் செல்கள் எவ்வளவு வகை, நம் உடலில் எங்கே எல்லாம் அவை இருக்கின்றன போன்ற தகவல்களை வேறு ஒரு சமயம் பார்க்கலாம். தற்போது சுருக்கமாக. முன்பே பார்த்த மாதிரி ஸ்டெம் செல்கள் எம்ப்ரியோவில் கிடைக்கின்றன. இதை வைத்து குளோனிங் முறையில் உங்களின் 'டூப்ளிக்கேட்டை" உருவாக்கலாம். இவ்வாறு 1996ல் விஞ்ஞானி டாலி ஆலன் கோல்மேன் (Alan Colman), Doly என்ற குளோனிங் ஆட்டை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சிக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது உங்களுக்கு நினைவு இருக்கலாம். மனித உயிர்களை கடவுள்தான் படைக்க வேண்டும் மனிதர்கள் அதைச் செய்ய கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இதுவும் கடவுளின் செயலே என்று நினைக்கத் தோன்றுகிறது.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 'சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு மனிதனின் தோலில் இருந்தே ஸ்டெம் செல்லை எடுத்து, ஆய்வுக் கூடத்தில் திசுக்களை உருவாக்க முடியும்' என நிருபித்துள்ளனர். இதை வைத்துக்கொண்டு மனிதனுக்குப் பழுதடைந்த பாகங்களை ரிப்பேர் செய்ய முடியும் என்று தெரிகிறது. ஸ்பேர் பார்ட்ஸ் ரிப்பேரா என்று நீங்கள் வியக்கலாம். ஆம், நம் உடலில் எங்காவது பாதிப்பு ஏற்படுவது எதனால் என்று பார்த்தால் - விபத்து, அல்லது ஏதாவது நோய் வந்து உடலில் ஏதாவது ஒரு பாகம் செயலிழக்கிறது. அதாவது அந்தப் பாகத்தில்  உள்ள செல்கள் இறந்து விடுகின்றன. கையில் பாதிப்பு என்றால் கையில் உள்ள திசுக்கள்(tissues) செயலிழந்துவிடும். உடலில் பிற பகுதிகளிலிருந்து புதிய ஸ்டெம் செல்களை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தினால் சேதமடையும் பாகங்கள் புது உருப்பெற்று சரியாகிவிடும். வீட்டில் எங்காவது ஓட்டை விழுந்துவிட்டால் உடனே கொஞ்சம் சிமிண்ட் கொண்டு அந்த ஓட்டையை அடைப்பதுபோல் தான் இதுவும்!


இரண்டு வருடங்கள் முன்பு அமுதன் பிறப்பதற்குமுன் மருத்துவமனையில் இந்த ஸ்டெம் செல்கள் பற்றி வரவேற்பில் அறிவிப்பு ஒட்டிவைத்திருந்தார்கள். என்னவென்று விசாரித்ததில் பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் உள்ள ரத்தத்தைச் சேமித்து வைத்தால், அதில் உள்ள “ஸ்டெம் செல்கள்“ பிற்காலத்தில் அக்குழந்தைக்கு ஏற்படுக்கூடிய பல நோய்களைக் குணமாக்க உதவும் என்று இருந்தது. வேஸ்ட் என்று சில வருடங்களுக்கு முன் மண்ணில் புதைத்துவைத்ததை தற்போது சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.


எப்படிச் சேமித்து வைப்பது? வீட்டில் உணவு கெட்டு போகாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைக்கிறோம். அதே போலத்தான் தொப்புள் கொடியில் இருக்கும் ரத்தத்தை எடுத்து பதப்படுத்தி, நீர்க்கப்பட்ட நைட்ரஜனில் (Liquid form) 195 டிகிரி செல்ஷியஸ்ஸில் உறையவைக்கின்றனர். 18 முதல் 20 வருடம் இதைப் பாதுகாக்க முடியும் என்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் சேமித்துவைக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து இது தான்!. பாட்டிகள் தொப்புள்கொடியை வெட்டி, சின்ன தாயத்தில் அடைத்து அரைஞாண் கயற்றில் தொங்கவிட்டு, பிறகு அதை அம்மாக்கள் பத்திரமாக பீரோவில் வைத்துக்கொள்வர்கள். இதைப் பற்றி யாராவது ஆராய்ச்சி செய்யலாம்.


0


[%image(20090824-windowcleaner.jpg|200|266|Window Cleaner)%]

இரண்டு நாள் முன்பு என் அலுவலக ஜன்னலின் கதவுகளை, வெளியிலிருந்து, அந்தரத்தில் கயிறு கட்டிக்கொண்டு, ஒருவர் துடைத்துக்கொண்டிருந்தார். மூன்றாவது மாடி உள்ளேயிருந்து கீழே பார்த்தாலே வயிற்றை ஏதோ செய்யும். இவர் ஏழாவது மாடியிலிருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு இடுப்பில் சின்ன பக்கெட், ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மறு கையில் பிரஷைக்கொண்டு கண்ணாடிகளைத் துடைத்துக்கொண்டிருந்தார். முன்பே சொன்ன மாதிரி மாடியிலிருந்து கீழே பார்த்தால் வயிற்றில் புளியை கரைக்கும்..


முதலில் அவரை பார்த்து படபடத்தாலும், அவரிடம் பேச்சு கொடுத்தேன்.


"உங்க பேர் என்ன?"


"வெங்கடேஷ் சார்"


"எவ்வளவு வருஷமா இதைச் செய்துகிட்டிருக்கீங்க?"


"அது ஆச்சு சார் நாலு வருஷம்"


"எவ்வளவு கிடைக்கும்"


"ஒரு ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஐம்பது பைசா. இப்ப மார்கெட் டவுன் அதனால யாரும் கூப்பிட மாட்டேங்கிறாங்க"


"இப்ப தொங்கிகிட்டிருக்கற கயிறு ஸ்டிராங்கா?"


"சார் இது 350 கிலோவைத் தாங்கும். நான் அறுவது கிலோதான்"


"மேலேர்ந்து கீழே பார்த்தா பயமா இருக்காதா ?"


"முன்னால இருந்தது இப்ப இல்லை. ஆனா யஷ்வந்த்பூர்ல ஒரு 34 மாடிக் கட்டிடம் இருக்கு அதில மட்டும் கொஞ்சம் பயமா இருக்கும்"


"இந்த வேலை ரிஸ்க் இல்லையா ?"


"வீட்டில அப்பா, அம்மா. தங்கைக்கு நான்தான் கல்யாணம் செய்யணும். அதை எல்லாம் நினைச்சு கீழே பார்த்தா பயம் தெரியறதில்லை"

Comments