Skip to main content

அட அட ads - 2

இரண்டாம் பகுதி [  பகுதி -1  ]


[%image(franchoil.gif|100|100|Franch)%]

லக்ஷ்மணருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமார் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்தார் என்று படித்திருக்கிறோம். அந்தக் காலத்தில் ஃபிரான்ச் ஆயில் NH இல்லாததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இருந்தால் அனுமார் அதை ஒரு பாட்டில் கொண்டு போயிருப்பார்.  இன்று வரை NH என்பதன் அர்த்தம் என்ன என்று தெரியாது. விளக்கெண்ணையின் கெமிக்கல் பெயர் என்று நினைக்கிறேன். கை, கால் பிடிப்பு, மூட்டு வலி, சுளுக்கு, பிரசவத்தின் பின் வயிற்றில் வரும் ஸ்ட்ரெச் மார்க், மாதவிடாய் வயிற்று வலி, சேற்று புண், பித்தவெடிப்பு, நெருப்புக் காயம், தலை மயிர் வளர்வதற்கு, வளர்ந்த மயிர் உதிராமல் இருப்பதற்கு என்று அடுக்கிக்கொண்டே போய் தாளிப்பதற்கு தவிர மற்ற எல்லாவற்றுக்கும் "ஃப்ரான்ச் ஆயில் NH எங்கப்பா?" தான். பாம்பே ஞானம் சிபாரிசு. 


 



இதே போல் அடுத்த சஞ்சீவினி  - அஞ்சால் அலுப்பு மருந்து. பித்தம், வாந்தி, மயக்கம், கை-கால் பிடிப்பு, தலைவலி, மூட்டுவலி என்று எது இருந்தாலும் இதைச் சாப்பிடலாம்.


திலீப் இசை அமைத்த பல விளம்பரங்கள் அப்போது நல்ல பாபுலர். ரோஜாவிற்கு பிறகுதான் நமக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிந்தார். ரீகல் சொட்டு நீலம் விளம்பரத்தில் இவர் இசையில் மால்குடி சுபா பாடியது பலருக்கு நினைவு இருக்கலாம். நல்ல விஷுவல் உள்ள விளம்பரம் இது. குஷ்பு தீப்பந்தம் எடுத்துக்கொண்டு ஓடிய காலம் அது.


[%image(leocoffee.gif|75|100|leocoffee)%]

அதே போல் லியோ காப்பியும் ஏ.ஆர்.ரஹ்மான். வீணை இசையில் அரவிந்த் சாமி டையெல்லாம் கட்டிக்கொண்டு மாடிப்படியில் இறங்கி வந்து அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு காப்பி சாப்பிடுவார். எனக்கு திருமணம் ஆன பிறகு மனைவி சைடில் எல்லோரும் லியோ காப்பி தான் சாப்பிடுவார்கள். பிறகு தான் தெரிந்தது அந்த வீணை பிட்டை வாசித்தது என் மனைவியின் மாமா பார்த்தசாரதி (ஸ்ரீராம் பார்த்தசாரதியின் தந்தை) என்று. காலத்தை வென்ற ரசனை!


திருச்சியில் லியோ காப்பி கிடைக்காது. அங்கே ஜோசப் காப்பி அல்லது உசிலை மணி சொல்லும் "காபினா நரசுஸ் காபிதான்; பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு." இன்று பத்மா காப்பி வந்து திருச்சியே பத்மா காபியைத்தான் குடிக்கிறது.  பெங்களூரில் சென்னை போல் அல்லாமல் எல்லா ஹோட்டல்களிலும் காப்பி நன்றாக இருக்கும். கோத்தாஸ் காப்பி இங்கே பிரபலம், சென்னையில் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றால் தி.நகர் ஹாட் சிப்ஸ் கடையில் கிடைக்கும்.


எனக்குத் தெரிந்து கண்ணனுக்குப் பிறகு எப்போதும் நீல நிறமாக இருப்பது துணி துவைக்கும் டிடர்ஜெண்ட் சோப்பு தான். ஒரே விதிவிலக்கு சன்லைட்' சோப்'. குழந்தையின் ஆய் கலரில் மஞ்சளாக எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். இப்போது கிடைப்பதில்லை. சிலோனில் கிடைக்கலாம்.. திருச்சியில் இருந்த போது, வீட்டு வேலை செய்ய வரும் கிழவி பெயர் 'சிட்டா', தினமும்  வீட்டு வேலையை முடித்துவிட்டு புழக்கடை தொட்டிக்குப் பக்கத்தில் குளித்துவிட்டு போவாள், அவள் குளிக்க உபயோகப்படுத்தும் சோப் சன்லைட்!


