பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும். நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது. நாம் உட்கொண்டால் வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல இருக்கும். வாந்தி வராதவர்களுக்கு பேதி, மூத்திரத்தில் ரத்தம் வரும். போன வாரம் டிவி...