Skip to main content

சொர்க்கம், நரகம் - இடைவெளி 250km


பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராணக் கதை இப்படிப் போகிறது...


புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகவேண்டும் என்ற ஆசையோடு புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்து பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்கு பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான்.

புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலமாக அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகன் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து லட்சியமும் செய்யாமல் அலட்சியமும் செய்யாமல் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு, “சற்று இரும்! நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்," என்றான். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும், ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.

புண்டரீகன் பணிவிடை செய்துவிட்டு வந்து, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரிக்க, "நான் துவாரகா நாதனான கிருஷ்ணன், இவள் என் மனைவி ருக்மணி” என்று சொல்கிறார்.

புண்டரீகன் பூரித்துப் போய், குடும்ப சகிதமாக பகவான் காலில் விழுந்து, இங்கேயே சந்தரபாகா நதிக்கரையிலேயே நித்தியவாசம் செய்யவேண்டும்" என்று கேட்கிறான்.

இன்றும் பண்டரீபுரத்தில் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு செங்கல் மேல் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் சேவை சாதிக்கிறார். ஞானேஷ்வர், நாமதேவ், ஏதநாதர், ஜனாபாய், ஞானதேவர், கபீர்தாஸர், துக்காராம், ஏகநாத் புரந்தரதாஸர், விஜயதாசர், மோகனதாஸர், போன்ற பல கன்னட, மஹாராஷ்டிர பக்தர்கள் பாண்டுரங்கனைப் பற்றி ஏராளமான கன்னடக் கீர்த்தனைகளையும், மராட்டிய அபங்கங்களையும் பாடியுள்ளார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டே நாளில், மூன்று கல்யாணத்திற்காக பூனாவிற்குச் சென்றிருந்தேன். பண்டரீபுரம் பூனாவிலிருந்து 250km தூரத்தில் இருக்கிறது. மூன்று கல்யாணதிற்கு நடுவில் பண்டரீபுர விட்டல் ரகுமாயியை சேவித்துவிட்டு வருவது என்று முடிவு செய்து டாக்ஸியில் பழைய ஹிந்தி பாடல்களுடன் பயணித்தேன்.

ஆட்டு மந்தை போகும் வரை காத்திருக்கும் ஹோண்டா சிட்டி மட்டும் தான் சிட்டி மற்றது எல்லாம் கிராமம் தான். ஆண்கள் எல்லோரும் காந்தி குல்லா போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சூரியகாந்திப் பூ, வெங்காயம், மாதுளை, கரும்பு என்று விதவிதமாக விவசாயம் செய்கிறார்கள். தாய்மார்கள் வயலில் வேலை செய்ய அவர்கள் குழந்தைகள் மரத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 


வழியில் கரும்புச் சாறு ஒரு கிளாஸ் கலப்படம் இல்லாமல் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. போகும் போது ஒரு பஸ் கூட என் கண்ணில் தென்படவில்லை ஆனால் பில்லு பார்பர் பட போஸ்டர்கள் கண்ணில் பட்டது. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் எவ்வளவு பேர் பயணம் செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன். ஜீப் வாய் இருந்தால் அழும். வழி நெடிகிலும் தாபாக்கள் நிறைய இருக்கிறது. (இஞ்சியை டம்ளர் அடியில் நசுக்கி இவர்கள் போடும் சாய் பிரமாதம்.)

போகும் போது சில இடங்களில் "வீ" என்று சொன்னால் போதும் மற்றவர் காதில் அது "விட்டல், விட்டல்" என்று விழும். ரோட்டில் அவ்வளவு மேடு பள்ளம்.

பண்டரீபுரம் சென்ற போது மாலை மணி 4 ஆகிவிட்டது. காரை சந்தரபாகா நதியில் தண்ணீர் இல்லாததால் அங்கேயே பார்க் செய்ய முடிந்தது. சந்தரபாகா நதி பற்றி மஹாபாரதத்தில் குறிப்பு வருகிறது. "சார் நான் உங்களுக்கு கைடாக வருகிறேன், பண்டரி நாதனை பக்கத்தில் தரிசனம் செய்துவைக்கிறேன். எல்லாம் முடித்துவிட்டு வரும் போது எனக்கு 51ரூ. தந்தால் போறும்," என்றார் ஒருவர். நேரம் அதிகம் இல்லாததால் சரி என்று இந்த குறுக்கு வழிக்கு ஒப்புக்கொண்டேன்.


உடனே  சந்தரபாகா நதிக்கரையிலிருந்து குறுக்கு வழியில் எங்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கே 20 அடி தூரத்தில் பெருமாள் தெரிகிறார், தரிசனம் செய்துகொள்ளுங்கள் என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றம். ஏன் என்றால் பண்டரீபுர விட்டலை நாம் தொட்டு சேவிக்கலாம் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன். எனக்கு இது சம்மதம் இல்லை என்று மீண்டும் வெளியில் தர்ம தரிசன கியூவில் போய் நின்றோம். பண்டரிபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. (நாங்கள் போன சமயம்) திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டு இருக்கிறது. நாலரை மணிக்கு பெருமாளுக்கு வஸ்திரம் மாற்ற நடை சாத்திவிட்டு மீண்டும் ஐந்து மணிக்குத் தான் திறப்பார்கள் என்றார்கள். திண்ணை மாதிரி கட்டிவைத்திருப்பதில் அமர்ந்தோம். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

வந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு ஊர்காரர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். கியூவை மீற வாய்ப்பு இருந்தும் மீறவில்லை. எல்லோரும் "பாண்டு ரங்க ஹரி போலோ" என்று கைத்தட்டி பஜனை செய்ய ஆரம்பித்தார்கள். ஞானதேவர், புரந்தரதாசர் பஜன்களை எல்லோரும் வாய்விட்டு பாடினார்கள். யாரும் ஊர்க் கதை பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் அந்த பஜனில் ஆழ்ந்தது ஒரு நிறைவான அனுபவம். இது போன்ற பக்தி தமிழ்நாட்டுக் கோவில்களில் பார்த்ததில்லை. சரியாக ஐந்து மணிக்கு கதவு திறக்கப்பட  பாண்டுரங்கன் பக்கத்தில் போய் அவரைத் தொட்டு சேவித்துவிட்டு, நெற்றியை அவர் கால்மேல் வைத்து பாத சேவை கிடைத்த பின் வெளியே வந்தோம்.

கோயிலைச் சுற்றி நிறைய கடைகள் இருக்கின்றன. கோபி சந்தனம், ஜால்ரா, டோல், சின்ன சின்ன விக்கிரகங்கள், பஜனை புத்தகம், பாண்டுரங்கன் படங்கள், குங்குமம், மஞ்சள், சக்கரை மிட்டாய், துளசி மாலை என்று கிடைக்கிறது. சினிமா பாடல்கள் MP3, நியூஸ் பேப்பர் கிடைப்பதில்லை. யாரும் ஏமாற்றுவார்கள் என்று தோன்றவில்லை.

தீர்த்தயாத்திரை முடித்துவிட்டு திரும்பி வர இரவு பதினொன்று ஆகிவிட்டது. கல்யாண மண்டபத்தில் தீர்த்தத்தால் பலர் யாத்த்திரைக்குச் சென்றிருந்தார்கள். சொர்க்கமும் நரகமும் 250கிமீ தூர இடைவெளியில் இருக்கிறது!


Comments