சன்லைட், விம், ரின் என்று போய்க்கொண்டு இருந்த போது


வாஷிங் பௌடர் நிர்மா
வாஷிங் பௌடர் நிர்மா
பாலைப்போல வெண்மை நிர்மாவாலே வருமே.
வண்ணத்துணிகள் எல்லாம் பளபளப்பு பெருமே.
எல்லோரும் போற்றும் நிர்மா.
வாஷிங் பௌடர் நிர்மா
வாஷிங் பௌடர் நிர்மா
நிர்மா


[%image(nirma.jpg|100|95|Nirma)%]

வந்து ஒரு பரபரப்பு உண்டாக்கியது. இதிலும் வயசாகாத சங்கீதா பிஜ்லானி வருவார். கடைசியில் ஒரு சின்னப் பெண் பாவாடை சுழல நிர்மா பாக்கெட்டில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த பெண் கூட இறந்துவிட்டதாக அப்போது பேசிக்கொண்டார்கள். எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் நிர்மா சாலிடர், டயனோரா டிவியுடன் நின்றுவிட்டது, தமிழ்நாட்டு பக்கம் அவ்வளவாக வரவில்லை.


[%image(gold_spot.jpg|207|138|GoldSpot)%]

சித்தார்த்தா பாசு குவிஸ், ஸ்பைடர் மேன் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு முன்னால் வரும் விளம்பரம் கோல்ட் ஸ்பாட்.


தற்போது காலேஜில் படிப்பவர்களுக்கு கோல்ட் ஸ்பாட் என்றால் தெரியாது. அவளுக்கு தெரிந்து எல்லாம் கோக், பெப்ஸி தான். 'ஜங்கில் புக்' படம் வந்த காலம். ஜங்கிள் புக்கில் வந்த காட்டூன் கேரக்டர்ஸ் எல்லாம் கோல்ட் ஸ்பாட் மூடியின் பின் பகுதியில் வரும். ஒரு புத்தகத்தில் அதை ஒட்டி கடைக்காரரிடம் கொடுத்தால் ஏதோ பரிசு என்று நினைவு. அந்த புத்தகத்துக்காக நான் குடித்த கோல்ட் ஸ்பாட் கணக்கே இல்லை. கொஞ்ச நாளில் அந்த புத்தகமே ஆரஞ்ச் வாசனை வந்து எங்கே வைத்தாலும் ஆரஞ்சு கலர் எறும்புகள் வர தொடங்கியது. "As crazy as crazy as we’re about, Gold Spot, the Zing Thing. " என்று வரும் ஜிங்கில்ஸ் யார் இசை அமைத்தது என்று தெரியாது ஆனால் கிரேஸி மோகனின் 'கிரேஸி தீவ்ஸ் ஆஃப் பாலவாக்கம்'  என்ற டிராமா கேசட்டில் A-சைடிலிருந்து B-சைடுக்கு போவதற்கு முன் வரும். கோல்ட் ஸ்பாட் போனது எனக்கு பெரிய வருத்தம், அதே மாதிரி மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா.


[%image(rasna_ad_girl.jpg|294|195|Rasna)%]

ரஸ்னா விளம்பரத்தில் வரும் "ஐ லவ் யூ ரஸ்னா" என்று தலையைச் சாய்க்கும் சின்னப் பெண் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கும் வயசாக வேண்டாமா ? இன்று கோல்ட் ஸ்பாட் குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது - ரஸ்னா ஆரஞ்சு ஃபிளேவர் வாங்கி தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றிக் கலந்தால் கிட்டத்தட்ட கோல்ட் ஸ்பாட் டேஸ்ட் வரும்.


[%image(boost-kapil.jpg|200|162|Boost)%]

கிரிக்கெட் மாட்ச் முன்னால் நிச்சயம் பூஸ்ட் விளம்பரம் வரும் "பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி; அவர் எனர்ஜி'. எனர்ஜி பை பூஸ்ட்" அப்போது இளைஞர்கள் மத்தியில் நல்ல பிரபலம். ஹார்லிக்ஸ் அவ்வளவு பிரபலம் இல்லை. யாராவது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தால் சாத்துக்குடியும் ஹார்லிக்ஸும்தான் வாங்கிக்கொண்டு போவார்கள். பின்நாளில் ஹார்லிக்ஸ் "குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்" என்று குழந்தைகளை டார்கெட் செய்யத் துவங்கியது. அதுவும் தற்போது காணாமல் போய், ஜூனியர் ஹார்லிக்ஸ், மதர்ஸ் ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் லைட் என்று ராப்பர் கலர்களை மாற்றி விளையாடுகிறது. ரீஃபில் பேக், பிளாஸ்டிக் டப்பாக்கள் அறிமுகமாகாத காலங்களில், ஒரு தலைமுறையே சமையலறை சாமான்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களில் தான் மளிகை சாமான்களையும், ஊறுகாய்களும் கொட்டிவைக்க உபயோகித்தது. அதற்காகவே ஹார்லிக்ஸ் வாங்கினார்களோ என்னவோ!.


[%image(complan.jpg|200|146|Complan)%]

"நான் வளர்கிறேன் மம்மி" என்று இந்தக் காலகட்டத்தில் காம்ப்ளானும் வளர்ந்தது. "ஐயம் ஏ காம்பிளான் பாய், ஐயம் ஏ காம்பிளான் கேர்ள்" என்று வந்த விளம்பரம் பிரபலம்.  வீவா ஏனோ அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. இத்தனைக்கும் வாயில் போட்டுக்கொண்டால் நாக்கின் மேல் பகுதில் ஹார்லிக்ஸ் போலவே அழிச்சாட்டியமாய் ஒட்டிக்கொள்ளும்.


கபில்தேவ் வரும் இன்னொரு விளம்பரம் "பால்மாலிவ் கா ஜவாப் நஹி". தியேட்டரில் கபில்தேவ் வந்தவுடன் கைத்தட்டுவார்கள். எனக்கும் பால்மாலிவ் உடபயோகப்படுத்த ரொம்ப ஆசை. ஆனால் நேற்று போட்ட விதை நெல் போல் மீசை எட்டிபார்த்த காலம். மீசை தீர்மானமாக வளர்ந்த பிறகு இந்திய கிரிக்கெட் கேப்டனாக கபில்தேவ் போய் அசாருதினோ, ஸ்ரீகாந்தோ வந்துவிட்டார்கள். அதற்குப் பிறகு பால்மாலிவ் உபயோகிக்க ஆசை இல்லாமல் போய்விட்டது.


[%image(liril_girl.jpg|129|175|Liril)%]

எண்பதுகளில் எலுமிச்சை பழைத்தையும் லிரில் சோப்பையும் காண்பித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தினார்கள். அந்த விளம்பரத்தில் 'லா லா லா லாலா" என்று பாடலுடன் அந்த பெண் (கேரன் லுனல்) அருவியில் ஆட்டம் போடுவதை பார்க்கும் போது உடனே போய்( வேற எங்கே வீட்டு பாத்ரூமில் தான்) குளிக்க வேண்டும் என்ற ஆசை வரும்.


[%image(lifebuoy.jpg|140|140|lifebuoy)%]

சோப்புகளுக்கு மாடல் என்றால் பெண்கள் மட்டுமே என்று இருந்த காலத்தில் ஒரு சோப் மட்டுமே ஆண்களைக் காண்பித்தது. இதில் பெருமைப்பட எதுவுமில்லை. எவ்வளவு தேய்த்தாலும் லேசில் கரையாது, நுரையும் வராது, வாசனையும் அவ்வளவாக இருக்காது. உடம்பை தேய்த்துவிட்டு சோப்பை முகர்ந்து பார்த்தால், நம்ம வாசனை தான் சோப்பிலும் வரும். குளித்துமுடித்ததும் கூட தோல் பூத்தாற்போல் வெள்ளையாக இருக்கும். இத்தனை நேரம் என்ன சோப் என்று ஊகித்திருப்பீர்கள். விளம்பரத்தில்  ரெட் பைப்பிங்கில் மஞ்சள் கலர் பனியன் அணிந்த கால் பந்து வீரர் விழுந்து புரண்டு கோல் அடித்துவிட்டு வேர்த்து கொட்டிக்கொண்டு ஷவரில் சோப் தேய்த்துக் குளிப்பார். அவருக்கு மட்டும் நுரை வரும். 


ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய்!
லைப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே!
லைப்பாய்!


என்று பாடி அடங்கும். நிறைய வேர்த்துக்கொட்டினால் தான் லைப்பாயில் நுரை வரும் போலிருக்கிறது என்று நானும் சின்ன வயசில் எக்கச்சக்கமாக விளையாடியும் அந்த அளவு எனக்கு வேர்த்துக்கொட்டியதில்லை. நுரையும் வந்ததில்லை. ஒரு சமயம் தாத்தா பாட்டியை பார்க்க கும்பகோணம் பக்கத்தில் உள்ள பாபநாசம் கிராமத்திற்கு போயிருந்தேன். வீட்டிக்கு பக்கத்தில் இருந்த மளிகைக் கடையில் நிறைய லைப்பாய் அடுக்கி வைத்திருந்தார்கள். கடைக்கரரிடம் விசாரித்ததில் "அதுங்களா தம்பி, இங்கே மாட்டை குளிப்பாட்ட இந்த சோப்பு தான் உபயோகப்படுத்துவாங்க" என்றார்.


[%image(amurtanjan.jpg|93|112|amurtanjan)%]

அளவுக்கதிகமான விளம்பர இடைவேளைகளால் இந்தக் காலத்தில் வெறுத்துப் போயிருந்தாலும், டிவி அறிமுகத்துக்கு முன்னான காலங்களில் வானொலி, திரைப்படங்களுக்கு முன் வரும் விளம்பரங்கள் பரவசம் தந்ததை மறுக்கமுடியாது.
இந்த விளம்பரங்கள் எல்லாம் எங்கே என்று தேட ஆரம்பித்தால் அம்ருதாஞ்சன் விளம்பரம் மாதிரி "போயே போச்சு, போயிந்தி, Its gone".


பிகு: கோல்ட் ஸ்பார்ட் விளம்பரத்தை இசையமைத்தது என்று எங்கே தேடியும் கிடைக்கவில்லை. கிரேஸி மோகனிடம் கேட்டதற்கு - "அதை இசை அமைத்தது விஜி மேனுவல்(viji manuel) இவர் இளையாராஜாவிடம் உதவியாளராக( கீபோர்ட்) இருந்தார். இந்த விளம்பரம் பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்தார்கள்" என்றும் சொன்னார்.

Comments